காஞ்சிபுரம் அருகே உள்ள கலவை எனும் ஊரைச் சேர்ந்தவர் அம்பிகா. வயது 23 இருக்கலாம். பெற்றோருக்கு மூத்த பிள்ளை, ஒரு தம்பியும், தங்கையும் இருக்கிறார்கள். வரும் ஜனவரி 8 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. சுங்குவார் சத்திரத்தில் இருக்கும் நோக்கியா ஆலையில் கடந்த முன்று வருடங்களாக அம்பிகா வேலை செய்கிறார். நேற்று இரவு அவர்,ஆலையில் கொடுரமாக இறந்து போயிருக்கிறார். எனினும் இதை விபத்து என்று சொல்வார்கள். நாங்கள் இதை கொலை என்கிறோம்.
இந்தியா, சீனா இரண்டு நாடுகளில் இருக்கும் எல்லா நோக்கியா ஆலைகளும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 100 மில்லியன் செல்போன்களை உற்பத்தி செய்து முடிப்பதற்கு வேலை செய்து வருகின்றன. இந்த இலக்கை அடைவதற்கு தொழிலாளிகள் இரக்கமின்றி ஒரு எந்திரம் போல வேலை செய்ய வேண்டும். செய்கிறார்கள்.
சென்னை நோக்கியா ஆலையில் ஏ,பி,சி எனும் மூன்று ஷிப்ட்டுகளிலும் தலா ஒன்று முதல் இரண்டு இலட்சம் செல்பேசிகளை உற்பத்தி செய்கிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு அங்காடி தெரு திரைப்படத்தில் வரும் கொடூரமான சூபர்வைசர் அண்ணாச்சியை விட கொடூரமான மேலாள நிர்வாகிகள் அங்கு இருக்கின்றனர்.
நேற்று இரவு (31.10.2010) பி ஷிப்ட்டில் தொழிலாளி அம்பிகா வேலை செய்கிறார். அவரது யூனிட்டின் பெயர் "இன்ஜின் ஆபரேஷன் ஃபைனல் அசம்பிளி" என்று சொல்கிறார்கள். இங்கு "ரவுட்டர் கட்டிங் மிஷின்" எனும் இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித் துண்டுகளாக்கி பிரிக்கும். வேலையின் போது சில பீஸ் போர்டுகள் எந்திரத்தில் விழுந்தால் தொழிலாளிகள் அதை கைவிட்டு எடுப்பார்கள். அவர்கள் கை நுழைந்த உடனேயே அந்த எந்திரத்தில் உள்ள ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் இயங்கி அறுப்பதை நிறுத்தி வைக்கும்.
ஆனால் இந்த ஆட்டோமேடிக் சென்சார் இயந்திரம் வேலை செய்தால் அதனால் பத்து, பதினைந்து நிமிடம் உற்பத்தி தாமதாமாகிவிடும் என்பதால் இதை மூடியே வைத்திருப்பார்கள். அதாவது தொழிலாளி தன் உயிரை பணயம் வைத்து சில விநாடிகளுக்கும் விழுந்துவிட்ட ஃபோர்டுகளை எடுக்க வேண்டும். இது பச்சையான படுகொலை இல்லையா?
எந்திரத்தில் சில ஃபோர்டுகள் விழுந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனெனில் அறுக்கப்படும் எல்லா போர்டுகளுக்கும் தொழிலாளிகள் சரியான கணக்கு கொடுக்க வேண்டும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் ஏழுமணிக்கு அப்படி விழுந்துவிட்ட ஃபோர்டை எடுப்பதற்கு அம்பிகா முயன்றிருக்கிறார். எனினும் அப்போது அந்த எந்திரத்தின் சென்சார் வேலை செய்யும் என்று அவர் நினைத்திருக்கிறார். ஆனால் அதன் செயல்பாடு நிறுத்தப் பட்டிருப்பது அவருக்கு தெரியவில்லை. அதன்படி அம்பிகா கழுத்தின் பின்புறமாக அந்த எந்திரம் அறுக்கத் தொடங்கியிருக்கிறது.
கழுத்து அறுபட அறுபட இரத்தம் ஏராளமாக வழிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு கம்பி கழுத்தில் ஆழமாக சென்றுவிட்டதால் இரத்தம் உடலுக்குள்ளேயே ஏராளமாக கசிய ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு நான்கைந்து முறை மாரடைப்பு வந்திருக்கிறது. ஆனால் வெளியே யாருக்கும் இது தெரியவில்லை. சில பெண் தொழிலாளிகள் இதைப் பார்த்துவிட்டு மயக்கம் போட்டு விழுந்துவிட்டனர். சில ஆண் தொழிலாளிகள் உடனே எந்திரத்தை உடைத்து அம்பிகாவை காப்பாற்ற முயன்றிருக்கின்றனர்.
ஆனால் அங்கிருந்த சூபர்வைசர் வெற்றி தேவராஜ் மேலிடத்தில் பேசிவிட்டு மிஷனை உடைப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. மேலும் அந்த எந்திரம் இரண்டு கோடி ரூபாய் விலை உள்ளது என்றும் அதை பொறுமையாக டூல்சை கொண்டு படிப்படியாக கழட்டலாம் என்று அவர் சொல்லிவிட்டு எந்திரத்தை உடைக்காமல் இருப்பதற்கு பாதுகாப்பாக செக்யூரிட்டிகளை நிறுத்தியிருக்கிறார். டூல்சை கொண்டு கழட்டலாம் என்றால் அங்கே டூல்ஸ் பாக்சும் இல்லை.
இதற்குள் 10 நிமிடங்கள் கழிந்துவிட்டன. ஏராளமான இரத்தம் வழிந்துவிட்டது. கழுத்தை அறுத்த அந்த எந்திரத்தில் இருந்து அம்பிகா மீட்கப்படவில்லை. இறுதியில் வேறுவழியின்றி தொழிலாளிகள் நிர்வாகத்துடன் சண்டை போட்டு எந்திரத்தின் கட்டரை உடைத்து அம்பிகாவை மீட்கின்றனர். இப்போது மொத்தம் 20 அல்லது 25 நிமிடங்கள் முடிந்துவிட்டன்.
ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார். அதற்குள் அவர் உயிர் பிரிகிறது. பின்னர் அவரை கே.எம்.சி, அப்பல்லோ என்று மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கிறார்கள். தொழிலாளிகளின் கூற்றுப்படி அம்பிகா அதற்கு முன்னரே இறந்து போயிருக்கிறார்.
ஆலைக்குள் வரும் தொழிலாளிகள் எவரும் தமது செல்பேசிகளை பணியிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்பதால் அம்பிகாவின் மரணம் அவர்களுக்கு உடனேயே தெரியவில்லை. "அசம்பிள் டூ ஆர்டர் செக்ஷன்" எனும் பிரிவின் சூபர்வைசர் ஜே.புருஷோத்தமன் அம்பிகாவின் மரணத்தை மறைத்து தொழிலாளர்களை தொடர்ந்து பணியாற்ற பணித்திருக்கிறான். அம்பிகாவுக்கு ஒன்றுமில்லை, இரத்தம் ஏற்றுகிறார்கள், எல்லாரும் வேலையை தொடருங்கள் என்றும் கூறியிருக்கிறான். இவன் மீது பாலியல் புகார் உள்ளிட்டு 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதே.
பின்னர் மருத்துவமனையின் நர்ஸ் வழியாக அம்பிகாவின் மரணச் செய்தி தொழிலாளிகளுக்கு கிடைக்கிறது. அதன் பின்னர் இரவு 12 மணிக்குத்தான் உற்பத்தியை நிறுத்துகிறார்கள். அதுவும் கூட தொழிலாளிகளின் கோபத்தால் நடந்ததே அன்றி நிர்வாகத்தால் அல்ல. அம்பிகாவின் மரணம் இரகசிய செய்தியாக கசிந்த பிறகே நிர்வாகம் அதை ஒப்புக் கொண்டிருக்கிறது. எப்படியும் உற்பத்தியை நிறுத்தக்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பம்.
மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள் குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை தந்துவிட்டால் தங்களது மகளின் உயிர் திரும்ப கிடைக்குமா என்றும் அவர்கள் ஆவேசப்படுகிறார்கள்.
ஏற்கனவே சிலமாதங்களுக்கு முன்னர் நோக்கியாவில் தொழிற்சங்கத்தின் மூலம் நிர்வாகத்தின் சுரண்டலை எதிர்த்து போராட்டம் நடந்திருக்கிறது. அதையெல்லாம் ஈவிரக்கமின்றி ஒடுக்கிய நிர்வாகம் 100 மில்லியன் இலக்கு வெறிக்காக கொடுரமான வேலை முறையை கையாண்டிருக்கிறது.
கட்டிங் மிஷினுக்குள் விழுந்துவிடும் ஃபோர்டுகளை எடுக்க வேண்டியதில்லை என்று தொழிலாளிகளுக்கு அறிவித்திருந்தால் அம்பிகா கொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஆனால் 100 மில்லியன் இலக்கை அடையமுடியாமல் போயிருக்குமே?
எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் அம்பிகாவை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இரண்டு கோடி நட்டமாயிருக்குமே, அதற்கு என்ன செய்ய முடியும்? கட்டிங் இயந்திரத்தின் சென்சார் போர்டை எப்போதும் இயக்கத்தில் வைத்திருந்தால் அம்பிகா இறந்திருக்க மாட்டார். ஆனால் நிறுத்தப்படும் ஒவ்வொருமுறையும் உற்பத்தி தடங்கலுக்குள்ளாயிருக்குமே, அதற்கு என்ன செய்வது?
100 மில்லியன் இலக்கை அடைய வேண்டுமென்றால் இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில்தான் நோக்கியா தொழிலாளிகள் வேலை செய்ய வேண்டும். அப்படித்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள். அப்படி வேலை செய்ததினால்தான் இன்று அம்பிகா கொல்லப்பட்டிருக்கிறார்.
சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6S) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். அந்த பாதுகாப்பு இலட்சணத்திற்கு ரத்த சாட்சியம்தான் அம்பிகா.
கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், அறிவித்தாலும் அபயாத்தோடு கையை விட்டு விழும் போர்டுகளை எடுப்பது என்று பின்னர் இயந்திரத்தை உடைக்க கூடாது என்று தடை போட்டு, இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அம்பிகா கொடுரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்.
சன் டி.வியில் ஒரு ஒற்றை வரி செய்தியோடு இந்த படுகொலை முடிந்து விட்டது. நோக்கியா ஆலைக்கு சென்ற வினவு செய்தியாளர்களைத் தவிர அங்கு எந்த ஊடக நபர்களும் இல்லை. எல்லா ஊடகங்களிலும் நோக்கியா விளம்பரம் கல்லா கட்டுகிறது என்ற உண்மை காரணமாக அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தொழிலாளிகளிடையே பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக போலீசு பெருமளவில் அங்கே குவிக்கப்பட்டிருக்கிறது.
அம்பிகாவின் கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு தி.மு.க பிரமுகர்கள் முயல்கிறார்கள். போராட தொழிற்சங்க தலைமை இல்லாத காரணத்தால் தொழிலாளிகள் என்ன செய்வதென்று திகைத்திருக்கிறார்கள். அம்பிகாவின் உடல் அப்பல்லோவின் சவக்கிடங்கில் இருக்கிறது.
அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச்சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சிலாகிப்பார்கள்.
அவர்கள் பருகுவது சாராயமல்ல, அம்பிகாவைப் போன்ற தொழிலாளிகளின் இரத்தம் என்பதை நாங்கள் குறித்து வைத்திருக்கிறோம். பழி தீர்ப்போம்.
___________________________________________________________________________________________
- வினவு செய்தியாளர்கள், நோக்கியா ஆலை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து…..___________________________