தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

துரோகத்தாலும் வஞ்சனையினாலும் நீதி மறுக்கப்பட்ட இனம் மீண்டும் எழும்

இந்த நம்பிக்கையான குறிப்பை எழுதும்படி என்னை தூண்டியவன் சின்னஞ் சிறிய சிறுவன் ஒருவன். யுத்தத்தில் தன் இரண்டு கண்களையும் இழந்த பிறகு இழந்ததைப் பற்றி இனி யோசிப்பதில் என்ன நன்மை என்று கூறியபடி புத்தாடைகளை வாங்கிப் போனான்.

அவன் தன் உலகத்தை ‐ கடந்த வருடம் இந்த நாளை இரத்தமும் சதையுமாக பார்த்திருக்கிறன். இப்பொழுது இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க உனக்கு ஆவலாய் இல்லையா என்று கேட்ட பொழுது, அதே மாதிரிதான் இருக்கும். அப்படித்தான் இருக்கிறது என்று அவன் சொல்லுகிறான். எங்களை, எங்கள் மனங்களை புதுப்பிக்க வேண்டும். நம்பிக்கை ஊட்ட வேண்டும். பலப்படுத்த வேண்டும் இவைகளை இந்த நாளில் ஒரு சவாலாக தொடங்குவோம் என்று அவன் நம்பிக்கையுடன் கூறிச் செல்கிறான்.

சிதைக்கப்பட்ட எங்கள் நிலம் அப்படியே இருக்கிறது. துரத்தப்பட்ட மனிதர்கள் இன்னும் முழுமையாக வீடுகளுக்கு திரும்பவில்லை. மக்களில் ஒரு லட்சம் வரையானவர்கபள் தடுப்பு முகாங்களிலேயே உள்ளார்கள். முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு முகாங்களில் குடும்பங்களை பிரிந்து உறவினர்களைப் பிரிந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் சிறைச்சாலைகளின்; கம்பிகளுக்கு பின்னால் கிடக்கிறார்கள். உலகில் எந்த இனமும் அனுபவித்துக் கொண்டிருக்காத வலிகளை அலைச்சலை நாம் அனுபவித்திக் கொண்டிருக்கிறோம். 

30 வருடமாக யுத்தம் நடந்து முடிந்த பின்னர் இன்னும் எதையும் எட்டாத அல்லது வெற்றி பெறாத நிலையில் தோல்வியைச் சுமந்து இந்த வருடம் வருகின்றது. கடந்த புத்தாண்டை நினைவு கூர்ந்து பார்த்தால் இரத்தமும் சதையும் தோல்வியும் அழுகையும் கண்ணீரும் என்று தமிழினத்தை அதன் ஆன்மாவை வதைத்த நினைவுகள்தான் வந்து கொண்டிருக்கும். 

ஆனால் அந்த கண்ணீரிலிருந்து தோல்வியிலிருந்து இரத்தத்திலிருந்து சதைகளிலிருந்து மிஞ்சிய சனங்கள் மீண்டுதான் வந்தார்கள். அப்படி வந்தவர்கள் எதையும் கொண்டாட முடியாத சூழல் இருக்கும் பொழுது இந்த வருடம் எங்களை எதிர் கொள்ளுகிறது. இப்படியான புதியவருடங்களின் பிறப்புகளின் போது நாட்டின் தலைவர்கள் அல்லது அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை வெளியிடுவார்கள். ஆனால் அவை அவர்களிடமிருந்து மக்களுக்கு அனுமதிப்படாத இரக்கப்படாத உரிமைகள் சார்ந்தவையாக இருக்கும்.

எங்களுடைய மகிழ்ச்சியை எங்கிருந்து எப்படி மீட்க வேண்டும்? மகிழ்ச்சிக்குரிய நாளை எப்படி உருவாக்கிக் கொள்ள வேண்டும்? கேள்விகளால் நிறைந்த முற்றுப்பெறாத தவிப்புக்களால் நிறைந்த சூழலில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

புத்தாண்டிற்காக நாங்கள் உடுப்புக்களையும் சமையல் பொருட்களையும் வீட்டு பாவனைப் பொருட்களையும் வாங்கிக் கொண்டிருக்கிறோம். மக்கள் இழந்ததை இப்படித்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.


ஆனால் தாயகத்தில் இன்று (13.04.10) நள்ளிரவு 12 மணி வரை ஒரு இரு வெடிகளைத் தவிர பெரியளவில் சத்தங்களைக் கேட்க முடியவில்லை. எதையும் கொண்டாட முடியாத மனநிலையிலிருந்து விரக்த்தியில் இருந்து சோம்பலிருந்து நாங்கள் விடுபட்டு எழுந்து வர வேண்டியிருக்கிறது.  துயரங்களை, அழுகைகளை, தோல்விகளை வெல்லுவதற்கு மீண்டு வரவேண்டியிருக்கிறது. புதுவருடம் எப்படி இருக்கும் என்ற எங்கள் குழந்தைகளின் மனங்களை புதுப்பிதற்கு, அவர்களின் கனவுகளை நனவாக்குவதற்கு, வாழ்வை அர்தமுள்ளதாக்குவதற்கு நாங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் எழுவோம்.

- நிமல்நேசன்.