தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வி.ஐ.பி.யின் வெட்டாட்டம்: பலியாகும் ஐநூறு புளியமரங்கள்!





தமிழக முதல்வர் கலைஞர் உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பிறந்த நாளின்போது ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு வைத்து தமிழகத்தில் மழைவளம் பெருக பாடுபட்டுக்-கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஆட்சியை நடத்தும் அதிகாரிகளோ... ‘லட்சக்கணக்கான’ லாபத்துக்காக, நூற்றுக்-கணக்கான மரங்களை வெட்டித்தள்ள ஆர்டர் போடுகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்-குடியில்தான் இந்த மர வேட்டை!

முதுகுளத்தூர் யூனியன் சேர்மனான ஈஸ்வரி கருப்பையா இதுபற்றி நம்மிடம் விரிவாகவே பேசினார்.

‘‘பரமக்குடி பாம்பூர் கிராமத்திலிருந்து முதுகுளத்தூர் உட்கோட்ட எல்லை ஆரம்பமாகிறது. பாம்பூர் முதல் முதுகுளத்தூர் வரையிலான 16 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலையில் இருபுறமும்... 500-க்கும் அதிகமான பல்லாண்டு வயதான புளியமரங்கள் இருக்கின்றன. வறட்சிப் பகுதியான இங்கே இம்மரங்கள் நிழல் தருவது மட்டுமன்றி, சுற்றுவட்டார மக்களின் சோற்றுக்கு குழம்பு ஊற்றியும் வருகின்றன. இந்த மரங்களில் விளையும் புளியம்பழங்களை பஞ்சாயத்து ஏலம் விடும். அதை குறைந்த விலைக்கு வாங்கி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் விஜயகாண்டீபன் திடீரென கலெக்டருக்கு ஒரு ‘கருத்துரு’ அனுப்பியிருக்கிறார். அதாவது, ‘பரமக்குடி-முதுகுளத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் நிற்கும் 162 ‘பட்ட’ புளியமரங்களை வெட்டித் தள்ளிவிடலாம். இதற்கான ‘ஒர்க் ஆர்டர்’ உடனே வழங்கிட வேண்டும்’ என அதில் கோரியிருக்கிறார் கோட்டப் பொறியாளர். இதையடுத்து அந்த புளிய மரங்களை வெட்டிவீழ்த்த ஆர்டரும் கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்த இருவழிச்சாலையை தற்போது நான்கு வழிப் பாதையாக்கும் திட்டம் எதுவுமில்லை. தவிர இந்த மரங்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் இல்லை. ஆனாலும்... 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த மரங்களை வெறும் 40 ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் எதுவும் வைக்காமல் தனக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு கொடுத்திருக்கிறார் கோட்டப் பொறியாளர். இந்த உண்மைத் தன்மை தெரியாமல் கலெக்டரும் நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டார். கலைஞர் தனது பிறந்தநாளின் போது மரக் கன்று நடுகிறார். ஆனால்... அவரது ஆட்சியில் ஓர் அதிகாரி தனது சுயலாபத்துக்காக நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்த உத்தரவிடுகிறார். ஏற்கெனவே தண்ணியில்லா காடு என இயற்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கும் ராமநாதபுரம் ஏரியாவில் இப்படி மரங்களை வெட்டினால் மேலும் வறட்சிதான் ஏற்படும். இதை சும்மா விடமாட்டோம்’’ என ஆவேசப்பட்டார் ஈஸ்வரி கருப்பையா.

தி.மு.க.வின் மாவட்ட கவுன்சிலரான கீழத்தூவல் முத்துராமலிங்கம் நம்மிடம்... ‘‘கணக்குக்கு 162 மரம்னு காட்டிட்டு மொத்த 500 புளிய மரத்தையும் வெட்ட திட்டம் போட்டிருக்காங்க. பரமக்குடியில வெள்ளாமையும், வெளைச்சலும் ஒரு போகமா சுருங்கிடுச்சு. இப்ப, அந்த ஒரு போகம் கூட நடவு செய்ய முடியலை. இந்த லட்சணத்துல பெத்த புள்ளயப் போல நாங்க வளக்குற மரங்களை அதிகாரிங்க வெட்டி வீசத் தயாராகிட்டாங்க. எங்க உசிரைக்கொடுத்தாவது மரங்களைக் காப்பாத்துவோம். இன்னிக்கு மரத்தை வெட்டிட்டு சிவனேன்னு எங்கயாவது அதிகாரிக டிரான்ஸ்பராகிப் போயிடுவாங்க. ஆனா, வறட்சியை அனுபவிக்கிறது நாங்கதானே?’’ என்று சொல்லி வேதனைப்பட்டார்.

தி.மு.க. ஒன்றியக் கவுன்சிலரான திருமூர்த்தியோ... ‘‘பச்சை மரங்களை வெட்டும் கான்ட்ராக்ட்டை பொது ஏலம் விடாமலும், முறையான டெண்டர் வைக்காமலும் அவசர அவசரமாகச் செய்வதில் இருந்தே இது ஆதாயத்துக்காகத்தான் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. தனிநபர்களின் நலனுக்காக சமுதாயத்தை பழிவாங்குவது போன்ற இந்த மரம் வெட்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால்... பாம்பூர், சாம்பக்குளம், கீழத்தூவல், கன்னிச்சேரி, வென்னீர் வாய்க்கால் கிராம மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என்றார் வேகமாக!

இந்த புளிய மர வேட்டை பற்றி நம் காதைக் கடித்த சில உடன்பிறப்புகள்... ‘‘முதுகுளத்தூர் ஆளுங்கட்சி வி.ஐ.பி. ஒருவருக்கு ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள இந்த புளிய மரங்கள் மீது ஒரு கண். கடந்த மாதம் வென்னீர் வாய்க்கால் கிராமத்தில் இருந்த ஒரு மெகா சைஸ் மரத்தை இந்த வி.ஐ.பி. நள்ளிரவில் வெட்டி வீசினார். சத்தம் கேட்டு கிராமமே திரண்டு வந்து வெட்டப்பட்ட மரத்தை தூக்கிச் செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வி.ஐ.பி.தான் அதிகாரிகள் மூலம் இப்போது தான் நினைத்ததை சாதித்துக்கொள்ள நினைக்கிறார். அந்த ஆளுங்கட்சி வி.ஐ.பி.யின் பினாமிக்குதான் புளியமரம் வெட்டும் ஆர்டர் கொடுக்கப்பட இருக்கிறது’’ என கிசுகிசுத்தனர்.

குற்றச்சாட்டுகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளரான விஜயகாண்டீபனிடமே கேட்டோம்.

‘‘தற்போது மரங்களை ஏலம் விடுவதற்கான ஏல அறிவிப்பை மட்டுமே வெளியிட்டுள்ளோம். மரங்களை வெட்டுவதற்கான ஆர்டர் எதையும் வெளியிடவில்லை. வருவாய்த் துறையினர் கொடுத்த மதிப்பீட்டின்படிதான் நாங்கள் விலை நிர்ணயம் செய்ய முடியும். தன்னிச்சையாக எங்களால் விலையை அதிகரித்து ஆர்டர் போட முடியாது. ஏல அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம். அப்படி முறைப்படி யாராவது எதிர்ப்பு தெரிவிக்கட்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்’’ என்று மரம் வெட்டும் முடிவில் உறுதிகாட்டினார்.

மாவட்ட கலெக்டராக பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியான பாலசுப்ரமணியனிடம் இந்த பிரச்னை பற்றி பேசினோம்.

‘‘ சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவே அந்த மரங்கள் வெட்டப்பட உள்ளன. பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கொடுத்துள்ள விலை நிர்ணயம் குறைவாக இருப்பின் நிச்சயமாக மறு ஆய்வு செய்து மாற்று விலையை நிர்ணயம் செய்கிறேன்’’ என்றாரே தவிர... மரம் வெட்டுவதைத் தடுக்கிறேன் எனச் சொல்லவில்லை.

பண்டைய தமிழ் மன்னர்களின் நீர் மேலாண்மை பற்றி சிலாகித்திருக்கும் முதல்வர்... தமிழ்நாடு நீர்ப் பற்றாக்குறை மிகுந்த மாநிலம் என பிரகடனப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில்...ஏற்கெனவே வறட்சிக்கு வாக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் 500 புளிய மரங்கள் வேட்டை என்பது இயற்கையின் வயிற்றில் புளியைக் கரைக்கும் சங்கதி. ஊத வேண்டிய சங்கை ஊதிவிட்டோம்..!