தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!

'மேட் ஃபார் இந்தியா' – இந்தியாவுக்காகவே தயாரிக்கப்பட்டது என்பது நோக்கியா கைபேசியின் விளம்பர வாசகம். ஒரு ரூபாய் அரிசி, டாஸ்மாக் சாராயம், கலைஞரின் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவற்றுடன் இன்றைய தாராளமயத் தமிழகத்தில் தமிழனின் புதிய அடையாளமாகச் சேர்ந்திருப்பது நோக்கியா கைபேசி.

விளம்பரங்களும், ரிங் டோன்களும் நாள் முழுவதும் கசிந்து கொண்டிருக்கும் நோக்கியா கைபேசியின் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான்  நிறுவனத்தின்  ஆலைக்குள் ஜூலை 23  வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு நச்சுவாயு கசிந்தது.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அந்த ஆலையில் மதிய உணவை முடித்துவிட்டுப் பணிக்கு திரும்பியிருந்த முதல் ஷிப்டு தொழிலாளர்களுக்கு திடீரென்று மூச்சுத் திணறத் தொடங்கியது. ஒரு பெண் தொழிலாளி ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். என்ன ஏதென்று பார்ப்பதற்குள் அடுத்தடுத்து ஆண்களும், பெண்களுமாக பல தொழிலாளர்கள் சடசடவென்று ரத்த வாந்தியுடன் மயங்கி விழ ஆரம்பித்தார்கள். "இன்னிக்கி ஆடி மாசம் முதல் வெள்ளிக்கிழமை இல்லையா? விரதம் இருந்திருக்காங்க. பசி மயக்கம். மத்தபடி ஒண்ணுமில்ல. வேலையை பாருங்க…" என்று சூபர்வைசர்கள் தொழிலாளர்களை விரட்டினர். அடுத்த சில நிமிடங்களில் ஷிப்ட் மானேஜரும், ஷிப்டுக்கான லீடரும் மயங்கி விழுந்த பின்னர்தான் நிர்வாகம் அசைந்தது. அன்று மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தொழிலாளர்கள் 127 பேர்.

இதனையடுத்து "என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் வேலைக்கு வரமாட்டோம்" என்று தொழிலாளர்கள் மறுத்தனர். "ஆலைக்குள் ஒரு அறையில் பூச்சி மருந்து அடித்தோம். ஏ.சி ரூம் என்பதால் மருந்து வெளியேறவில்லை. அவ்வளவுதான் பிரச்சினை" என்று சமாளித்தது நிர்வாகம். பெரும்பாலான தொழிலாளர்கள் வரமறுத்தனர். இருப்பவர்களை வைத்து உற்பத்தியைத் தொடங்கியது நிர்வாகம். சிறிது நேரத்தில் மீண்டும் தொழிலாளர்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கிவிழத் தொடங்கினர். இவர்களின் எண்ணிக்கை 145.

260க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட வண்ணமிருந்தனர். அபாய நிலையில் இருந்தவர்கள் ஐ.சி.யு வுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்களுக்கு ஏதோ சிகிச்சை செய்துவிட்டு, அவசரம் அவசரமாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியது மருத்துவமனை. டிஸ்சார்ஜ் செய்யப்படும் தொழிலாளர்கள் தங்களது மருத்துவ அறிக்கையை வெளியே கொண்டுசெல்லவிடாமல் தடுப்பதில் நிர்வாகம் குறியாக இருந்தது.

தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் யோக்கியதையைத் தெரிந்து கொண்டால், அதன் சென்னை நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் நமக்கு வியப்பளிக்காது. சீனாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் சமீபகாலத்தில் மட்டும் 10 தொழிலாளிகள் ஆலையின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். 36 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்ய நிர்ப்பந்தித்தது, குறைவான ஊதியத்துக்குக் கசக்கிப் பிழியப்படும் கொடுமை, சூபர்வைசர்களின் கொடுங்கோன்மை போன்றவைதான் தற்கொலைகளுக்குக் காரணம். தற்கொலை குறித்த செய்திகள் உலகம் முழுவதும் பரவி நாறிவிடவே, கவலை கொண்ட நிர்வாகம், தொழிலாளிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கும் விதத்தில் மாடியிலிருந்து குதிக்க முடியாத வண்ணம், வலைத்தடுப்புகளை அமைத்தது. ஃபாக்ஸ்கான் நிர்வாகத்தின் குரூரமனத்தைப் புரிந்து கொள்வதற்கு இந்த ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.

ஃபாக்ஸ்கானின் சென்னை ஆலையில் சுமார் 6000 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். காஞ்சிபுரம், திருத்தணி, அரக்கோணம் முதலான ஊர்களிலிருந்து தினந்தோறும் 40 கம்பெனிப் பேருந்துகள் இவர்களைக் கொண்டு வந்து கொட்டுகின்றன. நாளொன்றுக்கு 1.2 இலட்சம் நோக்கியா கைபேசிகளுக்கான உதிரிப் பாகங்களையும் தயாரித்துக் குவிக்கிறார்கள் தொழிலாளர்கள்.

"சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்சு, இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கும் நோக்கியா, மோடாரோலா, சாம்சங், சோனி, எல்ஜி போனற நிறுவனங்களின் ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படாததால், கடும் நோய்களை உருவாக்கக் கூடிய ரசாயனப்பொருட்களின் பாதிப்புக்கு அவர்கள் உள்ளாகி வருகிறார்கள்" என்று கூறுகிறது பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த ஆய்வுக்கான மையம் (Centre for Research on Multinational Corporations) என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை.

"மின்னணு சாதனத்தயாரிப்பில் ஏராளமான நச்சு உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காரீயம், காட்மியம், டையாக்சின், ஃப்யூரான், குளோரின், புரோமின், பாலிவினைல் குளோரைடு போன்றவற்றை சூடாக்கும்போது அவை நச்சுவாயுக்களை வெளியிடுகின்றன… கைபேசி உற்பத்தியிலோ ஆர்சனிக், மெர்க்குரி போன்ற அபாயகரமான நச்சு உலோகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மின்னணுச் சாதன உற்பத்தியில் நச்சு இரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் இந்தியாவில் இல்லை" என்று எச்சரிக்கிறார் கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த ரமாபதி குமார்.

புதிய சட்டங்களை உருவாக்குவது இருக்கட்டும். இருக்கின்ற சட்டங்களையே தம் கால்தூசுக்கு சமமாகத்தான் மதிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள் என்பதும் இந்த விபத்தின் மூலம் அம்பலமானது. விபத்துக்கு மறுநாள் இரவு, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகரின் உத்தரவின் பேரில் தொழிற்சாலைக்குள் ஆய்வு நடத்திய சுகாதார ஆய்வாளர்கள் 'ஒரு உண்மையை' கண்டறிந்தனர். ஆலையைத் துவங்குவதற்கு முன்னரே சுகாதாரத்துறையிடம் பெற்றிருக்க வேண்டிய தடையில்லாச் சான்றிதழைப் பெறாமலேயே ஃபாக்ஸ்கான் ஆலை 5 ஆண்டுகளாக உற்பத்தியை நடத்திக் வந்திருக்கிறது. இந்த  அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்த பின்னரும் இதுகுறித்து தமிழக அரசு மூச்சு விடவில்லை. ஒருவேளை 100, 150 தொழிலாளிகள் செத்து விழுந்திருந்தாலும் தமிழக அரசு மூச்சு விட்டிருக்காது. நோக்கியா நிறுவனத்துக்கு தமிழக அரசு வாரி வழங்கியுள்ள சலுகைகளைப் பார்ப்பவர்கள் யாரும் இதனைப் புரிந்து கொள்ளமுடியும்.

000

ஸ்ரீபெரும்புதூரில் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான ஒப்பந்தம் 2005, ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நோக்கியா நிறுவனத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே கையெழுத்தானது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசின் சட்டம் வாரி வழங்கியிருக்கின்ற சலுகைகளுக்கு மேல் பல கூடுதல் சலுகைகளை வாரி வழங்கி நோக்கியாவைத் தமிழகத்துக்குக் கவர்ந்திழுத்தது கலைஞர் அரசு.

ஏக்கருக்கு 4.5 இலட்சம் ரூபாய் என்ற கணக்கில் சிப்காட்டுக்குச் சொந்தமான 210.87 ஏக்கர் நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நோக்கியாவுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதில் சிப்காட் இழந்திருக்கும் தொகை குறைந்த பட்சம் 7.4 கோடி ரூபாய். பத்திரப் பதிவுக்கான 4% முத்திரைத்தாள் கட்டணத்தையும் தள்ளுபடி செய்ததுடன், தனது தேவைக்குப் போக மீதமுள்ள நிலத்தை பிற நிறுவனங்களுக்குக் கூடுதல் விலைக்குக் குத்தகைக்கு விடுவதற்கான உரிமையும் நோக்கியாவுக்கு வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

தடைபடாத மின்சப்ளைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டிருப்பதுடன், ஆலைக்குத் தேவையான துணை மின்நிலையத்தையும் தனது சொந்த செலவில் மின்வாரியம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சொந்தமாக ஒரு மின் உற்பத்தி நிலையத்தை நோகியா அமைத்துக் கொள்ளலாம். மின்சாரத்தை தான் விரும்பிய விலையிலும் விற்றுக் கொள்ளலாம். இதன் மீது எவ்வித வரிவிதிப்பும் இருக்காது என்பதுடன், மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான செலவில் 50 சதவீதத்தையும் தமிழக அரசு கொடுக்கும். நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை அரசே அமைத்துக் கொடுப்பதுடன், அருகாமை நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும்.

வாட் வரியாகவும், மத்திய விற்பனை வரியாகவும் ஆண்டுதோறும் நோக்கியா எவ்வளவு தொகையைச் செலுத்துகிறதோ, அந்தத் தொகையை தமிழக அரசு நோக்கியாவுக்குத் திருப்பிக் கொடுக்கும். அந்த வகையில் 2005 துவங்கி 4 ஆண்டுகளில் நோக்கியாவின் உள்நாட்டு விற்பனையின் அடிப்படையில் தமிழக அரசு நோக்கியாவுக்கு கொடுத்திருக்கும் தொகை 650 கோடி ரூபாய். நோக்கியா தனது தொழிற்சாலையில் போட்டிருக்கும் முதலீடும் ஏறத்தாழ 650 கோடி ரூபாய்தான். தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1020.4 கோடி.

நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள சலுகைகள், நோக்கியா சி.பொ.மண்டலத்தில் இருக்கும் அதன் வென்டார் நிறுவனங்களான  ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.

மாநில அரசு வழங்கியிருக்கும் சலுகைகள் ஒருபுறமிருக்க, சி.பொ.மண்டலங்களுக்கு மைய அரசும் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. நோக்கியா செலுத்தவேண்டிய 20% வருமானவரி தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக ஆண்டுதோறும் மைய அரசுக்கு ஏற்படும் இழப்பு 700 கோடி ரூபாய். உற்பத்தியில் 50% ஏற்றுமதி செய்வதாக ஒப்புக்கொண்டிருந்த போதிலும், 70 சதவீதத்திற்கும் மேல் இந்தியச் சந்தையிலேயே விற்கப்பட்டிருப்பதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட சுங்கவரி இழப்பு ரூ.681. 38 கோடி. கலால் வரி, சேவை வரி ஆகியவற்றிலிருந்தும் நோகியாவுக்கு விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது

2008 இல் நோக்கியாவில் பணிபுரிந்த தொழிலாளிகள் சுமார் 8000 பேர். அவர்களில் சுமார் 3000 பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள். பின்லாந்து நிறுவனமான நோக்கியா, சென்னையில் ஒரு தொழிலாளிக்குக் கொடுக்கும் ஊதியத்தைப் போல 45 மடங்கு அதிகமான தொகையை தனது நாட்டின் தொழிலாளிக்கு ஊதியமாகக் கொடுக்கிறது. இத்தகைய கொடிய உழைப்புச் சுரண்டலை தொழிலாளிகள் எதிர்த்துப் போராடாமல் தடுக்கவும் பொறுப்பேற்றிருக்கிறது தமிழக அரசு. "தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தைத் தடுக்கும்பொருட்டு, நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தை பொதுப் பயனுக்கானது" என்று அறிவிப்பதாகக் கூறியிருக்கிறது தமிழகஅரசு. இச்சொற்களுக்கான பொருள் விளக்கம் தரப்படவில்லையென்றாலும், அவற்றை திமுக சங்கங்களின் கைக்கூலி நடவடிக்கைகளே விளக்குகின்றன.

அந்நியச் செலாவணி இருப்பையும், வேலைவாய்ப்பையும் பெருக்குவதற்காகவே சி.பொ.மண்டலங்களுக்குச் சலுகை வழங்குவதாகக் கூறுகிறது அரசு. சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய கைபேசி சந்தையாக வளர்ந்துவரும் இந்தியாவில் 50% சந்தையைக் கைப்பற்றுவதற்கும், படுமோசமான ஊதியத்தில் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்குமே இச்சலுகைகள் நோக்கியாவுக்குப் பயன்பட்டிருக்கின்றன. இருப்பினும் சி.பொ.மண்டலங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சலுகைகளைக் குறைக்கக்கூடாது என்றும், அவை இப்போதுதான் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும் சமீபத்தில் டெல்லி மாநாட்டில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். "எங்கள் நாசியில் நுழைந்த நச்சுவாயு ஏற்படுத்தும் விளைவுகளைச் சொல்" என்று கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள் சென்னை ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதே இந்த நாட்டின்மீது கவிந்திருக்கும் ஒரு நச்சுவாயுதான் என்பதைத் தங்களது போராட்டத்தின் ஊடாக நிச்சயம் அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

__________________________________________________________________________

-சூரியன், புதிய ஜனநாயகம், ஆகஸ்டு – 2010, அட்டைபடக் கட்டுரை