தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. நீதிமன்றங்களில் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. வெட்டவெளிச்சமாக நடக்கும் மணல் கொள்ளை பற்றி சட்டமன்றத்தில்கூட எதிர்க்கட்சியினர் முறையிட்டுள்ளனர். மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த பல அரசு ஊழியர்களும் சமூக ஆர்வலர்களும் உயிரையே இழந்துள்ளனர். இவ்வளவுக்குப் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இப்போது தாமிரபரணி மற்றும் பாலாற்றில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கு மட்டும் தடைவிதிக்கிறது, தமிழக அரசு.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு, அப்படியே காற்றில் கரைந்து விட்டது. இப்போதும்கூட, மணல் கொள்ளை அறவே தடுக்கப்படும் என்று அரசு அறிவிக்கவில்லை. இயந்திரங்களை வைத்து மணல் அள்ளுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்து. இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லையே தவிர, கூடுதலாகக் கூலித் தொழிலாளர்களை இறக்கிவிட்டு இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணி, பாலாறு மட்டுமின்றி, காவிரி, பவானி, அமராவதி முதலான ஆறுகளிலும் மணல் அள்ளத் தடை விதித்துக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசு எதுவும் செய்யவில்லை. வாணியம்பாடியிலிருந்து கழிமுகப்பகுதி வரை மணல் அள்ளப்பட்டதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதோடு, தோல் தொழிற்சாலைகளின் நச்சுக்கழிவுக் குட்டையாக மாறி, தமிழகத்தின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஆறாக மாறிவிட்டது, பாலாறு.
தாமிரபரணியில் ஆறு மாதத்துக்கு 54,417 யூனிட் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டு, 35 நாட்களிலேயே 65,000 யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. ஒரு யூனிட் என்பது 100 கன அடி மணல். ஒரு லாரியில் விதிப்படி ஒன்று முதல் ஒன்றரை யூனிட் வரை மணல் ஏற்றப்பட்டுள்ளதாகக் கணக்கு காட்டித் தொகையைச் செலுத்திவிட்டு, அரசு அதிகாரிகள் – போலீசின் துணையோடு அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி, மாஃபியாக்கள் கொழிக்கிறார்கள். தாமிரபரணியில் ஆய்வு நடத்திய குழுவினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையை நீதிமன்றம் வெளியிடும்போது மேலும் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவரலாம்.
தாமிரபரணியையும் பாலாற்றையும் மொட்டையடித்தாகிவிட்டது. இனி பாக்கியிருப்பது கொள்ளிடம் மட்டும்தான். கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அதிக அளவில் மணல் படிந்திருப்பதால் அங்கிருந்து மணல் எடுத்துக் கொள்ள அனுமதித்து, அதையும் மொட்டையடிக்க மணல் மாஃபியாக்களுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறது, தமிழக அரசு.
தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு மணல் எடுத்துச் செல்வதற்கு 2009-ஆம் ஆண்டில் அரசு தடை விதித்தது. மணல் குவாரிகளில் தமிழக அரசு பதிவு பெற்ற லாரி, டிராக்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மணல் குவாரிகளில் பகலில் தமிழக லாரிகள் மணலை அள்ளி, ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையில் இரவில் அண்டை மாநில லாரிகளுக்கு மாற்றிவிடும் அட்டூழியம் அரசு அதிகாரிகள் – போலீசு துணையோடு கேள்விமுறையின்றி நடக்கிறது.
அள்ளப்படும் மணல் வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆற்றுமணல் அளவின் இலக்கு 2008-09 ஆம் ஆண்டில் 4.5 லட்சம் டன்னிலிருந்து 5.85 லட்சம் டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டில் இது 10.26 லட்சம் டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தாராள அனுமதியின் விளைவாக மணல் கொள்ளையும் மாஃபியாக்களின் ஆதிக்கமும் புது வேகத்தில் கொடிகட்டிப் பறக்கும்.
தொடரும் மணல் கொள்ளையைக் கண்டும் காணாமல் இருந்தால்தான் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் பதவியில் நீடிக்க முடியும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. மணல் கொள்ளைக்கு எதிராக ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம், லாரிகளைச் சிறைபிடிப்பது என ஆரவாரம் செய்த எதிர்க்கட்சிகள் இப்போது அமைதி காப்பதற்குக் காரணம், இக்கொள்ளையில் அவர்களும் கூட்டுச் சேர்ந்திருப்பதுதான்.
மணல் குவாரிகள் ஒருபுறமிருக்க, கல்குவாரிகள் மூலம் மலைகளையே விழுங்கும் அட்டூழியங்கள் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினையும் விவசாயம் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது.
ஆற்று மணல் என்பது இயற்கை அளித்த கொடை. இது அடுத்த தலைமுறையின் சொத்து. இன்றைய இலாபத்துக்காக மணல் கொள்ளையை நியாயப்படுத்தினால், தமிழகத்தின் எதிர்காலமே சூனியமாகிப்போகும்.
தனியார்மயமும் தாராளமயமும் அரசின் பெயரளவிலான கட்டுப்பாடுகளைத் தகர்த்து, இயற்கையைச் சூறையாடி எதிர்காலத்தையே நாசமாக்குவதுதான் என்பதைத் தொடரும் மணல் கொள்ளையே நிரூபித்துக் காட்டுகிறது.
நடப்பது மக்களாட்சி அல்ல; மணல்குவாரி – கல்குவாரி மாஃபியாக்களின் ஆட்சி!