தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உணவுப் பொருள் விலையேற்றம்: இந்தியர்களின் கொடுங்கனவு

வர்க்க, ஜாதி, மத பேதமில்லாமல் இன்று உலகமும் இந்தியாவும் தமிழகமும் விவாதித்து வரும் தலைப்பு இது: விலைவாசி உயர்வு. 1973-75ல் இருந்ததைவிட மோசமான, சர்வதேச உணவுப் பொருள் விலை உயர்வைச் சந்திக்கிறது உலகச் சந்தை. இந்தியாவில் உணவுப் பொருள் விலையேற்றத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிடும் உணவுப் பொருள் பணவீக்கம் பிப்ரவரி 6 கணக்கின்படி 18 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது. 1960களில் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது உணவு பற்றிப் பேசிய அதே தீவிரத்தில், மனிதர்கள் உருவாக்கியிருக்கும் செயற்கை விலையேற்றத்தினால் பாதிக்கப்பட்டோர் ரயில்களிலும் விமானங்களிலும் வீட்டு வரவேற்பறைகளிலும் டீக்கடைகளிலும் விலைவாசி உயர்வைப் பேசி வருகிறார்கள். இந்தியா போன்ற வளரும் நாட்டில் விலைவாசி உயர்வுதான் பிரதானமான பொதுப் பிரச்சினை. சுதந்திர இந்தியாவில் ஒரு அரசாங்கம் தங்களுக்கு வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிப்பதற்கு மக்கள் பயன்படுத்தும் ஒரே மாறாத அளவுகோல், உணவுப் பொருள் விலை. வெங்காயத்தின் அனாயாசமான விலை உயர்வு 1998ல் பா.ஜ.கவுக்கு நான்கு மாநிலங்களின் பொதுத் தேர்தலில் தோல்வியைத் தந்தது. 1967 தமிழகப் பொதுத் தேர்தலில் இந்தி எதிர்ப்பிற்கு நிகராக, அன்றைக்கிருந்த உணவுப் பஞ்சமும் மாநில காங்கிரசுக்கு எதிரான தி.மு.கவின் அரசியல் எழுச்சிக்கு உதவியது. 2005 முதல் அதிகமாகி வரும் உணவுப் பொருள் விலைகள், மற்ற எந்த அம்சங்களிலும் வீழ்த்த வழியே இல்லாதது போல் தெரியும் தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிற்குப் படுகுழி தோண்டும் சக்தி படைத்ததாகத் தெரிகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு கிலோ சர்க்கரை 22 ரூபாயாக இருந்தது. இப்போது 47 ரூபாய். இந்தியாவின் நுகர்விற்குத் தேவைப்படுவது 23 மில்லியன் டன். இந்தியாவில் உற்பத்தியோ 16 மில்லியன் டன். இந்த இடைவெளியைத் தீர்ப்பதற்கு வழி சொல்ல வேண்டியவர்கள் சர்க் கரையையே தவிர்க்கச் சொல்கிறார்கள். சர்க்கரை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்பதால் அதைச் சேர்த்துக்கொள்வதைக் குறைத்துக் கொள்ளும்படி மத்திய வேளாண் மற்றும் சிவில் வினியோக அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இதழ் ராஷ்ட்ரவாதி நாட்டு மக்களுக்கு அறிவுரை சொல்லியிருக்கிறது. இந்தியர்களுக்கு புரதச் சத்தைக் கொடுக்கும் பயறு வகைகள் கடந்த ஓரிரு ஆண்டுகளில் 41 சதவீதம் விலை உயர்ந்திருக்கிறது. ஒருவேளை பயறு வகைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்ற வசதியான அறிவுரையைத் தருவார்களா?
சிக்கலான விலைவாசி உயர்வு பிரச்சினையைப் புரிந்துகொள்ள, அதற்குக் காரணமான ஏராளமான காரணிகளைத் தனித்தனியாகப் புரிந்துகொள்ள வேண்டும்: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, அரிசி-கோதுமைக்கு அரசின் குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது, விலை உயரும் என்ற கணிப்பால் வியாபாரிகள் செய்த பதுக்கல், பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் உணவுப் பொருள் யூக பேரத்திற்கு திசை மாறிய முதலீடு, இந்தியாவில் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் பருப்பு வகைகள்-எண்ணெய் வித்துக்களின் சர்வதேச விலைகள் உயரக் காரணமாக இருந்த பயோ எரிபொருள் உற்பத்திக்கான முக்கியத்துவம், ஜனத்தொகை உயர்வால் அதிகரித்த உணவுத் தேவை, நீண்ட காலமாக வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சமீப காலமாக சிறப்பு பொருளாதார மண்டலங்களில் வேளாண் நிலங்களைக் காணாமலடிப்பது.
2003-04ல் 28.10 டாலராக இருந்த சர்வதேச கச்சா எண்ணெய் விலை 2008 ஜூனில் 130 டாலராக உயர்ந்தது. நான்கு மடங்கைவிட அதிக உயர்வு. இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்ததால் பெட்ரோல்-டீசல் விலை இரு மடங்கு கூட உயரவில்லை. 2003-04ல் ஒரு லிட்டர் டீசல் 19.84 ரூபாய். 2008 வாக்கில் 34.80 ரூபாய். கச்சா எண்ணெய் பல விவசாய இடுபொருட்களைத் தயாரிக்கவும் பயன்படுவதால் அவற்றின் விலையும் உயர்ந்தது. ஒரு டன் யூரியாவின் விலை 138.90 டாலரிலிருந்து 2008க்குள் 309 டாலராக உயர்ந்தது. இந்தியாவில் அரசே மானிய விலையில் உரங்களை விற்பதால் விவசாயிகளுக்கு விற்கப்படும் உரத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. விவசாய உற்பத்திக்கான, விவசாயப் பொருட்களை நுகர்வோர் வரை கொண்டு வந்து சேர்ப்பதற்கான செலவு உயர்ந்ததால் உணவுப் பொருள் விலை உயர்வும் உலகம் முழுவதும் தவிர்க்க முடியாததாக மாறியது. அமெரிக்காவில் விலைவாசி உயர்வில் 15-20 சதவீதம் எரிபொருள் விலை உயர்வால் நேர்ந்தது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எரிபொருள் காரணமாக ஏற்பட்டிருக்கும்  விலை உயர்வு நிச்சயம் அதைவிட குறைவுதான். இன்று நமக்குத் தலைவலியாகத் தெரியும் விலைவாசி, எரிபொருள் விலை மீதான அரசின் கட்டுப்பாடு இல்லாதிருந்தால் உயிர் வலியாக மாறியிருக்கும்.
இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வேலை வாய்ப்பு விவசாயத்தை சார்ந்திருக்கிறது. இந்த வாக்கு வங்கியை வளைத்துப் போடுவது காங்கிரசின் சமீபத்திய இலக்கு. விவசாயிகளின் ஓட்டுக்காக விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்த மத்திய அரசு அரிசி, கோதுமையின் கொள்முதல் விலையை உயர்த்தியது. ஒரு குவிண்டால் கோதுமைக்கு 2005-06ல் 650 ரூபாய் கொடுக்கப்பட்ட இடத்தில் 2008-09ல் ரூ.1,080 ஆக கொடுக்க ஆரம்பித்தது. 2005-06ல் ரூ. 600 ஆக இருந்த ஒரு குவிண்டால் ‘ஏ’ கிரேடு நெல் கொள்முதல் விலை 2009-10ல் 1,000 ஆக உயர்ந்தது. அரசு நிர்ணயிக்கும் விலையைவிட அதிகமாகக் கொடுத்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் தனியார் மண்டிகள் அந்தக் கூடுதல் விலையை நுகர்வோரிடம் வசூலிக்கின்றன. இந்தியாவில் விவசாயத்திற்குக் கொடுக்கும் ஒரே ஊக்கம், குறைந்தபட்ச நலனை உறுதி செய்யும் கொள்முதல் விலை நிர்ணயம்தான் என்பதால் அதை உயர்த்துவதில் தவறு காண முடியாது. அதே சமயம் அதன் விளைவால் நுகர்வோருக்குக் கிடைக்கும் உணவு தானியங்களின் விலை உயர்வதையும் தவிர்க்க முடியாது. ஆனால் விவசாயிகளிடமிருந்து அரசு வாங்கும் உணவு தானியங்கள் இந்திய உணவுக் கார்ப்பரேஷன் முதலியவற்றின் கிட்டங்கிகளில் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. தற்போது 26.7 மில்லியன் டன் அரிசி, 20.6 மில்லியன் டன் கோதுமை கையிருப்பு வைத்திருக்கும் இந்திய உணவுக் கார்ப்பரேஷனிடமிருந்து ஆண்டுதோறும் 5 சதவீத தானிய கையிருப்பு வீணாகிறது.
நாட்டில் உணவுப் பஞ்சம் வராமல் தடுக்க இந்தியாவில் 8.2 மில்லியன் டன் கோதுமை கையிருப்பு இருந்தாலே போதும். அரிசி 11.8 மில்லியன் டன் இருந்தாலே போதுமானது. அதைவிடப் பல மடங்கு கூடுதல் கையிருப்பு இந்தியாவிடம் உள்ளது. தேவை-வினியோகத்தில் பெரும் இடைவெளி ஏற்படுவது தான் உணவு தானிய விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் என்பதால் இந்தக் கையிருப்பு மூலம் குறைந்தபட்சம் அரிசி, கோதுமையின் விலையை அரசாங்கத்தால் எளிதாகக் கட்டுப்படுத்த முடிய வேண்டும். விலை ஏறும்போது அரசின் கையிருப்பிலிருந்து கணிசமான உணவு தானியங்களை வெளிச் சந்தையில் இறக்கும்போது வேறு வழியின்றி ஒட்டு மொத்த விற்பனையாளர்கள் விலையைக் குறைக்க வேண்டி வரும். ஆனால் அந்த நோக்கத்துடன் வெளிச் சந்தையில் இறக்குவதற்காக ஒதுக்கப்படும் உணவு தானியங்கள் மாநில அரசுகளால் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதே இல்லை. கடந்த ஆண்டு வெளிச் சந்தைக்காக ஒதுக்கப்பட்ட 10 லட்சம் டன் அரிசியில் 2.97 லட்சம் டன் மட்டுமே மாநிலங்களால் எடுக்கப்பட்டன. இதைச் சரி செய்வதற்காக, வெளிச் சந்தைக்காக ஒதுக்கப்படும் உணவு தானியங்களை மாநில அரசுகள் வாங்குகின்றனவா, இல்லையா என்று மாதம் ஒரு முறை பிரதமர் தலைமையில் ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ணவுப் பொருள் வர்த்தகத்தில் வளம் பெறும் ஒரே பிரிவினரான வியாபாரிகளுக்கும் விலைவாசிக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. 2009ல் பருப்பு விலை ரூ40ல் இருந்து 100ஐத் தாண்டியது. உயர் ரக அரிசியின் விலை கிலோ 40ஐத் தாண்டியது. இதற்கு முக்கியமான காரணம் பதுக்கல் என்று சந்தேகிக்கப்படுகிறது. 2005 முதல் உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலை 2008க்குப் பிறகு இன்னும் அதிகம் உயரும் என்று தெரியத் தொடங்கியதால் வியாபாரிகள் பொருட்களைப் பதுக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக, மகா ராஷ்டிராவில் சர்க்கரை ஆலை அதிபர்கள் அதிக லாபமடைவதற்கு சாதகமாக சர்க்கரை விலையைக் கையாண்டதாக வேளாண் அமைச்சர் சரத்பவார் விமர்சிக்கப்படுகிறார். யூக பேரத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பான குற்றச் சாட்டு வழக்கத்தைவிட அதிக ஆக்ரோஷத்துடன் ஒலிக்கிறது. ஏனெனில், உலகப் பொருளாதார மந்த நிலையால் ’பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் அதிக லாப மீட்ட முடியாத முதலீட்டாளர்கள் இப்போது உணவுப் பொருள் யூக பேரத்தில் இறங்கிவிட்டார்கள்’ என்று எகனாமிக் அண்ட் பொலி டிக்கல் வீக்லியின் (இ.பி.டபிள்யூ) ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் ரமேஷ் சந்த். தன்னிறைவு இருந்தாலும்கூட அரிசி, கோதுமையின் விலை உயர்வதைத் தடுக்க முடியாத அவமானத்திற்குப் பதுக்கலும் யூக பேரமும் முக்கிய காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவின் உணவுத் தேவைக்கு 80 மில்லியன் டன் கோதுமை தேவை. ஆனால் உற்பத்தி 82 மில்லியன் டன். தேவையைவிட அதிகமான உற்பத்தி இருக்கும் போதே செயற்கையான விலையேற்றம் சாத்தியம் என்றால் உணவுத் தன்னிறைவு இல்லாவிட்டால்? தற் போதைய விலைவாசி உயர்வைவிட எதிர்காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினை இது.
இந்தியாவில் 2005க்குப் பிறகு தான் விலைகள் ஏறத் தொடங்கின. ஆனால் உலகச் சந்தையில் 2002 முதல் விலையேற்றம் தொடங்கிவிட்டது. அதற்கு எரிபொருள் விலை உயர்வு ஒரு காரணம், உணவுப் பயிர்கள் பயோ எரிபொருள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதும் காரணம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய யூனியனிலும் சோயா, சர்க்கரை, பாமாயில், மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள் (சமையல் எண்ணெயாக அதிகம் பயன்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய்கூட சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது) மூலம் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. பெட்ரோல்-டீசல் மீதான அதீத தேவையையும் அதன் மூலம் ஏற்படும் அன்னியச் செலாவணி பாதிப்பையும் தொலைநோக்கில் எரிபொருள் தன்னிறைவு மூலம் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த திட்டம். எத்தனால் தயாரிப்பதற்கு சிறப்பு மானியமும் கொடுக்கப்படுவதால் உணவுப் பொருளை எரிபொருளாக்குவது அதிகமாகிக்கொண்டே போகிறது, உணவுக்காகக் கிடைக்கும் பொருட்களின் அளவு குறைந்து வருகிறது. 2005ல் உலகம் முழுவதும் வேளாண் மகசூல் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனாலும் விலை ஏறிக்கொண்டே போனது. பயோ எரிபொருள் தயாரிக்க அவை திருப்பி விடப்படுவது தான் அதற்குக் காரணம் என அமெரிக்க வேளாண் துறை ஒப்புக்கொள்கிறது. அதன் பாதிப்பு வெறும் 3 சதவீதம் என்கிறது அமெரிக்கா. ஆனால் மக்காச்சோளத்தின் விலை உயர்வில் 70 சதவீதம், சோயா பீன்சின் விலை உயர்வில் 40 சதவீதம் பங்கு பயோ எரிபொருளினுடையது என்று சொல்கிறது உலக வங்கி நடத்திய ஆய்வு.
தங்களின் பயோ எரிபொருள் திட்டம்தான் உலக உணவுப் பொருள் விலையேற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுவது மீதான கவனத்தை திசை திருப்புவதற்காக, உணவுப் பொருள் பற்றாக்குறைக்கும் விலையேற்றத்திற்கும் இந்தியாவும் சீனாவும்தான் காரணம் என்று 2008ல் சொன்னார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ். ஜனத்தொகை அதிகம் கொண்ட அந்த நாடுகளில் வருவாய் அதிகமாகி வருவதால் மக்களின் தனிநபர் சராசரி உணவு விகிதம் அதிகமாகியிருப்பதாகச் சொல்லப்பட்ட பொய்யை உலக வங்கி சார்பாக நடத்தப்பட்ட ஆய்வு அம்பலமாக்குகிறது. “சீனாவின் கால்நடைகளுக்கும் கோழிப் பண்ணைகளுக்கும் தேவையான தீவனத்திற்காக வாங்கப்பட்ட உணவுப் பொருளுக்கு விலையேற்றத்திற்குப் பங்கிருக்கிறது என்றாலும் இந்தியா, சீனாவின் ஜனத்தொகையின் உணவுப் பழக்கத்திற்கும் உணவுப் பொருள் விலையேற்றத்திற்கும் பெரிய தொடர்பில்லை” என்கிறார், 2008 மே மாதத்தில் அந்த ஆய்வறிக்கையை வெளியிட்ட டொனால்டு மிட்செல். ஒரு ஆண்டுக்கு இந்தியர்கள் சராசரியாக 5.3 கிலோ இறைச்சி உண்கிறார்கள். அமெரிக்கர்கள் 126.6 கிலோ உண்கிறார்கள். உணவு தானியங்களில் இந்தியர்கள் உண்பதன் தனி நபர் ஆண்டு சராசரி 175.1 கிலோ; அமெரிக்கர்கள் 953 கிலோ. அங்கன்வாடிகளின் உதவியைப் பெறும் குழந்தைகளிடையேகூட 44 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவிலிருந்து மீளாத தேசத்தின் மீது அப்படி ஒரு பழியைப் போட்டது புஷ்ஷின் மனிதா பிமானத்தையும் நேர்மையையும் காட்டுகிறது.
எனினும் இந்தியாவின் ஜனத் தொகை உயர்வால் உணவுப் பொருளின் தேவையும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்பைவிட குறைந்திருக்கும் ஜனத்தொகை பெருக்க விகிதம் இப்போது 1.5 சதவீதமாக இருக்கிறது. ஆனால் உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிப்பு 1.3 சதவீதமாகவே இருக்கிறது. இந்த இடைவெளி எதிர்காலத்தில் 1960களில் கண்டது மாதிரியான உணவுப் பஞ்சத்தை எதிர்காலத்தில் கொண்டு வரலாம். தற்போது அரிசியிலும் கோதுமையிலும்கூட நாம் தன்னிறைவின் விளிம்பில்தான் நிற்கிறோம். சர்க்கரை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகளை நாம் ஆண்டுதோறும் இறக்குமதி செய்தே ஆக வேண்டும். யூக பேரம் போன்ற மாயாவிகள் உலவும் உலக சந்தை மிகவும் கணிக்க முடியாததாகிவிட்ட பிறகு உணவுப் பொருள் தன்னிறைவை எட்டாதவரை விலைவாசி பிரச்சினை இன்னும் மோசமாவதைத் தவிர வேறு வழியில்லை. இத்தகைய யதார்த்தத்தால் 2005ல் உயரத் தொடங்கிய உணவுப் பொருட்களின் விலை, சாதகமான மகசூல் போன்ற காரணங்களால் குறைந்தாலும் 2005க்கு முன்பிருந்த நிலைக்குத்திரும்பாது என்று கணிக்கப்படுகிறது. உள்நாட்டு வேளாண்மையை உறுதி செய்வது மூலம் உலக சந்தையின் விலைக்கும் உள்நாட்டு விலைக்குமான தொடர்பைச் சிறிய அளவில் மட்டுமே வைத்திருப்பதுதான் விலையைக் கட்டுப்படுத்த முடிவதற்கான  ஒரே வழி.  ஆனால்  வேளாண்மைக்கு முக்கியத்துவம் தர வேண்டிய காலகட்டத்தில், விவசாய நிலங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகி வருகின்றன.
சுதந்திர இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பிறகு வேளாண்மை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. விவசாயியின் பிரச்சினைகளைக் குறைக்கக்கூடிய புதிய தொழில்நுட்பத்தின் அறிமுகமும் நீராதாரங்கள் குறைந்து வரும் நிலையில் குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்யும் வழிமுறைகளும் விவசாயிகள் இடைத்தரகர்களால் சுரண்டப்படாமலிருப்பதற்காக குளிர் பதன கிட்டங்கிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கித் தரப்படவில்லை. சிறிது காலம் முன்பு வரை கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் வரத்து அதிகமாகிவிட்டதால் அதை கிலோ 2 ரூபாய்க்குக்கூட வாங்க ஆளில்லை. தாங்கள் போட்ட முதலீட்டைக்கூட எடுக்க முடியாத விவசாயிகள் தெருக்களில் தக்காளிகளைக் கொட்டி வருகிறார்கள். குளிர் பதன கிட்டங்கிகள் இருக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கும் லாபம், விலை தாறுமாறாக ஏறுவதைத் தடுக்கும் என்பதால் நுகர்வோருக்கும் லாபம். இதுபோன்ற அடிப்படை பிரச்சினைகளை சரி செய்யாவிட்டால் விலைகளின் ஏற்றமும் இறக்கமும் தேவை-வினியோகத்திலுள்ள ஏற்றத்தாழ்வு அல்லாமல், விலையேற்றம் ஒன்றே நிரந்தரமாகி விடும்.
இந்த உணவுப் பொருள் விலையேற்றமும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயமும் மரபணு மாற்றுப் பயிர்களின் ஆதரவாளர்களுக்கு வசதியாக இருக்கிறது. அவர்களின்வாதம் இது: அதிகரித்து வரும் ஜனத் தொகைக்கு உணவுப் பொருள் உற்பத்தி செய்வதற்காகப் பயிரிடப்படும் நிலத்தின் அளவை அதிகமாக்குவதில் சிரமங்கள் உள்ளன. காடுகளையும் வனவுயிர் பன்மையையும் அழிக்க நேரலாம். அதைச் செய்யாமல், தற்போது பயிர் செய்யப்படுகிற அளவு நிலத்திலேயே உற்பத்தியைப் பெருக்க வேண்டுமென்றால் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு மாறவேண்டும். கேட்க மிகவும் கவர்ச்சியாக இருக்கும் இந்த வாதத்தில் பொய்களும் சதிகளும் அடங்கியிருக்கின்றன. தற்போது வேளாண்மை செய்யப்பட்டிருக்கும் நிலத்திலேயே உற்பத்தியைப் பெருக்க முடியாது என்பது பொய். இந்திய விவசாயிகளைவிட இலங்கை விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு இரு மடங்கு மகசூல் பார்க்கிறார்கள். உலகின் மிகப்பெரிய கண்டமான ஆப்ரிக்காவில் பசுமைப் புரட்சியே நிகழவில்லை என்றாலும் உலகத்திற்கே சோறு போடும் அளவுக்கு அங்குள்ள விவசாய நிலங்களுக்கு சக்தி உண்டு. ஏற்கனவே தங்களின் உணவுத் தேவைக்கு ஆப்ரிக்க கண்டத்தில் விவசாயம் செய்து வருகிறது சீனா.
அதிகரித்த மக்கள் தொகைக்குப் பசுமைப் புரட்சியின் ரசாயனங்கள் மூலமான உற்பத்திப் பெருக்கம் சோறு போட்டது. ஆனால் நிலத்தைப் பாழ்படுத்திவிட்டது, மனித உடலை நஞ்சாக்கி வருகிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களோ, மனித உயிரின் கட்டமைப்பையே சிதைக்கும் அச்சுறுத்தல்களைத் தன்னுள் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய மரபணு மாற்றப்பட்ட பி.டி. கத்தரிக்காயை அனுமதிப்பதாக ஜி.இ. ஏ.சி என்ற அரசுக் குழு எதன் அடிப்படையில் அறிவித்தது? மரபணு மாற்றபட்ட கத்தரியின் பக்க விளைவுகளைத் தான் சொந்தமாகப் பரிசோதித்துப் பார்க்காமல் வெறுமனே அதைத் தயாரித்த நிறுவனம் கொடுத்த தகவல்கள் பற்றிய தனது மதிப்பீட்டையே ஜி.இ.ஏ.சி வழங்கியது. பி.டி பருத்தியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய மன்சாண்டோவின் மேலாண் இயக்குனர் டி.வி.ஜெகதீசப் ஒரு பயமுறுத்தும் உண்மையை ’தெஹல்கா’ இதழில் அம்பலமாக்கியிருக்கிறார். “பல களைக்கொல்லிகள் எனது தலைமையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் எல்லாம் கம்பெனி தரப்பில் என்ன தகவல்கள் கொடுக்கப்பட்டதோ அவை அப்படியே ஏற்கப்பட்டு அனுமதிகள் தரப்பட்டன. இந்திய அரசு அமைப்புக்களிடம் அந்தத் தகவல்களைப் பரிசோதிக்கும் வசதியோ, சக்தியோ கிடையாது. கம்பெனிகளின் தகவல்களை நம்பி அனுமதிகள் தரப்படும்போது, அந்தத் தகவல்களையே தங்களுக்கு சாதகமானதாக அவை தயார் செய்து விடுகின்றன” என்கிறார் அவர். அதனால் பி.டி கத்தரியை சுயேட்சையான அமைப்புக்கள் மூலம் நீண்ட கால சோதனைகள் நடத்தாமல் அனுமதிக்கக்கூடாது என்கிறார் அவர். இந்தியாவில் 1960களில் மண்ணில் போடப்பட்ட ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் மண்ணிலும் மனிதர்களின் உடலும் தெரிய 40 ஆண்டுகளாகியிருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கெட்ட விளைவுகள் இன்னும் ஒரு தலைமுறை கழித்து அதைவிட பன்மடங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
விலைவாசி உயர்வு விஷயத்தில் காங்கிரசும் சரத்பவாரும் நடத்திய கண்ணாமூச்சி முடிவிற்கு வந்திருக்கிறது. மக்கள் கோபத்தைச் சந்திக்க அஞ்சும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு வட இந்தியாவில் ராபி பருவ (வசந்த கால அறுவடை) கோதுமை மகசூலும் பிரேசிலில் கரும்பு மகசூலும் சிறப்பாக இருக்கும் என்று கணிப்பையே நம்பியிருக்கிறது. வருகிற மார்ச்சுக்குள் பிரதான உணவுப் பொருட்களின் விலை குறையத் தொடங்கும் என்று நம்பிக்கையை விதைக்க முயற்சிக்கிறது. கடந்த வருட கோதுமை உற்பத்தி 80 மில்லியன் டன். இந்த வருடம் பருவ மழை திருப்திகரமாக இல்லையென்றாலும் 82.58 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி இருக்கும் என்று மத்திய அரசு சொல்கிறது. அதே சமயம் 90 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி இந்த வருடம் 85 மில்லியன் டன்னாகக் குறையும் என்பதால் அரிசியின் விலைக்கு உத்தரவாதமில்லை. 100 ரூபாயைத் தாண்டிய பருப்பு விலை ஏற்கனவே குறையத் தொடங்கிவிட்டது. தக்காளி விலை தரையைத் தொட்டுவிட்டது. ரேஷன் கடைகளில் மாதம் 25 கிலோ அரிசி ஒரு கிலோ 3 ரூபாய்க்கே கிடைக்கிறது (தமிழகத்தில் கிலோ 1 ரூபாய்). அரசின் கையிருப்பில் தேவையை விட அதிகமான அரிசி, கோதுமை இருப்பதால் வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ரேஷன் அரிசி வழங்கலாம் என்ற பரிந்துரைகள் முன்வைக்கப்படுகின்றன.
பெட்ரோல்-டீசல் விலைகளை சர்வதேச விலையுடன் இணைத்துவிடும் முயற்சி, வேளாண்மைக்குப் பயன்படும் உரங்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த மானியத்தை தனித்தனி சத்துக்களுக்கு பிரித்துக் கொடுக்கும் சமீபத்திய பரிசீலனை, யூக பேரம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விவசாய நிலங்களைக் கபளீகரம் செய்வது போன்ற தற் போதைய அத்தனை திட்டங்களும் எதிர்காலத்தில் விலைகளை மேலும் உயர்த்தலாம். அரசியல்வாதிகள் தங்களின் நீண்ட கால பொறுப்பின்மையை, அலட்சியத்தை மறைக்க, ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிட வேண்டியதுதானே என்ற பிரெஞ்சு ராணியின் வார்த்தைகளைப் போல, கோபமூட்டும் வாதங்களையும் நம்ப முடியாத காரணங்களையும் சொல்கிறார்கள். சரத்பவாரைக் கைகாட்டித் தப்பிக்கும் காங்கிரசின் முயற்சி தோற்றிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் பெரும் பகுதிக் காலம் ஆட்சியிலிருந்த ஒரு கட்சி அவ்வளவு எளிதாக குற்ற நிழலிலிருந்து தப்பிக்க முடியாது. ஏற்கனவே பலவீனமாக இருந்த விவசாயம் மேலும் நொடிந்து போக 1990களில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த தாராளமயமாக்கலும் ஒரு காரணம். அரசின் செயல் திட்டத்தில் விவசாயத்திற்கிருந்த கொஞ்ச நஞ்ச முக்கியத்துவமும் அதோடு காணாமல் போனது.
ஜனத்தொகையின்  அதீத வளர்ச்சியால்  மனிதத்  தேவைக்கேற்ப உணவுப் பொருள் கிடைக்காமல் போகும், விலைகள் கட்டுப்பாடில்லாமல் உயரும் என்பது மால்கஸ் (Malthus) என்ற அறிஞரின் கணிப்பு. இதுவரை அந்தக் கணிப்பு உண்மையாகவில்லை. ஆனால் உலகின் மிக அதிக ஜனத் தொகை கொண்ட தேசங்களில் ஒன்றான இந்தியா எதிர்காலத்தில் உணவுத் தன்னிறைவை இழக்கும் பட்சத்தில், தொடர்ச்சியான உணவுப் பொருள் விலை உயர்வும் பஞ்சமும் தவிர்க்க முடியாததாகிவிடும்.