தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சனல் 4 தொலைக்காட்சியை முடக்க இலங்கை அரசு சதி: அதிர்சித்தகவல்

கடந்த வருடம் பிரித்தானியத் தொலைக்காட்சி சனல் 4 ஒளிபரப்பிய இலங்கை இராணுவத்தின் படுகொலைக் காட்சிகளின் பின்னர், அது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்துத் தொலைக்காட்சிகளையும் கட்டுப்படுத்தும் அல்லது நெறிப்படுத்தும் ஸ்தாபனமாக விளங்கும் ஓப்காம்(OFCOM) நிறுவனத்திடம் இலங்கை பல பாரதூரமான முறைப்படுகளை மேற்கொண்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. எந்தக் காட்சிகளை மக்கள் பார்க்கலாம் அவை பயங்கரவாதத்தை துண்டுகின்றனவா என்பது போன்ற ஒளிபரப்புக்களை நெறிப்படுத்தும், ஓப்கொம் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் நினைத்தால் ஒரு தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரத்தை ரத்துச்செய்து அதனை மூட முடியும்.

இப்படியான இலங்கை அரசின் முறைப்பாட்டின் பேரிலேயே TRT, TNT, TTN போன்ற தொலைக்காட்சிகள் கடந்தகாலங்களில் மூடப்பட்டன. இதே நடவடிக்கையை தற்போது இலங்கை அரசு சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக ஆரம்பித்துள்ளது. பிரிட்டனிலுள்ள ஊடகச் சுதந்திரத்தை முடக்க அங்குள்ள சட்டம் ஒருபோதும் முயற்சி செய்யமாட்டாது என்பதால் பிரிட்டனின் அவதூறு சட்டங்களைக் கடந்து நேரடியாக ஓப்காமைப் பயன்படுத்தி சனல் 4 இன் ஒளிபரப்பை நிறுத்துவதற்கு இலங்கை அரசு முயற்சிப்பதாக அதிர்வு இணையத்துக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த வருடம் சனல் 4 ஒளிபரப்பிய வீடியோவில் 9 இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கட்டப்பட்டு இருந்ததையும், அதில் இருவர் சுடப்பட்டுக் கொல்லப்பட்டதையும், இந்த பாதகச் செயலைச் செய்தவர்கள் இலங்கை ராணுவச் சீருடையில் இருந்ததையும் கண்ட உலகம் ஆடிப்போயுள்ளது. ஆனால் அந்த வீடியோ ஒளிபரப்பபட்ட உடனுமே இலங்கைத் தூதரகம் அந்த வீடியோ உண்மை அல்ல என மறுப்பும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து அவசரம் அவசரமாக இரு வாரங்களின் பின்னர் கொழும்பு நகரில் ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டிய இலங்கை அந்த வீடியோவைத் தாம் அராய்ந்து பார்த்து விட்டதாகவும் அது ஒரு போலியான வீடியோ எனவும் தெரிவித்தது. அதோடு சனல் 4 இன் லண்டன் தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஒரு எதிர்ப்புப் போராட்டத்தையும் நடத்தியது. இதையடுத்து, பிரிட்டனில் தனது இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஓப்காமில் தொடரான முறைப்பாடுகளைப் பதிவு செய்தது, ஒன்று அந்த வீடியோவின் துல்லியத்தன்மை மற்றும் சீரற்றதன்மைக்கு, இன்னொன்று நியாயம் மற்றும் தனியுரிமை ஆகியன தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே சனல் 4 க்கு எதிராக ஊடக நெறிப்படுத்துனரைப் பயன்படுத்தி இலங்கை அரசு போராட்டம் நடத்தியது. ஆனால் இலங்கையின் பகுப்பாய்வைச் செல்லாததாக்கி மேற்படி வீடியோவானது உண்மையானது என்று ஐக்கிய நாடுகள் தமது அறிக்கையைச் சமர்ப்பித்ததும் சனல் 4 க்கு எதிரான நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன. இருந்தும் ஐ.நா இன் அறிக்கை வெளியிடப்பட்ட அன்று மாலையே இலங்கையரசு தனது முறைப்பாடுகளை(OFCOM) ஓப்காமிடம் கூறியுள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

வழமையாகவே தமது நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்து வரும் இலங்கை அரசானது, இப்போது மேற்படி வீடியோ குறித்த புலனாய்வில் சனல் 4 தொலைக்காட்சி இறங்கக்கூடாது என்று மட்டும் கட்டுப்பாடு விதிக்க முயற்சி செய்யாமல், இலங்கையைப் பற்றிய செய்திகளையே முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்வு அறிந்துள்ளது. இலங்கை அரசு தனது அரசியல் லாபத்துக்காக நெறிப்படுத்துகை நடவடிக்கைகளை தன்னகப்படுத்திவருவதன் ஆபத்துக்கள் குறித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகின்றது.

இப்போது இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகள் குறித்த சர்வதேச வரிசையின் முக்கிய இடத்தில் ஓப்காம் உள்ளது. இலங்கை அரசின் முறைப்பாடுகள் கிடைக்க முன்னர் இவ்விடயத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனவே பிரிட்டனின் அரசியல் விவாதங்களை நிறுத்துவதற்கு மட்டுமல்லாமல் சர்வதேச முக்கிய நெருக்கடிகளுக்குள் ஓப்காமும் இழுக்கப்படுவதைத் தடுப்பதற்காக, வெளிநாடுகள் ஓப்காமின் முறைப்பாட்டு நடவடிக்கைகளை அணுகுவதற்கு தெளிவான சட்டங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்பது எங்கள் கருத்தாகும்.

சட்டதிட்டங்கள் இப்போது இல்லாத நிலையில், எந்த மாதிரியான முறைப்பாடுகள் இடப்படலாம் என்பதில் பிரிட்டன் பாராளுமன்றம் மட்டுமே மாற்றம் கொண்டு வர முடியும். அதோடு ஓப்காம் என்னும் உள்நாட்டு முறைப்பாடு நடவடிக்கைகளில் வெளிநாடு ஒன்று தனது சுய லாபத்துக்காக முறைப்பாடு செய்வதைத் தடுக்க முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு முறைப்பாடு செய்ய அனுமதி அளிக்கப்படும் வெளிநாடுகளின் வரிசையில் இலங்கைதான் கடைசி நாடு என்பதை ஓப்காம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிர்வு விருப்பப்படுகிறது.

பிரித்தானியாவில் இயங்கும் அரசியல் கட்சிகளான, லேபர் கட்சி, கான்சவேட்டிவ், மற்றும் லிபரல் டெமொகிராட் கட்சிகளில் முக்கிய பதவிகளில் இருக்கும் தமிழர்கள் இது தொடர்பாக பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற முயல்வது நல்லது. இதன் மூலம் நாம் எமது தமிழ் தொலைக்காட்சிகளை பிற்காலத்தில் இவ்வாறான இலங்கை அரசின் அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கமுடியும்.

நன்றி
அதிர்வு