""நான் நம்பும் கடவுள் இயற்கைதான். இயற்கையைவிட இந்த உலகில் உன்னதமானது வேறு எதுவும் கிடையாது. "ஒருவன் இயற்கையின் உன்னதத்தை உணர்ந்து, அந்த இயற்கையின் போக்கோடு தன் வாழ்வின் போக்கையும் இணைத்துக் கொள்ளும் நேரம் எதுவோ, அதுதான் அவன் கடவுளை உணரும் நேரம்' என்று பல்வேறு மதங்களும் குறிப்பிடுகின்றன.இத் தகைய மனநிலையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம், வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டு 4 பெண்கள் வந்தனர். அது 2008 டிசம்பர் மாதம். "கிரீன் பீஸ்' என்ற அமைப்பிலிருந்து வந்திருப்பதாகவும், மரபணு மாற்று உணவுகளின் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மர பணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் என்பதை அப்போதுதான் நான் புதிதாக கேள்விப்பட்டேன். அது குறித்த விவரங்களை அறிவதில் எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது.ஆனால் அவர்கள் தெரிவித்த விவரங்கள் என்னை அதிர்ச்சியடையச் செய்தன. நான் நிலைகுலைந்து போனேன்.மர பணு மாற்று பயிர் வகைகளை பயிரிடுவதால், அதே வகையைச் சேர்ந்த மற்ற ஆயிரக்கணக்கான பாரம்பரிய பயிர்கள் அழிந்து போகும்; மரபணு மாற்று உணவுகளை உண்பதால் மனிதர்களுக்கு பலவகை ஒவ்வாமை நோய்கள், காரணம் புரியாத பல புதுப்புது நோய்கள் வரும்; வயலில் உள்ள மண் மலடு ஆவதோடு, மனிதர்களுக்கும் மலட்டுத் தன்மை அதிகரிக்கும் என பல பாதிப்புகளை அவர்கள் விளக்கினர்.இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இயற்கையின் இனிமையான சுழற்சியை அறுத்துப் போடும் முயற்சி இது எனப் புரிந்து கொண்டேன்.இதனால் யாருக்கு லாபம் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் ஒரு நுகர்வோர்; ஒரு தாய்; நாட்டின் குடிமகன் என்ற முறையில், எனக்கும், என் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் ஒன்றை, "வேண்டாம்' என்று மறுக்கும் உரிமை எனக்கு உண்டு. எனக்கு வேண்டாம் என்று மனதில் பட்டதை மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே, என்னையும் இந்தப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டேன்.கிரீன் பீஸ், பூவுலகின் நண்பர்கள், ரீஸ்டோர், இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு, பசுமை இயக்கம், விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு போன்ற பல அமைப்புகள் இணைந்து "பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு' என்ற அமைப்பை உருவாக்கினோம்.இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காயை இந்தியச் சந்தையில் நுழைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான பயிர் வகைகளை அழிக்கக் கூடிய பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என நாங்கள் போராடி வருகிறோம்.தமி ழகத்தில் முதல்வர் கருணாநிதியுடனான எங்கள் சந்திப்பு, அதனைத் தொடர்ந்து இப்போதைய நிலையில் இங்கு மரபணு மாற்று உணவுகளை விளைவிக்கவோ, விற்கவோ கூடாது என்ற முதல்வரின் உத்தரவு, பி.டி. கத்தரிக்காய் தொடர்பாக நடைபெற்று வரும் கருத்து கேட்பு நிகழ்ச்சிகள், எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் அதிகரித்து வரும் விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் முதலானவை எங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன.ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஓர் அரசியல் இருக்கும். இந்தியாவின் பன்மய சுற்றுச்சூழலை, நம் மக்களை, நம் மண்ணை அழிக்கக் கூடிய மரபணு மாற்று உணவுகளை அனுமதிக்கக் கூடாது. இதுதான் எனது வாழ்க்கை அரசியல்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட எந்த உணவையும் இங்கு அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசு அறிவிக்கும் வரை எமது போராட்டம் தொடரும். அப்போராட்டம் காந்திய வழியில், அமைதியாக, ஆனால் உறுதியானதாக இருக்கும்'' .
நன்றி
ரோகிணி
தினமணி
ரோகிணி
தினமணி