தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சிலமணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை - முதலாம் ஆண்டு நினைவு நாள்

வன்னிப்போரின் உக்கிரம் தலைவிரித்தாடத் தொடங்கி மக்கள் மணிக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்ட தொடக்க நாளின் (19.04.2009) முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


வன்னியின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து முல்லைத்தீவின் கடற்கரைக் கிராமங்களான புதுமாத்தளன், பழைய மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், பனையடி, சாளம்பன், முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு என மக்கள் நெருக்கமாக குடியமர்ந்திருந்தனர்.


இந்தநிலையில் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ஊடாக நகர்ந்த இலங்கைப் படையினர் பச்சைப் புல்மோட்டைப் பகுதி ஊடாக அம்பலவன் பொக்கணையை ஊடறுக்கும் முயற்சியில் கடும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.


இதன் போது ஈவிரக்கமற்ற முறையில் அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் பகுதிகளை நோக்கி படையினர் கடும் தாக்குதல்களை நடத்தினர். கொத்துக்குண்டுகள், பொஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் பீரங்கிகள், ஆட்டிலறி தொலைதூர எறிகணைகள் என பல்வேறு வகையான பீரங்கிகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதேவேளை கடலில் இருந்தும் இடைவிடாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 2009-04-18ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட தாக்குதல் தீவிரம் 2009-04-20 அன்று உக்கிரத்தை அடைந்தது. 20ஆம் தேதி படையினர் அம்பலவன் பொக்கணை ஊடாக கடற்கரைக் கிராமங்களைத் துண்டாடினர்.


இதன் போது ஒரு சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். பல்லாயிரக்ககணக்கானோர் அனாதைகள் ஆக்கப்பட்டும் படுகாயங்களைச் சந்தித்தும் தெருக்களிலும், முற்றங்களிலும் குற்றுயிராய்க் கிடந்தனர். இந்தக் காலப்பகுதியில் புதுமாத்தளன் பாடசாலையில் அமைந்திருந்த மருத்துவமனையே பிரதான மருத்துவமனையாக செயற்பட்டது. இந்த ஊடறுப்பினால் மருத்துவமனையின் முழுமையான உபகரணங்களும், மருத்துவச் செயற்பாட்டாளர்களும் இடம்மாறமுடியவில்லை.


இந்நிலையில் முடிந்தவர்கள் மட்டும் கடற்கரையூடாக முள்ளிவாய்க்காலைச் சென்றடைந்தனர். மேற்கு முள்ளிவாய்க்கால் அ.த.க பாடசாலையில் சில மருத்துவச் செயற்பாட்டாளர்களுடன் செயற்பட்டுவந்த முல்லைத்தீவு மருத்துவமனையே மக்களுக்கு தஞ்சம் வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதன் போது காயமடைந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் அனுமதிப்பதற்காக கொண்டுசெல்லப்பட்டனர்.

அந்த வேளை வன்னியில் வழமையில் சந்தித்த நெருக்கடிகளைவிடவும் மக்கள் பாரிய நெருக்கடிகளை சந்திதத்தனர். மருத்துவச் செயற்பாட்டாளர்களும், மருந்துகளும் இல்லாமையாலேயே பலநூறுபேர் மருத்துவமனை வளாகத்திலேயே செத்து வீழ்ந்தனர். படையினரால் வளைக்கப்பட்ட பகுதிகளில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டபோதிலும் படையினர் பெருமளவான உடல்களை பதுங்குழிகளில் போட்டு மூடியமையாலும் செய்திகளை மூடி மறைத்ததாலும் சரியான புள்ளிவிபரங்கள் வெளிவரவில்லை.


வன்னியில் மீள் குடியேறியுள்ள மக்களில் ஆயிரக்கணக்கானோர் 20-04-2010 இன்று தமது உறவுகள் பிரிந்த நாளை நினைவு நாளாக கண்ணீருடன் நினைவுகூர்கின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட இந் நாளில் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் வன்னியில் இருந்து செய்திளார்கள் செய்திகளை வழங்கிபோது அவ்வாறு ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று தமிழ் தேசியத்திற்கான புலம்பெயர் முக்கியத்துவம் வாய்ந்த ஊடகங்கள் சில செய்திகளைப் புறக்கணித்திருந்தமையும் இதே நாளில் அரங்கேறியமை நினைவுகொள்ளத்தக்கது.


இதேநாளில் மட்டும் ஒரு இலட்சம் வரையான மக்கள் இலங்கைப் படையினரால் வல்வளைப்புச் செய்யப்பட்டு படை ஆக்கிரமிப்புப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.