கடந்த ஒரு ஆண்டாக பிரபாகரன் என்ற ஒற்றை சொல்லை வைத்து கொண்டு ஊடக வியாபாரத்தில் பணம் செய்தவர்கள் இருவர் ஒன்று நக்கீரன் மற்றொன்று விகடன் குழுமம்.
அதே நக்கீரனுக்கு இப்போது 'நித்யானந்தா' கிடைத்துவிட்டது ஈழம் இனி அவர்களுக்கு பெரிதில்லை.
பாரம்பரியம் கொண்ட ஜூனியர் விகடன் ஏன் தமிழர்கள் நம்பிக்கை விடும் அளவிற்கு 'பிரபாகரன் இனி வரமாட்டார்' என்று கட்டுரை பொய்யாய் வெளியிட வேண்டும்.
அந்த கட்டுரையை மறுத்து , உதிரகுமாரர் அளித்துள்ள அறிக்கை இதோ இங்கே,
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளைத் தமிழகத்தில் விரிவாக்கம் செய்யும் தருணத்தில் தங்களுடன் நாம் தொடர்பு கொள்கிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் ருத்ரகுமாரன் இன்று தமிழக மக்களை விளித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழகத்தின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே என்னுடன் பேசப்படவில்லை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும் வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே என மேற்சொன்ன ஊடக அறிக்கையில் ருத்ரகுமாரன் தெளிவுபடுத்தியுள்ளார்.
திரு ருத்ரகுமாரனின் அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகிறோம்.
அன்பான தமிழக உறவுகளே!
ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன்.நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதனை ஆய்வு செய்து பரிந்துரை செய்வதற்காக திட்டமுன்மொழிவு செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் நாளன்று மதியுரைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
இம் மதியுரைக்குழுவில் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மை இறுகப் பிணைத்துக் கொண்ட பின்வரும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)
பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் (கனடா)
வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் (அமெரிக்கா)
சட்ட அறிஞர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் (அமெரிக்கா)
சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)
பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி (மலேசியா)
சட்ட அறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் (அமெரிக்கா)
பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)
வைத்தியக் கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)
பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா (சுவீடன்)
பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா (பிரித்தானியா)
கலாநிதி அமுது லூயிஸ் வசந்தகுமார் (பிரித்தானியா)
இம் மதியுரைக்குழுவினர் தமது ஆய்வின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின் விடுத்த இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுகிறது. இவ் அறிக்கையினை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.orgஇல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது மக்கள் மத்தியில் இருந்து இதற்கென நடாத்தப்படும் நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இதற்கான தேர்தல்கள் மே மாதம் 2 ஆம் நாள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையினை மே மாதம் 17-19 நாட்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு தமிழ் மக்கள் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள். முதலாவது அரசவையின் ஆயுட்காலம் ஆகக் கூடிய அளவு மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது அரசவை விரும்பும் பட்சத்தில் அதற்கு முன்னரே அடுத்த தேர்தலை நடத்தலாம்.விடுதலைப்புலிகளுக்குப் பிந்திய காலகட்டத்து அமைப்பு (post LTTE organisation) என்ற அடிப்படையில் இவ் அமைப்பு உருவாக்கப்படவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அமைகிறது. தாயகத்தில் தேசியத்தலைவரின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த நடைமுறை அரசு சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால் சிதைக்கப்பட்டமைக்கு உலக அரசுகள் சிறிலங்கா அரசுக்கு வழங்கிய ஆதரவு முக்கியமானதொரு காரணம். நம் கண்முன்னால் நடந்து முடிந்த ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நாம் தவித்து நின்றோம். இதனால் உலக நாடுகளின் ஆதரவினை எமது பக்கம் வென்றெடுப்பதற்கென வலுவானதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுமான பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஒன்று அவசியம் என்றும் அதுவும் தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகத்திற்கு அப்பாலே நிறுவப்பட வேண்டிய யதார்த்தம் உணரப்பட்டமையால் இவ் அமைப்பு உருவாக்கப்படுகிறது.
அனைத்துலகத் தளத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்படும் இவ் அமைப்பு தமிழீழ விடுதலைக்காத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் மக்களையும் மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க அயராது உழைக்கும். அனைத்துலகரீதியான ஏற்புடமையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இவ் அமைப்பு ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டு அரசியல், இராஜதத்திர வழிமுறைகளுக்கூடாகத் தனது பணிகளை முன்னெடுக்கும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தும் இத் திட்டத்துடன் தொண்டர்களாக தம்மை இணைத்துக் கொள்ளவும் பலநூற்றுக்கணக்கான தமிழக உறவுகள் தமது பெயர்களை எமது இணையத்தளத்தினூடாகப் பதிவு செய்திருந்தனர். இவர்களின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளைத் தமிழகத்தில் விரிவாக்கம் செய்யும் தருணத்தில் தங்களுடன் நாம் தொடர்பு கொள்கிறோம்.
இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழகத்தின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே என்னுடன் பேசப்படவில்லை. இவை தவிர அதில் உள்ள ஏனைய சில விடயங்களும் எனது கருத்துக்கள் அல்லாதவை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும் வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே. நான் குறிப்பிடாத, எனது கருத்துக்கள் அல்லாத விடயங்கள் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமையால் இம் மறுப்பை இவ்வித்தில் பதிவு செய்கிறேன்.
தமிழக மக்களும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலையை தமது நெஞ்சிருத்திச் செயற்படும் தலைவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை மீதும் தாங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியினையும் அதற்காக வழங்கி வரும் பேருழைப்பையும் நாம் என்றும் பெரும் மதிப்புடன் நினைவிற் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட தங்கள் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.
இவ்வாறு உத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.