தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நக்சலைட் பிரச்னையில் மறைக்கப்படும் நிஜங்கள் ?


: தனியாரிடம் கொள்ளை போகும் நீர்வளங்கள்!


ஒருகேள்வி. சொந்தநாட்டு மக்களையே வான்வழியே குண்டுபோட்டு கொன்ற நாடு எது? பதில்: இலங்கை. சரி. இன்னொரு கேள்வி... சொந்த நாட்டு மக்கள் மீது வான்வழியே தாக்குதல் நடத்தலாமா என விவாதித்துக் கொண்டிருக்கும் நாடு எது? பதில்... இந்தியா!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா என்ற இடத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் இந்த சம்பவம் பேரதிர்ச்சிதான். ‘‘எங்கோ தவறு நடந்துள்ளது’’ என்று பேட்டியளித்துவிட்டு சத்தீஸ்கருக்கு சென்று வீரர்களின் சவப்பெட்டிக்கு மலர் வளையம் வைத்தவர் முகம் வாடிப்போய் இருந்தார். டெல்லிக்கு திரும்பியவர் ராஜினாமா செய்ததாகவும் அதை பிரதமர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் செய்தியாக வெளிவந்தது. அடுத்தநாள் ராஜினாமா பற்றிக் கேட்டால், ‘அது முடிந்து போன அத்தியாயம்’ என்று கூறிவிட்டு தனது பணியை தொடர ஆரம்பித்துவிட்டார்.

நக்சலைட்டுகள் பிரச்னை என்பது ஏதோ சட்டம் ஒழுங்கு பிரச்னை போல அனைவராலுமே பார்க்கப்படுகிறது. அதுதான் பிரச்னையின் மையப்புள்ளியே. சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமே இந்த காடுகளும் மலைகளும் ஆறுகளும்தான். ஆண்டாண்டு காலமாக இவற்றை நம்பியே வாழ்ந்து வந்த மக்கள், வளர்ச்சி, தனியார்மயமாக்குதல், தொழில் விரிவாக்கம், தாராளமயமாக்குதல் என்ற பெயர்களில் காலி செய்யப்படுகின்றனர். தங்களது சொந்த நிலங்களை பணக்காரர்கள் வந்து இஷ்டத்திற்கு பிளாட் போடும் நடவடிக்கைகளை இம்மக்கள் விரும்பவில்லை.

பழங்குடியின மக்கள் எந்த சமூகக் குற்றத்தையும் செய்திடவில்லை. அதனால் போலீஸ் சட்டம் கோர்ட் என்ற எதுவுமே இம்மக்களுக்கு தேவையும் இல்லை. ஆனாலும் நக்சலைட்டுகளிடமிருந்து ஆதிவாசிகளை காப்பாற்றுகிறோம் என்று கூறி ஆயிரக்கணக்கான படைவீரர்களை காடுகளுக்குள் அனுப்புகிறது அரசாங்கம். காடுகளுக்குள் சொந்த நிலங்களில் வாழ்பவர்கள் எல்லோரையுமே நக்சலைட்டுகள் என்று அர்த்தப்படுத்த ஆசைப்படுகின்றன அரசாங்கமும், மீடியாக்களும்.

சத்தீஸ்கரில் காடுகள் மட்டுமல்ல... அங்கு ஓடும் நதிகள் கூட தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டன. சட்டீஸ்கரின் முக்கிய நதிகளான கெலோ, குர்குத், ஷாப்ரி, காருன்,ஷியோநாத், மாண்டு என அத்தனை நதிகளும் தனியார் கம்பெனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு அந்த கம்பெனிகள் வெளியேற்றும் கழிவுகளை தாங்கி அந்த நதிகள் அனைத்தும் மாசு அடைந்துவிட்டன. இதை அரசாங்கத்தின் பொதுக்கணக்கு குழுவே சுட்டிக்காட்டியுள்ளது.

ராய்கர் வழியாக 95 கி.மீ., தூரத்திற்கு ஓடும் கெலோ நதியை ஜிந்தால் ஸ்டீல் மற்றும் மின்உற்பத்தி நிறுவனம் முழுக்க முழுக்க பயன்படுத்துகிறது. நாள் ஒன்றுக்கு 35 ஆயிரத்து 400 கன மீட்டர் நீரை கெலோவிலிருந்து இந்நிறுவனம் உறிஞ்சுகிறது. அங்குள்ள விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பு இருந்தாலும் எதையும் சட்டை செய்யவில்லை இந்நிறுவனம்.

தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள பஸ்தார் மாவட்டத்தின் தண்டேவாடா பகுதியில் ஷாப்ரி நதி ஓடுகிறது. இதை எஸ்ஸார் ஸ்டீல் கம்பெனி ஆக்கிரமித்துள்ளது. நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்குள்ள நதிகளுக்கு குறுக்கே அணைகட்டுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தின் நீர்வளத்தை பங்கு போடுவதற்கு அனுமதி கேட்டு ஏராளமான விண்ணப்பங்கள் நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன் குவிந்துள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும். நாட்டிலேயே மின்சார உற்பத்தியின் மிகப்பெரிய கேந்திரமாக உருவெடுத்துள்ள மாநிலம்தான் சத்தீஸ்கர். ஒரு லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 40க்கும் அதிகமான மின்சார உற்பத்தி திட்டங்களை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் ஏற்படுத்த நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனால் அடுத்த பத்தாண்டுகளுக்குள் 40 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் என்று கணக்கும் போடப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநில மின்சார வாரியம் பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சமீபத்தில் 16 திட்டங்களை ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.

எல்லாம் சரிதான். ஆனால் இந்த திட்டங்கள் எல்லாம் அந்த ஆதிவாசி மக்களுக்கு என்ன பயனை அளிக்கப்போகின்றன என்பது முக்கியமான கேள்விதானே? அம்மக்களின் பூர்வீக நிலங்களிலிருந்து அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக அடித்து விரட்டி வெளியேற்றுவது எப்படி சரியாக முடியும்? பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் அங்கு வந்து கடை விரிப்பதை வாய்பிளந்தபடி ரசிப்பதும், வரவேற்பதும் மட்டும் போதுமா. ஆனால் உண்மை நிலவரம் என்ன?

உதாரணத்திற்கு வேதாந்தா பாக்சைட் மைனிங் என்ற நிறுவனம் அங்கு இப்படித்தான் கடை விரித்து வியாபாரம் நடத்தினாலும், அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு கிடைப்பது என்னவோ அன்றாட கூலி வேலை மட்டுமே.

வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் பிடுங்கப்படுவதே இப்போதை நக்சலைட்டுகளின் பிரச்னைக்கு அடிப்படை. இதை வசதியாக மறந்துவிட்டு ஏதோ உள்நாட்டுப்போர் அது இது என்றெல்லாம் வாய்ஜாலம் காட்டுவது, கம்பெனி கம்பெனியாக பயிற்சி பெறாத போலீஸ் படையினரை அனுப்புவது, கிரீன் ஹன்ட் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் திட்டம் வகுப்பது இதெல்லாம் எந்தளவுக்கு பிரச்னையை தீர்க்க உதவும்?நக்சலைட்டுகளை வேட்டையாட அனுப்புகிறோம் என்ற பெயரில் காடுகளில் பயிற்சி பெறாத வீரர்களை அவசர அவசரமாக அனுப்பியது அரசாங்கத்தின் தவறு இல்லையா?

நக்சலைட்டுகள் கோழைகள் என்றும் நக்சலைட்டுகள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழித்துக் கட்டுவோம் என்று அரசாங்கம் வீராப்பாக பேசுவதை விட, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் உறுதி செய்யப்பட்டு நக்சலைட்டுகளை பேச்சுவார்த்தையில் நம்பிக்கை பெற செய்வோம் என்று பேசியிருக்கலாமே. தவறு எங்கோ மட்டும் நடக்கவில்லை. எங்கெங்கும் தவறுகள் நடக்கின்றன என்பதே உண்மை.

வீரர்கள் உயிர் இழந்த சம்பவத்தை அடுத்து, வான்வழியே ஆள் இல்லாத விமானங்களை விட்டு வேவுபார்த்து காட்டுக்குள் இருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவது பற்றி அரசு ஆராய்கிறது. நக்சலைட்டுகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் பொறுப்பான இடங்களில் இருப்பது இந்த நாட்டின் சாபக்கேடு. நக்சலைட்டுகள் வேறொரு நாட்டுக்காரர்கள் இல்லை. இந்த மண்ணின் மைந்தர்கள். சொந்த நாட்டு மக்கள் மீது படை திரட்டி வான்வழி தாக்குதல் நடத்தலாமா வேண்டாமா என்று விவாதிப்பது அடிப்படை ஜனநாயகத்தை மறுக்கும் செயலாகவே இருக்கும்.

நக்சலைட்டுகளின் லட்சியங்கள், கொள்கைகள் ஆகியவற்றில் எவ்வளவுதான் நியாயம் இருந்தாலும் அவர்கள் கையில் ஆயுதம் இருப்பதை ஜனநாயக நாட்டில் ஏற்க மாட்டார்கள்தான். ஆனாலும் அவர்கள் யாரை எதிர்த்து, எதற்காக போராடுகின்றனர் என்பதை விரிவாக விவாதிக்கவேண்டும். இந்த தேசத்தின் முக்கிய பிரச்னை இது. நக்சலைட்டுகள் விவகாரத்தை இந்த நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்னை போலவும் அவர்களை தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு சித்தரிக்கும் போக்கையும் மீடியாக்கள் கைவிட வேண்டும். உயிரிழந்த போலீசாரின் போட்டோக்களை போட்டு பக்கம் பக்கமாக பத்திரிகைககள் கண்ணீர் வடித்தால் மட்டும் போதாது, கொள்ளையடிக்கப்படும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்தும் பேச வேண்டும். அப்படி செய்தாலே பலருக்கும் பிரச்னை புரிய ஆரம்பிக்கும். தீர்வும் தேடி வரும்!