தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கூத்தாடிகளின் முதல்வர்?

சன் தொலைக்காட்சி குடும்பச்சண்டையால் உருவான கலைஞர் தொலைக் காட்சியை அறிமுகப்படுத்தும்போது "தமிழை வளர்க்கவும் தமிழ் கலாச்சாரம் மேம்படவும் கலைஞர் தொலைக்காட்சி செயல்படும்" என்று பேசினார். மானாட மயிலாட என்ற தனித் தமிழ்ப் பெயருடன் சினிமா பின்னணியுடன் தமிழ் கலாச்சாரத்தைக் அசுத்தப்படுத்தியதில் கலைஞர் தொலைக்காட்சியே முன்னோடி!

சில மாதங்களுக்கு முன் தமிழகத்தை திரைப்படத் தயாரிப்புக்கான சொர்க்க பூமியாக மாற்றப்போவதாக அறிவித்தார். ஏற்கனவே தமிழ் பெயர் கொண்ட  'தமிழ்  திரைப்படங்களுக்கு'  வரிச்சலுகை என பகுத்தறிவுப்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில் ஜக்குபாய் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் முன்பே இணைய தளங்களில் வெளியானபோது துடிதுடித்து சைபர் குற்றங்களின் அடிப்படையில் ஓரிரு நாட்களிலேயே சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்து மாபெரும் அழிவிலிருந்து(?) தமிழ் திரைப்பட எதிர்காலத்தைக் காத்தார்.

திருட்டு விசிடி விற்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டமியற்றி சாதனை படைத்துள்ளார். காப்புரிமை மீறல் என்ற வகையில் திருட்டு விசிடிக்கான தண்டனை சரியே என்றாலும் அனைத்து வகையான உரிமை மீறல்களுக்கும் சமமான தண்டனைகளை, திருடர்களைப் பிடிப்பதில் காட்டும் ஆர்வமும் இருக்க வேண்டும். ஒருபக்கம் வரிச்சலுகை இன்னொரு பக்கம் வரி ஏய்ப்பு! நாட்டிலேயே அதிக வரிபாக்கி வைத்திருப்பவர்களில் சினிமா நடிகர்களைவிட யாரும் உண்டா?

சினிமா நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கருணாநிதிக்கு கடந்த வாரம் மேலும் ஒரு பாராட்டு விழா! எதற்காகப் பாராட்டு  என்றால் தமிழ்த் திரை உலகுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிய முதலமைச்சர் கருணாநிதி, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகுக்கும் பையனூர் அருகே குடியிருக்க இடம் வழங்கியிருக்கிறார். இதற்காக, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் திரண்டு நன்றி பாராட்டும் விழாவினை சிறப்பாக நடத்தியது.

வீடில்லாதவர்களுக்கு இலவச மனைத்திட்டத்திற்குப் போதிய அரசு நிலங்கள் இல்லாத சூழலில் கூத்தாடிகளுக்கு குடியிருப்பு வீடுகளுக்கு நிலம் ஒதுக்கி இருப்பது எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பதுபோல் உள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரம், விலைவாசி உயர்வு, சேதுக்கால்வாய் எனப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தனக்குத்தானே விருது வழங்கியும் தன்னைப் புகழ்பவர்களுக்கு சலுகைகள் வழங்கியும் காலத்தைக் கடத்தாமல் முதல்வர் கருணாநிதி அவர்கள் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் முதல்வர் கருணாநிதி அவர்கள் கூத்தாடிகளின் முதல்வராகவே வரலாற்றில் அறியப்படுவார்.


ஆக்கம் : ஜமால், துபை