தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஜெயா -வால் வீழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்..,

இது இணைய அஞ்சலில் எனக்கு வந்தது யார் எழுதியது என்ற குறிப்பு இல்லை. இன்றைக்கு இதுதான் தலையங்க செய்தி .


ஜெயா -வால் வீழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்..,

டெல்லி அரசியலை ஒரு காலத்தில் கலக்கியவர் - ராணுவ அமைச்சராக இருந்தவர் -எளிமையானவர், எப்போதும் அவர் வீட்டு கேட் திறந்தே இருக்கும் என்ற வியப்பை அளித்தவர் - தமிழக அரசியல் தலைவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர் -ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்கிற அந்த தலைவர் பற்றி ஒரு செய்தியும் சமீப காலமாக வராமல் இருந்தது. இப்போது சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் என்றும், ஹரித்துவாரில் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. அடுத்து அவர் குடும்ப குழப்பங்கள் பற்றிய செய்திகளும் வந்தன.

ஜார்ஜ் பெர்னாண்டஸை நான் நன்கு அறிந்தவன். என்னை ஒரு நண்பராக ஏற்றவர்.

'
காம்ரேட் நலமா? என்று வரவேற்பார்.. அவரை சில மாதங்களுக்கு முன்பு
டெல்லியில் சந்தித்தேன்.. இப்போது அவரைப் பற்றிய நினைவுகள் அடுத்தடுத்து
வந்தன...

அக்டோபர் 24, 2009 காலை 11 மணிக்கு 1997-ல் ஈழ ஆதரவு மாநாடு நடந்த அதே
தோட்டத்தை பார்த்தபடி ஜார்ஜ் பெர்னாண்டஸ் அமர்ந்துள்ளார். ஜெயா ஜெட்லி
அம்மையாரும் இருந்தார். அப்போது நான் அங்கு செல்லவே 'நீங்கள் இருவரும்
பேசிக் கொண்டிருங்கள்' என ஜெயா ஜெட்லி விடை பெற்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் மிக மிக மெல்லிய குரலில் கேட்டார் ஹௌ இஸ் ஈழம்?” அதிகம் பேச உடல் நிலை இடம் தராத நிலையிலும் இப்படி கேட்டார். நிலைமையை கூறக்கூற ஜார்ஜ் பெர்னாண்டஸின் கண்ணின் ஓரத்தில் நீர் கசிந்தது. கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். பேசிய களைப்பில் கண்ணாடி நழுவ தூக்கத்தில் தலை சாய்ந்தது. ஜார்ஜ் பெர்னாண்டஸின் உதவியாளர் பெர்னார் அவரை எழுப்பி படுக்கைக்கு கூட்டிச் சென்றார்.

ஒருமுறை இந்திய தொழில் வணிகக் கூட்டமைப்பின் அரங்கில் சர்வதேச மாநாடு ஒன்றை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடத்துவதாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்திருந்தார். மாநாட்டில் பங்கேற்க பல நாடுகளில் இருந்தும்
பிரதிநிதிகள் டெல்லி வந்தனர். திடுமென இந்திய அரசு மாநாட்டைத் தடுக்க
முடிவெடுத்தது. மாநாடு நடத்த அரங்கு தரக்கூடாது என்று மிரட்டினார்கள்.
காவல்துறை அனுமதி அளிக்காது என ஜார்ஜ் பெர்னாண்டஸுக்குத்
தெரிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி தடையே போட்டாலும் மாநாடு நடக்குமென
ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா மாநாடு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவசரக் கடிதம் அனுப்பினார். ஆஸ்திரேலியாவில் இருந்து முறைப்படி விசாவுடன் இந்தியாவுக்கு வர அனுமதி அளிக்கப்பட்டட மனித உரிமைப் போராளி யோகன் மைலஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். 10 மணிநேரம் விமான நிலையத்தில் சிறை வைத்து விட்டு அவரை ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பினார்கள். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்படுவார் என டெல்லி ஏடுகள் அனைத்தும் எழுதின. தடையை மீறி ஜார்ஜ் பெர்னாண்டஸ் வீட்டுத் தோட்டத்திலேயே ஈழ ஆதரவு கூட்டம் நடந்தது.

ஒரு சூறாவளியைப் போல இந்திய அரசியலில் நுழைந்தவர் ஜார்ஜ். அவர் மீது ஊழல் புகார் முதன் முதலில் கூறியவர் இந்திராகாந்தி. அமெரிக்காவில் இருந்து
68,000
டாலர்களும் ஜப்பானில் இருந்து 17,000 டாலர்களும் மே-ஜூன், 1974
ரயில்வே ஸ்டிரைக் சமயத்தில் பெற்றுக் கொண்டதாக அவர் மீது புகார்
எழுந்தது. இதனை மறுத்து இந்திரா காந்திக்கே ஜார்ஜ் பெர்னாண்டஸ் கடிதம்
எழுதினார். உண்மை என்ன? ஜோத்பூரில் அகில இந்திய ரயில்வேமென் ஃபெடரேஷனின் ஐந்தாவது ஆண்டு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பகிரங்கமாக ஜப்பான் ரயில்வேமென் யூனியன் 68,000 டாலர்களுக்கான காசோலையை அகில இந்திய ரயில்வே மென் ஃபெடரேஷனுக்கு அளித்தது. அதேபோல் ஜப்பான் ரயில்வே இன்ஜினியர்ஸ் யூனியன் 17,000 டாலர்களை நன்கொடையாக வழங்கியது. ஒவ்வொரு ஜப்பானிய ரயில்வே
தொழிலாளியும் இந்தியாவில் ரயில்வே ஸ்டிரைக்கால் வேலை இழந்த இந்தியத்
தொழிலாளிகளுக்கு நிவாரணமாக வழங்க உதவிய நன்கொடை இது. இதில் ஜப்பானிய ரயில்வே தொழிலாளர்களின் தலைவர் 6 பேரும் துருக்கி ரயில்வே தொழிலாளர் யூனியன் பிரதிநிதியும் கலந்து கொண்டனர். இதை அமெரிக்கா பணம் தந்தது என்று அபாண்டம் சுமத்துவதா? என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் பதிலடி கொடுத்தார்.

இவர் ராணுவ மந்திரியாக இருந்தபோது டெகல்கா ஊழல் விவகாரத்தில் அவர்மீது வீண்பழி சுமத்தப்பட்டதை ஒட்டி அவர் பதவி துறந்தார். அந்த சமயத்தில் தன்னந்தனியாக நடந்தே பாராளுமன்றம் சென்றார். அவர் பயன்படுத்த பம்பாய் டாக்சிமென் யூனியன் பரிசாக அளித்திருந்த பழைய பியட் பழுதுபட்டிருந்தது.

நான் அப்போது ஒருநாள் அவரில்லத்தில் இருந்தேன். காம்ரேட் ஆர் யூ ஃபரி?”
என்று கேட்டார் ஜார்ஜ். எஸ் சாப்என்றேன். இருவரும் நடந்து
பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்டோம். டிராஃபிக் கான்ஸ்டபிள் திடுக்கிட்டு
அவருக்கு சல்யூட் அடித்தார். இப்படி அவர் நடந்து செல்வது அறிந்து
வாஜ்பாய், அரசு கார் ஒன்றை அனுப்பி வைத்தார். அரியானா முதல்வர் ஓம்
பிரகாஷ் சௌதாலா புதிய அம்பாஸடர் காரையே பரிசளித்தார். அதை வெளியே
எடுத்தால் தப்பாக பேசுவார்கள் என ஷெட்டிலேயே பூட்டி வைத்துப் பல
மாதங்களுக்கு பிறகு பார்த்தபோது மரம் விழுந்து, ஷெட் கூரை உடைந்து, கார்
நசுங்கி இருந்தது!

டெகல்கா ஊழலை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி 'புக்கான்
கமிஷன்' ஜார்ஜ் பெர்னாண்டஸ் மேல் எந்தப் பழியும் இல்லை என்று
தீர்ப்பளித்தது. இதை ஏற்க மறுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைத்த
இரண்டாவது கமிஷனான நீதிபதி வெங்கடசாமி கமிஷனும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிரபராதி என விடுவித்தது. இப்படி, தூக்கி எறிந்த ராணுவ அமைச்சர் பதவியில் மீண்டும் அமர்ந்தார்.

ஒரு நாள்... பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் டெல்லியில் இருந்து
மும்பைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்தார். ஆனால் அவரால் சீட்டில்
நிம்மதியாக உட்கார முடியவில்லை ஏனெனில் அதே விமானத்தில் எகனாமி வகுப்பில் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பயணம் செய்து கொண்டிருந்தார்!

இரவு வந்தால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாஞ்சையோடு வளர்க்கும் இரண்டு
நாய்கள்தான் அவருக்கு துணை. மணிப்பூர் சமையல்காரர் துர்கா வேண்டிய உணவை தர அங்கேயே தங்கியிருந்தார். தன்னந்தனியாக பெர்னாண்டஸ் வீட்டில்
இருந்தாலும் குளிரிலும் ஜிப்பா பைஜாமாவுடன்தான் இருந்தார். ஒரு முறை அவர் வெளிநாடு பயணம் சென்ற போது அழகான கோட் அணிந்திருந்தார். அவரிடம் ஒரு பத்திரிகையாளர்தோழர் கோட்டு அழகாக உள்ளது எங்கே வாங்கினீர்கள்?” என்றார்! அதுவா அது அத்வானி இரவலாக கொடுத்த கோட்டுஎன்றார் ஜார்ஜ்.

அவரது உடல்நிலை சரியில்லாததால் அவரை மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என ஐக்கிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டது. ஏனெனில் அந்த சமயத்தில் அவருக்கு தலையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவ்வப்போது மறதி வயப்பட்டார். ஒருவரோடு இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருப்பார். அவரிடமே அவர் இன்னும் வரவில்லையா என்று இடையிடையே கேட்பார். இப்படிப்பட்ட நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சி சொன்னது.

ஆனால் 'நான் எப்போதுமே மக்களைச் சந்திப்பவன். எனவே போட்டியிட்டே
தீருவேன்' என பெர்னாண்டஸ் சொன்னார்.

பெர்னாண்டஸ் புகழ் பெற்ற அறிஞரான ஹுமாயூன் கபீரின் மகள் லீலா கபீரை
திருமணம் செய்து கொண்டிருந்தார். இந்த தம்பதிகளுக்கு சுசாந்தோ என்ற ஒரு
மகன் உண்டு. அந்த மகனுக்கும் ஒரு ஜப்பானிய பெண்ணுக்கும் திருமணம்
நடந்துவிட்டது. பெர்னாண்டஸும் லீலா கபீரும் பிரிந்து வாழ்கிறார்கள்.
ஆனால் பெர்னாண்டஸ் தேர்தலில் போட்டியிட போகிறார் என்று அறிந்ததும் உடல் நலம் இல்லாதவரை தேர்தலில் நிற்க வைக்க தூண்டிய அவரது ஆதரவாளர்களை கண்டித்து, பிரிந்திருந்த லீலா கபீர் வெளியிட்ட அறிக்கை வெளியாயிற்று.

ஏப்ரல் 21, 2009-ல் தேர்தலில் சுயேட்சையாக பீகார் மாநிலம் முசாபர்பூரில்
போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

இன்று பெர்னாண்டஸ் அரசியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டது எவ்வாறு? யார்
காரணம்?

ஜெயா ஜெட்லிதான்! பெர்னாண்டஸுடன் இந்த நட்பால் அவருக்கு நெருக்கமானார்.

பெர்னாண்டஸை தன் அரசியல் உயர்வுக்காக கைப்பாவை ஆக்க ஜெயா ஜெட்லி
படிப்படியாக மேற்கொண்ட முயற்சிகள்தான் கடைசி காலத்தில் பக்கத்தில்
இருந்து அவரை பாதுகாக்க ஆளில்லாதபடி செய்துவிட்டது.

ஜார்ஜ் பெர்னாண்டஸின் இல்லத்தில் பல வருடங்களாக பணியில் இருந்தவர்களை வீட்டை விட்டு ஒவ்வொருவராக விரட்டிய பெருமை ஜெயா ஜெட்லியைச் சாரும்.

அவரது தனி உதவியாளராக திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த இளைஞன் ரமேஷ்
பல்லாண்டுகள் பணி புரிந்தார். சுறுசுறுப்பின் மறு உருவமான அந்தத் தமிழ்
இளைஞர் வெளியேற்றப்பட்டார்.

செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த கர்நாடக உடுப்பி பிராமணர்
அனில் ஹெக்டே, சோஷலிசக் கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் இவருடன் 30 ஆண்டு காலம் இருந்தார். திருமணம் கூட செய்து கொள்ளாமல் இவருக்கு வலதுகரமாக இருந்தார். காரோட்டியாக, செயலாளராக, எடுபிடியாக மட்டுமல்ல. கொக்கோ கோலா எதிர்ப்பு போரை ராணுவ அமைச்சரானதும் பெர்னாண்டஸ் தொடர முடியாமல் போகவேஅதனையும் ஏற்று அன்றாடம் போராடினார். தினமும் பாராளுமன்ற வீதி காவல் நிலையத்தின் முன்பு 'கொக்கோ கோலா தேஷ் பச்சோ' என்று முழங்கி 5000 நாட்களுக்கு மேல் நடந்த போராட்டத்தின் கதாநாயகன் அணில் ஹெக்டே. அவரையும் அனுப்பி விட்டார்கள்.

பீகாரைச் சார்ந்த தர்மேந்திரா என்ற உதவியாளர் ராணுவப் பணியில்
சேர்க்கப்பட்டுவிட்டார். மணிப்பூர் மாநிலத்தை சார்ந்த துர்கா என்ற
சமையல்காரர் மட்டும் தாக்குபிடித்துக் கொண்டு இருக்கிறார். அந்த
மாளிகையைச் சுற்றியுள்ள அறைகளில் பரிதாபத்துக்குரிய திபெத்திய அகதிகளைத் தங்க வைத்திருந்தார் பெர்ணான்டஸ். அவர்களும் வெளியேற்றப்பட்டார்கள்.

இப்படி அவரது வீட்டில் அவருக்கு உதவியாக யாருமே இருக்கமுடியாத ஒரு நிலையை ஜெயா ஜெட்லி உருவாக்கினார். மலையாளிகளை மட்டுமே அவர் நம்புவார்.

இதனால்தான் டெகல்கா அனுப்பிய மலையாளியால் அவரிடம் அணுகி பேசி வம்பில் மாட்டி வைக்க முடிந்தது. எந்தத் தவறுமே செய்யாமல் பெர்னாண்டஸ் மீது அவப்பெயர் வந்தது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில், 'உடல்நிலை சரியில்லாததால் போட்டியிட
வேண்டாம். மாநிலங்களவை தருகிறோம்' என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார். அதை மீறி நிதிஷ் மீதுள்ள கோபத்தால் பெர்னாண்டஸைத் தேர்தலில் நிற்க வைத்து டெபாசிட் இழக்க வைத்த பெருமை ஜெயா ஜெட்லியை சாரும். நிதிஷ் மாநிலங்களவை பதவி தந்து தலைவரை கௌரவப்படுத்தினார். அதற்குபிறகும் அவரை பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள முழுநேர பணியாளர் அமர்த்த முடியாது
அவரே அவரை பார்த்து கொள்வார்என ஜெயா ஜெட்லி கூறி வந்ததால் விவாகரத்து பெறாமல் பல ஆண்டுகள் பிரிந்து இருந்த பெர்னாண்டஸின் மனைவியும் மகனும் அவரைக் காப்பாற்றுவதற்காக ஜெயா ஜெட்லியை கிருஷ்ணமேனன் மார்க் இல்லத்திலிருந்து வெளியேற்றினார்கள். புத்தாண்டு ஆரம்பத்தில் இந்த கல்தா நடந்தது.

ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடுவதற்கு கூட அவர் கஷ்டப்பட்டார்
என்பதை அவரது மனைவி விவரிக்கிறார். 'என்னிடம் பணமில்லை' என்று
பெர்னாண்டஸ் புலம்புவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவரது பெற்றோர்
வழியில் வந்த சொத்துக்கள் எல்லாம் எங்கு இருக்கின்றன என்பதை கூறி
ஆறுதல்படுத்தியுள்ளனர் மனைவியும், மகனும், மருமகளும்.

ஜார்ஜ் குணமாகி, மீண்டும் இந்திய அரசியலில் ஒளிவீசவேண்டும்.. இது என் இதய துடிப்பு.


நன்றி

தின இதழ்