தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மொழியின் வழிகாட்டி!

மொழியின் வழிகாட்டி!


லகின் தொன்மையான மொழிகள் பலவும் மறைந்தொழிந்துவிட்ட இன்றைய சூழலில், கற்பனைக் கெட்டாத காலந்தொட்டு இன்றளவும் தமிழ்மொழி வழக்கில் உள்ளதற்குக் காரணம், மொழிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட நல்லோர் இடைவிடாது தோன்றிக் கொண்டிருந்ததேயாகும். அத்தகையோரில் மறைந்த எழுத்தாளர் அ.கி. பரந்தாமனாரும் ஒருவர்.

2002-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 15-ஆம் நாளன்று அவரது நூற்றாண்டு நிறைவு நாளை தமிழ் சான்றோர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடினர்.


சென்னையில் கிருஷ்ணசாமி-சிவக்கியானம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக 1902-ல்  பிறந்த இவரின் படைப்புகளில் "நல்ல தமிழில் எழுத வேண்டுமா?' என்ற நூல் இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எழுதுவோரால்தான் ஒரு மொழி வளம் பெறுவதும் சேதமடைவதும் நிகழ்கிறது. எனவேதான் பரந்தாமனாரின் பொரும்பாலான படைப்புகள் எழுத்தாளர்களுக்கானதாக இருந்தன.

 தனது "நல்ல தமிழில் எழுத வேண்டுமா?' என்ற நூலில் அவர் முன்னிலைப்படுத்தியுள்ள கருத்துக்கள் கூர்மையாக கவனிக்கத்தக்கது.

""சிறுகதை, நெடுக்கதை எழுதுவோர், வார, மாத வெளியீடுகளுக்கு கட்டுரை எழுதுவோர், திறனாய்வோர், திரைப்பட உரைநடை(வசனம்) இயற்றுவோர் அனைவரும் எழுத்தாளர் எனப்படுகின்றனர்.

இன்று எழுத்தாளர் என்றால் தமிழ் இலக்கியம் அறியாது எழுதுகிறவர்கள் அல்லது தமிழ் மரபுக்கு மாறாக எதையும் இயற்றுகிறவர்கள் என எண்ணம் தோன்றிவிட்டது. ஆகவே எழுத்தாளர்கள் நடைமுறைக்கு வேண்டிய போதுமான அளவு இலக்கண அறிவும் பெறவேண்டுவது இன்றியமையாதது என்று உணரவேண்டும்.

இலக்கியம் ஓரளவு தெரிந்து, நடைமுறைக்குப் பயன்தரும் இலக்கணம் அறிந்து, நல்ல தமிழில் எழுதவல்ல எழுத்தாளர்கள் எழுதும் நூல்களும் கட்டுரைகளுமே சமுதாயத்தில் நன்மதிப்பை பெறும். நின்று நிலைக்கும்.

இலக்கணமே கற்க வேண்டுவதில்லை என்று ஒருசிலர் கூறும் கூற்று மதிக்கத்தக்கதன்று. கொச்சைத் தமிழில் தவறுகளுடன் எழுதுவதில் உயிருண்டு என்று சிலர் சொல்வதையும் எழுத்தாளர்கள் ஏற்று எழுதலாகாது. தமிழே படிக்காமல் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லூரியிலும் வடமொழிப்பாடம் எடுத்து தேறியவர்கள், தமிழ் இலக்கியம், இலக்கணம் கற்காமல் எழுத்தாளராக வருவது தமிழன்னைக்குச் செய்யும் தீமையாகும்.
 
தமிழ் எழுத தெரிவது மட்டும் போதாது. ஆங்கிலப் பயிற்சி மிகுதியாக இருப்பதும் போதாது. தமிழ் இலக்கணம் ஓரளவாவது அறியாதவர்கள் தமிழ் எழுத்தாளராகத் தொண்டாற்றினால், அவர்களால் எப்படி நல்ல தமிழ் எழுத முடியும்? வேறு பல திறமைகள் பெற்றிருந்தாலும், இதுபோன்ற எழுத்தாளர்கள் பயனற்றவர்களாகிறார்கள். ஆதலால், தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய- இலக்கணங்களை போதிய அளவாவது கற்க வேண்டும்'' என்பது அவர் கருத்து.

இதைதவிர அன்றாட நடைமுறையில் பயன்படும் தமிழ் இலக்கணத்தை புதிய தமிழ் இலக்கணமாகவும், "புதிய தமிழுக்கும்' இலக்கணமாகவும் எழுதி வழிகாட்டியவர் பரந்தாமனார். இவரது "கவிஞராக' என்னும் நூல் தமிழகத்தில் பல நல்ல மரபு கவிஞர்களை  உருவாக்கியது.

1950-ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பொறுப்பேற்று 17 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ் பேராசிரியராக இருந்தபோது, மதுரை திருவள்ளுவர் கழகத்திற்கும், எழுத்தாளர் மன்றத்திற்கும் துணைத் தலைவராக இருந்தார். இவர் பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சென்னை பல்கலைகழகத்தில் அகாடமி கவுன்சில் உறுப்பினராக இருந்தார். பல்வேறு பொறுப்புகள் வகித்து பல விருதுகள் பெற்ற இவரது தமிழ் தொண்டினை பாராட்டி 1981-ஆம் ஆண்டு தமிழக முதல்வராய் இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன், பரந்தாமனாருக்கு "திரு.வி.க. விருது' வழங்கி கௌரவித்தார்.

1986-ஆம் ஆண்டில் அவர் மறைந்தாலும், மொழிக்கு அவர் செய்த அருந்தொண்டு என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

 

-இராம. அய்யப்பன்