தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இந்தியாவிற்கு என்ன ஆபத்து வரபோகிறது ?

படுத்த படுக்கையாய் உள்ள எண்பது வயது மூதாட்டி சென்னையில் தங்கி சிகிச்சை பெற்றால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து நேர்ந்துவிடும் என நேற்று முன்தினம் பார்வதி அம்மாளை விமானத்திலிருந்து இறங்க விடாது திருப்பி அனுப்பிய இந்திய தமிழக அரசுகளின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே முழுமையாகத் தருகிறோம்.

தமிழீழ தேசியத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களின் அன்னையார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள், தமது எண்பது வயதில் கடுமையாக நோயுற்று சென்னையில் உயர் சிகிச்சை பெற மலேசியாவிலிருந்து விமானத்தில், 16.04.2010 அன்று இரவு வந்த போது அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க விடாமல் இந்திய அரசும் தமிழக அரசும் சேர்ந்து தடுத்து, அவரைத் திரும்ப மலேசியாவுக்கு அனுப்பி விட்டார்கள்.

இந்திய தமிழக அரசுகளின் இந்தச் செயல் மனித நேயமற்ற செயல்மட்டுமல்ல. தமிழ்நாட்டுத் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் செயலும் ஆகும்.
படுத்த படுக்கையாய் உள்ள எண்பது வயது மூதாட்டி சென்னையில் தங்கி சிகிச்சை பெற்றால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து நேர்ந்துவிடும்!
முறையாக விசாவுக்கு விண்ணப்பித்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய அரசுடன் கலந்து பேசி, திருமதி பார்வதி அம்மையார் சென்னை வர விசா வழங்கியுள்ளது.

ஆனால், சென்னை விமான நிலையத்தில் பார்வதி அம்மையாரையும் அவருடன் வந்த பெண் உதவியாளரையும் இந்திய அரசின் குடிவரவு அதிகாரிகளும் தமிழகக் காவல்துறையினரும் விமானத்தை விட்டு இறங்கவிடாமல் தடுத்து, அதே விமானத்தில் அவர்களை மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டனர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் எண்பது வயது மூதாட்டி எந்த நாட்டிலும் மருத்துவ உதவி பெறுவதற்கு மருத்துவத்துறை நீதியும் மனித உரிமையும் அனுமதிக்கும்.
விசா வழங்கிவிட்டு திருப்பி அனுப்புவது மனித உரிமை மீறல் குற்றம் மட்டுமல்ல. மருத்துவநீதியை மறுப்பதும் ஆகும்.
பார்வதி அம்மையார் பிரபாகரனுக்கு மட்டும் தாய் இல்லை. ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தாயாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் போற்றப்படுகிறார். அவர் மீது அனைத்துத் தமிழர்களும் பாசம் வைத்துள்ளனர். அவரை வர அனுமதித்துத் திருப்பி அனுப்பியது அவரை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அவமானப்படுத்திய செயலாகும்.

சிகிச்சையாகப் படுத்த படுக்கையாய் விமானத்தில் வந்த மூதாட்டி பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பிய இந்திய – தமிழகக் கொடுங்கோலர்களின் தமிழ் இன எதிர்ப்பு உணர்ச்சியைக் கண்டித்து, மனித நேயம் உள்ளவர்களும் தமிழ் இன உணர்வாளர்ககளும் கண்டனப் போராட்டங்களை நடத்துமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.