இந்திய தேசத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் வகையிலேயே டாக்டர்.அம்பேத்கரின் பெயரால் வழங்கப்படும் விருதை விலை பேசித் தானும் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகி விட்டதை அண்ணன் திருமாவளவன் தமிழ் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார், டாக்டர் அம்பேத்கர் என்கிற ஒரு தனி மனிதரின் அறிவார்ந்த சிந்தனைகள் அவர் சார்ந்த இனம் போலவே ஒடுக்கப்பட்டு அவர் ஒரு குறியீட்டுப் பொருளாக்கப்பட்டு விட்டார். அதுவும், டாக்டர் அம்பேத்கரின் முழுமையான சிந்தனைகளைப் படித்து அதன் அடிப்படையிலேயே அரசியல் இயக்கம் கண்டு வளர்ந்த அண்ணன் திருமாவின் கரங்களாலேயே மீண்டும் ஒரு முறை அது நிகழ்வது தான் வேதனை மட்டுமன்றி வேடிக்கையும் கூட, இன்றைய தமிழகத்தின் அரசியல் அரங்கில் முதல்வர் கலைஞருக்கு இந்த விருது வழங்குவதற்கு ஏராளமான காரணங்களை கண்டுபிடிக்கலாம், அல்லது உருவாக்கலாம். ஆனால், உண்மையான தலித் மக்களின் வாழ்வியல் மேம்பாடு குறித்த கவலையும் அக்கறையும் கொண்டவர்களால் டாக்டர் அம்பேத்கர் விருது முதல்வருக்கு வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு அரசியல் இயக்கமும் அதன் செயற்குழுவும் முடிவு செய்து உருவாக்கிய ஒரு விருதினை அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம், அதற்கான தார்மீக உரிமை அவர்களுக்கு இருக்கிறது, அதற்குப் பயன்படுத்தப்படும் பெயர் தான் நமக்கு மிகுந்த இடைஞ்சலைக் கொடுக்கிறது, "தொல். திருமாவளவன்" விருது என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ இந்த விருது வழங்கப்பட்டிருக்கலாம். சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கிற தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினால் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு டாக்டர் அம்பேத்கரின் பெயரில் விருது கொடுப்பது "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்று தான் புரிந்து கொள்ளப்படும்.
கடந்த மாதத்தில் மதுரை அருகே சின்னாளபட்டியில் ஆதிக்க சாதி வெறியர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையில் ஆன ஒரு அடக்குமுறை வரலாற்றில், அங்கு பணிபுரியும் காவல்துறை துணை ஆய்வாளர் முருகன் தான்தோன்றித் தனமாக தலித் மக்களின் வாழிடப் பகுதியில் புகுந்து பலரை அடித்துத் துவைத்திருக்கிறார், இதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடக்கம், இது சின்னாளபட்டியில் மட்டுமே நிகழும் கொடுமை என்று கருத வேண்டாம், என் ஊரில் நடக்கிறது, உங்கள் ஊரில் நடக்கிறது, ஏன், இத்தகைய தீண்டாமைக் கொடுமைகள் முதல்வரின் ஊரிலேயே நடக்கிறது. ஆனால் தீண்டாமை குறித்தெல்லாம் மிகுந்த சிரத்தை எடுத்து ஆட்சி புரிந்தால் தொடர்ந்து உங்களால் அதிகாரத்தில் இருக்க முடியாது, தீண்டாமை தொடர்ந்தால் தான் சாதிப் பிரிவுகள் இருக்கும், சாதிப் பிரிவுகள் தொடர்ந்தால் தான் கட்சிகளே இருக்கும், பிறகு எப்படி சாதிய விழுக்காட்டு அமைச்சரவை நடத்த முடியும், அமைச்சரவைகளில் சாதி வாரியான ஒதுக்கீடு வழங்கி உங்களால் தொடர்ந்து முதல்வராக இருக்கவோ அல்லது உங்கள் மகனை முதல்வராக்கவோ முடியும்.
சரி இனி விஷயத்திற்கு வருவோம், தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் என்.எம்.காம்ப்ளே ஒன்றும் ஜெயலலிதாவிற்கு வேண்டியவரோ இல்லை, அ.தி.மு.க வைச் சேர்ந்தவரோ இல்லை, அவர் ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது புழுதி வாரித் தூற்ற வேண்டிய அவசியம் அல்லது நெருக்கடி எதுவும் அவருக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. "மனிதக் கழிவை அகற்றும் பணியில் யாரும் இல்லை, அந்த முறை அறவே ஒழிக்கப்பட்டு விட்டது" என்று சொல்லும் செம்மொழி முதல்வரின் ஆட்சியில் தமிழகத்தின் பல இடங்களில் இன்னும் இந்த அவலம் காணப்படுவதற்கான புகைப்பட ஆதாரம் திரு. என்.எம்.காம்ப்ளே இடத்தில் இருக்கிறது. ஒருவேளை அண்ணன் திருமாவுக்கு அதை யாரும் காட்டவில்லையோ என்னவோ?
அண்ணன் திருமா, நீங்கள் கற்ற ஒரு அரசியல் தலைவர் மட்டுமில்லை அறிஞரும் கூட, வாழும் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வழியாகத் தோன்றிய இயக்கங்கள் மற்றும் தலைவர்களின் வரிசையில் உங்கள் உழைப்பாலும், போராட்டங்களாலும் அடையாளம் காணப்பட்டவர் நீங்கள், வட மாவட்டங்களின் ஒவ்வொரு ஊரிலும் உங்கள் காலடி படாத ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் வீதிகள் இருக்கவே இயலாது, கிடைத்தவற்றை உண்டும், கிடைக்காத போது நீர் குடித்தும் இயக்கத்தையும், உங்களையும் உயர்த்திக் கொண்டவர் நீங்கள், உங்களைக் குறை சொல்ல வேண்டும் என்கிற நோக்கில், உள்ளுக்குள் வன்மம் நிறைந்து விமர்சனம் செய்பவர்களின் வரிசையில் ஒன்றாக இந்தக் கட்டுரையும் இடம் பெயரக்கூடும், ஆனால், உள்ளுக்குள் இருக்கும் மனக்குமுறலைப் பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் எண்ணற்ற என் சகோதரர்களின் சார்பாக இதனைப் பதிவு செய்வது தேவை மட்டுமின்றி அவசியமும் ஆகிறது.
தாழ்த்தப்பட்டோர் குறித்த சரியான புள்ளி விவரங்கள் ஒரு மாநில முதல்வர் வீற்றிருக்கும் தலைமைச் செயலகத்தில் இல்லை என்று தேசியத் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் சொன்னால், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் எம்மக்களின் நிலையைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், ஒரு ஊரில் எத்தனை உயர் சாதி இந்துக்கள் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விவரம் எல்லா இடங்களிலும் நிரம்பி வழிகிறது, சொல்லாமலேயே தெரிந்து கொண்டு எழுந்து நின்று வணக்கம் சொல்கிற அலுவலர்கள் எல்லாத் தமிழகக் காவல்துறை அலுவலகங்களிலும் நிறைந்து கிடக்கிறார்கள், ஆனால், அரசுத்துறையில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட அலுவலர்களின் சார்பாக நியமிக்கப்பட வேண்டிய துறைச் செயலர் நிலையிலான பதவி ஒன்று காலியாகவே கிடக்கிறது தமிழ்நாட்டில். அதாவது, அரசுத் துறையில் பணிபுரியும் தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பாக யாரும் பேச இயலாது அல்லது பேசக்கூடாது. ஒரு அரசின் மனநிலை இங்குதான் எதிரொலிக்கப்படுகிறது, ஒரு துறைச் செயலர் அளவிலான அலுவலரை நியமித்து அவர்களின் குறைகளைக் களைய வேண்டிய முதல்வரிடம், அது பற்றிய சிந்தனையே இல்லை. இத்தகைய ஒரு நிராகரிப்புக்காக நீங்கள் அண்ணல் அம்பேத்கர் பெயரில் அவருக்கு விருது கொடுக்கிறீர்கள் என்றால் அதை அவரது வீட்டில் சென்று கொடுத்து விடுங்கள் அண்ணா. விருதுகள் அவரைத் தேடிச் சென்றது மாதிரியும் ஆகும், டாக்டர்.அம்பேத்கரின் பெயரில் மிச்சமிருக்கும் தன்மானம் கொஞ்சம் சுவர்களுக்குள் ஒளிந்து கொண்டது மாதிரியும் ஆகிவிடும்.
கல்வித் துறையில் துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி அளவிலான அரசுப் பணிகளில் எத்தனை தாழ்த்தப்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு மாநில அரசுக்குத் தெரியவில்லை, அதன் முதல்வருக்குத் தெரியவில்லை, ஒரு மாநிலத்தின் அரசு நிர்வாகத்தில் பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் என்று சொல்லப்படும் நிரப்ப இயலாத பணியிடங்கள் 6 % சதவீதத்திற்கும் மேலாக இருக்கிறது, ஒரு மாநிலத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் தலித் மக்களால் கொடுக்கப்பட்டிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நில ஆக்கிரமிப்புப் புகார்கள் சீண்டுவாரற்று மூலையில் கிடக்கின்றன, ஆண்டுக்குக் குறைந்தது இரண்டு முறை முதல்வரின் தலைமையில் கூட வேண்டிய தாழ்த்தப்பட்டோர் நலனைக் கண்காணிக்கும் குழு ஒன்று தமிழகத்தில் அமைக்கப்படாமலேயே கிடக்கிறது. ஒரு மாநிலத்தின் கோவில்களில் நுழைய முடியாத மக்களாக, ஒரு மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் இன்னும் காலனி அணிய முடியாத மக்களாக, ஒரு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மனிதக் கழிவைச் சுமப்பது மட்டுமன்றி அதனைச் சுவை பார்க்கவும் அழுத்தப்படுகிற மக்களின் சார்பில் நீங்கள் இந்த விருதைக் காவல்துறையைத் தன் வசம் வைத்திருக்கும் இந்த மாநிலத்தின் முதல்வருக்கு வழங்குவது உங்களுக்கே கொஞ்சம் கூச்சமாகவும், அசிங்கமாகவும் தெரியவில்லையா???
தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்திய அளவில் இன்னும் முன்னணியில் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. அண்ணல் அம்பேத்கரின் சிலைகளை அடித்து நொறுக்கி அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழக அரசில் இன்று அங்கம் வகிக்கும் அளவிற்கு வளர்க்கப்பட்டிருக்கிறார்கள், இருநூறுக்கும் மேற்பட்ட உரிமைகளுக்குப் போராடிய தலித் மக்கள் இந்த இலவசத் திட்டங்களுக்கான முதல்வரின் ஆட்சியில் தான் இறந்து போயிருக்கிறார்கள், பல்வேறு பகுதிகளில் தலித் மக்களின் வாழிடப் பகுதிகளில் இருந்து அடிப்படை மருத்துவம் வழங்கும் அரசு மருத்துவமனைகள் பத்துக் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் பல பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்கள் இல்லை. தலித் பெண்கள் ஒரு மாநில அரசின் தாசில்தாரால் தாக்கப்படும் கொடுமை பற்றி செம்மொழி மாநாட்டு மும்முரத்தில் இருக்கும் முதல்வர் அறிந்திருக்க மாட்டார், நீங்களுமா??
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் எந்த அரசியல் சமரசங்களுக்கும் ஆட்படாத ஒரு புரட்சி வீரனாய், தலித் மக்களின் குரலாய், தமிழினத்தின் புதிய நம்பிக்கையாய் ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பழைய அண்ணன் திருமாவளவன், இப்படி ஒரு நம்பிக்கை மோசடியை அதுவும் அண்ணல் அம்பேத்கரின் விருது என்ற பெயரால் செய்திருக்க மாட்டார். எது நிகழக் கூடாது என்று நாம் நினைத்தோமோ அது நிகழ்ந்தே விட்டது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் குற்றச்சாட்டுகளுக்காக முதல்வருக்கு எதிராக ஒலிக்க வேண்டிய உங்கள் குரல், விருது வழங்கும் விழா ஒன்றில் அவரை வாழ்த்தி, வரவேற்றுக் களைத்திருக்கும். இன்னொரு விழாவில் இதே விருதை தன் இளைய மகனுக்கோ, மூத்த மகனுக்கோ வழங்கி விட வேண்டும் என்ற தனது ஆசையை ஒரு அன்பு வேண்டுகோளின் மூலம் நிறைவேற்றிக் கொள்வார் தமிழினத் தலைவர். அதே நேரத்தில் இன்னும் ஒரு காவல் துறை ஆய்வாளர் முருகனோ, கணேசனோ தலித் மக்களின் வாழிடப் பகுதிக்குள் நுழைந்து இன்னொரு கர்ப்பிணியை அடித்து துவைத்துக் கொண்டிருப்பார்.
ஒரு வேளை, இந்த விருதைக் கலைஞரின் பாணியிலேயே கடுமையாக விமர்சனம் செய்பவர்களையும், அதற்குத் தகுதி உடையவர்களையும் விருது கொடுத்துக் கவிழ்க்கும் ராஜதந்திரமாக நீங்கள் கையாண்டிருக்கிறீர்கள் என்றால் மகிழ்ச்சி.
உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.