தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தினம் ஒரு தமிழ் களஞ்சியத்துடன் காலை வணக்கம்


தோழர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் மற்றும் இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்...            
 

இன்றைய நாள்:                        திருவள்ளுவர் ஆண்டு 2041 ஆண்டு, பங்குனி 20 , சனிக்கிழமை                                                                                  


இன்றைய குறள்:       
                    
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.



விளக்கம்:          

 
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.



அதிகாரம் :
      அறத்துப்பால் - பாயிரவியல் - வான்சிறப்பு
 
எண் : 17

Translation:
If clouds restrain their gifts and grant no rain, The treasures fail in ocean's wide domain.
Explanation:     
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).



இன்று ஒரு செய்தி, 

 

செஞ்சிக் கோட்டை

செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர்.

வரலாறு

தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விஜயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் இது விளங்கியது.

வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான்.


அமைப்பு

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன.

தற்போதைய நிலை

இக் கோட்டை இறுதியாகப் பிரித்தானியர் வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில் இந்தியச் சுற்றுலாத்துறை பொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது.


நன்றி
பகலவன் குழுமம்.

www.pagalavantamil.blogspot.com