தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஆந்திராவுக்கு போகிறது வேலூர் சி.எம்.சி.?





வேலூர் வரலாற்றுடன் நூற்றாண்டுகள் கடந்து தனது சேவையை ஆற்றிவந்த சி.எம்.சி. மருத்துவமனை எனப்படும் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மருத்துவமனை தற்போது வேலூரை விட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திற்கு மாற்றப்படவுள்ளது என்கிற அதிர்ச்சி தகவல் நமக்கு கிடைத்தது.

ஏற்கெனவே வேலூரில் இருந்த அரசு மருத்துவமனை அணைக்கட்டு தொகுதிக்கு மாற்றப்பட்டதால் விபத்து மற்றும் அவசர சிகிச்சை என்றாலும் கூட உடனடியாக செல்ல முடியாது. அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் மிகுந்த வேலூரை கடந்து, அரசு மருத்துவமனைக்கு போய் சேருவதற்குள் காப்பாற்றப்படவேண்டிய பல உயிர்கள் பலியாகிப்போவது அதிகரித்துள்ள நிலையில், சி.எம்.சி மருத்துவமனையில் முதலுதவி பெற்று, உடனடி சிகிச்சையளித்து பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. அதற்கும் தற்போது ஆபத்து வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

வேலூரில் பல தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் உயிருக்கு பிரச்னை என்றால், அடுத்த நொடியே அதிரடியாக மருத்துவம் பார்ப்பதில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு தனியிடம் உண்டு. அப்படிப்பட்ட சி.எம்.சி. மருத்துவமனை இடம் மாறப்போகிறதா என்றால், ரகசியமாக ‘ஆம்’ என்கிறார்கள் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள். அதுவும், பக்கத்து மாநிலமான ஆந்திராவுக்குள் அடைக்கலமாகப் போகிறது சி.எம்.சி. என்பது தான் அடுத்த அதிர்ச்சி.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள குடிபாலா மண்டலத்துக்குட்பட்ட ராமாபுரம் மற்றும் மாப்பாட்சி ஆகிய இடங்களில் 600 ஏக்கர் நிலப்பரப்பை சி.எம்.சி.க்கு அம்மாநில அரசு வழங்கியுள்ளது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சித்தூர் மாவட்டம் ராமாபுரம் பகுதியில் நாம் சென்று பார்த்த போது, சித்தூர்-வேலூர் நெடுஞ் சாலையை ஒட்டி மருத்துவமனை கட்ட நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்த முனுசாமி என்பவரை விசாரித்தோம். ‘‘எங்க ஊருக்கு சி.எம்.சி. வருவது நல்லது தான். நவீன வசதிகளுடன் மருத்துவம் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும். மேலும் எங்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். அது தவிர இந்த நிலத்தையெல்லாம் அரசாங்கமே விலை கொடுத்து வாங்கியுள்ளதால் விவசாயிகளுக்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது’’ என்றார்.

வெள்ளையர் நம்மை ஆண்டபோது மத போதகராக அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த ஜான் ஸ்கடர் என்பவரின் மகள் ஐடா ஸ்கடர். தனது 16 வயதில் ஐடா ஸ்கடர், விடுமுறையில் இந்தியாவில் இருக்கும் தனது தந்தையை காண வந்தார். வந்த இடத்தில் மருத்துவ வசதிகள் ஏதுமின்றி மக்கள் அவதியுறுவதையும், குறிப்பாக பெண்கள் பிரசவ நேரத்தில் முறையான மருத்துவம் பார்க்க வழியின்றி இறந்து போவதையும் கண்டார். மருத்துவரான தனது தந்தையை ஆண் என்கிற காரணத்தால், பிரசவம் பார்க்க அனுமதிக்காததால் பிரசவத்தின் போது ஒரு பெண் இறந்து போனது அவரது மனதை பாதித்தது.

தான் ஒரு டாக்டராகி இதுபோன்ற இறப்புகளை தடுப்பேன் என்கிற உறுதியுடன் தனது தாய் நாட்டுக்குச் சென்று, மருத்துவம் படித்து முடித்து இந்தியா வந்து, வேலூரில் 1900&ம் ஆண்டு சிறு மருத்துவமனையை தொடங்கினார் ஐடா ஸ்கடர். ஒரே ஒரு படுக்கையை கொண்ட அந்த சிறு மருத்துவமனை, படிப்படியாக உயர்ந்தது. உலகின் பல இடங்களிலிருந்தும் மருத்துவ உபகரணங்களையும் பொருளுதவிகளையும் வரவழைத்தார் அவர். அந்த மருத்துவமனை இன்று உலகத்தரம் வாய்ந்த, மருத்துவ கல்லூரியுடன் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஐடா ஸ்கடர் தனது வாழ்வையே தியாகம் செய்து எந்த ஊருக்காக சி.எம்.சி.யை உருவாக்கினாரோ அந்த ஊரை விட்டுத்தான் இப்போது போகிறது சி.எம்.சி. இது குறித்து அம்மருத்துவமனையின் மெடிக்கல் சூப்பிரன்டென்ட் லயொனல் ஞானராஜிடம் கேட்டோம்.

‘‘சித்தூர் மாவட்டத்திற்கு சி.எம்.சி. போவது நிஜம். அதற்கு இன்னமும் கொஞ்ச காலமாகும். சி.எம்.சி. இங்கு இருந்து போக முக்கிய காரணம் இடப்பற்றாக்குறைதான். இங்கு புதிய கட்டடங்களை கட்டவும் முடியாது. விரிவு-படுத்தவும் இடம் இல்லை. நாளுக்கு நாள் நோயாளிகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் புறநோயாளிகள் வந்து சென்றனர். இன்று ஐந்தாயிரத்து 500 பேர் வந்து செல்கிறார்கள். இடப்பற்றாக்குறையை நிறைவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சி.எம்.சி. மருத்துவமனை உள்ளது. இங்கு அதற்குண்டான இடவசதி இல்லாத காரணத்தால், ஆந்திர மாநிலத்தில் 600 ஏக்கரில் இதன் விரிவாக்க வளாகம் அமைக்கப்பட்டு படிப்-படியாக செயல்பட ஆரம்பிக்கும். அதே நேரத்தில் இங்கேயும் சி.எம்.சி. செயல்படும்’’ என்றார்.

வேலூர் பொதுமக்கள் பலரிடம் பேசினோம். அவர்கள் பலரும் சி.எம்.சி. தொடர்ந்து இங்கேயே செயல்பட வேண்டும் என்றே சொல்கின்றனர்.

‘‘வேலூர் மற்றும் மாவட்டம் முழுவதுமுள்ள மக்களின் மருத்துவத் தேவைகளை சி.எம்.சி. கவனித்து கொள்ளுமளவுக்கு மருத்துவ வசதிகளுடன் உள்ளது. பல வருடங்களாக மாவட்டம் மட்டு-மல்லாது, மாநிலம் கடந்து தேசம் கடந்து தனது மருத்துவ சேவையாற்றி வந்துள்ளது. இது இடம் மாற்றப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது மருத்துவத் தேவைகளை நிறைவு செய்து கொள்ள சிரமமாகிவிடும். குறிப்பாக கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சி.எம்.சி.யின் தேவை அதிகம்.

சி.எம்.சி.யின் சாதனைகளாக முதல் மருத்துவக்கல்லூரி, உலகிலேயே முதன்முதலாக தொழு நோய்க்கு அறுவை சிகிச்சை, ஆசியாவின் முதல் நரம்பியல் அறிவியல் பிரிவு, முதல் கண் சிகிச்சை முகாம், இந்தியாவின் முதல் மறுவாழ்வு பயிற்சி மையம், இந்தியாவின் முதல் வெற்றிகரமான இதய அறுவை சிகிச்சை, இந்தியாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என உலக மற்றும் இந்திய அளவில் பல பல விஷயங்களை கூறலாம்.

இப்படி பல பெருமைகளைக் கொண்ட சி.எம்.சி. ஆந்திர மாநிலத்திற்கு செல்லவிடாமல் இங்கிருக்கும் அனைத்து மக்களும் தடுக்க வேண்டும். இங்கேயும் சி.எம்.சி. செயல்படும் என்பது, ஏதோ பெயரளவுக்கு தான் இருக்கும். நாளடைவில், வேலூர் சி.எம்.சி. காணாமல் போய்விடும். அதற்குள் இங்கிருக்கும் அரசியல்வாதிகள் ஏதாவது செய்ய வேண்டும். தற்போது வேலூரில் 27 ஏக்கர், பாகாயத்தில் 196 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள சி.எம்.சி.க்கு, தேவையான நிலத்தை தமிழக அரசு தர வேண்டும்’’ என்றுச் சொல்லி ஆதங்கப்படுகிறார்கள் வேலூர்வாசிகள்.