தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பேசப்படாத இன படுகொலை - ஈழ தமிழர் உரிமை பற்றிய மாநாடு.

இலங்கையில் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரி்ல் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை உறுதி செய்த மக்கள் தீர்ப்பாயத்தின் முடிவை விளக்கி வரும் 15ஆம் தேதி டெல்லியி்ல் மாநாடு நடைபெறுகிறது.

"பேசப்படாத இனப் படுகொலை: இலங்கையில் போர்க் குற்றங்கள்" என்று தலைப்பில் டெல்லி, ரஃபி மார்க்கிலுள்ள காண்ஸ்ட்டியூசன் கிளப்பில் இருக்கும் ஸ்பீக்கர் ஹால் எனும் அரங்கில் ஏப்ரல் 15ஆம் தேதி மதியம் 2.00 மணி முதல் இம்மாநாடு நடைபெறவுள்ளது.

ஜனவரி மாதம் 14 முதல் 16ஆம் தேதி வரை, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான விராஜ் மெண்டிஸ், இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், சண்டிகார் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சர்வதேச மக்கள் போராட்ட அமைப்பின் துணைத் தலைவர் ஜி.என். சாய் பாபா, சமூக உரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான கே.ஜி. கண்ணபிரான், இவ்வமைப்பின் தமிழகத் தலைவர் வழக்கறிஞர் சுரேஷ், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம், கவிஞரும் புரட்சிகர எழுத்தாளருமான வரவர ராவ், காஷ்மீரைச் சேர்ந்தவரும், அரசியல் கைதிகள் விடுதலை அமைப்பைச் சேர்ந்தவருமான எஸ்.ஏ.ஆர்.கீலானி, காஷ்மீர் அனைத்துக் கட்சி ஹூரியாத் மாநாட்டு அமைப்பின் ஒரு பிரிவின் தலைவரான சையது அலி ஷா கீலானி உலக சீக்கியல் செய்தி இதழின் ஆசிரியர் பேராசிரியர் ஜக்மோகன் சிங் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

"பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திய உள் நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் பன்னாட்டு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டன. சிறிலங்க படைகளின் கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தியத் தாக்குதலில் ஜனவரி முதல் மே வரை 40,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் என்று அனைத்தும் இராணுவ இலக்கு என்று கூறப்பட்டு தாக்கப்பட்டன. கொத்துக் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், வெடித்ததும் அதிக வெப்பத்தை உமிழும் தெர்மோபோரிக் குண்டுகள் என்று தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தி இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்களைக் கற்பழித்தல் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.

சிறிலங்க அரசப் படைகள் இழைத்த இந்த குற்றங்களையெல்லாம் டப்ளினில் நடந்த மக்கள் தீர்ப்பாயம் உறுதி செய்தது. சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், அது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்றும், தமிழர்களுக்கு எதிராக அது இனப் படுகொலை செய்ததாக சொல்லப்படும் குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது மட்டுமின்றி, இதற்கெல்லாம் சிறிலங்க அரசிற்கு உலக நாடுகள் அளித்த ஆதரவும் காரணம் என்று கூறியது.

டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் இந்தத் தீர்ப்பை விவாதிக்க வேண்டிய அவசியம் இத்தருணத்தில் எழுந்துள்ளதால், அதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது" என்று இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள டெல்லி தமிழ் மாணவர்கள் சங்கமும், ஜனநாயக மாணவர்கள் சங்கமும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளன.