தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!

போலீசாரால் கைது செய்து சித்திரவதை செய்யப்பட்ட சுனிதா துலாவி (19)

போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்ட சுனிதா துலாவி (19) - படம் thehindu.com

மாவோயிஸ்டுகள் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள காங்கேர் மாவட்டத்தில் ஆகஸ்டு 29, 2010 அன்று நடத்திய திடீர்த் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களும் இரண்டு போலீசாரும் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதல் நடந்து ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து, இத்தாக்குதலை நடத்திய 17 மாவோயிஸ்டுகளைப் பிடித்துவிட்டதாக காங்கேர் மாவட்ட போலீசார் அறிவித்தனர்.  காங்கேர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியபொழுது, இம்மாவோயிஸ்டுகளைக் கைது செய்ததாகவும் போலீசார் அறிவித்தனர்.

போலீசாரின் இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே, கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 15 பேர் காங்கேர் மாவட்டத்திலுள்ள ஆலூர் மற்றும் பசங்கி கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி பழங்குடியினர் என்பதும் அவர்களுள் ஆறு பேர் பெண்கள் என்பதும் அந்தப் பெண்களுள் இரண்டு பேர் பதினாறே வயதான சிறுமிகள் என்பதும் அம்பலமாகிவிட்டது.

மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்குப் பழிதீர்த்துக்கொள்ளும் வெறியோடு ஆலூர் மற்றும் பசங்கி கிராமங்களில் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்திய எல்லைப் பாதுகாப்புப் படையும் காங்கேர் மாவட்ட போலீசும் அக்கிராமங்களைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை நிர்வாணப்படுத்தி மிருகத்தனமாகத் தாக்கியது.   நர்சிங் கும்ரா, சுக்ராம் நேதம், பிரேம்சிங் போதாயி, ராஜு ராம், பிட்டி போதாயி ஆகிய ஐவரின் ஆசனவாய்க்குள் குச்சிகளைச் செலுத்திச் சித்திரவதை செய்தது.  ஒரு இளம் பெண்ணும், ஒரு சிறுமியும் அரை நிர்வாணமாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர்.  அக்கிராமங்களின் மீதான இந்த அரச பயங்கரவாதத் தாக்குதல் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களிலும் நடந்துள்ளது.  இறுதியாக அக்கிராமங்களைச் சேர்ந்த 17 பேரை விசாரணை செய்யப் போவதாகக் கூறித் தனது சித்திரவதை கூடத்துக்கு இழுத்துச் சென்றது, எல்லைப் பாதுகாப்புப் படை.

எல்லைப் பாதுகாப்புப் படையால் இழுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட 19 வயதான சுனிதா துலாவி "தாங்கள் அனைவருமே கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படையால் கடத்திச் செல்லப்பட்டதாக"ப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார்.  எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் இவரின் உடலெங்கும் மின்சார வயர்களைச் செருகி மின்சார அதிர்ச்சி கொடுத்துச் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

சுனிதா துலாவியின் தந்தை புன்னிம் குமார் துலாவி, "எல்லைப் பாதுகாப்புப் படையால் கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட அனைவரும் இருவேறு முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தாங்கள் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஒப்புக்கொள்ளக் கூறி, அனைவருக்கும் மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டதாகவும்" கூறுகிறார்.

புன்னிம் குமார் துலாவி அரசு ஊழியர் என்பதாலும், அவரின் மகள் சுனிதா துலாவி சித்திரவதைக்குப் பின் நோய்வாய்ப்பட்டதாலும் அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.  அவரின் இன்னொரு மகளான 16 வயதான சிறுமி சரிதா துலாவி உள்ளிட்டு மீதி 15 பேரும் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அட்டூழியங்கள் அம்பலமானவுடன், அதனை மாவோயிஸ்டுகள் நடத்தும் அவதூறு பிரச்சாரம் எனக் கூறி மறுத்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படை, இப்பொழுது இது குறித்து விசாரணை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.  இந்த விசாரணையின் முடிவு எப்படியிருந்தாலும், அரசு நடத்தும் காட்டு வேட்டை என்பது பழங்குடியின வேட்டைதான் என்பதற்கு இத்தாக்குதல் இன்னொரு சாட்சியமாக அமைந்துவிட்டது.