தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பத்தினி சாபத்தால் பரிதவிக்கும் கிராமம் ?

மனைவக்கு கணவன் இல்லை...
கணவருக்கு மனைவி இல்லை!
பத்தினி சாபத்தால் பரிதவிக்கும் கிராமம்



பத்தினி சாபம் பற்றி பல கதைகள் படித்திருக்கிறோம். ஆனால்... அப்படி ஒரு பத்தினியின் சாபத்தை அணு அணுவாக அனுபவித்துக் கொண்டிருக்கிறது(!) ஒரு கிராமம். ஆமாம்... விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிக்கு அருகே இருக்கிறது அக்கராபாளையம். இந்த கிராமத்தினரின் தொழில் விவசாயம், பிறகு பயப்படுதல், இந்த இரண்டும்தான். மலை சூழ்ந்த ரம்மியமான இந்த அக்கராபாளையத்தை சூனியமும் சூழ்ந்திருப்பதாகவே நம்புகிறார்கள் இந்த கிராமத்து மக்கள்.

எல்லையில் இருந்த சாம்பரப்பன் கோயிலைத் தாண்டி ஊருக்குள் நாம் நடந்தபோது, அந்த சூனியம் அப்பட்டமாகத் தெரிந்தது. வீதிகளில் நடந்த எந்தப் பெண்ணும் பூ முடிந்திருக்கவில்லை, பொட்டு வைத்திருக்கவில்லை. பெரும்பாலான பெண்களின் கழுத்துக்கள் தாலி இல்லாமல் காலியாகவே இருந்தது. பெண்கள் இப்படி-யென்றால், ஆண்களோ எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரி உலா வந்தார்கள்.

ஏன் இந்த ஊரில் இப்படி? அந்த வழியாக வந்த சண்முகத்-திடம் கேட்டோம்.

‘‘நம்பினா நம்புங்க. நம்பாட்டி போங்க. எங்க ஊர்ல எந்தக் குடும்பத்-துலயும் குடும்பத் தலைவனாக இருக்குற ஆணோ, குடும்பத் தலைவியான பெண்ணோ உசிரோட இருக்கறதில்லை. அதனாலதான் பல பொண்ணுங்க தாலியில்லாமயும், பல ஆளுங்க பொண்டாட்டி இல்லாமயும் திரியுறாங்க. என்னையே எடுத்துக்குங்களேன்... இதே ஊர்ல அலமேலுவை பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணினேன். சிவரஞ்சனி, பிரியதர்ஷினின்னு ரெண்டு குழந்தைங்களோட சந்தோஷமாத்தான் இருந்தோம். எனக்கும் என் பொஞ்சாதிக்கும் சின்ன உரசல் கூட வந்ததில்ல.

ஒருநாள் வயலுக்குப் போயிருந்த அலமேலுவை பாம்பு கடிச்சு அவ இறந்துட்டா. இது எப்படியும் நடக்கும்... முதல்ல சாகப்போறது நானா அவளான்னு பயந்துக்கிட்டிருந்தோம். அந்தப் பத்தினியோட சாபம் என் பொஞ்சாதியைக் கொண்டுபோயிடுச்சு. எங்க குடும்பத்துல இதுவரை ஏழு தலைமுறையா வீட்டுல குடும்பத் தலைவனோ, தலைவியோ அகாலத்துல இறந்துபோறது தொடர்ந்து நடக்குது. எங்க குடும்பம் மட்டுமில்ல, ஊர்ல எல்லா குடும்பத்துக்கும் இதான் கதி’’ என்றவர் மேற்கொண்டு நாம் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்று-விட்டார்.

பக்கத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கொடை-யனிடம் பேசினோம்.

‘‘எங்க அப்பாவும், அம்மாவும் நான் சின்ன-பிள்ளையா இருக்கும்போதே இறந்துட்டாங்க. என் கூடப் பிறந்த தம்பி கல்யாணமான ஒரு வருசத்துக்குள்ளயே செத்துப்போயிட்டான். பாவம் அவன் பொண்டாட்டி வீட்லேயே முடங்கிக் கிடக்குது. இந்த சாபக் கேடு எங்க ஊர்க்காரங்களோட முடியறதில்லைங்க. இந்த ஊர்ல பெண்ணெடுக்குற ஆம்பளைங்களும் சில மாசத்துல இறந்துடறாங்க’’ என்றவர்... ‘‘அது பெரிய சாபக் கதைங்க’’ என்றபடியே தொடர்ந்தார்.

‘‘எங்கள் ஊரில் தகடியான் தலைக்கட்டு, முகலான் தலைக்கட்டு, மண்ணுபாடியான் தலைக்கட்டு, தரைப் பாண்டியான் தலைக்கட்டு... இப்படி மொத்தம் நாலு கொத்து தலைக்கட்டு குடும்பங்கள் இருக்கோம். எங்க முன்னோர்கள்ல ஒருசிலரு மேளம் அடிக்கிற தொழில் செய்தவங்க. ஒரு நாள் கல்வராயன் மலைப் பக்கம் உள்ள அருந்ததி குடும்பத்துல ஒருத்தர் சாவுக்கு மேளம் அடிக்கப் போயிருக்காங்க. போனவங்கள்ல ஒருத்தருக்கு அங்க உள்ள அருந்ததி பொண்ணு ஒருத்தியோட பழக்கமாகியிருக்கு.

காலப்போக்குல ரெண்டுபேரும் வயக்காட்ல ஒதுங்க, அந்த அருந்ததிப் பொண்ணு மாச-மாயிடுச்சு. விசயம் அவங்க வீட்டுக்கு தெரிஞ் சதும் சாதிசனத்தோட எங்க ஊருக்கு வந்து நியாயம் கேட்டிருக்காங்க. ஆனா எங்க ஊர் நாட்டாமைகளோ, ‘எங்க பசங்க எந்தத் தப்பும் செய்யமாட்டாங்க. வேற யாருக்கிட்டயோ பழகிட்டு இங்க வந்து பிராது பண்றீங்களா?’ன்னு கேட்டு அடிச்சு விரட்டிட்டாங்களாம். இந்த அவமானம் தாங்காம அந்தப் பொண்ணோட அப்பா - அம்மா விஷத்தைக் குடிச்சுட்டு செத்துட்டாங்க. பாவம் அந்த புள்ளத்தாச்சிப் பொண்ணு புத்தி பேதலிச்சுப் போயி கல்வராயன் மலையில போய் ஒளிஞ்சுருக்கு.

அப்பவும் எங்க ஊர் பாவிக சும்மா விடலய்யா... அந்த ஆறு மாசப் புள்ளதாச்சிய தேடிக்கிட்டு கல்வராயன் மலைக்குப் போனாங்க. அங்க உள்ள பீசாகத்தி ஆத்தங்-கரையில நின்ன அவளைப் புடிச்சு அடிச்சிருக்காங்க. தாரைத் தாரையா அழுத அந்த அருந்ததிப் பொண்ணு... ‘உங்க ஊர்க் காரனுக்குத்தான் நான் முந்திவிரிச்சேன். என் பாவம் உங்களை சும்மா விடாதுடா... உங்க பரம்பரைக்கே ஆண் அடிச்சுப் போகும், பெண் பொய்யாப் போகும்டா’னு சாபம் விட்டிருக்கு. இதைக் கேட்டு இன்னும் அதிகமா கோவப்பட்டு அந்த அருந்ததிப் பொண்ணை புள்ளதாச்சின்னும் பாக்காம கண்டம்துண்டமா வெட்டி ஆத்தங்கரையில புதைச்சிட்டாங்களாம். அந்த பத்தினி சாபம்தான்யா எங்களை இப்படித் துரத்துது...’’ என திகில் கதையைச் சொல்லி முடித்தார் கொடையன். மேற்கண்ட நான்கு கொத்தில் பிறந்தவர்கள்தான் ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தன், அழகுப்பிள்ளை, அயர்சிங்கம், கோவிந்தராஜலு ஆகியோர். இவர்களில் அதிக பாதிப்பு அழகுப்பிள்ளைக்குத்தானாம். அவரும் அவரது முதல் மனைவியும் இறந்துவிட்ட நிலையில் இரண்டாவது மனைவி பார்வதி நம்மிடம் பேசினார்.

‘‘எனக்கு மூன்று பெண் குழந்தைகள். இரண்டு ஆண் குழந்தைகள். சந்திராணி, கல்யாணி, நேர்பார்வதி ஆகிய மூன்று பேருக்கும் திருமணம் நடைபெற்றது. முதல் பெண்ணின் கணவர் அரசு பேருந்தில் டிரைவராக வேலை செய்தார். அவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதன் பிறகு திருமணம் நடைபெற்ற இரண்டு பெண்களது கணவர்களும் இறந்துவிட்டார்கள். இரண்டு மகன்கள் மட்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை’’ என்று அழுதபடியே கூறினார் பார்வதி.

வினோத விபரீதம் குறித்து அக்கராபளையத்தில் உள்ள சாம்பரப்பன் கோயில் பூசாரியான செல்லப்-பாண்டியனிடம் கேட்டோம். ‘‘எனது தந்தை இறந்ததற்கு பிறகு இந்தப் பணியை நான் செய்து வருகிறேன். மேற்கண்ட நான்கு கொத்தில் என் குடும்பக் கொத்தும் ஒன்று. எங்கள் ஊரிலிருந்து வெளியூர் சென்று வேலை செய்தாலும் எங்கள் ஊர் சாபம் சும்மா விடாது, எங்களுக்கு வாழ வழியில்லை, நிம்மதி இல்லை. எழவு மேளச் சத்தம் கேட்காத நாளே கிடையாது. இந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக சாம்பரப்பன் சுவாமியின் பூர்வீகக் கோயிலான திருக்கோவிலூர் வட்டம் கீழத்தாழனூரில் உள்ள அய்யனாரப்பன் கோயில் சென்று பூஜை செய்யவேண்டும் என்றும் ஒரு நம்பிக்கை இருக்கிறது’’ என்று சொன்னார் பூசாரி.

நடப்பது எல்லாவற்றுக்கும் அந்த அருந்ததி பெண்ணின் சாபம்--தான் காரணமோ இல்லையோ... பெண் பாவத்தின் விளைவை மர்மத்தோடு பறைசாற்றுகிறது திகில் படிந்து கிடக்கும் அக்கராப்பாளையம்!

எஸ்.செல்வராஜ்