முதல்வர் பதவிக்கே லாயக்கற்றவர் கலைஞர் – வைகோ கடும் தாக்கு !
“தமிழர்களின் உரிமைக்காகப் போராடிய ஒரு மாவீரனின் தாய்க்கு இந்த நிலையா..? தமிழகத்தின் தலைநகரில் கால் வைக்கக்கூடவிடாமல் அந்தத் தாயைத் தத்தளிக்க வைத்துவிட்டார்களே.. 80 வயது தாயை விரட்டாத குறையாக வெளியேற்றுகிற அளவுக்கு ஆட்சியாளர்களின் இதயத் தசைகள் இற்றுப் போய்விட்டதா..? ஆறரைக் கோடி தமிழர்களுக்கு இதைவிட வேறென்ன அவமானமாக இருக்க முடியும்..” என கொந்தளித்த வைகோவிடம் நம் கேள்விகளை அடுக்கினோம்.
விமான நிலையத்தில் என்னதான் நடந்தது..?
பார்வதி அம்மாள் சென்னைக்கு வருவது தெரிந்து, நானும் நெடுமாறன் ஐயாவும் விமானநிலையம் சென்றோம். பெரிதான வரவேற்பு கொடுத்தால், புலி ஆதரவு கோஷம் என்று அர்த்தம் கற்பித்து சட்டச் சிக்கல்களை உண்டாக்க கலைஞர் அரசு தயங்காது என்பதால் நாங்கள் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தோம்.
இதற்கிடையில் தமிழக போலீஸை விமான நிலையலத்தில் திடீரென குவித்து வைத்திருந்தனர். நாங்கள் பார்வையாளருக்கான பாதைக்குப் போனபோதே போலீஸ் மறித்தது. எங்களின் பாஸை காண்பித்து போலீஸிடம் பேசினோமே தவிர, அந்த இடத்தைத் தாண்டி எங்களைப் போகவிடவில்லை.
கூடவே போலீஸ் எங்கள் மீது திட்டமிட்டு பலாத்காரத்தைப் பாய்ச்சியது. எனது பிடரியைப் பிடித்தும் கைகளை இழுத்தும் அராஜகம் செய்தனர். உடனே கலைஞரின் ஏவலுக்காகப் பாய்ச்சல் காட்டிய போலீஸை கண்டித்து நானும், நெடுமாறன் ஐயாவும் அந்த இடத்திலேயே உட்கார்ந்துவிட்டோம். சூழ்ந்து நின்ற போலீஸாரிடம் “இது உங்களுக்கே நியாயமாகப்படுகிறதா..?” என்று கேட்டேன். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி, “நாங்க என்ன ஸார் பண்ண முடியும்..?” என வருத்தத்தோடு சொன்னார். இந்த விஷயத்தில் போலீஸ் மீது எனக்கு வருத்தமில்லை. அவர்கள் யாருடைய இயக்குதல்படி அராஜகத்தை அரங்கேற்றினார்கள் என்பது தெரிந்ததுதானே..?
பார்வதி அம்மாள் சென்னைக்கு வருவது நள்ளிரவுவரை தெரியாது என முதல்வர் சட்டமன்றத்தில் சொல்லியிருக்கிறாரே..?
அவர் சென்னை வருவது மத்திய உளவுத்துறை மூலமாகச் சொல்லப்பட்டு அன்று மாலையே கலைஞருக்கு தெரியும் என்பதுதான் உண்மை. மூலை முடுக்கில் யாரும் தும்மினால்கூட இன்டலிஜென்ஸ் மூலமாகக் கண்டுபிடித்துவிடும் கலைஞருக்கு பார்வதி அம்மாள் வரும் செய்தி தெரியாதென்றால், முதல்வர் பதவிக்கே லாயக்கற்றவர் என்றுதான் அர்த்தம்.
நள்ளிரவில்தான் பார்வதி அம்மாள் விவகாரம் தெரியுமென்றால், இரவு பத்து மணிக்கே விமான நிலையத்தில் தமிழக போலீஸைக் குவித்தது ஏனாம்..? அவருக்கே தெரியாமல் போலீஸ் வந்துவிட்டதா..? அவர் சொல்லாமல்தான் போலீஸ் என்னை நெட்டித் தள்ளியதா..?
புதிய சட்டமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் “கருணாநிதியை கலந்து ஆலோசிக்காமல் நான் ஏதும் செய்ததில்லை..” என்று பிரதமர் மன்மோகன்சிங் சொன்னாரே.. அப்படியிருக்க கலைஞருக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய அதிகாரிகள் இப்படியொரு முக்கியமான முடிவை எடுத்திருப்பார்களா..?
ஈழத்தில் படுகொலைகள் நிகழ்ந்தபோது ஒரு பக்கம் போருக்கு எதிராகத் தீர்மானம் இயற்றியும், இன்னொரு பக்கம் மத்திய அரசுக்கு உறுதுணையாகவும் இருந்து எப்படி நாடகமாடினாரோ.. அதையெல்லாம் விஞ்சத்தக்க அளவுக்கு கலைஞர் நாடகமாடுகிறார். பிரபாகரனின் தாயார் சென்னைக்கு வருவதை கலைஞர் விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு தமிழக அரசோ, தமிழக போலீஸோ காரணமாக இருக்க வாய்ப்பில்லை என டாக்டர் ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே..?
அப்படியானால், மத்திய அரசுதான் திருப்பி அனுப்பச் சொன்னதா..? பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசுதானே விசா கொடுத்தது..? ஆப்பிரிக்க அரசு கொடுக்கவில்லையே..? அப்படி விசா கொடுத்தவர்களே எப்படி விரட்டியடிப்பார்கள்..? அந்த அம்மாள் சென்னையில் தங்கி சிகிச்சை பெறுவதில் கலைஞருக்கு ஆட்சேபணையில்லையென்றால் உடனடியாக உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் பேசி அதற்கு வழி செய்திருக்கலாமே..? இந்த விஷயத்தில் ராமதாஸ் என்ன.. மத்திய அரசேகூட பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை. இத்தகைய அறிவிப்பை வெளியிட வைக்கும் முயற்சியில் இந்நேரம் கலைஞர் ஈடுபட்டிருப்பார்.
பிரபாகரன் தாயாரை சென்னையில் இறங்க வைப்பதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்று சொல்லப்படுகிறதே..?
ஒரே ஒரு சம்பவத்தை இதற்கான பதிலாகச் சொல்கிறேன். ஈழ ஆர்வலரான தணிசேரன் குடும்ப விழாவில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவரை புலிகளின் ஆதரவாளர் எனச் சொல்லி விமான நிலையத்திலேயே உட்கார வைத்தனர். அப்போது எம்.பி.யாக இருந்த நான், அத்வானியிடம் உடனடியாகப் பேசி அந்த ஈழ ஆர்வலர் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி வாங்கிக் கொடுத்தேன்.
ஒரு சாதாரண எம்.பி.யால் முடிந்தது. ஒரு முதல்வரால் முடியாது என்றால் யார் நம்புவார்கள்..?
சென்னை வரவிடாமல் பார்வதி அம்மாளை தடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது..?
செம்மொழி நடக்கவிருக்கும் வேளையில் பிரபாகரனின் தாய் சென்னையில் இருந்தால் இலங்கை கொடூரங்கள் எல்லாம் மறுபடி கொந்தளிப்போடு நினைவு கூறப்படும். இதனால் பல சிக்கல்கள் தனக்கு வரும் என நினைத்திருக்கிறார்.
மாநாட்டுக்காக பன்னாடுகளிலும் இருந்து தமிழகத்துக்கு வரும் தமிழறிஞர்களும் பெருமக்களும் அவசியம் அந்த அம்மாளைச் சென்று பார்ப்பார்கள். அதெல்லாம் ஊடகங்களில் வெளியாகும். அத்தனை பேரும் வந்து தன்னைப் பற்றி மட்டுமே பேசி, வாழ்த்த வேண்டும் என்று காத்திருக்கும் கலைஞரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது.
இதையெல்லாம் எண்ணித்தான் பிரபாகரனின் தாயாரை சென்னைக்கு வர விடாமல் தடுத்திருக்கிறார். பார்வதி அம்மாளை நெடுமாறன் ஐயா வீட்டில் தங்க வைத்து உரிய சிகிச்சைகள் மூலமாக அவரை குணப்படுத்த விரும்பியும், ஈவு இரக்கமற்று அதனைத் தடுத்திருக்கிறார் கலைஞர்.
தமிழகத்தின் தலையிலேயே மிதிப்பதுபோல் திருப்பதிக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டுப் போகிறார் ராஜபக்சே. அவனுடைய மகன்கள் பெங்களூருக்கு வந்து கிரிக்கெட் பார்க்கிறார்கள். பாகிஸ்தான் விளையாட்டு வீரரான வாசிம் அக்ரமின் மனைவிக்கு உடல்நிலை சீரியஸானபோது விசா இல்லாமலேயே அவர் சென்னையில் இறங்கி தங்க வைக்கப்பட்டார். ஆனால் தமிழினத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு இங்கே விசா இருந்தும் அனுமதி மறுக்கப்படுகிறது.
இத்தகையை இழிநிலைக்கு தமிழினம் ஒருபோதும் ஆளானது கிடையாது. கலைஞர் நிகழ்த்தும் இத்தகைய கொடுமைகளைப் பார்க்கையில் ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகம்தான் நினைவுக்கு வருகிறது. அதில் அரசன் டங்கன் படுகொலைக்குப் பிறகு சீமாட்டி மேக்பத் “அரேபியாவின் ஆயிரமாயிரம் வாசனைத் திரவியங்களை ஊற்றிக் கழுவினாலும் என் கையில் உள்ள கறைகள் நீங்காது. என் களங்கம் தீராது..” என்பாள்.
கலைஞரே உங்களின் நிலையும் இப்படித்தான். ஆயிரக்கணக்கான மாநாடு நடத்தினாலும், போதும் போதும் என்கிற அளவுக்கு விருதுகள் வாங்கினாலும் தமிழினத்துக்கு எதிராக உங்கள் பாவங்களை உங்களால் கழுவவே முடியாது..”
- ஜூனியர் விகடன் – 24-04-10