தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஐயா நெடுமாறனின் நெடும் பேட்டி

இது மானுட நம்பிக்கை இதழுக்காக பழ.நெடுமாறன் அவர்கள் வழங்கிய சிறப்பு நேர்காணலின் முழுவடிவம்.

தமிழ் குடும்பம்


தமிழுக்கு தொண்டு செய்யும் குடும்பத்தில் நான் பிறந்து வளர்ந்தேன். அப்பா பெயர் பழனியப்பனார். மதுரை தமிழ்ச் சங்கச் செயலாளர். மதுரையில் திருவள்ளுவர் சிலையை தோற்றுவித்தத் தலைவர். அதனால் ஏராளமான தமிழ் அறிஞர்கள் அப்பாவை சந்திக்க வீட்டுக்கு வந்து கொண்டே இருப்பார்கள். எங்கள் வீட்டில் எப்பொழுதும் தமிழ் அறிஞர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அப்பாவுக்கு அரசியல் ஈடுபாடு கிடையாது. அவர் தமிழ்த் தொண்டோடு நிறுத்திக் கொண்டார். அப்பா தமிழ் சங்கத் தொண்டராக இருந்தபோது பி.டி.ராஜன் (பத்து நாள்) விழாவை சிறப்பாக நடத்தினார். மற்ற எல்லா செயல்பாடுகளிலும் பி.டி.ராஜனும், அப்பாவும் ஒன்றாகவே இருப்பார்கள்.

இதனால் வீட்டுக்கு வரும் தமிழ் தொண்டர்களுக்கு அனுக்க தொண்டு செய்யும் வாய்ப்பு எனக்கு சிறுவயதிலே கிடைத்தது. அதன் பின் நான் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஹானர்ஸ் படிக்கச்சென்றேன். அங்கு எனக்கு பேராசிரியர் கா.கா.செங்கோணணார், மி.ப. மீனாட்சி சுந்தரனார் ஆசிரியராக இருந்தனர். அன்று அண்ணாமலை பல்கலைக்கழகமே தமிழ் உணர்வுக்கு ஓர் நிலைக்களனாக இருந்தது.

அரசியல் அறிமுகம்

அதில் தான் எனக்கு அரசியல் ஈடுபாடு வந்தது. திமுகவில் சம்பத்து இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவாளராக தான் இருந்தேன். அதன்பின் அவர் காங்கிரசில் சேர்ந்தார். அன்றைக்கு இருந்த காலக்கட்டத்தில் (64-ல்) பெருந்தலைவர் காமராஜர் தான் இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளும் தலைவராக இருந்தார். அன்றைக்கு நேரு, பின் சாஸ்திரி, பின்னர் இந்திரா, அதற்கு பின் காமராஜர் தான். ஒரு தமிழன் உலக அளவில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். அவருக்கு துணையாக நான் இருக்க வேண்டும் என எண்ணினேன். அதன்பின் அவருடைய இறுதி காலத்தில் இந்திராவும் காமராஜரும் சேர்ந்து பேசி இணைந்து செயல்பட வேண்டும் என்ற முடிவு எடுத்தனர். அத்திட்டத்தை நிறைவேற்றும் முன்பே அவர் காலமானார். பின்னர் நிலைபாடுகளிலும் மாறுபாடுகள் ஏற்பட்டன.

காங்கிரசில் இந்தி வெறி

காங்கிரசின் நிலைபாடுகளில் மாறுபாடு இருந்த போதிலும், என் நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை. மத்திய பிரதேசத்தில் பச்சைமாரி என்ற ஓர் மலைப்பகுதியில் இளைஞர் காங்கிரஸ் முகாம் நடந்தது. அப்போது அர்ஜுன்சிங் அகில இந்திய இளைஞர் காங்கிரசுக்கு தலைவராக இருந்தார். 66-ல் இங்கிருந்து நான், குமரி ஆனந்தன், சோ.பாலகிருஷ்ணன் ஆகியோர் இளைஞர்கள் சார்பில் பத்து நாள் பயிற்சி முகாம் சென்றோம். இந்திரா காந்தி அப்போது தான் பிரதமரான நேரம். அவர்தான் அந்த பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினார். இந்தி வெறியர்கள் எல்லோரும் எழுந்து இந்தியில் பேச வேண்டும் என்று ஒரே எதிர்ப்பு. நாங்கள் திடுக்கிட்டுப் போனோம். என்ன இது பிரதமர் பேசும்போதே இப்படிப்பட்ட நிலையா? என்று எண்ணினோம். அவர் கூறினார், நான் முதலில் ஆங்கிலத்தில் பேசிவிட்டு பின்னர் இந்தியிலும் பேசுகிறேன் என்றார். முடியாது முதலில் இந்தியில் தான் பேச வேண்டும் என்று அவர்கள் எதிர்குரல் கொடுத்ததனர்.

அதன் பின்னர் அவர் இந்தியில் பேசிய பின், ஆங்கிலத்தில் பேசினார். அந்த உரையுடன் அன்றைய காலை நிகழ்ச்சிகள் முடிந்தன. பிற்பகல் நிகழ்ச்சி 3 மணிக்கு தொடங்க வேண்டும். தென்னாட்டில் இருந்து சென்றவர்கள் பிற்பகல் உணவிற்கு பின்னர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது கேரளாவில் இருந்து வந்த ஏ.கே.அந்தோனி, கர்நாடகாவில் நிஜலிங்கப்பாவின் மருமகன் ராஜசேகரன் தான் மத்திய துறையில் நிதி அமைச்சராக உள்ளார். என்ன செய்யலாம் என்றபோது, இராஜசேகர் ஆகியோர் இணைந்து என்ன செய்யலாம் என்று ஒன்றாக அமர்ந்து பேசினோம். நாம் நம்முடைய மொழியிலே பேச வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

நாமும் நம் மொழியிலேயே பேச வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதனால் அர்ஜுன் சிங்கிடம் சொன்னோம். நாங்கள் வெகு தொலைவில் இருந்து வந்துள்ளோம். ஆகையால் எங்களை முதலில் பேச அழைக்குமாறு கேட்டோம். அவரும் சரி என்றார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவர் பேச வேண் டும் என்று அந்த மாநாட்டில் முடிவெடுத்தனர். கர்நாடகாவில் இருந்து வந்த குண்டுராவ் முதலில் பேசினார். அவருக்கு இந்தி சரளமாக தெரியும். ஆனால் நான் இந்தியில் பேசப்போவது இல்லை என் தாய்மொழியில் தான் பேசுவேன் என்று கன்னடத்தில் கடகடவென்று 5 நிமிடம் பேசினார். அதன் பின் நான், முதலில் ஆங்கிலத்தில் எனது மொழி தமிழ். நான் தமிழில் பேசுவேன் என்று கூறிவிட்டு, தமிழில் பேசினேன். இப்படி வரிசையாக பேசினோம். பரபரப்பாகி விட்டது மாநாட்டில் என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனால் அர்ஜூன்சிங் புத்திசாலிதனத்துடன் எங்க நான்கு பேர் உரையுடன் அந்த அமர்வு முடிந்துவிட்டது என்று அறிவித்தார். அன்று மாலை மத்திய பிரதேச முதலமைச்சர் மிஸ்ரா அவர்கள் மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு விருந்தளிப்பதற்காக மாலை அமர்வு இல்லையென்று அறிவித்தார். இந்திரா காந்திக்கு தகவல் தெரிந்தது. பிரதமரையே பேச விட வில்லை. பிரதமருக்கே இந்த நிலை என்றால் எங்கள் நிலைமை என்ன? மாலை நாங்கள் டெல்லிக்கு சென்றோம். அதற்கு முன்னரே காமராஜருக்கு எல்லா செய்திகளும் சென்று விட்டன. அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்தார்.

அன்று மாலை டெல்லியில் அவர் என்னப்பா கலவரம் செய்து விட்டீர்கள் என்றார். நாங்கள் அங்கு நடந்தவைகளை விளக்கிச் சொன்னோம். செய்த வரை சரி, அவர்களுக்கு அப்போது தான் புத்தி வரும் என்றார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதன் பின் நாங்கள் வந்து சேர்ந்தோம். என்ன கூறுகிறேன் என்றால், நான் என் உணர்வுகளை விடவில்லை.

காந்தி காங்கிரஸ் தலைவரானார்

மொழிவாரி மாகாணத்தை மகாத்மா காந்தி உணர்ந்திருந்தார். அதன்பின் மகாத்மா காந்தி 1920ல் காங்கிரஸ் தலைவர் ஆனார். அப்போது காங்கிரஸ் இப்படி இருக்கவில்லை. பம்பாய் மாகாணம் என்றால் மகாராஸ்டிரம் எல்லாம் சேர்ந்து ஒரு மாகாணம். சென்னை மாகாண காங்கிரஸ் என்று அவர் தான் ஒவ்வொரு மொழிவாரியாக பிரித்தார். வாக்குறுதி என்ன கொடுத்தாரென்றால் விடுதலை கிடைத்தப்பின் மொழிவாரியாக மாகாணங்கள் தொடர்ச்சியாக பிரிக்கப்படும் என்றார். ஆனால் அந்த வாக்குறுதி நடைபெறவில்லை. காந்தியடிகள் இறப்பதற்கு முன் 1946ல் ஒரு மத்திய பிரிட்டிஷ் மந்திரி சபை தூதுகுழு இந்தியாவுக்கு வந்தது. இந்தியாவுக்கு விடுதலை தருவதைப் பற்றி பேச வந்தது. அப்பொழுது காங்கிரஸ் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத் ஒரு திட்டம் தயாரித்தார். அதை மகாத்மா காந்தி கேட்டறிந்தார். அதாவது பாகிஸ்தானை பிரிக்காமல் தடுக்க வேண்டும் என்றால் இரண்டாக பிரிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முழு அதிகாரம் தந்துவிட வேண்டும். அதில் 4 அதிகாரங்கள் மட்டும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும். அவை:-

1) வெளிநாட்டு உறவு
2) ராணுவம்
3) தபால் தலை அச்சிடுதல்
4) ரூபாய் நோட்டு அச்சிடுதல்

இவைகள் மட்டும். மற்றவை அனைத்தும் மாநிலங்களுக்குத் தந்து விட வேண்டும்.

இதைக் கண்ட உடனேயே காந்தியடிகளும் முக்கால பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு கண்டு விட்டீர்கள் என்று அபுல்கலாம் ஆசாத் அவர்களை மிகவும் பாராட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தது. அதில் இதற்கு ஒப்புதல் கொடுத்து விடலாம் என்று இதை காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமான திட்டமாக கொண்டு போய் பிரிட்டிஷ் கேபினெட் மிஸனுக்கு காங்கிரஸ் தலைவர் அபுல்கலாம் ஆசாம் கொடுத்தார். இதுதான் காங்கிரசின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு என்று கூறினார். பின்னர் ஜின்னா யோசிக்கிறார். இப்படி வந்தால் கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் நடந்தது என்னவென்றால், ஆசாத் அவர்களுடைய பதவிக் காலம் முடிந்தவுடனேயே அவருடைய பதவி ஓராண்டு நீடித்திருந்தால் அதை நிடைமுறைப்படுத்தி இருக்கலாம். அதன் பின் தலைவரான நேரு அவர்கள் என்ன செய்தார் என்றால், பம்பாயில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், இது நல்ல திட்டமாக இருந்தால் கூட அரசியல் நிர்ணயசபை தான் இறுதி முடிவு செய்யும் என்று கூறிவிட்டார். ஜின்னா உடனே கேட்டார். இன்றைக்கு இதை ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நாளைக்கு அடுத்து வரும் அரசு நிர்ணய சபையில் உங்களுக்குத் தானே மெஜாரிட்டி வரும். இதை பின்னால் தூக்கி போட்டு விட்டீர்கள் என்றால், என்றுகூறி அவர் பின் வாங்கிவிட்டார். இவைகள் ஏதோ வாய் தவறிவிட்டது என்றெல்லாம் கூறி பார்த்தார்கள். ஆனால் ஜின்னா ஒத்துக்கொள்ளவில்லை. சமாதானம் என்றாலும், இது அனைத்தும் ஏமாற்று வேலை என்று அவர் நினைத்தார். அபுல்கலாம் ஆசாத் என்ன சொன்னாரோ அதையே தான் நானும் சொல்கிறேன்.

மாநில சுய நிர்ணய அரசுகளுக்கு அதிகாரம் கொடுங்கள். ஆனால் மத்தியில் இந்த நான்கு திட்டங்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். இது இந்தியா ஒற்றுமையாக உள்ளது என்பதை வலியுறுத்தும்.

தமிழ் இயக்கம்

1920ல் மறைமலை அடிகளார் இருந்த அன்றைய கால கட்டத்தில் வடமொழி கலந்த தமிழ் கல்விமுறைதான் பயிற்றுவிக்கப்பட்டது. அப்போதைய குடியரசு இதழ்களில் எல்லாம் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். 1924, 25-களில் வந்த குடியரசு இதழ்களில் அட்டாசன அதிபதி அவர்களே என்று போட்டு விட்டு ஆரம்பம் ஆகும். ஒரு வணக்கம் கிடையாது. நமஸ்காரம் என்று எழுதிவிட்டு பின்னர் கடைசியில் வந்தனம் உச்சாசம், சுபமுகூர்த்த தினம் தான். திருமணம் என்ற சொல் எல்லாம் கிடையாது. வடமொழியின் மரணப்பிடியில் அன்றைக்கு தமிழ் சிக்கி தவித்த கால கட்டத்தில் மறைமலை அடிகளார்தான் வடமொழியின் மரணப்பிடியில் இருந்து தமிழை மீட்க வேண்டும் என்று தோண்டி எடுத்து தனித்தமிழ் என்று ஒன்றை 1920ல் ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் அதில் ஒவ்வொருவராக இணைந்தனர். அதன்பின்பு தான் தேவநேய பாவாணர் சேர்ந்து பின்னர் பிரிந்து இப்படி நிறைய தமிழறிஞர்கள் அதை ஓர் இயக்கமாகவே செயல்படுத்தினர். அது இயக்கமாகவே வளர்ந்தது.

காமராஜரின் கல்விப் பணி

சுதந்திரம் கிடைத்த பின்னர் காமராஜர் முதலமைச்சராக ஆனபின்னர் அவர் அதை நடைமுறைப்படுத்தினார். அவர் தான் முதல்முதலாக 10ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியை கொண்டு வந்தார். அவர் பதவியை விட்டு செல்வதற்கு முன்பு பட்டப்படிப்பு வரை தமிழில் சொல்லித்தர வேண்டுமென்று புத்தகங்களெல்லாம் போட்டு, குழுக்கள் அமைத்து அதைக் கொண்டும் வந்தார். கோயம்புத்தூரில் பி.எச்.டி. கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை தமிழில் கொண்டுவர சோதனை களமாக்கப்பட்டு அதைக் கொண்டு வந்தார். காமராஜர் காலத்தில்தான் தமிழ் வளர்ச்சி கழகம் என்று ஒன்றை அமைத்தார். ஆங்கிலத்தில் என்சைக்ளோபிடியா மாதிரி தமிழிலும் இருக்க வேண்டுமென்று அதற்கு கலைக்களஞ்சியம் என்று பெயர் வைத்தார். பெரியசாமிதூரன் தலைவராக்கப்பட்டு எல்லா அறிவியல் சொற்களும், கலைச்சொற்களும் மொழியாக்கம் செய்ய அறிஞர்களை அமைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. அவை முழுமையாக நடைப்பெற்று இருந்தால் எம்.ஏ., பி.ஏ., எம்.எஸ்.சி., வரை ஏன் பொறியியல், மருத்துவம் கூட தமிழிலே கற்றுத்தரப்பட்டிருக்கும்.

தி.மு.கழக ஆட்சி

1967-ல் ஆட்சி மாறிய உடன் திமுகவினருக்கு தமிழ் மீது நம்பிக்கை இல்லை. ஆகையால் அவர்கள் இராஜாஜி கூறியதை வேதவாக்காக எடுத்துக் கொண்டார்கள். இந்தியை எதிர்க்க வேண்டும் என்றால் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்று இராஜாஜி சொன்னார். `இந்தி நெவர் இங்கிலீஸ் எவர்' என்று கூறினார். அதன் பின்னர் அண்ணா காலத்தில் அவர் ஒரு உத்தரவுபோட்டார். அந்த உத்தரவுதான் இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம். அதாவது தாய்மொழிக் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உத்தரவு போட்டுள்ளார். தமிழ் முதலாவது மொழி. ஆங்கிலம் இரண்டாவது மொழியாக இருக்கவேண்டுமென்று தான் அவர் உத்தரவிட்டிக்க வேண்டும்.

ஆனால் அவர் என்ன உத்தரவு போட்டாரென்றால், ஆங்கிலம் முதலாவது மொழியாகவும், இரண்டாவதாக தாய்மொழி என்று பொதுப்படையாக கூறிவிட்டார். சிறுபான்மையினர்கள் என்ன செய்துவிட்டார்கள். எங்களது தாய்மொழி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று ஆளுக்கு ஒரு நிலை உருவாகியது. தாய்மொழி தமிழ் தான் கற்க வேண்டும் என்ற நிலை இல்லாமல் போய் விட்டது. இதற்கு முன்னரே பக்தவச்சலம் ஒரு தவறு செய்தார். அண்ணாவிற்கு முன்னர் எல்லாமே தமிழில் தான் இருந்தது. பிறமொழி கல்வி கற்போரும் உள்ளனர். எனவே, ஓர் வகுப்பு ஆங்கிலம் என்று கூறினார். ஒன்று இரண்டாகியது, இரண்டு மூன்றாகியது, பின்பு அனைத்துமே ஆங்கிலமானது. இதற்கு முதலில் வழி வகுத்தவர் பக்தவச்சலம். பின் அண்ணா. கலைஞர் முதல்வரான பின் கல்வியை அரசு துறையில் இருந்து தனியார் துறைக்கு விடுவதுதான் நல்லது என்றும், கல்விக்குப் போய் இவ்வளவு செலவு செய்வதா என்று கூறினார். 1967 காங்கிரஸ் ஆட்சி இருந்த காலக்கட்டத்தில் மூன்றே மூன்று மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தான் இருந்தது. தமிழ்நாட்டில் ஆங்கிலோ-இந்தியர்கள் கற்பதற்கு மட்டும் அந்த ஆங்கில பள்ளிகள். ஆனால் இன்றோ 60,000 பள்ளிகளுக்கு மேல் வந்து விட்டது. இது எப்படி என்றால் இரண்டு காரணம் தான். முதலில் கல்வியை தனியார் துறைக்கு கொடுப்பது, இரண்டாவது பணம்.

மெட்ரிகுலேசன் தொடங்க வேண்டும் என்றால் ஓர் குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டும். பின் நீங்கள் கல்விமுறையில் எதைவேண்டுமானாலும் பயிற்றுவிக்கலாம். எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் பெறலாம். இவர்களின் கையூட்டுப் பெரும் நோக்கில் இவை ஏற்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் என்ன சட்டம் இருந்தது என்றால், அனைத்து தொடக்கப் பள்ளியிலும் 1 முதல் 5 வரை தொடக்கக்கல்வி தமிழில் தான் இருக்க வேண்டும் என சட்டம் இருந்தது. நர்சரி பள்ளி தொடங்கியவர்கள் அச்சட்டத்தின்படி பதிவு செய்தால் தமிழில் தான் கற்பிக்க வேண்டும். எனவே இதில் பதிவு செய்யவே இல்லை. அரசும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இதனால் இந்த 40 ஆண்டு காலத்தில் என்ன கொடுமை ஏற்பட்டது என்றால், சின்னச் சின்ன கிராமங்களில் கூட நர்சரி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் தொடங்கி ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட்டது. இந்த 40 ஆண்டுகள் வரை இரண்டு கழகங்கள் தான் ஆட்சியில் இருந்தது.

இவ்வாறு மாறி மாறி இவர்கள் 1 முதல் 5 வரைக் கூட தமிழை பயிற்றுவிக்கவில்லை. காமராஜர் காலத்தில் இயற்றிய ஆட்சி மொழி சட்டத்தைக்கூட இவர்கள் அமுல்படுத்த நினைக்கவில்லை. இன்றைக்கு நிலை என்னவாயிற்று என்றால், இன்றைக்கு கோயிலில் கூட தமிழ் கிடையாது. வடமொழி அர்ச்சனை தான். இசை அரங்குகளில்கூட தெலுங்கு கீர்த்தனைகள் தான். இப்படி தமிழ், தமிழ் என்று ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழையே இல்லாமல் செய்துவிட்டார்கள்.

செம்மொழி என்றால் என்ன?

இன்றைய தலைவர்கள் தங்களை பெரிய தமிழ் உணர்வாளர்கள் என்று மேடையில் காட்டிக் கொள்கின்றனர். மக்களை ஏமாற்றுகிறார்கள். உலகத்தின் தலைசிறந்த தமிழின் செம்மொழி திட்டம் என்ன ஆச்சு? சமஸ்கிருதம் செம்மொழியாக்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டாயிரம்ஆண்டுகள் ஒரு மொழி இருக்கும்போது அதை செம்மொழி ஆக்கலாம் என்றனர். ஆனால் தமிழை செம்மொழி ஆக்க வேண்டும் என்றால், அதற்கு ஆயிரம் ஆண்டுகள் தான் என்று மத்திய அரசு உத்தரவுபோட்டு இருந்தது.

அப்போது மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அர்ஜுன் சிங் அமைச்சர். ஆனால் இத்துறையில் அதை சேர்க்காமல் பண்பாட்டுத்துறையிலிருந்து அறிவிப்பு செய்தார்கள். மத்தியில் இதை ஏற்கவில்லை. தமிழை கல்வி துறையில் செம்மொழியாக அறிவிக்கவில்லை. தமிழை செம்மொழியாக அறிவித்த துறை எது என்றால் பண்பாட்டுத் துறை. ஆயிரம் ஆண்டுகளாக அறிவித்ததன் நோக்கம் என்னெவன்றால் வங்காளம் குஜராத்தி, கன்னடம், தெலுங்கு என ஆயிரம் ஆண்டுகளாக உள்ள எல்லா மொழிகளையும் ஒன்றுசேர்த்து இதை இரண்டாம் தர செம்மொழியாக ஆக்குவதற்கான திட்டம்.

மணவை முஸ்தபா தான் அதை (தமிழை செம்மொழியாக) கொண்டு வர எதிர்த்து பெரும் குரல் கொடுத்தார். அவர் தினமணியில் ஓர் கட்டுரை எழுதி, அதன் பின்னர் தான் எல்லோ ருக்கும் தெரிந்து அதிர்ச்சியடைந்தார்கள். அதன் எல்லா தலைவர்களும் கண்டித்தார்கள், போனார்கள். பிரச்சனை ஆனது. முஸ்தபாமீது கோபப்பட்டு என்ன செய்ய முடியும் எல்லா வெட்ட வெளியாக ஆகிவிட்டது. அதன்பின் என்னென்னவோ பேசி பின் 1500 ஆண்டுகள் என்று அறிவித்தார்கள். அதன் பின் கன்னடர்கள் தம்மொழியையும் 1500 ஆண்டுகள் என்று அறிவிக்க வேண்டும் என்கின்றனர். இதில் ஒன்றும் சந்தேகம் இல்லை. இப்போது என்ன பத்தோடு ஒன்று பதினொன்றாக தமிழ் உள்ளது. சமஸ்கிருதத்திற்கு ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு வெறும் 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். பேருக்கு செம்மொழி என்று அறிவித்து விட்டு இதை காட்டி மக்களை ஏமாற்றும் போக்கு இது. அது செம்மொழி என்று அறிவிப்பு டெல்லியில் இருந்து வந்த மறு வாரமே அவருக்கு மதுரையில் ஒரு மாபெரும் பாராட்டு விழா. அதற்கு 10 தமிழ் அறிஞர்களை அழைத்தனர்.

ஆனால் மணவை முஸ்தபா தான் தைரியமாக வர மாட்டேன் என்று அறிவிப்பு செய்தார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் போனார்கள். இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் போக்கு. உண்மையிலே செம் மொழி என்று முழுமையிலே ஆகவில்லை. தமிழுக்கு அந்த அந்தஸ்து முழுமையாகக் கிடைக்கவில்லை. சமஸ்கிருதத்துக்கு சரிசமமாக கூட தமிழை வைக்க தயாராக இல்லை டெல்லியில். ஆனால் இங்கு அவர்கள் மக்களை திசை திருப்பி ஏமாற்றி தமிழை இந்திய அரசு செம்மொழியாக ஆக்கிவிட்டது என்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி பாராட்டு விழாவெல்லாம் நடத்தினார்கள். எனக்குக் கூட சந்தேகம் தான். ஏனென்றால் செம்மொழி அறிவிப்பு வந்த அடுத்த வாரமே மதுரையில் பாராட்டு விழா. ஓர் மாதத்திற்கு முன்னரே அவர்களுக்கு செய்தி தெரிந்திருக்கும். எனவே பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து கொண்டு பின்னர்தான் இதைஅறிவித்து விட்டார்களோ என்னவோ! இவ்வளவு கேவலமான நிலை உள்ளது. இது மட்டும் இல்லை பல துறைகளில் உள்ளது. கடந்த முறை கருனாநிதி முதல்வராக இருந்த போது என்ன உத்தரவு போட்டர் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என அறிவிப்பு செய்தார்கள். இப்போது கோவில்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இவர்களுக்கு சமஸ்கிருதத்தை நேரடியாக எதிர்ப்பதற்கு தைரியம் கிடையாது.

களப்பணி

மக்களிடம் இவர்களை அம்பலப்படுத்த வேண்டும். இது தான் இப்போதைய களப்பணி.அதற்காக தடா, பொடாபோன்ற எந்த அடக்குமுறையையும் ஏற்க நாம் தயாராக இருக்க வேண்டும். சிறை செல்வதற்கோ வேறு எதற்கும் நாம் அஞ்சக் கூடாது. காரணம் இவர்கள் அனைவருமே ஓர் 40 ஆண்டு காலமாக மேடையில் வீர முழக்கம் செய்து கொண்டு இருந்தார்கள் தமிழ், தமிழ் என்று. இதைக் கேட்டுக் கேட்டு மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். இப்போது நாமும் போய் தமிழ் என்று பேசும்போது மக்கள் நம்ப மறுக்கிறார்கள்.

ஏனென்றால் தமிழ், தமிழ் என்று பேசி அவர்கள் இந்த 40 ஆண்டு காலத்தில் செய்யாததை இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்று எண்ணுகிறார்கள். அதனால் நாம் செய்யும் தொண்டுகள் மற்றும் தியாகங்கள் மூலம் தான் மக்களுக்கு தெரிவிக்க முடியும். மக்களை சொல்லியும் தவறில்லை. ஏனென்றால் மக்களை இவர்கள் ஏமாற்றி உள்ளனர். அதனால் இப்போது மேடையில் யார் தமிழ் என்று பேசினாலும் நம்ப மறுக்கிறார்கள். இதை உடைத்தெறிய நாம் மக்களோடு இணைந்து போராட வேண்டும். இதற்காக சிறை தண்டனை அனுபவிக்கவும் தயாராக இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் நம்புவார்கள்.

இளைஞர்களை நம்பி நாம்

இதை ஒரு ரிலே ரேஸ் மனம் என்றுதான் கூறவேண்டும். இதிலே நான்கு பேர் இருப்பார்கள். முதல் வட்டம் நான் சென்று விட்டு பின் இரண்டாவது ஒருவர் என்று மாறி மாறி எல்லோருக்கும் வாய்ப்பு தரவேண்டும். ஆனால் 4 வட்டமும் நானே தான் செல்வேன் என்றால் சரிவராது. இப்போது இதை நாம் தடகளம் மாதிரி செயல்பட்டு இந்த தலைமுறையில் சரியாக வேண்டும் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களாவது சரி செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையோடு இளைஞர்களை உருவாக்க வேண்டும். இன்றைக்கு உள்ள காலக்கட்டத்தில் நாங்கள் அதைத்தான் செய்கிறோம். எங்கள் தலைமுறையிலே அது முடிய வேண்டும். முடிந்தால் மகிழ்ச்சி இல்லை என்றாலும், அதைத் தலைமுறையிலாவது முடிக்க வேண்டும். அதைத் தான் நாம் செய்ய வேண்டும். மறைமலை அடிகளார் காலம் முதல் 100 ஆண்டு காலமாக எத்தனையோ அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் தமிழ் தேசிய உணர்வை மக்களிடம் ஊட்டுவதற்கு விடாமுயற்சி செய்து வருகின்றனர். மறைமலை அடிகளார், பாவாணர் போன்றோர் தமிழுக்காக எழுதி எழுதி கரைந்துப் போனார்கள். எந்த ஒரு இனத்திலேயும் மக்களிடம் இன உணர்ச்சியை ஊட்டுவதற்காக 100 ஆண்டு காலம் போராடும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. எந்த மொழி எடுத்தாலும், 20, 30 ஆண்டுகளில் அது முடிந்துவிடும். ஆனால் இங்கே 100 ஆண்டு காலம் உணர்ச்சி ஊட்டிய பிறகும் கூட அது திசைத் திருப்பப்பட்டு, பின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் திணிக்கப்பட்டு உள்ளது. அப்படியும் மீறி தான் அது வளர்ந்து கொண்டே உள்ளது. இப்படி நாம் அந்த அறிஞர்களாலும், தலைவர்களாலும் உணர்வூட்டப்பட்ட மக்களாக மீதமிருக்கிறோம். இவர்களின் காலத்திலே நாம் அடுத்தத் தலைமுறைைய நாம் உருவாக்கி விட்டுச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் இதை பின்னால் செய்ய ஆள் இல்லாமல் போய்விடுவார்கள். எனவே, அதை நாம் கட்டாயம் செய்தே தீர வேண்டும்.

இந்தி எதிர்ப்பு போர்

1965 ல் இந்தி எதிர்ப்பு விடுதலை போராட்டம் நடந்தது. அப்போது மாணவர்கள் நாம் பாதிக்கப்படுவோம், நம் எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற உணர்வில் கொதித்தெழுந்து போராடினார்கள். அப்போது இப்போராட்டத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த போராட்டத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்கள். மாணவர்கள் கொதித்து போராடினார்கள். தமிழகம் முழுவதும் கொதித்தெழுந்தது. இதுபோன்ற ஓர் போராட்டம் இதற்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் என்ன ஆயிற்று என்றால் 1967 ல்ஆட்சிக்கு வருவதற்கு அதை ஒரு காரணமாக அந்தப் போராட்டத்தை அறுவடை செய்து கொண்டார்கள். அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு இந்தப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டனர். ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன செய்தார்கள். ஒன்றுமே செய்யவில்லை.நினைவுப்படுத்திக் கொள்ளுஙட்கள் இரயில்வே நிலைய பெயர் பலகைகளில் இந்தி இருக்கக் கூடாது என்று அழித்தார்கள் தி.மு.க.வினர். இன்று தி.மு.கவைச் சார்ந்த டி.ஆர்.பாலு தான் மத்தியிலே நெடுஞ்சாலைத்துறை அமைச்சர். இப்போது தமிழ்நாட்டின் மைல் கல்லில் எல்லாம் இந்தி வந்துவிட்டது. ஏன்? இரயில்வே பெயர் பலகையில் கூட இந்தி வரக்கூடாது என்றவர், இன்று மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது மைல்கல்லில் கூட இந்தி வருகின்றதே அது எப்படி? இப்படி ஒவ்வொன்றையும் அவர்கள் திசை திருப்புகிறார்கள். சுயநலத்தோடு செயல்பட்டு நம்முடைய போர் குணத்தையும் மழுங்கடிக்கிறார்கள்.

தியாகத் தலைவர்கள்

நாட்டில் இவர்களால் ஏற்பட்டுள்ளது அரசியல் சீரழிவு மட்டுமல்ல, மொழி சீரழிவு, நாட்டு சீரழிவு என எல்லாமும் செய்தார்கள். முன்பு நீங்கள் பார்த்தீர்களானால் இராஜாஜி, பெரியார், காயிதேமில்லத், ஜீவானந்தம் போன்றோர் மிகப் பெரிய தலைவர்கள் தியாகம் செய்தவர்கள். அதில் ஒன்றும் சந்தேகம் கிடையாது. இவர்களுக்குள் எத்தனையோ விசயங்களில் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால் தமிழ், தமிழ்நாட்டு பிரச்சனை என்னும்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டனர். அப்போது மாநிலம் பிரியும்போது சென்னை மாநகரம் மனதே என்று ஆந்திர மக்கள் சென்னையில் ஊர்வலம் வந்து விட்டனர். நேரு இரு மாநிலங்களுக்கும் சென்னை பொதுத் தலைநகரமாக இருக்கட்டும் என்றார். அப்படி நாம் சரி என்று ஏற்றுக் கொண்டு இருந்தோமேயானால் இன்று அரியானாவும், பஞ்சாபும் குடுமி பிடித்து சண்டிகர் பிரச்சினையில் அடித்துக் கொள்வது போல் நாமும் இருந்திருப்போம். 1954ல் இராஜாஜி தான் முதல் அமைச்சர். அவர் நேருவுக்கு ஓர் கடிதம் எழுதினார். எப்போது அவர்கள் தனி மாநிலம் என்று, பிரிந்து போனர்களோ அதற்கு பின் இருவருக்கும் தனி தலைநகரம் தான் வேண்டும். இதை நீங்கள் ஏற்க மாட்டீர்கள். வற்புறுத்தினால் இந்த கடிதமே என் இராஜினாமா கடிதமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தார். இராஜாஜி அவ்வாறு அறிக்கை கொடுத்தவுடன் இராஜாஜி என்ன அறிக்கை கொடுத்தாலும் எதிர்த்து அறிக்கை கொடுக்கும் தந்தை பெரியார், ராஜாஜியை ஆதரித்து அறிக்கைக் கொடுத்தார். அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த காமராஜர், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டி ஒரு தீர்மானம் போட்டார். சென்னை தமிழனுக்கு தான் சொந்தம் என்று. ஜீவானந்தம் கொடியுயர்த்தினார். அப்போது காயிதேமில்லத்தும் சென்னை தமிழனுக்கு தான் சொந்தம் என்று அறிக்கையிட்டார்.அவர் அரசியல் நிர்ணய சபையிலே பேசியவர். நாட்டுக்கு ஆட்சிமொழி என்று ஒரு மொழிக்கு தகுதியிருக்குமேயானால் என்னுடைய தாய் மொழி தமிழ்தான் என்று கூறினார். இப்படி அவர்களுக்குள் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் அடிப்படை பிரச்சனையில் ஒன்றிணையும் பண்பாடு அவர்களிடம் இருந்தது.

ஆனால் இப்போது என்ன நிலை உள்ளது? காவிரிப் பிரச்சனையில் கருணாநிதி ஓர் நிலைப்பாடு எடுத்தால் ஜெயலலிதா ஓர் நிலைப்பாட்டைக் கூறுகிறார். அந்த அம்மா டெல்லிக்குப் போய் பேசலாம் என்று கூறினால், அவர் வர மாட்டேன் என்கிறார். முன்பு தமிழ்நாட்டில் இருந்த சுமுகமான அரசியல் சூழ்நிலையைக் கெடுத்தார்கள். அதற்கு முக்கிய காரணம் கருணாநிதி தான். ஏனென்றால் எதை எடுத்தாலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசுவது, யாரானாலும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, இவர் கருத்துக்கு மாறுபட்ட கருத்துக் கூறினால், அவர்களை கன்னா பின்னாவென்று திட்டுவது, பிறகு எப்படி ஒத்துழைப்பார்கள். இப்படியோர் மோசமான சூழல், சீர்கேடு அடைந்த அரசியல் உருவாகி விட்டது. இதனால் ஒகேனக்கல், காவேரிப் பிரச்சினை, பெரியார் பிரச்சினை, பாலாறு போன்ற பிரச்சினையில் சேது கால்வாய் பிரச்சினையில், கச்சத்தீவு பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து என்ற அத்தியாயத்தையே தமிழ் நாட்டில் உருவாக்க முடியவில்லை. அதை டில்லி பயன்படுத்திக் கொண்டது. காவேரி பிரச்சினையில் அப்போது நடுவர் மன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது. 205 டிம்சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உடனடியாக கர்நாடகத்தில் இருந்து முதலமைச்சரும் முன்னால் முதலமைச்சர் நான்கு பேரும் மொத்தம் ஐந்து பேரும் ஒன்றாக டெல்லிக்கு பறந்தார்கள். எதிர் கட்சித் தலைவர்களானாலும் பிரதமரை பார்த்து இதை நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று 5 பேரும் இணைந்து கூறினர். அவர்களால் சொல்ல முடிகிறது. எதிரும் புதிருமான கட்சி பி.ஜே.பி., காங்கிரஸ், ஜனதா எல்லா கட்சியும் ஒன்று கூடி தானே சென்றார்கள். இன்றைக்கும் ஒன்று சேர்ந்து தானே நிற்கிறார்கள். முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று காங்கிரசும் சொல்கிறது. கம்யூனிஸ்டும் சொல்கிறது. ஏன் இங்கு மட்டும் தனித்து நிற்கிறார்கள். இங்கு முல்லை பெரியார் அணை பிரச்சினையால் பாதிப்படைந்துள்ளோம். ஏதாவது செய்யுங்கள் என்று சொல்வதற்குக் கூட ஒற்றுமையில்லை. இந்தசீரழிவினால் என்ன நடந்தது என்றால் நமக்கு நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமோ அது கூட டெல்லியில் இருந்து கிடைக்காமல் போகிறது. டெல்லியில் உள்ளவர்கள் நம்மைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அவர்கள் ஒற்றுமை யாக நின்று பேசுகிறார்கள். எனவே அவர்கள் பிரச்சனையைத் தான் முதலில் பார்ப்போம். இவர்கள் ஒற்றுமையாகி வரும் போது பார்க்கலாம். அரசியல் பிரச்சினையை விடுங்கள். மீனவர்களை தினசரி சுடுகிறார்கள் சார்க் மாநாடு அங்கு நடந்துக் கொண்டு இருக்கும் போதே இரண்டு பேரை சுட்டு விடுகிறார் கள். இதில் இருந்து என்ன தெரிகிறது. நமக்கும் மரியாதை இல்லை. நம்முடைய சொல்லுக்கும் மரியாதை இல்லை. இதற்கு காரணம் என்னவென்றால் நம்மிடம் ஒற்றுமை இல்லை.

சிபுசோரன் மலைவாசிகளின் தலைவன். அவருக்கு ஜார்கன்ட் மாநிலத்தில் ஆறு ஓட்டு இருக்கு மக்களவையில் இந்த நெருக்கடியில் அவர் வைத்த நிபந்தனை என்னவென்றால் அகண்ட ஜார்கண்ட் வேண்டும். மத்திய பிரதேசத்தில் ஒரிஸா உள்ள ஜார்கண்ட் பிரதேசம் எல்லாவற்றையும் இணைக்க வேண்டும்.அப்போது தான் ஓட்டுப் போடுவேன் என்று கூறுகிறார். காவேரி பிரச்சனை, முல்லை பெரியார் பிரச்சனை, உச்சநீதிமன்ற தீர்ப்பை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் எங்கள் ஆதரவு உங்களுக்கு இல்லை என்று கருணாநிதி சொல்லட்டுமே.

டெல்லியில் வேட்டிக் கட்டிய தமிழனின் ஆட்சி என்று கூறும்போது எங்கள் ஆதரவு இல்லாமல் உங்கள் ஆட்சி நடைபெறாது என்று இங்கு மேடையில் பேசுகிறீர்கள் அல்லவா? அதை போய் அங்கு கூறுங்கள். மன்மோகன் சிங்கிடம் இவர் வைத்த ஒரே கோரிக்கை அந்த நெருக்கடியான சூழ்நிலையில் காவேரி பிரச்சனையோ, கச்சத்தீவு பிரச்சனையோ, ஒகேனக்கல் பிரச்சனையோ, மீனவர் பிரச்சனையோ அல்ல. மகளுக்கு மந்திரி பதவி. அந்த ஒரே கோரிக்கை தான். அதுவும் நடைறெவில்லையே.

தமிழீழப் பிரச்சினையும், இந்திராவும்

இந்திரா காந்தி அவர் ஆட்சியில் இருந்தபோது அவருக்கு தொலைநோக்கு பார்வை இருந் தது. அதனுடன் ஆளுமை திறன் இருந்தது. 1983 கொழும்பில் ஓர் பெரிய இனக்கலவரம் ஏற்பட்ட போது 3,000 பேர் படுகொலை செய்யப்பட்ட போது இந்திரா அவர்கள் உடனடியாக என்ன செய்தார்கள் என்றால் ஜினோசைடு என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். இனப்படு கொலை அங்கு நடைப்பெறுகிறது. அதைப் பார்த்துக் கொண்டு இந்தியா அமைதியாக இருக்காது என்றார். அடுத்த நிமிடமே கலவரம் நின்று விட்டது. அது மட்டும் அல்ல சீனியர் மோஸ்டு டிப்ளமேட் ஜி.பார்த்தசாரதியை அங்கு அனுப்பி வைத்தார். எங்கேயோ ஓர் சின்ன நாடு. அதில் ஓர் பிரச்சினை. அதற்கு எதற்கு சீனியர் மோஸ்ட் டிப்ளமேட் அனுப்ப வேண்டும் என்று நினைக்கவில்லை.

முக்கியமான பிரச்சனைக்கு தான் அவர் வருவார். இல்லையென்றால் அவர் வர மாட்டார். சீனியர் மோஸ்டு டிப்ளமேட்டை இவர் அனுப்பியதன் விளைவு என்ன ஆனது என்றால், ஜெயவர்த்தனாவிற்கு அவர் உண்மையை உணர்த்தினார். இந்தியா இந்தப் பிரச்சினையை முக்கியமாக கருதுகிறது. அதோடு உலக நாடுகளும், இந்தியா இந்தப்பிரச்சனையை முக்கியமாகக் கருதுகிறது. அதனால்தான் சீனியர் மோஸ்ட் டிப்ளமேட்டை அனுப்புகிறது என்று உலக நாடுகள் விலகி நின்றன. ஜெயவர்தனாவும் பயந்தார். ஆனால் ராஜிவ்காந்தி முதல் இன்று மன்மோகன்சிங் காலம் வரை என்ன நடைபெறுகிறதுஎன்றால், அதிகாரிகளை அனுப்பி வைத்து பேசுகிறார்கள்.

ராஜிவ்காலத்தில் வெளியுறவு செயலாளராக இருந்த எம்.கே.நாராயணனை அனுப்பி ஜெயவர்த்தனாவிடம் பேச வைக்கிறார். எம்.கே.நாராயணன், சிவசங்கரமேனன் என்று அதிகாரிகளையே அனுப்புவதின் மூலம் இந்திய அரசாங்கமே இந்த பிரச்சினையை டீக்கிரேடுச் செய்தது. இந்தியா மோஸ்ட் டிப்ளமேட் அனுப்புவது வேறு. ஓர் சாதாரண அதிகாரியை அனுப்புவது வேறு. நீங்களே இந்த பிரச்சனையின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொள்கிறீர்கள். பிறகு அவர்கள் எப்படி இதற்கு முக்கியத்துவம் தருவார்கள். இந்தக் கோளாறுதான் இன்றைக்கு உள்ள முக்கிய காரணம். இது ஒரு புதிய கொள்கைத் திட்டம்.

இலங்கை அரசை என்ன விலைக் கொடுத்தாவது திருப்தி செய்ய வேண்டும். அவர்களை தாஜா செய்ய வேண்டும் என்ற நோக்கமே இந்திய அரசுக்கு ராஜிவ் காந்தி காலத்தில் இருந்து வந்தது. திரும்ப திரும்ப ஒரே தவறை செய்து கொண்டு இருக்கிறார்கள். எல்லா அரசும் செய்து கொண்டே இருக்குது. மன்மோகன் சிங் இன்றைக்கு அதை அதிகமாக செய்கிறார். இன்னும் ஒரு அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. என்னவென்றால், இலங்கையில் உள்ள தமிழன் தனி நாடு வாங்கிவிட்டால் இந்தியாவில் உள்ள தமிழனும் பிரிந்து போய் விடுவான் என்பது தான் அது.

இந்தியா பிரிவதற்கு காரணம்

இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து போவதற்கான நிலை வந்தால், அதற்கு முல்லை பெரியார் பிரச்சனையும், காவேரிப்பிரச்சனையும், பாலாறுப் பிரச்சனையும் தான் காரணமாக இருக்குமே தவிர, ஈழத்தமிழர் பிரச்சனைக் காரணமாக இருக்காது. நீயே எங்களுக்கு துரோகம் செய்கிறாய். இந்தியா, ஒன்று என்று சொல்கிறாய். ஆனால் நீயே எங்களுக்கு இவ்வளவு துரோகம் செய்கிறாய். இது தான் காரணமாக இருக்குமே தவிர, ஈழ தமிழர் பிரச்சனைக் காரணமாக இருக்காது.

வங்காளமும் தமிழீழமும்

உதாரணத்துக்கு பார்ப்போம் என்றால் வெள்ளையன் காலத்தில் வங்காளம் ஒன்றாக இருந்தது. இந்தியா பாகிஸ்தான் பிரிந்தபோது அதுவும் இரண்டாக பிரிந்து மேற்கு வங்காளம் இந்தியாவுக்கு கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுக்கு என்று பிரித்துக் கொண்டு சென்று விட்டார்கள். அன்று கிழக்கு வங்காளம் சுதந்திரத்துக்காக போராடிய போது இந்தியாவில் இருந்து எல்லாக் கட்சிகளும் ஆதரவு கொடுத்தது. இந்திய இராணுவத்தை அனுப்பு என்று இந்திராகாந்திக்கு கோரிக்கை வைத்தார்கள். அப்போது கிழக்கு வங்காளம் பிரிவதற்கு அனுமதிக் கொடுத்தால் நாளைக்கு மேற்கு வங்காளமும் நம்மிடம் இருந்து பிரிந்து போய்விடுமே என்ற சந்தேகம் ஒருவருக்கும் ஏற்படவில்லையே. வங்காளி மீது ஏற்படாத சந்தேகம், தமிழன் மீது மட்டும் ஏன் வருகிறது. புருஷனுக்கு மனைவி மேல் சந்தேகம் வரக்கூடாது. வந்து விட்டால் பிறகு விவாகரத்து தான். வேறு வழி கிடையாது. மேற்கு வங்காளமும் கிழக்கு வங்காளமும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தது தான்.

இலங்கையும், தமிழீழமும் ஒருபோதும் ஒன்றாக இருந்தது இல்லை. அது வேற நாடு. மொழியாலும், பண்பாட்டாலும் அவர்கள் ஒரே இனம் என்ற உறவைத் தவிர ஒரே நாடாக இருந்தது இல்லை. இலங்கையில் இவ்வளவு கொடுமை நடக்குது. இனப்படுகொலை நடக்குது. அவனுக்கு வேறு வழியில்லாமல் நாடு கேட்கிறான் அவன். நாம் ஆதரிக்கிறோம் அதை. அதனால் நாம் பிரிந்து போவோன் என்று சொன்னால் அது தவறு.

இந்தியா ஈழத்தமிழனுக்கு உதவி செய்து, விடுதலை பெறுவதற்கு வங்காளத்துக்கு செய்தது போல் செய்திருந்தால் நம் மனதில் ஒரு நன்றி உணர்வு இருக்கும். அது மட்டும் அல்ல இந்தியாவைப் போல் ஒரு பெரிய நாட்டில் நாம் அங்கமாக இருப்பதனால் தான் இலங்கையில் உள்ள தமிழனுக்கு இந்தியா மூலம் உதவி செய்ய முடிந்தது. நாளைக்கு மலேசியத் தமிழன், தென் ஆப்ரிக்கத் தமிழனுக்கு எல்லாம் ஆபத்து வந்தது என்றால், இந்தியா மூலம் உதவி செய்யலாம். நாம் இந்த இந்தியாவில் இருப்பது தான் நமக்குப் பாதுகாப்பு. இதன்மூலம் அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று நாம் நன்றியுடன் நினைக்கலாம். இதை விடுத்து நீங்கள் எங்கள் தமிழர் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இராணுவம் அணுப்புவீர்கள், ஆயுதம் கொடுப்பீர்கள் என்றால், பிறகு எதற்கு எங்களுக்கு உங்கள் உறவு என்று தானே நினைப்பான். அதனால் அந்த சிந்தனையே தவறானது.

இந்தியா தமிழீழ உறவு

இந்தியாவுடைய அணுகு முறையைப் பொருத்து அந்த உறவு அமையும். உதாரணத்துக்கு பார்ப்போம் என்றால், சார்க் நாடுகளில் இந்தியாவில் இந்தியாவைச் சுற்றி உள்ள நாடுகளில் எல்லாம் இந்தியாவுக்கு எதிராக உள்ளது. வங்காள தேசம் எதிராக உள்ளது. பாகிஸ்தான் எதிராக உள்ளது. நேபாளம் எதிராக உள்ளது. இலங்கையும் எதிராக உள்ளது. இலங்கையர்கள் ஏமாற்றுகிறார்கள். தமிழீழம் மலர்ந்தால் அது ஒன்று தான் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும்.நீங்கள் அதையும் இப்படியெல்லாம் செய்து எதிரியாக்காதீர்கள். என்ன செய்வது தவறு நடக்குது. இன்று வங்காளத்துக்கு உதவி செய்தீர்கள். அது உங்களுடனா இருக்கிறது. அது அவர்கள் செய்த தவறு இல்லை. அது ரா, உளவுத்துறை செய்த தவறு. வங்காளத்தில் தேர்தல் நடக்குது. கிழக்கு நாடுகளில் அதில் யாரோ வருகிறார்கள். அதில் உங்களுக்கு என்ன? நமக்கு என்ன? அதைப் பற்றிக் கவலை முஜிபுர்ரகுமான் மகளுக்கும், ஜியாவோட மனைவிக்கும் போட்டி நடக்குது என்றால் அது அவர்களின் சொந்தப் பிரச்சனை. உள்நாட்டுப் பிரச்சனை. அதில்போய் முஜிபுர்குமான் மகளுக்கு உதவி செய்தது அம்பலமாகி விட்டது.

அதனுடைய விளைவு என்னவென்றால் வங்காள தேசமே இன்று எதிராக போய்விட்டது, இவர்கள் முட்டாள் தனமான வேலை செய்ததால். அதே போல் நேபாளத்தில் அந்த மக்கள் இராஜாவின் ஆட்சியை எதிர்த்து போராடும் போது நீங்கள் இராஜாவுக்கு ஆதரவாக இராணுவத்தை கொண்டு போய் நிறுத்துகிறாயே? இப்போது என்ன ஆனது. அவர்கள் இராஜாவை விரட்டிவிட்டார்கள். கூடவே உன்னையும் தானே தூக்கி எறிந்து விட்டார்கள். இஸ்ரேல் பிரச்சனையில் பாகிஸ்தான் தலையிடுகிறது. அவர்களை தூண்டிவிடுகிறது. இந்தியாவைக் கூட அவர்கள் தூண்டிவிடுகிறார்கள் என்று கூறுகிறீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள். இந்துஸ்தான் வேண்டும் என்று போராட்டம் நடத்தும் போது ரா, உளவுதுறை தானே எல்லா உதவியும் செய்தது. ஆப்கானிஸ்தான் போராட்டத்துக்கு இந்தியா உதவி செய்தது. அவர்களும் பதிலுக்கு செய்தார்கள். நீங்கள் இதை நிறுத்தினால் அவர்களும் அதை நிறுத்துவார்கள். ஆம் இவர்களே தவறுக்கு மேல் தவறு செய்து விட்டு அவர்கள் மேல் குறை கூறி என்ன பயன்.

எல்லா நாடுகளும் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லை. ஆகவே, சிங்களமும் ஒருபோதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கப் போவது கிடையாது. இடையில் சீன ஆக்கிரமிப்பு நடந்த போது இந்தியாவுடனா இருந்தார்கள். அன்றைக்கும் ஈழத்தமிழர்கள் தான் உடனிருந்தார்கள். அன்றைக்கு தந்தை செல்வா இருந்தபோது அவர் இந்தியாவுக்கு ஆதரவாக எல்லையில் சென்று போராடுவேன் என்று அங்கிருந்து 2000 தொண்டர்களைத் திரட்டினார். 20,00,000 பணம் திரட்டினார். ஆனால் இலங்கை அரசு அவர் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் என்ன சொன்னார்கள். இந்திய சீன எல்லைப்போர் நடந்த போது இந்தியாவை சீனா ஆக்கிரமித்தது என்று ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை.

அவர்களுடன் சமாதானமாக செல்லுங்கள் என்று இந்தியாவுக்கு புத்திமதி சொன்னார்களே தவிர, வேறு என்ன செய்தார்கள். வங்காள தேசப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்பாக மேற்கு பாகிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் இராணுவ விமானங்கள் இந்தியாவின் மேல் பறந்து செல்லக் கூடாது என்று இந்தியா தடை போட்டது. அவன் நேராக கொழும்புக்கு சென்று பெட்ரோல் போட்டுக் கொண்டு அதன் பின் வங்காளம் சென்று குண்டு வீசுவதற்கு அனுமதி அளித்தார்கள். அவர்களை நம்பி நீங்கள் அங்கு உள்ள தமிழர்களை கொன்று குவிப்பதற்கு ஆயுதம் எல்லாம் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கூறுங்கள். இந்தியாவின் அணுகுமுறை இதைப் போல் இருந்தால் இந்தியா நட்புநாடாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தந்தை செல்வாவின் இந்திய உறவு

தந்தை செல்வா காலத்தில் அவர்கள் அறவழியில் போராடினார்கள். அவர்கள் ஒன்றும் அப்போது தனி நாடு வேண்டும் என்று கேட்கவில்லை. சிங்களத்தோடு தமிழுக்கும் சம அந்தஸ்து வேண்டும் என்று தான் கேட்டார்கள். சிங்களரோடு தமிழருக்கு சமமாக நடத்த வேண்டும். இதைத் தவிர அவர்கள் வேறு எதையும் கேட்கவில்லை. அவர்கள் இதை எல்லாவற்றையும் அவர்கள் மறுத்த பின்னர் தான் 1977-ல் செல்வா, வட்டுக் கோட்டையில் ஒரு மாநாடுப்போட்டு சுதந்திர தமிழ் ஈழம் தான் எங்கள் இலட்சியம் என்று அறிவித்தார். அப்படி கேட்க வேண்டிய கட்டாயத்தை சிங்கள அரசு செய்து விட்டது. அவர்கள் கேட்ட எதையுமே செய்யவில்லை. தந்தை செல்வா பண்டாரநாயக உடன்பாடு, செல்வா சேம்நாயகா உடன்பாடு என்று அவர்கள் எதையும் மதிக்கவில்லை. குப்பையில் தூக்கி போட்டுவிட்டார்கள். வேற வழி இல்லாமல் அவர் இறக்கும் சூழ்நிலையில் இதை அறிவித்து விட்டு சென்றார்.

30 ஆண்டு கால அறப்போராட்டத்தின் விளைவாக அந்த மக்களை முழுமையாக தமிழ் ஈழத்துக்காக ஆதரவா மாற்றி விட்டார். 1977-ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அந்த தேர்தலிலும் 19 தொகுதிகளிலும் 17 தொகுதிகளில் நின்று வெற்றி பெற்றார்கள். பெரும்பாலான மக்கள் இவர்களுக்கும் தமிழீழத்துக்கு ஆதரவாக உள்ளார்கள் என்று தெரிவித்த பின்பும் அதை நாடாளுமன்றத்தில் மதிக்கவில்லை. அமிர்தலிங்கம் எதிர்க் கட்சித் தலைவர். எதிர்க்கட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த நாட்டிலாவது கொண்டு வருவார்களா? அமிர்தலிங்கம் மேல் ஆளுங்கட்சி கொண்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் மீது சொன்னதோடு நிற்காமல் அதில் பேசியவர் அனைவரும் என்ன சொன்னார்கள். அமிர்தலிங்கத்தை விளக்குக்கம்பத்தில் தூக்கில் போட வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசினார்கள். எதிர்க்கட்சி தலைவர் மீதே இப்படி சொன்னார்கள் என்றால் என்ன செய்வது. இதனால்தான் இளைஞர்கள் ஆயுதம் தூக்கும் போராட்டம் தொடங்கப்பட்டது. அதனுடைய விளைவு இன்றைக்கு செல்வாவுடைய போராட்டத்தின் தொடர்தான் இது. அவர் தொடங்கிய போராட்டத்தின் தொடர்தான் பிரபாகரன் போராட்டம். முறைதான் வேறு. அவர்கள் அறப்போர் முறையை கையாண்டார்கள். இவர்கள் ஆயுதப்போராட்டம் செய்தார்கள். அதற்கான தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.

தமிழீழ மக்களின் விடுதலை தாகம்

1985-ல் நான் ரகசிய சுற்றுப் பயணம் சென்றிருந்த போது கிட்டு வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் அம்மாவைப் பார்த்தேன். அவர்களிடம் இதைப்பற்றி கேட்டேன். என்ன கேட்டேன் என்றால் அந்த அம்மாவின் கணவர் சதாசிவம் என்பவர் அவர் செல்வ நாயகத்துக்கு வலதுக்கரமாக இருந்தவர். அப்போது போராட்டத்தில் சிறைக்குச் சென்றவர். அவருடன் இந்த அம்மாவும் சிறைக்குச் சென்றவர். அப்போது கிட்டு ஒரு வயது குழந்தை. குழந்தையைத் தூக்கிக் கொண்டு தான் சிறைக்குச் சென்றார். உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் அறப்போராட்டத்தில் தானே நம்பிக்கை. சிறைக்குச் சென்றீர்கள். துயருற்றீர் கள். இப்போது தங்களின் மகன் ஆயுதம் தாங்கியப் போராட்டம் நடத்துகிறார். இதில் உங்களுக்கு முரன்பாடாக இல்லையா என்றேன்.

அதற்கு அவர் கூறிய மறக்க முடியாத பதில், "என் கணவர் ஆயுதம் ஏந்தி போராடி இருந்தால் என் மகன் சுதந்திரமாக உலாவிக் கொண்டு இருப்பான். அந்தத் தலைமுறைச் செய்தத் தவறை என் மகன் திருத்துகிறான்" என்றார். இதை விட சிறந்த பதிலை யாராலும் சொல்ல முடியாது. இது தான் இன்றைக்கு நடந்துக் கொண்டுள்ளது.

பார்ப்பன ஊடகங்கள்

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் பார்ப்பன ஊடகங்கள், புத்தகம் நடத்தும் ஊடகங்களில் கூட அவர்கள் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்கள். விடுதலைப் புலிகளையும், தமிழீழ போராட்டத்தை மட்டுமா எதிர்க்கிறார்கள்? இல்லை. தமிழ்நாட்டில் கோவில்களில் தமிழ்தான் அர்ச்சனை மொழியாக இருக்கும் என்றால், அதற்கும் எதிர்ப்பு கூறுகின்றனர். தமிழ் பயிற்சி மொழியாக இருக்கட்டும் என்றால் எதிர்க்கிறார்கள். பொதுவாக தமிழுக்கும் தமிழனுக்கு எதிரான நிலைதான் இந்த பார்ப்பன ஊடகங்கள் எடுத்து கொண்டு உள்ளது. இனியும் எடுக்கும். அதில் ஒரு சந்தேகம் இல்லை. அதனுடைய தொடர்ச்சி தான் அவர்கள் விடுதலைப் புலிகளையும், தமிழ் ஈழத்தையும் எதிர்ப்பது. வேறு ஒன்றும் இல்லை. தமிழனுக்கும், தமிழுக்கும் எதிரி இன்றைக்கு நேற்றல்ல. 2000 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் இருந்து எதிர்த்துப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாமும் அவர்களை எதிர்த்து போராடிக் கொண்டே தான் இருக்கிறோம். தொடர்ச்சியான இடைவிடாத போராட்டம் நமக்குள் நடந்து கொண்டு இருக்கிறது.

போராட்டத்தின் இலக்கு என்ன என்று அவர்களுக்கு தெரியும். இது ஒரு கடைசி கட்டம் என்பதும் அவர்களுக்கு தெரிகிறது. இதில் அவர்கள் வெற்றிபெறாவிடில் நம்முடைய கதை முடிந்து விடும் என்று அவர்களுக்கு அச்சம் உள்ளது. அதனால் தான் அதை மூர்க்கத்தனமாக எதிர்க்கிறார்கள். எல்லோரும் ஒன்றுசேர்ந்து நிற்கிறார்கள். குப்புசாமிக்கும், சோவுக்கும் இதில் என்ன சம்மந்தம். ஆனால் எல்லோரும் ஒன்றுச் சேர்ந்து நிற்கிறார்கள்.

நான் தமிழ் வழிபாட்டுக்கு ஒரு மாநாடு நடத்தினேன். அதற்கு சோ எழுதினார். சமஸ்கிருதம் மந்திர மொழி. அதில்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் தமிழ் மந்திர மொழி இல்லை என்று எழுதினார். அதற்கு நான் பதில் எழுதினேன். சரி எங்கள் மொழி மந்திர மொழி அல்ல. நீச்சமொழி தான். சந்தேகம் இல்லை. உங்கள் மொழி மந்திர மொழி என்று கூறுகிறாயே. துக்ளக் பத்திரிகையை உங்கள் மந்திர மொழியில் நடத்த வேண்டியது தானே. எங்கள் தமிழில் எழுதி எங்கள் தமிழனிடம் விற்று வயிறு வளர்க்கிறாய். நீ வயிறு வளர்க்க மட்டும் தமிழ் வேண்டும். ஆனால், கோயிலுக்கு மட்டும் தமிழ் வேண்டாமா என்று கேட்டேன். அதோடு அமைதியாகி விட்டார். அவர்கள் மனதில் உள்ளது அதுதான்.

தமிழீழ ஆதரவு

புலம்பெயர்ந்த தமிழர்கள் ஆதரவு இல்லாமல் இந்த போராட்டம் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியாது. ஈழத்தில் எந்த ஒரு நாடும், அரசும் புலிகளுக்கு உதவி செய்யவில்லை. வியட்நாமில் ஹோசிமின் போராடும்போது சோவியத் யூனியனும் செஞ்சீனமும் ஆதரவு கொடுத்தது. சுபாஸ்சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்துக்காக போராடும்போது ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி எல்லா நாடுகளும் ஆதரவு தெரிவித்தார்கள். ஆனால் தமிழ் ஈழத்துக்கு ஒரு நாடு, அரசு எதுவுமே ஆதரவு தரவில்லையே. ஆகவே, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏதிலிகளாய் அந்த நாட்டில் வாழ்வதற்கே போராடிக் கொண்டு உள்ள நிலையில் அவர்கள் தானே சிறுக சிறுக பணம் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.

அந்த பணத்தில் தானே போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழன் எந்த நாடாக இருந்தாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என எங்கிருந்தாலும் ஈழத்தமிழன் வீடாக இருந்தால் அங்கு பிரபாகரன் படம் இருக்கும். அந்த தலைவன் வாழும் காலத்திலேயே நம் இலட்சியத்தை அடைந்துவிட வேண்டும். இல்லையென்றால் முடியாது என்ற வெறியும், நம்பிக்கையும் அவர்களிடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் மக்களுக்கு உணர்வு இருக்கிறது. உண்மை என்ன? கிராமமானாலும், நகரமானாலும் புலிகளுக்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. பிரபாகரனுக்கு நல்ல மரியாதை இருக்கிறது. உதாரணத்துக்கு ஒன்று கூறுகிறேன். மக்களிடையே உள்ள உணர்வு என்பது நீருபூத்த நெருப்பாய் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களால் மக்கள் வெளிக்காட்ட தயங்குகிறார்களே தவிர, மக்கள் முழுமையாக ஆதரவாகத் தான் உள்ளார்கள்.

ராஜீவ் கொலை வழக்கு

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தார்கள். எந்த ஒரு நாட்டிலும் ஒரு கொலைக்கு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூக்கு என்பது கொடுத்ததே இல்லை. அதிலேயும் வழக்கு மிகவும் சாமர்த்தியமாக பதிவு செய்து 13 ஈழத்தமிழர்கள் 13 இந்தியத் தமிழர்க்ள என்று சமமாகப் போட்டு 26 பேருக்கும் தூக்கு தண்டனை என்றால் அவர்கள் என்ன உணர்த்த விரும்பினார்கள். இனிமேல் யாரும் தமிழன், தமிழீழம் என்று ஆதரித்தால் அவர்களுக்கும் இந்த நிலை தான் என்று ஒரு மிரட்டல் சவால் கொடுத்தார்கள்.

அப்போது இந்த சவாலை ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும் என்ற ஒரு உறுதிப்பாடு எங்களுக்கு ஏற்பட்டது. உடனே ஒரு குழு அமைத்தோம். அன்றைக்கு மிகவும் கெடுபிடியான நேரம். ராஜிவ் காந்தி கொலையான நேரத்தில் கொலையாளிகள் வழக்கு நடத்துவதற்கு குழு அமைப்பது, நிதி திரட்டுவது ஒரு சவாலான வேலை. நாங்கள் அதை செய்தோம். 40, 50 இலட்சம் ரூபாய் நிதி திரட்டினோம். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, அதில் 19 பேர் நிரபராதி என விடுதலை செய்தோம். மீதமுள்ள ஏழுபேரில் 4 பேருக்கு சாவு தண்டனை. அதையும் நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்தோம் என்றால் யாரிடம் போய் பணம் கேட்போம். ரிலையன்சு அம்பானி போன்ற பெரும் முதலாளிகளிடமா பணம் கேட்டோம். இல்லை. அவர்கள் தரமாட்டார்கள். சாதாரண மக்களை நம்பிதான் நாங்கள் போனோம். 50, 100 என்று தான் பணம் வரும். எப்படி வந்தது என்று எனக்குத் தெரியும். இங்கேயே தினசரி மணி ஆர்டரில் 5000 வரை தினசரி பணம் வந்து குவியும். 50 ரூபாய் 100 ரூபாய் அதற்கு மேல் இல்லை. இப்படியே பணம் வந்து குவியும்.

மயிலாடுதுறையில் முச்சந்தியில் ஒரு கூட்டம் நடந்தது. அப்போது மேடையில் ஏறிய ஒரு கல்லூரி பேராசிரியரும், அவருடைய மனைவியும் கையில் உள்ள வளையலையும், மோதிரத்தையும் கழற்றி கொடுக்கிறார்கள். இதைப் பார்த்த ஒரு அம்மா அந்தக் கூட்டத்தில் பூவோ, பழமோ விற்பவர். அவர் தட்டுத் தடுமாறி மேடைக்கு வருகிறார். இவர் என்ன செய்யப் போகிறார் என்று நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவருடைய சுருக்குப் பையில் இருந்து கைநிறைய சில்லரையை எடுத்து தந்தார். 10 அல்லது 12 ரூபாய் இருக்கும். அவருடைய அன்றைய வருமானம். இப்படிக் கொடுக்கிற மனப்பான்மை இருந்தது. தமிழ் என்றால் என்னத் தெரியும். தமிழீழம் என்றால் அவருக்கு என்ன தெரியும். அன்றைக்கு நாங்கள் நாடிப்பிடித்துப் பார்த்ததில், தமிழ்நாட்டு மக்கள் நீருபூத்த நெருப்பாகத் தான் இருக்கிறார்கள். இந்த அடக்குமுறை சட்டத்தால் பயப்படுகிறார்கள். அதன்பிறகும் நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

தடா சட்டம்

அவர்கள் குற்றவியல் சட்டத்தை இந்த வழக்குக்கு பயன்படுத்தவில்லை. இந்த வழக்கை அவர்கள் தடாச் சட்டத்தில் பதிவு செய்து நடத்தினார்கள். இது ஒரு பயங்கரவாதம். ராஜூவின் கொலை ஒரு பயங்கரவாதம். ஆகவே, இவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள். எங்கள் வழக்கறிஞர் என்.நடராஜன் அவர்கள் தான் இது பயங்கரவாதமே அல்ல. ஏன் இல்லை என்பதற்கு நீதிமன்றத்தில் காரணம் சொன்னார். பயங்கரவாதம் என்றால் இந்தக் கொலை நடந்த உடனே அதன் விளைவாக நாடு முழுவதும் கொந்தளிப்பும், மோதல்களும் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால் எந்த இடத்திலேயும் ஒன்றுமே நடக்கவில்லை. எனவே, அவர்கள் தடாச்சட்டத்தில் வழக்குப் போட்டதே தவறு என்று கூறி நிரூபித்துத்தான் 19 பேரை விடுதலை செய்தார்.

இந்திராகாந்தி கொலை வழக்கு, மகாத்மாகாந்தி கொலை வழக்கு நீதிமன்றத்தில் வெளிப்படையாக நடைபெற்றது. யார் யார் என்ன சாட்சி சொல்கிறார்கள். குறுக்கு விசாரணையில் யார் யார் என்ன சொல்கிறார்கள் என்று அன்றாடம் பத்திரிகைகளில் செய்தி வந்தது. இவர்கள் வேண்டுமென்றே வெப்காமிரா மூலம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் இந்த கொலை வழக்கில் இவர்கள் எந்த பத்திரிக்கைக்காரரையும் யாரையும் உள்ளே விடவில்லை. இவ்வாறு மூடிமறைத்து இந்த வழக்கை எந்தெந்த வகையில் திசைத் திருப்ப வேண்டுமோ அப்படியெல்லாம் திசைத்திருப்பி செய்தார்கள்.

இந்திரா கொலை வழக்கு

இந்திராகாந்தி காலத்தில் சீக்கியர்கள் அவரைச் சுட்டுக் கொன்றார்கள். பதிலுக்கு கல வரங்கள் நடந்தது. ஆனாலும் இன்றைக்கு ஒரு சீக்கியரைப் பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். சீக்கியச் சமூகத்தையே தூக்கியா எறிந்து விட்டீர்கள்? மகாத்மா காந்தியைச் சுட்டது ஒரு பார்ப்பான் என்பதனால் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்களை எல்லாம் விரட்டியடித்து விட்டீர்களா? இராஜிவ் கொலை நடந்தது. அது ஒரு சம்பவம். வருத்தப்பட வேண்டிய விசயம் தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழனையே தூக்கி எறிவது எந்த வகையில் நியாயம்.

தமிழன் மேல் ஒரு வெறுப்பு இருக்கிறது. அதை இந்த வகையில் வெளிப்படுத்துகிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி எப்படி நடைபெற்றது என்றால் இந்தியாவின் ஜனாதிபதியாக ஜெயில்சிங் இருந்த போது தான் இந்திய இராணுவம் போய் பொற்கோவிலைத் தாக்கியது. இந்தியாவின் ஜனாதிபதியாக வெங்கடராமன் இருந்தபோது தான் ஈழத்துக்கு போய் தமிழர்களைச் சுட்டுக் கொன்றது. அன்றைக்கு இராணுவ தளபதியாக இருந்தவர் சுந்தர்ஜி. அவரும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். அப்போது பிரித்தாளும் சூழ்ச்சியை சிறப்பாக செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விடக்கூடாது. இப்பொழுது ஈழதமிழர்கள் மத்தியில் இவ்வளவு கொலைகளைச் செய்தவர்கள் கொடுமைகளை சீக்கியப் படையினர். பொற்கோவிலில் போய் தாக்கிய படை எதுவென்றால் மெட்டிராஸ் பெட்டாலியன். திட்டம் போட்டு அதை செய்திருக்கிறார்கள்.

தமிழீழ ஆட்சி முறை

புலிகள் ஆளுகின்ற பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல. எல்லா வகையான ஒழுக்கம், பொது கோட்பாடுகளும் வலுவாக இருக்கிறது. சாதி ஆதிக்கம் என்பது செலுத்த முடியாது. அங்கே யாரும் சாதியை இழிவுப்படுத்தும்படி பேசினாலும் உடனே தண்டனை. இது போன்ற சட்டம் அங்கே வைத்துள்ளனர். புலிகள் இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ள அனுமதி கொடுக்கும் போது பிரபாகரன் ஒரு திட்டம் வைத்தார். விதவைகள் மறுமணம் அல்லது கலப்பு திருமணம். இது இரண்டு தான். வேறு வழியே கிடையாது. புலிகள் வேறு திருமணம் செய்யவேக் கூடாது. இவரே அதை பின்பற்றியதால் புலிகளும் பின்பற்றுகிறார்கள். அதை மக்களும் பின்பற்றுகிறார்கள்.

ஊழல் மலிந்த ஆட்சி முறை

நம் நாட்டில் மேடையில் ஒன்று பேசுவது, வீட்டில் ஒன்று செய்வது, இப்படி இருக்கும் போது நாம் எப்படி மக்களுக்கு வழி காட்ட முடியும். நாம் முதலில் செய்து காட்டினால் தானே மக்கள் அதைப் பின்பற்றுவார்கள். எத்தனையோ செயல்கள் அப்படித் தான் இருக்கிறது. கையூட்டு வழக்கத்தை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முதலில் மேலே இருப்பவர்கள் வாங்குவதை நிறுத்தினால் தானே கீழே உள்ளவர்கள் செய்ய மாட்டார்கள். மேலே உள்ளவர்கள் வாங்குகிறார்கள். இதிலே ஒரு ஒளிவுமறைவு இல்லை. இவர்களுக்கு கீழே உள்ளவர்களையும் தடுக்க முடியாது. அங்கெல்லாம் இப்படி நடந்ததென்றால், உடனே தண்டனை. அல்லது சுட்டு விடுவார்கள். அதனால் அவர்கள் பயப்படுகிறார்கள்.

கட்சிகளுக்குள் கீழ்மட்டத்தில் வேற்றுமை இருக்கிறது என்பது உண்மை அல்ல. கழிவு(கமிசன்) பிரச்சனையில் எல்லாம் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். நான் கடலூர் சிறையில் பொடாவில் இருந்தபோது தி.மு.க.வினர் ஸ்டாலின் தலைமையில் 300, 400 பேர் ஏதோ ஒரு போராட்டம் நடத்தி உள்ளே வந்து 10 நாள் இருந்தனர். அப்போது எல்லோரும் வந்து என்னைச் சந்தித்துப் பேசுவார்கள். கடலூர் மாவட்டம் தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று, நான்குபேர் வந்து பேசினார்கள். நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள். அவர்களிடம், நான் என்ன தொழில் செய்கிறீர்கள் என்றுக் கேட்டேன். நாங்கள் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் என்றார்கள். நான் கூறினேன் ஆட்சி மாறிவிட்டதே? ஜெயலலிதா ஆட்சியில் எப்படி ஒப்பந்தம் கிடைக்கும் என்றேன். அதற்கு ஏன் கிடைக்காது கொடுக்க வேண்டிய கழிவை கொடுத்தால் கொடுக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியின் போது அ.தி.மு.க.வினருக்கு சில வேலைகளை நாங்கள் கொடுப்போம். அதைப் போலதான் அவர்களும் எங்களுக்குக் கொடுப்பார்கள். கட்சி ரீதியாக நாங்கள் சண்டைப் போட்டுக் கொள்வோம். ஆனால் தொழிலில் ஒற்றுமையாகத் தான் இருப்போம். அதுவேறு, இதுவேறு. இதிலாவது ஒற்றுமையாக இருக்கிறீர்களே என்று நான் சொன்னேன்.

மேலிருந்து கீழ்வரை மாநகராட்சியில் மட்டுமல்ல. அரசின் அனைத்துத் துறையிலும் இந்தக் கழிவு இருக்கிறது. கழிவில் வேண்டுமானால் விகிதாச்சாரம் மாறலாம். ஆனால் இப்படி பொதுமக்கள் சொத்தை சுரண்டி சூரையாடுபவர்கள் எத்தனைப்பேர். மொத்தம் எல்லாக்கட்சியிலும் சேர்த்து அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் இன்னும் எத்தனைப்பேர் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் மொத்த மக்கள் தொகையில் 5 விழுக்காடு தான் இருப்பார்கள். ஆனால் மீதம் 95 விழுக்காட்டினர் இதை பார்த்துக் கொண்டு நமக்கு வர வேண்டியதை எல்லாம் எடுத்துக் கொண்டு, ஒன்றும் இல்லாதவன் கூட மூன்று மாளிகைக் கட்டிடம் கட்டுகிறான் என்று எல்லாவற்றையும் பார்த்து மக்கள் கொதித்துப் போய் தான் இருக்கிறார்கள். மக்களுக்குத் தேவை என்ன தெரியுமா? அவர்கள் போராடத் தயார். அதை தலைமைத் தாங்கி நடத்தத் தெரிந்த ஒரு தலைவர் தான். அதனால் யாராவது ஒருவர் என் பின்னால் வாருங்கள். இரண்டில் ஒன்றுப் பார்த்துவிடு வோம் என்றால் எல்லோரும் அணிதிரள்வார்கள்.

சில இடங்களில் ஆற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. அது தொடர்ந்து நடைபெறுகிறது. எல்லோரும் செய்கிறார்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்கிற வேறுபாடு இல்லை. சில ஊர்களில் மக்கள் போராடும் போது ஊரே திரண்டு வந்து போராடுகிறார்களா? இல்லையா. இந்த போக்கை வளர்க்க வேண்டும். இப்போது நான் போகும் இடங்களில் எல்லாம் அதைத்தான் பேசுகிறேன். ஊழலை ஒழி, ஊழலை ஒழி என்றுக்கூறி ஒன்றும் ஆகப்போவது இல்லை. முதலில் உங்கள் ஊரில் ஒழியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று கூடி போராடுங்கள். இப்படி ஒவ்வொரு ஊராக எல்லோரும் போராடினால் ஊழல் ஒழியும். ஊழலை ஒழிப்பதற்கு எங்கேயோ இருந்து ஆட்கள் வர மாட்டார்கள். ஆங்காங்கே உள்ளதை அவரவரே தான் செய்ய வேண்டும். திரும்பத் திரும்ப அதைத்தான் கூறுகிறோம். சில இடங்களில் மக்கள் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள். மக்களை மிரட்டுவதற்காகவே அதிகாரிகளைப் படுகொலை செய்கிறார்கள். எதிர்க்கும் இருவரை கொலை செய்கிறார்கள். மக்களை மிரட்டுகிறார்கள். இதிலேயும் ஒன்று சேர்ந்துக் கொள்கிறார்கள். எல்லாம் ஒன்றுச் சேர்ந்து தான் செய்கிறார்கள். நான் என்ன கூறுகிறேன் என்றால், தினமணியில் கட்டுரை எழுதும்போது ஒரே கருத்தைத்தான் வலியுறுத்துகிறேன். ஜெயபிரகாஷ் வழி அதுதான். அதன் பிறகு அவர் அரசியலை விட்டு சர்வோதயத்துக்கு போய்விட்டார். அவர் சோசலிச இயக்கத்தை பின்பற்றி இருந்தால் நேருவுக்கு வாரிசாக வருபவர் என்று அவரை எல்லோரும் கருதினார்கள். அவர் ஒரு பெரிய தியாகச் சீலர். அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

ஊழலை ஒழிப்பதில் பீகாரில் மாணவர்கள் மட்டும் போராடிக் கொண்டு இருந்தார்கள். இவர் அங்குச் சென்றார். மாணவர்கள் எல்லாம் இவரிடம் கூறினார்கள். இது என்ன புதுமாதிரியாக இருக்கிறதே என்று எல்லா விபரங்களையும் கேட்டார். பிறகு அவர் தலைமைத்தாங்கி போராட்டம் நடத்தினார். பீகாரில் அந்த ஆட்சியை அவர் ஒழித்தார். அதுவரை ஒரு கட்சி கூட அவருக்கு ஆதரவாக வரவில்லை. ஜனசங்கம் வரவில்லை. ஸ்சுவாரன காங்கிரஸ் வரவில்லை. சோசலிச காங்கிரஸ் வரவில்லை. அவருக்கு உண்டானக் கட்சிக் கூட அவருக்கு வரவில்லை. இரண்டு மாநிலத்தில் ஆட்சியை அவர் வீழ்த்தினார். மேலும், இந்திராகாந்தியின் சர்வாதிகாரத்தை அவர் எதிர்த்துப் போராடும் போது எல்லாக் கட்சியும் அவர் பின்னால் சென்றது. அவர் இல்லை என்றால் அந்த இயக்கம் வெற்றிப் பெற்று இருக்காது. காரணம் அவரே ஒரு பெரிய தியாகச் சீலர். அதன் பின்னர் இந்திராக்காந்தியை வீழ்த்தியப் பிறகு, ஜனதாகட்சி என்று ஒன்றை உருவாக்கினார். எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். மீறமுடிய வில்லை எல்லோரும் ஒன்றானார்கள். இவரே பிரதமராகி இருக்கலாம் ஆனால் அவர் ஆகவில்லை. மொரார்ஜியை பிரதமர் ஆக்கினார். சந்திரசேகரை கட்சித்தலைவர் ஆக்கினார். பின்னர் அவர் இறந்தார்.

அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டைப் போட்டுக் கொண்டு ஒன்றும் இல்லாமல் போய்விட்டார்கள். ஜெய்பிரகாஷ் மக்களுக்கு தைரியம் ஊட்டினார். நீ போராட வேண்டும். அநீதியை எதிர்த்து போராடும் துணிவு வர வேண்டும். அப்போதுதான் சமுதாயம் நிலைத்து நிற்க முடியும் என்று அவர் கூறினார். அதை தான் நாம் செய்ய வேண்டும்.நானும் இங்குச் அதை செய்துகொண்டு இருக்கிறேன். எல்லா ஊர்களிலும் இதைச் செய்யுங்கள் என்று கூறுகிறேன்.

தேசியம் என்றால் என்ன?

தேசிய ஒருமைப்பாடு என்று பேசுவதே அடிப்படையில் தவறு. அனுபவப் பூர்வமாக அதை உணர்ந்தவன் நான். அதாவது சுதந்திர போராட்டக் காலத்தில் வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்று இயக்கங்கள் செயல்பட்டது. அன்றைக்கு எல்லோரும் ஒன்றுச் சேர்ந்தனர். இந்த ஒரு மாநிலம் தான் அதற்கு போராடியது என்று கூறமுடியாது. எல்லோரும் சேர்ந்து போராடியதின் விளைவு தானே விடுதலைக் கிடைத்தது. விடுதலை கிடைத்த பின்னர் வெள்ளையன் நம் நாட்டை ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்னர் அவனுக்குத் தெரியாது, இங்கு இவ்வளவு மொழி உள்ளது. தேசிய இனங்கள் இருக்கிறது என்பது. வந்தான், மொத்தமாகப் பிடித்தான். இந்தியா என்ற பெயரை முதலில் அவன் தான் வைத்தான். வேறு யாரும் இந்தப் பெயரை வைக்கவில்லை. இந்தியா என்று அவன் தான் சொன்னான். இந்திய தேசிய காங்கிரசை அவன்தான் அமைத்துக் கொடுத்தான். ஆகவே, இந்திய தேசியம் என்பது ஒருபோதும் உருவாக முடியாது என்பதை இவர்கள் உணரவில்லை. விடுதலைப் போராட்டத்தில் எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவதால் மட்டும் எல்லோரும் ஒன்று என்று பொருளாகி விடாது.

அவரவர்களுக்கு என்று தனி மொழி உள்ளது, பண்பாடு உள்ளது, தனிநாடு என்று எல்லாமே தனித்தனியாக இருக்கிறது. இப்படி இருக்கும் போது எல்லாவற்றையும் அழித்து ஒரே இனமாக ஆக்க முடியுமா? பலப்பேர் அதைச் செய்வதற்கு முயற்சி செய்து தோல்வி அடைந்திருக்கிறார்கள். மொழிவாரியாக மாநிலத்தைப் பிரித்தால் இந்தியா உடைந்து சிதறிவிடும் என்று நேரு, இந்தியாவை 5 மண்டலமாகப் பிரித்தார். கார்நாடகம், கேரளம், தமிழ்நாடு என்று மூன்றையும் சேர்த்து தட்ஷனாபிரதேஷ், பீகார், ஒரிஸா, அஸ்ஸாம் எல்லாவற்றையும் சேர்த்து கூர்வப்பிரதேஷ் இப்படி ஐந்தாக்க வேண்டும் என்று அவர் திட்டம் தீட்டினார். கடுமையான எதிர்ப்புக் கிளம்பி தேசம் முழுவதும் மொழிவாரி மாநிலப் போராட்டம் வெடித்தது. அப்போது நேருவால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கொடுக்க வேண்டியதாகிவிட்டது. கொடுத்து விட்டீர்கள் இல்லையா? தந்தை பிள்ளைகளுக்கு சொத்தைப் பிரித்து கொடுத்து விட்டு பெட்டி சாவியை மட்டும் கொடுக்க மாட்டேன் என்பது என்ன நியாயம். மொழிவழியாக மாநிலங்கள் கொடுத்து விட்டீர்கள். நீங்கள் அந்த அதிகாரத்தையும் கொடுங்கள்.

நீங்கள் அதிகாரம் மொத்தம் டெல்லியில் குவித்து வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்றால் அதனால்தான் போராடுகிறார்கள். அஸ்ஸாமில் போராட்டம், நாகலாந்தில் போராட்டம், மணிப்பூரில் போராட்டம், திரிபுராவில் போராட்டம், காஷ்மீரில் போராட்டம், பஞ்சாபில் போராட்டம் எல்லா இடத்திலேயும் போராட்டம் வெடிக்கக் காரணம் தனித்தனியாக மாநிலம் கொடுத்து விட்டனர். அவன் அவன் மொழியை, பண்பாட்டை வளர்க்க அவரவருக்கு என்று தனித் திட்டம் இருக்கும். கொடுக்க வேண்டிய அதிகாரத்தை கொடுக்காவிட்டால் என்ன ஆகும் என்றால், நான் இதை இன்று அனுபவப்பூர்வமாக பார்க்கிறேன். சோவியத்யூனியன் போன வழியில் இன்று இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதிகப்பட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் இது நீடிக்காது. சோவியத்யூனியனை ஒன்றுபடுத்த சில ஆற்றல்கள் இருந்தது.அது பொதுவுடமைச் சித்தாந்தத்தின் அடிப்படையில் அமைந்த நாடு. இரண்டாவது பொதுவுடமைச் சித்தாந்தத்தில் ஊறிதிளைத்த ராணுவம்செஞ்சேனை என்று அதற்கு பெயர். மூன்றாவது பொதுவுடமைச் சித்தாந்தத்தில் வேறு கருத்துக்கோ, கட்சிக்கோ இடம் கிடையாது. இந்த மூன்றில் ஒன்றாவது இந்தியாவில் இருக்கிறதா? ஒன்றுப்பட்ட சித்தாந்தம் உண்டா? எத்தனையோ சித்தாந்தம் இங்கே இருக்கிறது. நம்முடைய ராணுவம் என்ன சித்தாந்தத்தில் ஊறிதிளைத்த ராணுவமா? இல்லை. இந்த மூன்றில் ஒன்றுக்கூட இல்லை.

இங்கு மூன்றும் இருந்த சோவியத்யூனியன் நாடே 75 ஆண்டுகளுக்கு மேல் நிற்கவில்லை. உடைந்து சிதறிப்போய் விட்டது. இந்த மூன்றில் ஒன்று கூட இல்லாத இந்தியா என்ன ஆகும். நான் இப்போது கவலைப்படுவதெல்லாம் இந்தியா உடைந்து சிதறப்போவது என்பது நன்கு தெரியும். அந்த நேரத்தில் நம்முடைய தமிழ்நாட்டைக் காக்க என்ன செய்ய வேண்டுமோ, அந்தச் செயலைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

நன்றி
பழ.நெடுமாறன்