தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

குறிவைக்கப்பட்டுள்ள இன்னுமொரு லசந்த!

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன், இரவில் தனது வீடு நோக்கி வந்த பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுள்ளார். வீட்டினருகே நிறுத்தப்பட்டிருந்த இலக்கத் தகடற்ற வெள்ளை நிற வேன் ஒன்று அவரைக் கொண்டு போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரகீத் எக்னெலிகொட பற்றித் தெரிந்து கொண்டீர்களானால் அவரது கடத்தலுக்கான காரணம் என்னவென உங்களுக்கு நான் சொல்லாமலேயே இலகுவாகப் புரியும். ஏற்கெனவே தர்மரத்தினம் சிவராம், லசந்த விக்ரமதுங்க மற்றும் பல ஊடகவியலாளர்களது விதி தீர்மானிக்கப்பட்டது எதனாலென நீங்கள் அறிவீர்கள்.

பிரகீத் எக்னெலிகொட - இரு குழந்தைகளின் தந்தையான இவர் இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவராக, 'லங்கா ஈ நியூஸ்' வலைத்தளத்தில் அரசியல் கட்டுரைகளை எழுதி வருபவர். நாட்டின் மிக நெருக்கடியான சூழ்நிலைகளின் போதும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பகிரங்கமாக பல நூறு கட்டுரைகளும் குறிப்புக்களும் எழுதியதால், தைரியமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரராகவும், வெளிப்படையான எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவர் இறுதியாக எழுதிய கட்டுரையானது வெளியாகிய இரு மணித்தியாலங்களுக்குள் உலகம் முழுவதிலிருந்தும் கிட்டத்தட்ட ஏழாயிரம் வாசகர்களால் வாசிக்கப்பட்டுள்ளது எனில் இவரது எழுத்துக்களின் காத்திரத்தன்மை உங்களுக்குப் புரியும்.

இலங்கையிலிருந்து வெளிவரும் 'சியரட' பத்திரிகையின் ஆசிரியராக சில காலம் பணியாற்றிய இவரை இதற்கு சில மாதங்களுக்கு முன்பும் ஒரு முறை வெள்ளை வேனில் கடத்தி, இரும்புக் கொக்கியொன்றில் சங்கிலியால் கட்டி விசாரித்துப் பின் நடுவீதியில் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். இவர் சமீபத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளராகப் போட்டியிட்ட சரத் பொன்சேகா பற்றிய குறிப்புக்களோடு வெளியான 'Secrets of winning a War’ எனும் ஆவணப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இலங்கையில் 'ஹோமாகம' எனும் பகுதியில் வசிக்கும் இவர் 'காணாமல் போயுள்ளமை' குறித்து இவரது மனைவி சந்தியாவால் முன்வைக்கப்பட்ட முறையீட்டை ஹோமாகம போலிஸ் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது. சந்தியா, வெலிக்கட மற்றும் தலங்கம ஆகிய பகுதிகளிலிருக்கும் போலிஸ் நிலையங்களுக்கும் ஏறி இறங்கியிருக்கிறார்.

இது நடந்து இரு தினங்களின் பின்னர் இவர் பணியாற்றிய 'லங்கா ஈ நியூஸ்' வலைத்தளம் இடைநிறுத்தப்பட்டது. இந்த மாதம் ‌பிப்ரவரி முதலாம் திகதி இதன் ஆசிரியர் சந்தன சிரிமல்வத்த அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அத்தோடு இரகசியப் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளில் ஒருவரான கே.பி, அதாவது குமாரன் பத்மநாதன் தொடர்பான இரகசிய விசாரணைகளைப் பகிரங்கப்படுத்தி, அவ்விசாரணைகளுக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில், 'லங்கா' எனும் பெயரில் வெளியாகும் ஞாயிறு வார இதழ் தடுத்து நிறுத்தப்பட்டதோடு அதன் அலுவலகமும் அரசால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, தேர்தல் முடிவுகள் வெளியானதன் பிற்பாடு ஜனவரி 28 ஆம் திகதி காலை இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரவி அபேவிக்ரமவை தங்கள் அறைக்குள் அழைத்து சென்ற தலைவர்கள் ஆரியரத்ன எத்துகல மற்றும் தேவப்ரிய அபேசிங்க ஆகியோர் சோமபால எனும் தமது சாரதியைக் கொண்டு மிகவும் கொடூரமாக கைகளாலும், கால்களாலும் தாக்கியதாக அங்கு பணிபுரிபவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தேர்தல் காலத்தின் போது பிபிசியின் இலங்கை பெண் ஊடகவியலாளரான தக்ஷிலா தில்ருக்ஷி ஜயசேனவும் தாக்கப்பட்டு அவரது பதிவுபகரணங்களும் திருடப்பட்டன.

இலங்கையில், ஊடகத்துறையில் நேர்மையாகப் பணியாற்றுபவர்களின் நிலைமை இவ்வாறுதான் இருக்கிறது. பேனாவையோ, கேமராக்களையோ, விரல்களையோ அநீதிகளுக்கெதிராக உயர்த்தும் வேளை அவர்களது தலைவிதிகளும் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. கடத்தப்படுவதும், காணாமல் போவதும், வதைக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதுமென பல இம்சைகள் இவர்களைத் தொடர்கின்றனவால், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்பவர்களைப் போல உயிருக்கு உத்தரவாதமின்றித்தான் இவர்கள் நடமாட வேண்டியிருக்கிறது. ஊடகவியலாளர்களை நண்பர்களாகக் கொள்ளவும் மக்கள் அஞ்சுகிறார்கள்.

லசந்த படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் கழிந்த பிற்பாடும் அவரைக் கொலை செய்தவர்கள் யாரெனக் கண்டுபிடிப்பது அரசுக்கு இன்னும் சிரமமாக இருக்கிறது. அதுவும் பட்டப்பகலில், நடுவீதியில் வைத்து கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். கொலையாளிகள் இன்னும் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருக்கக் கூடும். அவர்களது அடுத்த இலக்கு தைரியமாக அநீதிகளை வெளிப்படுத்தும் இன்னுமொரு ஊடகவியலாளராக இருக்கலாம்.

இலங்கையில் மனித உரிமை எனப்படுவது மக்களாலோ, ஊடகங்களாலோ கேள்விக்குட்படுத்தப்படவும் உரிமை கோரவும் முடியாத ஒன்றாக இருக்கிறது. சர்வதேச வலைத்தளங்களான ஃபேஸ் புக், ட்விட்டர் மற்றும் தனிப்பட்ட வலைப்பூக்கள் போன்றவற்றில் இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையைப் பொறுத்தவரையில் நேர்மையான ஒரு ஊடகவியலாளர் உயிருடன் இருக்கவேண்டுமானால், அந்த மூன்று குரங்குகளைப் போல அநீதிகளைப் பார்க்காமல் கண்ணை மூடிக் கொண்டு, மக்களின் குறைகளைக் கேட்காமல் காதைப் பொத்திக் கொண்டு, அநீதிகளையும், மக்களது பிரச்சினைகளையும் பற்றிப் பேசாமல் (எழுதாமல்) வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருப்பதே உசிதம். எனினும் புதிது புதிதாக லசந்தகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள் எழுத்திலும், இறப்பிலும் ஒன்றுபோலவே!