தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

திருமண வாழ்த்துக்கள் சானியா மிர்சா.

 தனி மனிதர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றி ஊடகங்களில் எழுத வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது குறித்து நான் வருந்துகிறேன், ஆனால், தனி மனிதர்களின் வாழ்க்கைச் சூழலை, அதனைப் பாதிக்கிற, தாக்கம் விளைவிக்கிற சமூகக் காரணிகளைப் பற்றிப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நான் மகிழ்கிறேன்.

"சானியா மிர்சா", இன்றைய இந்தியாவின் ஊடகங்களைப் பல்வேறு செய்திகளாலும், கற்பனை வெளிகளாலும் நிரப்பிக் கொண்டிருக்கிற ஒரு பெயர், கடினமான பயிற்சியாலும், தனித் திறனாலும் தன்னை உலகிற்கு அடையாளம் செய்து கொண்ட ஒரு பெண்ணின் விளையாட்டு குறித்த, அவரது சாதனைகள் குறித்த செய்திகள் இடம் பெற்றதை விடவும், அவருடைய ஆடைகள் குறித்த செய்திகளும், அவற்றை அவர் எப்படி அணிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்ட அறிவுரைகளும் நிரம்பிக் கிடக்கிறது இந்த தேசத்தில், அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்தும், மதங்கள் விளையாடிப் பார்க்கும் திருமணம் குறித்தும் நாம் பேசுவதற்கு முன்னாள் அவருடைய வாழ்க்கையைப் பற்றிய சிறு குறிப்பை அறிந்து கொள்ள வேண்டியது மிகுந்த தேவையாகிறது.

1986 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15 ஆம் நாள் பிறந்த, இருபது நான்கு வயதான இந்தப் பெண் டென்னிஸ் உலகிற்குள் காலடி வைத்தது தன்னுடைய ஆறாவது வயதில், தந்தை "இம்ரான் மிர்சா" ஒரு விளையாட்டுத் துறை ஊடகவியலாளர், தாயார் "நசீமா", மும்பையில் பிறந்த "சானியா மிர்சா", ஹைதராபாதில் வளர்க்கப்பட்டார். விம்பிள்டன் உட்படப் பல்வேறு போட்டிகளில் வென்று பட்டம் பெற்றிருக்கும் சானியா இந்திய தேசியத்தில் விளையாட்டுத் துறைச் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் "அர்ஜுனா" விருதை வென்றிருக்கிறார், 13 பன்னாட்டு டென்னிஸ் பட்டங்களையும், ஆசியப் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் உட்படப் பல்வேறு பட்டங்களையும் வென்றிருக்கும் இவரது விளையாட்டுத் திறனும், அதற்குப் பின்னால் மறைந்திருக்கிற உழைப்பும் ஊடகங்களில் பலவற்றிற்குத் தெரிவதில்லை. ஆனால், இவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அத்தனை புள்ளி விவரங்களும், முழுக்காலும் தெரிகிற அவரது புகைப்படங்களும் இந்திய ஊடகங்களில் பெரும்பாலானவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இவரைப் பற்றி ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் செய்திகளின் சாரமும், அதனைத் தொடர்ந்து கூச்சலிடும் இந்துத்துவ பிற்போக்குவாதிகளின் மனநிலையும் இதுதான்,

"சானியா மிர்சா ஒரு பாகிஸ்தானியரை மணக்கிறார்".

உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக வயதுக்கு வந்த ஒரு பெண், சட்டப்பூர்வமாக முடிவுகளை எடுக்கும் உரிமையுள்ள ஒரு பெண் பாகிஸ்தானியரை மணந்தால் என்ன, வேற்றுக் கிரகவாசியை மணந்தால் என்ன? எதற்கு இந்தக் கூச்சலும், ஆர்ப்பாட்டமும்? இந்திய ஊடகங்களில் இருக்கும் பாகிஸ்தான் என்கிற நாட்டுக்கு எதிரான இந்துத்துவ வன்மம் இவரது திருமணத்திலும் மூக்கை நுழைக்க முனைகிறது, அவர் ஒரு அமெரிக்கரை மணந்திருந்தால் இத்தனை சிக்கல் வந்திருக்காது, ஏன், அவர் ஒரு ஆப்பிரிக்கரை மணக்கப் போவதாகச் சொல்லி இருந்தால் கூட இத்தனை கூச்சல் எழுந்திருக்காது, ஆனால், அவர் சொன்னது, மனிதர்களே இல்லாத, இஸ்லாமியர்கள் எனப்படும் வேற்றுக்கிரக வாசிகள் நிறைந்த பாகிஸ்தான் என்கிற நாட்டில் இருக்கும் ஒரு விளையாட்டு வீரரை மணக்கப் போவதாக அல்லவா, அப்படி மணக்கப் போவதாகச் சொன்னதும், அதற்கான முயற்சிகளில் ஒன்றாகப் பாகிஸ்தானின் விசா பெற்றதும் சானியா மிர்சா செய்த மிகப் பெரிய, மன்னிக்க முடியாத குற்றங்கள். அதை விட மிகக் கொடிய குற்றம், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு ஆணாதிக்க மதப் பிற்போக்குவாதிகளின் கூற்றுக்களுக்கு எதிரிடையாகவும், தன்னிச்சையாகவும் முடிவுகளை எடுத்து அதனை ஊடகங்களிலும் அறிவிப்பது.

இந்துத்துவப் பிற்போக்குவாதிகள் என்றில்லை, இஸ்லாமிய மதப் பிற்போக்குவாதிகளுக்கும் ஒருமுறை சானியா சரியான பதில் கொடுத்திருந்தார், தங்களுடைய மதத்தின் பாரம்பரியத்திற்கு எதிராக சானியா மிர்சா விளையாடும் போது குட்டைப் பாவாடை அணிவதை இஸ்லாமிய மக்கள் விரும்பவில்லை என்று மதங்களின் புனிதத்தை காக்கும் உரிமையைக் கடவுளிடம் இருந்து பெற்ற இஸ்லாமியப் புனிதர்கள் அறிக்கை விட்டார்கள், அதாவது அவர்கள் சொல்ல வந்தது என்னவென்றால், "பெண்ணே, இனி நீ விளையாடும் போது "பர்தாஹ் அணிந்து கொண்டு விளையாடு". அதன் முழுமையான உள்ளர்த்தம், "பெண்ணே, நீ வீட்டுக்குள் முடங்கிக் கிட, அடுக்களைக்கு வெளியே சுவற்றுக்கு அப்பால் தெரியும் மேகங்கள் தான், நீ அதிக பட்சமாகப் பார்க்க முடிந்த வெளி உலகம், அவற்றைத் தாண்டி உன்னுடைய உலகம் ஆண்களைச் சுற்றியும், ஆணுக்காகவுமாய் மட்டுமே இருக்க வேண்டும்.

"நான் விளையாடுவதற்கு ஏற்ற உடைகளை அணிவதற்கும், என்னுடைய மத நம்பிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று அந்தச் சின்னஞ்சிறிய பெண் அன்று சொன்னார், அதனை எத்தனை வலியோடு அவர் சொல்லி இருப்பார் என்று என்னால் நிச்சயமாக உணர முடியாது, ஏனென்றால் நான் ஒரு பெண்ணில்லை, எல்லா சுதந்திரமும் கொண்ட வீடுகளுக்குள் ஆடை அணியாமல், வெற்று உடம்போடு ஓய்வெடுக்க முடிகிற ஆண்களில் ஒருவனான என்னால் அந்தப் பெண்ணின் வலியைப் புரிந்து கொள்ள முடியாது தான். அந்தப் பெண் விளையாடுவதற்காக எந்த உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்காத இஸ்லாமியப் பிற்போக்கு வாதிகள் அவர் அணியும் ஆடைகளைப் பற்றிப் பேசுவதற்கு என்ன?, ஆடைகளை அணிவதற்கும் கூடத் தகுதியானவர்களா? என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது.

அவர்களின் ஆட்டம் முடிந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்துத்துவப் பிற்போக்கு வாதிகளின் கொட்டம் இப்போது துவங்கி இருக்கிறது, இந்துத்துவ பூச்சாண்டிகளே, திருமணம் செய்து கொள்வதற்கு "ஒரு ஆணும், பெண்ணுமே சட்டப்படி பொருத்தமானவர்கள்" என்கிற விதியே உடைக்கப்பட்டிருக்கும் உலகில் நீங்கள் சொல்லும் விதிகள் மனித குலத்தின் உளவியல் எல்லைகளை மதம் என்கிற பெயரில் அடைத்து வைக்க முயற்சி செய்யும் தந்திரங்கள், நாட்டின் நலனுக்காக சானியா மிர்சா திருமணமே செய்து கொள்ளாமல் தொடர்ந்து டென்னிஸ் ஆடிக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னாலும் சொல்வீர்கள் நீங்கள், காலம் காலமாக அப்படித் தானே பாழாய்ப் போன விதிகளை உருவாக்கி, மனிதர்களைப் பிறப்பினால் அடிமைப்படுத்தவும், சாதிகளை உருவாக்கவும் உங்களால் முடிந்தது ! !

தனி மனித விருப்பை, திருமண வாழ்வைக் கூட இந்திய தேசியத்தில் மதவாதிகளே கட்டமைக்கிறார்கள், குறிப்பாகப் பெண்களின் சமூக வாழ்வு குறித்த ஒரு மாய வெளியை கட்டமைத்து அதில் இருந்து தப்பும் பெண்களை இது போலக் கூச்சலிட்டு அடையாளம் காண்பது இந்திய தேசத்தின் ஆண்களின் மனநிலை அல்லது இந்துத்துவத்தின் மனநிலை, பெரிதாக இரண்டுக்கும் வேறுபாடில்லை.

பாகிஸ்தான் மக்கள் அனைவரும் குற்றவாளிகள் போன்ற ஒரு மாயையை இந்த ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன, அப்படியான ஒரு மாயையை மீண்டும் இருக்கக் கட்டி அமைக்கும் பணிகளில் ஒன்றுதான் சானியா மிர்சாவின் திருமண எதிர்ப்பு ஓலங்கள், இன்றைக்கு இந்திய தேசத்தில் ஒவ்வொரு சகோதர இஸ்லாமியக் குடிமகனும் உளவியல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறான். அவர்களே அறியாமல் அவர்களை இந்துத்துவத்தின் கொடிய கரங்கள் பாகிஸ்தான் என்கிற இஸ்லாமிய எதிர்ப்பு இயங்கியலுக்குள் அடைக்கின்றன, இவற்றின் பின்னால் இயங்குகிற ஆற்றல் மையங்களுக்குப் பல்வேறு பெயர்கள் உண்டு, முண்டாசு கட்டிக் கொண்டு கிளம்பும் இந்தக் கூட்டத்தின் உயிர் நாடி இந்து மதத்தின் அடிப்படைக் காவியங்களான மனுதர்மத்திலும், பகவத் கீதைகளிலும் ஒளிந்து கிடக்கிறது,

தனது நாடு என்று அந்தப் பெண் நம்பிய ஒரு நாட்டிற்காக எந்த ஒரு சமரசமும் இன்றி கடினமாக உழைத்து டென்னிஸ் விளையாட்டில் ஒரு மைல் கல்லாக நிலை பெற்றிருக்கும் சானியா மிர்சாவை அவரது திருமணத்தின் போது வாழ்த்துவது நமது கடமை மட்டுமில்லை மதங்களைத் தாண்டிய தேசிய உணர்வின் சாரம். நீங்கள் உண்மையான தேசியவாதிகள் என்றால் இந்துத்துவப் பிற்போக்கு வாதிகளே, சானியாவின் பின்னால் அணிவகுத்து அவரது திருமணத்தில் உருவான சிக்கல்களைத் தீர்த்து வைத்திருக்க வேண்டும்.ஆனால், அப்படியான ஒரு பெருந்தன்மையை யாரும் உங்களுக்கு சொல்லித் தரவுமில்லை, நீங்களும் யாருக்கும் சொல்லித் தரப் போவதுமில்லை, குறைந்த பட்சம், இனி வரும் காலங்களில் எதிர்மறை வெறுப்பை உமிழ்வதை விடுத்து, மதங்களைக் கடந்த, தேசங்களைக் கடந்த அன்பை எப்போதும் வழங்கும் முழுமையான மனிதர்களாக "சானியா மிர்சா" என்ற சாதனைப் பெண்ணின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை அள்ளி வழங்குவோம், அவர் யாரைத் திருமணம் செய்து கொண்டாலும் சரி, அல்லது திருமணமே செய்து கொள்ளாமல் இல்லறத்தில் ஈடுபட்டாலும் சரி, எப்போதும் தனது வாழ்க்கையின் முடிவுகளை அவரே தேர்வு செய்யும் ஒரு விடுதலை பெற்ற பெண்ணாக இருக்க ஆண்களின் சார்பில் வாழ்த்துவோம்.