தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஒரு தாய்க்கிழவியும், அவர் பெற்ற மக்களும்.

Vallipuram_Parvathi

எண்பது வயது நிரம்பிய மூதாட்டி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாத ஒரு தாய்க் கிழவி, மன நிலையும் கூட அத்தனை கட்டோடு இல்லாத ஒரு முதிர் வயதுப் பெண்மணி, இவரால் ஒரு தேசத்திற்கு என்ன சீர்குலைவு ஏற்படப் போகிறது, மன்மோகனும் அமெரிக்க நிறுவனமும் போட்டுக் கொண்டிருக்கிற அணு உலைச் சீர்கேடுகளை விடவும் இந்த வயதான தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? கருணாநிதியும் அவரது குடும்பமும் செய்த ஸ்பெக்ட்ரம் ஊழலை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் சீர்குலைவு ஏற்படுமா? I P L கிரிக்கெட் விளையாட்டு என்கிற பெயரில் நடைபெறும் திரை மறைவு ஊழல்களை விடவும் இந்தத் தாய்க் கிழவியால் இந்திய தேசியத்தின் இறையாண்மைக்கு இழுக்கு வந்து விடுமா?

உலகக் குடி உரிமைச் சட்டங்கள் யாவற்றிலும் மருத்துவ உதவி கேட்டு வரும் வயது முதிர்ந்தவர்களுக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறதே? எத்தனை கொடுமையான குற்றம் புரிந்தவராக இருப்பினும், உயர் மருத்துவ உதவிகளைப் பெற்றுக் கொள்ள எந்த நாடும் தடை விதிப்பதில்லையே, நாடாளுமன்றத்தையே தகர்க்கத் திட்டமிட்ட தீவிரவாதிகள் இதே தேசத்தில் பாதுகாப்போடு வாழ்கிறார்களே? கொடுங்குற்றம் புரிந்தவர்களையும் கூட மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு எந்த நாடும் தடை செய்யவில்லையே? உலகெங்கிலும் சென்று இந்த நாட்டின் உயர் குடிமக்கள் அனைவரும் மனித நேயத்தைப் பற்றி அரங்குகளில் வகுப்பெடுக்கிறார்களே? அந்த மனித நேயம் தமிழ் பேசுபவர்களுக்கு மட்டும் இல்லையா? ஏறத்தாழ இயக்கங்களை இழந்து விட்ட ஒரு வயதான பெண்மணியால் இந்த தேசத்திற்கு என்ன தீங்கு விழந்து விடப் போகிறது?

INDIA-ELECTION

இப்படி எல்லாம் என்னைச் சுற்றிலும் கேள்விகள் பெருந்தீயாய்ப் பற்றி எரிகின்றன, ஆனால், எனக்குத் தெரியும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்பது, எனக்கு மட்டுமில்லை இங்கிருக்கும் எந்த முதுகெலும்பற்ற தமிழர்களாலும் ஒன்றும் செய்ய இயலாது, ஏனென்றால் இங்கு நாங்கள் தேர்வு செய்து எம்மை எதிரொலிக்கச் சொன்ன தலைவர்களும் முதுகெலும்பற்றவர்கள், அதிலும் மாநில முதல்வராக நாங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் அந்த மனிதர் முதுகெலும்பைக் கழற்றி விட்டு காங்கிரஸ் கொடுத்திருக்கும் ஆட்சி அதிகார எலும்பை அல்லவா மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஒரு மாநிலத் தலைநகருக்கு யார் யார் வருகிறார்கள், போகிறார்கள் என்கிற செய்தி இந்திய வெளியுறவுத் துறை மற்றும் குடி உரிமை அலுவலர்கள் மூலமும், தேவைப்பட்டால் மற்ற மைய அமைச்சகங்கள் மூலமும் மாநில உளவுத் துறைக்குச் சொல்லப்படுகிறது, அல்லது கேட்டுப் பெற வேண்டியது அவர்களின் பணி. இவர்கள் கணக்குப் படியே பார்த்தாலும், இந்திய தேசத்தால் தேடப்பட்டு வந்த பிரபாகரனின் தாயார் இன்றைக்கு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த, உலக நாடுகள் பலவற்றால் அறியப்பட்ட ஒரு பெண்மணி, அவர் குடிஉரிமை கேட்டு விண்ணப்பம் செய்த போதே தமிழக முதல்வருக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது தெரிவிக்கப்பட்டிருக்கும். இல்லையென்றால், அவரது வருகை நிகழும் அந்தக் குறிப்பிட்ட நாளில் செய்தி உறுதியாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும், ஆனால், ஐயாவுக்கு செய்தி தெரியாதாம், காலையில் செய்தித் தாள்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டாராம், அதைத் தான் நாங்களும் தெரிந்து கொண்டோமே முதல்வர் அவர்களே, பிறகு எதற்கு நானூற்று இருபது கோடியில் ஒரு கட்டிடம், அந்தக் கட்டிடத்தில் கிரிவலம் வருவதற்கு பல நூறு உறுப்பினர்கள், அதில் நடுநாயகமாய் வீற்றிருக்க நீங்கள், பிரபாகரனின் தாயார் வந்த செய்தியே சொல்லப்படவில்லை என்கிறார் முதல்வர், அதையும் எந்த ஒரு கூச்சமும் இன்றிச் சட்டசபையில் அறிவிக்கிறார். அப்படியென்றால், ஒரு மாநில முதல்வருக்கு அவர் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் மைய அரசு கொடுக்கும் மரியாதையின் லட்சணம் இவ்வளவு தானா??

karuna cartoon

தமிழர்களைச் சாரி சாரியாய்க் கொன்று குவித்த ராஜபக்சேயின் மகன் சென்னை வழியாக டெல்லிக்கு கிரிக்கெட் போட்டியை கண்டு களிக்கப் போகிறான், அது உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதே, தமிழர்களைக் கொன்றொழித்த சிங்களவனின் மகனுக்குப் பாதுகாப்பு அளியுங்கள் என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அனுப்பி இருக்கிறீர்களே, தமிழர்களுக்கு முதல்வரா இல்லை சிங்களவனுக்கு முதல்வரா நீங்கள்? ஒன்றும் புரியவில்லையே?

எல்லாவற்றுக்கும் காரணம் ஜெயலலிதாதான் என்று நீங்களும் உங்களுக்குக் குடை பிடிக்கும் வீரமணியாரும் வாய் கூசாமல் சொல்கிறீர்கள், பிரபாகரனின் தாயாரையும், தந்தையையும் இந்திய தேசத்தின் குடி உரிமைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஜெயலலிதா மைய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் போது, சமூக விடுதலை வீராங்கனை என்று பட்டம் கட்டி அவர் காலில் விழாத குறையாகக் கிடந்தாரே வீரமணி. அது உங்களுக்குத் தெரியாதா? இல்லை, வானூர்தி நிலையத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் ஐயா வைகோவுக்குத் தெரியாதா? கருணாநிதியின் முதுகு சொரியும் அறிக்கைகளைத் அதிகம் தயாரித்து அடுத்த கூட்டணிக்கு அடித்தளமிடும் ஐயா ராமதாசுக்குத் தெரியாதா? இல்லை, வெண் சாமரம் வீசும் விடுதலைச் சிறுத்தைக்குத் தெரியாதா?

jayalalitha_vaiko_20060320

ஒரு வழியாக நினைவு மறந்த நிலையில் நடக்க இயலாது படுத்திருந்த ஒரு நோயாளியை, மருத்துவ உதவி பெறுவதற்காக முறையான அனுமதியோடு வந்திருந்த தாய்க் கிழவியை அனுமதிக்க மறுத்து அனுப்பி விட்டோம், மலேசிய அரசாங்கமும், மற்ற எந்த நாடுகளும் செய்ய மறுக்கும் ஒரு மனித நேயமற்ற செயலைச் செய்து மீண்டும் ஒரு முறை தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் ஆக்கி இருக்கிறீர்கள், இது உங்களுக்குத் தெரியாமல் நடப்பதற்கு சாத்தியமே இல்லை, அப்படி உங்களுக்குத் தெரியாமலேயே நடந்திருந்தால் உங்களுக்கு மாநில முதல்வராக இருக்கும் தகுதி இல்லை. உங்கள் துரோக வரலாற்றில் மேலும் ஒரு மைல் கல் இது, உரக்கக் குரல் எழுப்பி, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்பப் பெறுவதன் மூலம் தடுக்கப்பட்டிருக்க வேண்டிய அப்பாவித் தமிழர்களின் படுகொலையை நீங்கள் கடைசி வரை தடுக்க முனையவில்லை, பிரபாகரன் என்கிற தனிப்பட்ட மனிதனின் மீது கொண்ட காழ்ப்புணர்வை அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் மீது கொட்டினீர்கள், உண்ணாநிலைத் தேர்தல் நாடகம் நடத்தி போர் நிறுத்தம் என்று ஊரை ஏமாற்றினீர்கள், அப்படி நீங்கள் சொன்ன பத்து நிமிடத்தில் போர் நிறுத்தம் எல்லாம் இல்லை என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தான் ராஜபக்ஷே.

இனப் படுகொலையின் சுவடுகள் மறையாத இந்த ஓராண்டு காலம் முடிவதற்குள் ஒரு தமிழ் மூதாட்டியை மன நிலைப் பிறழ்வில் இருக்கிற தாய்க் கிழவியை மருத்துவம் செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டுத் தேவைப்பட்டால் கடிதம் எழுதுவேன் என்கிறீர்கள், உங்கள் பொய்களுக்கும், நாடகங்களுக்கும் ராஜபக்ஷே பரவாயில்லை, மருத்துவம் பார்க்க அனுமதி கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தான். நீங்களும், உங்கள் இந்திய தேசமும் சிங்கள இன வெறியர்களை விடவும் கொடுங்கோலர்கள், உங்கள் ஆட்சிக் குடைகளின் கீழே சிக்கிக் கிடக்கும் நாங்கள் உண்மையில் பாவிகள்.
20061020004103001

"பிரபாகரன்" என்கிற பெயர் தமிழினத்தின் அடையாளமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் இதில் உள்ளடங்கி இருக்கும் உண்மையான செய்தி, ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடியது மட்டுமன்றி ஒரு இனத்தின் ஒட்டு மொத்த அரசியல் விழிப்புணர்வுக்கும் காரணமாக அமைந்த பெயர் பிரபாகரன், தவறுகள் இழைக்காத, மாறுபட்ட பாதையில் பயணிக்காத விடுதலை இயக்கங்கள் இல்லை, அந்த வகையில் உலகின் பார்வையில் தவறாக அறியப்படுகிற சிலவற்றையும் கூட தனது விடுதலை வேட்கையின் தீவிரம் கருதியே அந்த மனிதன் செய்திருந்தான். இன்று இன உணர்வும், மொழி உணர்வும் இருக்கிற ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் அவன் தான் தலைவன், அவன் தான் முதல்வன், நீங்கள் ஊர் கூடி ஊளையிட்டாலும் உங்களுக்கு இருந்த தமிழினத் தலைவர் என்கிற போலிப் பெயர்களை அவனது சிந்தனைகள் நிரப்பி விட்டன. அப்படிப்பட்ட ஒரு தலைவனின் தாயை, உலகத் தமிழினத்தின் அன்புக்குரிய அந்தப் பெற்றவளை விரட்டி அடித்த பெருமையை நீங்களும் உங்கள் ஆட்சியும் பெற்றுக் கொண்டது முதல்வர் அவர்களே.

images730021_1

கடைசியாக மனதில் ஒன்று தான் தோன்றுகிறது முதல்வரே, உங்கள் கைகளால் கடிதம் எழுதி வந்து சிகிச்சை பெற்றுப் பிழைத்துக் கொள்வதை விடவும் அவர் செத்துப் போகட்டும்.

************