தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழர்களே இனி மேலாவது ஒன்று படுவீர்களா ?

தமிழர்களே இனி மேலாவது ஒன்று படுவீர்களா ?
 

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சில கடந்த நான்கு நாட்களாக தாயகத்தில் நடக்கும் தேர்தல் திருவிழா தொடர்பாக தமது அறிக்கைகளை தமக்கு ஏற்றவாறு தளத் தமிழர்கள் யார்க்கு வாக்களிக்க வேண்டும் என்று தமது கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

பலநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அறிக்கைகள் ஒன்றும் வெளியிடாமல் அமைதியாக இருக்கின்றன. புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்கள் சில தமிழ் மக்களின் தேசியவாதத்தை கூறுபோடும் செயற்பாடுகளுக்கு தமக்கு தெரியமேலே ஆதரவளிக்கிறார்களா அல்லது சில புலம் பெயர் தமிழ் அமைப்புக்களில் தலைவர்களாக இருப்பவர்கள் தளத்தில் உள்ள தமிழ் தலைமைகளிற்குள் போட்டியை ஏற்படுத்தி தளத்தில் உள்ள தமிழ் தலைமைகளை பிரித்து சிங்கள பேரினவாதத்திற்கு துணை போகிறார்களா என்ற சந்தேகம் தாயகத்தில் இருக்கும் தமிழர்கள் ஆகிய எங்களுக்கு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இதற்காக இரண்டு சம்பவங்கள் சான்று பகிர்கின்றன.

1. தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் பேர்ச்சுவார்த்தைக்கு அனுப்பபட்ட அப்போதைய மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட தளபதி கருணா புலம்பெயர் நாடுகளுக்கு சுற்றுப் பயணத்தை முடித்து தாயகம் வந்தபோது அவரின் மனதில் தான் ஏன் தமிழீழ விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து செயற்படக்கூடாது என்று ஒரு மனநிலையை அவரது மனதிற்குள் உள் நுழைத்தது அவர் சந்தித்த புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களின் கைங்கரியமா? அதன் வெளிப்பாடே தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள்

2. மற்றையது தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் 22 தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் வெளியுறவு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட கஜேந்திரகுமார், கஜேந்திரன் மற்றும் பத்மினி அவர்கள் தாயகம் புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புக்களுடன் சேர்ந்து போராட்டங்களை நடாத்திவிட்டு தாயகம் திரும்பியபோது அவர்கள் மனதிலும் தலைமைக்கான போட்டி இருந்தது. அதன் வெளிப்பாடே தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் எல்லாம் ஒரு கொள்கையுடன் செயற்படுவதாக தாயகத்தில் இருக்கும் நாம் நினைக்கவில்லை. அதற்கு சான்றாக அவர்களின் தாயகத்தில் நடக்கும் தேர்தல் தொடர்பான அறிக்கைகள் சான்று பகிர்கின்றன. டென்மார்க் தமிழர் பேரவை தனது அறிக்கையில் யாழ் மற்றும் திருகோணமலை தோ்தல் மாவட்டங்களில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கும் படியும் ஏனைய தாயக மாவட்ட மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படியும் கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் இதற்காக கூறும் காரணம் தான் மிகவும் வேடிக்கையான ஒன்று. தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வேட்பாளர்கள் தான் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கு கொண்டவர்களாம். அவர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன்.

கஜேந்திரன் மற்றும் பத்மினி தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் வெளிநாடுகளில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்குழுவில் நியமித்தபடியால் தான் உங்களை அவர்கள் சந்தித்ததற்கும் அவர்கள் புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டதற்கான காரணம் ஆகும்.

இதைவிட வேறுசில புலம்பெயர் அமைப்புக்களான பிரித்தானிய பழைய மாணவர்கள் சங்கம், பிரான்ஸ் தமிழ் பெண்கள் அமைப்பு, பெல்ஜியம் இளையோர் அமைப்பு, இத்தாலி தமிழ் அமைப்புக்கள், நெதர்லாந்து தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிரான்ஸ் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்கும் படி அறிக்கைகளை விட்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு தமிழீழத்தில் எத்தனை தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன, அதில் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி எத்தனை மாவட்டங்களில் போட்டி இடுகின்றது என்பதே தெரியாமல் இருப்பது மிக வேடிக்கையான ஒன்று.

மேலே கூறப்பட்ட அமைப்புக்களிற்கும் புலம்பெயர்ந்து வாழும் எமது தாயக உறவுகளிற்கு தாயகத்தில் இருந்து ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.

தமிழீழத்தில் இருக்கும் தமிழர்கள் ஆகிய நாங்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, அம்பாறை என்ற வேறுபாடு இன்றி ஒரு அணியின் பின்னால் எமது விடுதலையை வென்றெடுக்க தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடப்பதாகவும், தாயக கோட்பாட்டை கைவிட்டு விட்டதாகவும் நீங்கள் கூறும் வியாக்கியானம் உங்களின் குறுகிய நோக்குடைய, பரந்துபட்ட சிந்தனையற்ற போக்கை வெளிப்படையாக உங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டி நிற்கிறது.

எமது போராட்டம் ஒரு இறுக்கமான கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகரலாம் என்று தாயக தமிழர்கள் புலம்பெயர் சமுதாயத்தை நம்பி இருக்கின்ற போது நீங்கள் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தமிழர்களின் தேசியத்தை விலை பேசுகிறீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய போது நீங்கள் கூட்டமைப்பையும், கஜேந்திரகுமாரின் காங்கிரஸ் கட்சியையும் ஒன்று சேர்த்து வைக்க முற்படாமல் அவர்கள் தனித்து போட்டி இடுவதை ஊக்குவித்த விடயம் நீங்கள் தமிழ் தேசியத்திற்கு செய்த மாபெரும் வரலாற்றுக் குற்றம் ஆகும்.

புலம் பெயர் தமிழர்களே!, புலம் பெயர் அமைப்புக்களே! தாயகத்தில் ஏற்பட்டிருக்கும் நிலையை யதார்த்த ரீதியாக உணர்ந்து எமது விடுதலையை வென்றெடுக்க ஒருமித்த கருத்துடன் ஒன்றுபடுவீர்களா?