தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இனஅழிப்பில் இந்தியா

 

 
தொடர்ந்து வரும் செய்திகள் இதயத்தை கணக்க செய்கிறது. காந்தியம் பேசும் இந்தியா, இனப்படுகொலைக்கு துணைபோய் தன்னுடைய விரல்களை தமிழர்களின் இரத்தங்களில் துவைத்து எடுத்துக் கொண்டு உலகிற்கே அகிம்சை பேசுகிறது. பௌத்தம் கூறிய அன்பு வழி அக்கிரமமாய் அழிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கில் தமிழ் உறவுகளின் உடல்கள் கிழிக்கப்பட்டு, பிணவாடையில் சுகம் கண்டு, தமது தலைவர் மாளிகையில் சிரித்து மகிழ்கிறார் ராஜபக்சே. ஆனாலும்கூட இத்தோடு நின்றதா? என்றால் விடமாட்டோம் உம் இனத்தை வேறறுக்கும்வரை என்பதை இந்திய வல்லாதிக்க அரசு தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
 
இது எதையும் கண்டுகொள்ளாமல், தமிழ்நாடு அரசு விழி மூடி உறக்கம் கொண்டிருக்கிறது. அல்லது விழி மூடி மறந்துபோக நினைக்கிறது. நம்மையும் மயக்கமுற செய்ய இலவச திட்டங்களால் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று. ஆனால் தமிழீழம் என்கின்ற எமது தேவையை திட்டமிட்டு நொறுக்க இந்திய-சிங்கள இனவெறி கூட்டாட்சி தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இவர்களின் செயலை ஆதரித்து, பேசும் தொண்டை தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். ஆற்ற முடியா அவலத்தில் நாம் அவதிபட்டுக் கொண்டிருக்கும்போது, அடக்கமுடியா துயரில் நாம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மேலும் மேலும் நம்மை அடக்கும் இரும்பு காலணிகளைக் கொண்டு, எமது மண்ணில் புல் கூட முளைக்கா வண்ணம் அழுத்திப்போட இந்திய-இலங்கை அரசுகள் தொடர்ந்து முயற்சிக்கின்றன.
 
தமிழீழத்தின் அடிப்படை கட்டமைப்பை அடித்துடைக்க, அக்கிரமமாக பங்காற்றிக் கொண்டு இந்த படைகள் தொடர்ந்து செயலாற்றுகின்றன. கடந்த சனிக்கிழமை (10.4.2010) சிங்கள கடற்படையினருக்கு பயிற்சி அளிக்க, இந்திய கடற்படையின் கப்பல் திரிகோண மலைக்கு சென்று சேர்ந்திருக்கிறது. ஐஎன்எஸ் மகர் என்ற இந்த கப்பலை சிங்கள மரபுபடி வரவேற்று, மகிழ்ந்து கொண்டாடிய சிங்கள பேரினவாத அரசு, இலங்கையில் உள்ள சிங்கள வெறியர்களை இந்த பயிற்சியில் பங்காற்ற துணைபுரிந்திருக்கிறது. இது கடற் தளத்தில் எதிரிகளை தாக்கி அழிக்கும் போரை எப்படி நடத்துவது என்கின்ற பயிற்சியாக இருக்கும் என அதிகாரிகள் சொல்கிறார்கள்.
 
தரைத்தளத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர் உயிர்குடிக்க காரணமான இந்திய அரசு, கடற்தளத்தில் எம் இன மக்களின் உயிர் குடிக்க, சிங்கள அரசுக்கு பயிற்சி அளிப்பதாகவே நமக்கு தோன்றுகிறது. கடலில் மீன்பிடிக்கும் உரிமையை எம் இன மக்கள் இழந்து, தொடர்ந்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்போது, மேலும் எம் இன மக்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதை தடுப்பது எப்படி என்பதற்கான திட்டமோ என எமக்குள் சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டில் இருந்து தமிழ் இன உணர்வாளர்கள், தமது உறவுகளை காக்க தெருக்களில் இறங்கி, பெரும் முழக்கமிட்டு, இந்தியாவில் இருந்து சிங்களத்திற்கு செல்லும் ஆயுதத்தை தடுத்து நிறுத்தச் சொல்லி போராடினார்கள்.
 
போர் தளவாடங்களையும், போர் வீரர்களையும் அனுப்பி இன ஒடுக்குமுறையை ஆதரித்த இந்திய அரசு, அப்போது தமிழ் உணர்வாளர்கள் எழுப்பிய எவ்வித கேள்விகளுக்கும் விடை பகராமல் அமைதி காத்தது. அதற்கு தம்முடைய செயலின் மூலம் விடை பகர்ந்திருக்கிறது. அதுதான் தமது படைக்கப்பலை இலங்கைக்கு அனுப்பி, மேலும் சிங்கள ராணுவத்தை கொம்பு சீவி விடும்பணியாகும். இந்த கொடுமைகளை தோலுரிக்கும் விதமாக, தமிழ்நாட்டின் முதிர்ந்த அரசியல் சிந்தனையாளர் இரா.செழியன் குறிப்பிடும்போது, 1987ல் இந்திய-இலங்கை உடன்பாடே மிகப் பெரும் தவறு. அதே தவறுகளை இந்தியா, மீண்டும் மீண்டும் செய்து வருகிறது என்று குற்றம் சாட்டினார். ராஜீவ்காந்தி அரசு செய்த தவறை சோனியா காந்தியின் தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சியும் இப்போது செய்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியா தரும் போர் படை தளவாடங்களையும், பயிற்சி முகாம்களையும் வைத்து இலங்கை அரசு போர் என்ற பெயரில் இனப்படுகொலையை வேகமாக நிகழ்த்துகிறது என சுட்டிக்காட்டினார். இதை இந்திய அரசும் மறுத்துரைக்கவில்லை.
சிங்கள அரசும் வாய் திறக்கவில்லை. எல்லோரும் செத்து, தமிழன் என்கின்ற ஒரு இனம் தமிழீழத்திலே ஒழிக்கப்படும்போதுதான் இந்தியா தமது ஆயுதங்களை தருவதை நிறுத்தும் என்று நமக்குத் தோன்றுகிறது. காரணம் ஒரு இனத்தை ஒடுக்குவதற்கு இந்தியா என்கின்ற வல்லாதிக்க பார்ப்பனிய அரசு, எந்த அளவிற்கு கொடுஞ்செயலில் இறங்கியது, அதனால் ஏற்பட்ட இரத்தபழியை அது கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அசட்டை செய்தது என்பதை கடந்தகால நிகழ்வுகள் நமக்கு தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சி தான் இலங்கைக்கு இந்திய அரசு தரும் போர் பயிற்சி. எந்த அளவிற்கு இந்தியா கேடு நிறைந்த இனப்படுகொலைக்கு துணை போகும் அரசாக இருக்கிறது என்பதை ராஜீவ்டோக்ரா என்கின்ற இந்திய அதிகார நடுவத்தின் உயர்அதிகாரி எடுத்துரைக்கிறார். 
அடக்குமுறையாளர்களுக்கு இடையில் சில மனசாட்சியுள்ள அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
 
இந்திய வெளியுறவு பணியில் இருந்த டோக்ரா, தமது மனசாட்சி உருத்தியதால், தாம் நினைத்ததை சொல்ல வேண்டும் என்கின்ற உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டதால், இந்திய அரசைப் பார்த்து, இலங்கையின் இனவெறி அரசைப் பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இந்த உலகம் இணைக்கப்பட்டது என்பது உண்மையாக இருக்குமேயானால், நமது பக்கத்தில் ஒட்டுமொத்த மக்களையும் ஒருங்கிணைக்க வைத்து, கடும் குண்டுகளை வீசி, குழந்தைகளையும், முதியோர்களையும், பெண்களையும் குற்றுயிராய், கொலையுயிராய் சிதறடித்த சிங்கள அரசின் கொடுமையை, அதற்கு துணைபோன நாடுகளின் அநியாயத்தை, 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த செய்தி ஊடகங்களாவது எடுத்துரைத்ததா? என்கின்ற அந்த கேள்வியில், ஊடகவியலர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற எல்லோருக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்குமேயானால், இந்த கேள்வி நமது இதயத்தை கொலை செய்யும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்ததாய் இருக்கிறது.
 
காரணம், இப்படிப்பட்ட பெரும் கொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்தபோது, எந்த ஊடகமும் இதை குறித்து சிறு செய்தியைக்கூட வெளியிடவில்லை. இந்தியாவின் மற்ற மாநிலங்களாவது பரவாயில்லை, நமது தொப்புள் கொடி உறவு என்று சொல்லக்கூடிய தமிழ்நாட்டில், முழுக்க முழுக்க வணிக மயமாகிவிட்ட ஊடகங்களின் யோகியத்தை உலகத்தையே காரி உமிழவைத்தது. தொடர்ந்து கடும் கருவிகளைக் கொண்டு ஒட்டு மொத்த மக்களையும் விரட்டிச் சென்று ஒரு சிறு பகுதியில் இறுத்தி வைத்து, கொடூரமாய் கொன்றொழித்த கோர நிகழ்வை, எந்த மண் எமது தேசிய அடையாளத்தை உயர்த்திப்பிடிக்கும், எந்த மண் நமக்கான மண், எந்த மண்ணிலே நமது தேசிய அரசு உலகையே வியக்கும் அளவிற்கு உயர்ந்து நிற்கும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்த இளைஞர்களை, கண் மண் தெரியாமல் கொன்றொழித்த கேவலத்தை, அநியாயத்தை, அட்டூழியத்தை செய்த சிங்கள அரசின் கூட்டாளியான இந்தியாவும் சேர்ந்து இந்த இனப்படுகொலைக்கு முழு காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
ஒரு இனம், கொடூர கரங்களால் வேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நாம் செவிகளை மூடிக் கொண்டு, வாய்களை பொத்திக் கொண்டு மௌனித்தோமே, ஆயுதம் தரித்த அவர்களே சற்று பரவாயில்லை. அமைதி காத்த நாம் தான் பெரும் குற்றவாளி என்பதை நாம் இந்த நேரத்திலாவது புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். உலகம் முழுக்க தமது ஆதிக்கத்தின் கீழ் அளவெடுக்கப்பட வேண்டும் என்பதிலே தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா, அதன் அதட்டலுக்கும், உறுட்டலுக்கும் அடிப்பணியும் ஐ.நா. அவை, இந்த பெரும் கொடுமை நிகழ்ந்து கொண்டிருந்த போது மாபெரும் மனித உரிமை மீறல் தொடர்ந்து கொண்டிருந்த போது, வாய்மூடி மௌனித்த காரணத்தால் நாம் ஐ.நா.வையும் இந்த இனப்படுகொலைக்கு காரணம் என சுட்டிக் காட்டுவதிலே தவறக்கூடாது.
 
இலங்கையில் தொடர்ந்து நடைப்பெற்ற, நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் கேவலமான அடக்குமுறையை கண்டும் காணாதுபோல், உலகநாடுகளோடு சேர்ந்து அமெரிக்காவும் நடித்ததே, அது நமது உறவுகளின் உணர்வுகளை இன்னும் அதிகம் அதிகமாய் விடுதலை வேட்கைக்குள் உந்தித் தள்ள வேண்டுமே ஒழிய, நமது தேவையை ஒருபோதும் நாம் தவிர்க்க முன்வரக்கூடாது. அடக்குமுறை நிறைந்த அந்த இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஊடகங்கள் தமது கண்களை மூடிக் கொண்டன. உலக நாடுகள் தமது செவிகளை மூடி கொண்டன. உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநியாயங்களை, அடக்குமுறைகளை கண்டித்து அதற்கு எதிராக ஊடகங்களும், உலகமும் ஓங்கி குரல் கொடுக்கும்போது, இலங்கையில் நடைபெற்ற எமது தமிழ் உறவுகளின் இனப்படுகொலைக்கு ஊடகமும் துணைக்கு வரவில்லை, உலகமும் துணைக்கு வரவில்லை.
 
தொடர்ந்து தனித்து நின்று தமது விடுதலைக்கான சமரை, தாம் உயிர்கொடுத்து நடத்தினார்கள். இப்படிப்பட்ட ஒரு வரலாறு உலகில் வேறு எந்த இனத்திற்கும் ஏற்படவில்லை. இனி ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் நாம் நடந்து முடிந்த கடும் சமர் என்று சொல்வதைவிட, ஒரு இனத்தை முற்றிலுமாய் துடைத்தழித்துக் கொண்டிருந்தபோது, எவ்வித எதிர்வினையும் ஆற்றாத ஐ.நா.வையும், அமெரிக்காவையும் நாம் விரல் நீட்டி குற்றம் சாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உலகெங்கும் வாழும் எமது தமிழ் உறவுகள் ஒரு இனப்படுகொலைக்கு துணைபோனாயே என்று ஐ.நா.வை நோக்கி குற்றம் சாட்ட வேண்டிய கட்டாயத்தை நாம் உருவாக்க வேண்டும்.
 
நாம் களத்திலே ஆற்றிய கடும் சமருக்குப்பின் இப்போது புலத்திலே எடுக்கும் போராட்டம்தான் நமது விடுதலைக்கான உறுதியை அளிக்க வல்லதாய் இருக்கிறது என்பதை நாம் தெளிவாக்கிக் கொண்டு சமருக்கு தயாராக வேண்டும். இந்திய வெளியுறவு அதிகாரியான ராஜீவ்டோக்ரா கீழ்க்கண்டவாறு கேள்வி எழுப்புகிறார். இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள், தங்களை தாங்களே காத்துக் கொள்ளும் படி கைவிடப்பட்டனர். தொடர்ச்சியான குண்டுவீச்சு தாக்குதல்கள், மருத்துவ வசதிகள் இல்லாத நிலை, சுகாதாரமற்ற வாழ்க்கை, நாள்தோறும் பலர் மடிவதே அங்கு நெறிமுறையாகி விட்டது.
மனித உரிமைமீறல்களை உலகம் வகைப்படுத்துவதிலும், சாதி முறை இருக்கிறதோ என்று வியப்படைந்தால் அது சரியாகத்தான் இருக்கும். இல்லையென்றால், போஸ்னியா, கொசவா தொடர்பாக போர்க்கால நடவடிக்கைபோன்று உலகம் கிளர்ந்தெழுந்தது ஏன்? செர்பியாவை பணிய வைப்பதற்காக அதன்மீது குண்டு வீசியது ஏன்? தமிழர்களின் ரத்தத்தைவிடவும், வெள்ளையர்களின் இரத்தம் மதிப்பில் உயர்ந்ததோ? பின்னர் ஏன் உதவி கோரும் இலங்கைத் தமிழர்களின் கூக்குரல் உலக சமுதாயத்தின் காதுகளில் விழவில்லை என்று கவலையோடு கேள்வி எழுப்பும் டோக்ரா சொல்கிறார், அரக்கத்தனமான போரில் நமது ரத்த உறவுகள் சாவது கண்டும், இந்தியா இரக்கமற்று இருப்பது ஏன்? என. இந்திய அரசிடமோ, அல்லது இந்திய அரசியல்வாதிகளிடமோ ஒருத்துளி நேர்மை இருக்குமேயானால் நிச்சயமாக இப்படிப்பட்ட ஒரு கேவலமான இன அழிப்பிற்கு துணை போயிருக்க வாய்ப்பு இல்லை.
 
இந்தியா எவ்வளவு கேவலமான அரசியல் நிலைப்பாட்டை வைத்திருக்கிறது என்பதை டோக்ரா அம்பலப்படுத்துகிறார். ஆக, இந்த இன அழிப்பிற்கு வெறும் சிங்கள இனவெறி அரசு மட்டும் காரணமல்ல, அதன் கூட்டாளி இந்தியா என்பதை நாம் தெளிவுபடுத்துகிறோம். இனி வரும் காலங்களில் நமது களமும் முறையும் வேறுபட்டு இருக்கலாம், ஆனால் நூறு ஆண்டுகள் ஆனாலும் நமக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். காரணம், நாம் கேட்பது பிச்சை அல்ல. நமக்கான உரிமை. இதை நாம் யாரிடமும் கேட்டுப் பெறும் கட்டாயம் இல்லை. நமக்கான உரிமையை யாசிக்க, நாம் கேவலமானவர்கள் அல்ல.
 
நமது இனத்திற்கான மரபு இருக்கிறது, நம் இனத்திற்கான இலக்கியம் இருக்கிறது, கலை இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கோடிக்கணக்கில் மக்கள் பேசும் மொழி இருக்கிறது. ஆக, நாம் மொழியால் ஒன்றுபடும் போது, நமக்கான நாடு வசப்படும். அது வெகுதூரத்தில் இல்லை. மிக அருகாமையில் இருக்கிறது. அதற்கான சூழலும் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. உலகமே ஒன்று திரண்டு இலங்கைக்கு ஆதரவாய் நின்றாலும், உலகில் உள்ள எமது உறவுகள் ஒன்றிணைந்து கரம் உயர்த்தும்போது, இந்த அநியாயங்கள் அனைத்தும் சிதறடிக்கப்படும். அதற்கான காலம் நெருங்கிவிட்டது. தமிழீழம் கனவு அல்ல. அது எதார்த்தம். தமிழீழம் வெறும் பேச்சு அல்ல. அது உண்மை. தமிழீழம் என்பது நமது வெறும் எண்ணம் அல்ல. நமக்கான உயிர். தமிழீழம் நமது தேவையாக இருப்பதால் அந்த தேவையை நோக்கி நமது பயணம் இடைவிடாமல் தொடர வேண்டும். அதுவே நமது வெற்றியை நிச்சயிக்கும்.