புதுடெல்லி: பெட்ரோல், டீசல், விலையை உயர்த்துவது பற்றி மத்திய அமைச்சரவை இன்று முடிவு எடுக்கிறது. சமையல் காஸ் விலை சிலிண்டருக்கு ரூ.25, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் மற்றும் கெரசின் விலை லிட்டருக்கு தலா ரூ. 1ம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் காஸ், கெரசின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. இறக்குமதி விலையை விட குறைவான விலைக்கு இந்த பொருட்கள் விற்கப்படுவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 46 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இதில் இருந்து மீளவேண்டுமானால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தை தங்களிடமே விட வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருகின்றன. இது தொடர்பாக ஆராய மத்திய அரசு அமைத்த கீர்த்தி பரிக் கமிட்டி, சமீபத்தில் தனது அறிக்கையை சமர்பித்தது. அதில், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் விட்டு விடலாம் என்றும் சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ. 100ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 6ம் விலைய உயர்த்தலாம் என்றும் பரிந்துரை செய்தது.
மத்திய ஐ.மு. கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள பல்வேறு கட்சிகள் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவற்றை சமாதானப்படுத்தும் முயற்சியில் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். , டெல்லியில் நேற்று மாலை சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது, மக்களை அதிகம் பாதிக்காத வகையில் விலையை உயர்த்தலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில், பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்துவது பற்றி விவாதிக்க டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அதில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4ம், சமையல் காஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 25ம், டீசல், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 1ம் உயர்த்த அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை உயர்த்த கூட்டணிக் கட்சிகள் பல இன்னும் சம்மதிக்கவில்லை. அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த் தினால், அத்தியவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறி வருகின்றன. எனவே, அமைச்சரவை கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் அதிகம் எதிர்ப்பு தெரிவித்தால் விலை உயர்வு அறிவிப்பு தள்ளி போகலாம். விலை நிர்ணய அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் விடுவது பற்றி அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.