ஊழல்களின் ராஜா - ராஜா செய்த ஊழல் (படித்ததில் அதிர்ந்தது )
இது தினமலரின் இன்றைய செய்தி
இந்திய ஊழல் வரலாற்றுக்கு புதிய வரவு ஸ்பெக்ட்ரம். நம் நாட்டில் ஊழல் நடவடிக்கைகள் புதிய விஷயமல்ல. கடந்த 1980களிலேயே ஊழலுக்கான வேர், இங்கு பலமாக ஊன்றப்பட்டு விட்டது. போபர்ஸ், தெகல்கா, மாட்டுத் தீவனம், ஹவாலா, லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு லஞ்சம், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பில் ஊழல் என, ஊழல் பூதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சிறிய அளவில் பரவிக் கொண்டிருந்த இந்த ஊழல் நடவடிக்கைகள், தற்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விஸ்வரூபம் எடுத்து, நாட்டு மக்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. இந்திய ஊழல் வரலாற்றில் இதுதான் மிகப் பெரிய தொகை.
சாதாரண மக்களும் திகைப்பு: "ஸ்பெக்ட்ரம், "2ஜி' அலைக்கற்றை, ஸ்வான், யுனிடெக், எஸ்.டெல்' என, மீடியாக்களில் அடிக்கடி கூறப்படுவதை, ஏதோ வேற்றுக் கிரக மக்கள் பேசும் மொழி யோ என, நினைத்து, இந்த விவகாரத்தை பொருட்படுத்தாத சாதாரண மக்கள் கூட, 1.76 லட்சம் கோடி ரூபாய் என, பேச்சு எழுந்ததுமே, ஒரு கணம் திகிலடித்து, அதிர்ச்சியுடன் கவனிக்கத் துவங்கியுள்ளனர். எங்கு முறைகேடு நடந்தது, எப்படி நடந்தது என்பது போன்ற விவகாரங்கள் எல்லாம் புரியவில்லை என்றாலும், மிகப் பெரிய அளவிலான முறைகேடு நடந்துள்ளது என்பதை மட்டும் தெரிந்து கொண்டுள்ளனர்.
ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேட்டின் மூலம், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதன் மூலம், இந்த 1.76 லட்சம் கோடி ரூபாயையும் யாருடைய பாக்கெட்டிற்கோ, போய் விட்டதாக அர்த்தம் இல்லை. அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில், முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. சட்ட, நிதி அமைச்சகங்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் மூலம், அரசுக்கு கிடைக்க வேண்டிய 1.76 லட்சம் கோடி ரூபாய் கிடைக்காமல் போய் விட்டது என்பது தான், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் குற்றச்சாட்டு. தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ராஜா, இந்த வருவாய் இழப்பு ஏற்பட காரணமாக இருந்தார் என்றும், மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் கூறியுள்ளது. முறையான விதிமுறைகளை பின்பற்றாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் உரிமங்கள் பெற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களால், யார், யார் லாபம் அடைந்தனரோ அவர்கள் தான் ஊழல் செய்தவர்கள். இதற்காக, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் அவர்கள் எவ்வளவு லாபம் பெற்றனரோ, அந்த தொகை தான் ஊழல் தொகை. அது, சாதாரண தொகையாக இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக கூற முடியும்.
மூன்று ஆண்டுக்கு முன்பே கசிந்தது: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்தாலும், மூன்று ஆண்டுக்கு முன்பே, இதுகுறித்து அரசல், புரசலாக மர்மங்கள் கசியத் துவங்கி விட்டன. போதிய இடைவெளிகளில் இதுகுறித்த தகவல்கள் வெளியானாலும், அப்போது யாரும் இதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. சமீபத்தில் மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தின் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய விஷயங்கள் வெளியில் கசியத் துவங்கியதும் தான், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
பலமுனை தாக்குதல்: பா.ஜ., - இடதுசாரி கட்சிகள், அ.தி.முக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிய அளவில் எழுப்பி, பார்லிமென்டை ஸ்தம்பிக்க வைத்தன. மறுபக்கம், மீடியாக்கள் அடிக்கடி இதுகுறித்த செய்திகளை வெளியிட்டவாறு இருந்தன. மற்றொரு பக்கம், தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றிய மூத்த அதிகாரிகளும், இந்த விஷயத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் துவங்கினர். குறிப்பாக, தொலைத் தொடர்பு துறையின் முன்னாள் செயலர் டி.எஸ்.மாத்தூர், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை மீடியாக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். இது, அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை சமாளிப்பதற்காக சி.பி.ஐ., விசாரணை, பொது கணக்கு குழு ஆய்வு என, அரசு சார்பில் எவ்வளவோ சமாளிப்பு முயற்சிகள் நடந்தன. ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
மற்றொரு பக்கம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, "ராஜா விவகாரத்தில் அரசுக்கு ஆபத்து ஏற்பட்டால், ஆதரவு தரத் தயார்' என, சமயம் பார்த்து அரசியல் காய் நகர்த்தினார். சுப்ரீம் கோர்ட்டும் கடுமையான கேள்விகளை எழுப்பியது. அனைத்து பக்கங்களிலும் இருந்து வந்த பலமுனை தாக்குதலில் மத்திய அரசு நிலைகுலைந்து போனது. வேறு வழியில்லாமல், இறுதிக் கட்ட நடவடிக்கையாக, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி ராஜாவுக்கு உத்தரவு வந்தது. "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபடவில்லை. எனக்கு முன் பதவி வகித்தவர்கள் எந்த நடைமுறையை பின்பற்றினார்களோ, அதே நடைமுறையைத் தான் நானும் பின்பற்றினேன். பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல்படி தான், அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது. எனவே, பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடம் இல்லை'என, அடம்பிடித்த ராஜா, வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார்.
கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை: ராஜா ராஜினாமாவுடன் ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிவுக்கு வந்து விடும் என, நினைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாய், தற்போது பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையும் இதில் உருட்டப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகளின் கோரிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், மவுனம் காத்தது என்? என, பிரதமருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளதால், காங்கிரஸ் மேலிடம் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. எனவே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரின் பதவியும் ஊசாலாடிக் கொண்டிருப்பதாகவே அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
தொலைத் தொடர்பு ஆணையத்தின் அதிரடி: இதுவரை மவுனம் காத்து வந்த தொலைத் தொடர்பு ஆணையமும் (டிராய்) தற்போது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. 2008ல் புதிதாக நுழைந்து, "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களின் 62 லைசென்சுகளை ரத்து செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. "டிராய்' அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: 15 மண்டலங்களில் தொலை தொடர்பு சேவை நடத்துவதற்காக அனுமதி பெற்ற எடிசலாட் நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். யுனிடெக் நிறுவனத்துக்கு சொந்தமான யூனிநார் நிறுவனத்துக்கு எட்டு மண்டலங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஷியாம் குரூப்பிற்கு பத்து மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பத்து உரிமங்கள், லூப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 19 உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.
டிராயின் இந்த அதிரடி நடவடிக்கையால் உரிமம் பெற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆடிப் போய் உள்ளன.என்ன செய்யப் போகிறது சி.பி.ஐ., ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை என, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டிடம் இருந்து வாங்கிக் கொண்ட வெறுப்பில் இருக்கிறது சி.பி.ஐ., தற்போது இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன. நாடு முழுவதும் கவனிக்கப்படும் விஷயமாகி விட்டது. எனவே, இந்த விஷயத்தில் சி.பி.ஐ., அடுத்து எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனிக்கப்படும் என்பது மட்டும் நிச்சயம். முறைகேட்டுக்கு துணை நின்ற அதிகாரிகள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ., வலைவிரிக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ., சுதந்திரமாக செயல்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சுத்தமாகுமா இந்திய அரசியல்? தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இந்தியாவில் ஊழல் செய்த அரசியல்வாதிகள் பெரிய அளவில் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இல்லாத மதுகோடா போன்ற அரசியல்வாதிகள் தான், கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் சுதந்திரமாகவே உலா வருகின்றனர். ஆனால், இதெல்லாம் நீண்ட காலத்துக்கு நீடிக்காது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் மீடியாக்கள், தற்போது மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்களை, அடியோடு அம்பலப்படுத்தி, அவர்களின் முகத்திரையை கிழித்து, பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விடுகின்றன. கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் நில ஊழல் தொடர்பான விவகாரங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதே இதற்கு சிறந்த சாட்சி. எனவே, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்தி, அரசியலை தூய்மைப் படுத்தும் முயற்சியில் ஆளுவோர் களம் இறங்க வேண்டும்.
"2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு : சி.ஏ.ஜி., அறிக்கை கூறுவது என்ன?
* கடந்த 2008ல் நடந்த "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியே 645 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
* ஏல முறைக்கு பதிலாக, முதலில் வருபவர்களுக்கே ஒதுக்கீடு என்ற முறை பின்பற்றப்பட்டுள்ளது.
* உரிமம் கோரிய 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் போதிய நிதி மூலதனத்தை பெற்றிருக்கவில்லை. இவற்றில் 45 நிறுவனங்கள், "2ஜி' ஸ்பெக்ட்ரம் உரிமம் கோருவதற்கான தகுதிகளை பெற்றிருக்கவில்லை.
* சில நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலையில் இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
* மத்திய சட்ட மற்றும் நிதி அமைச்சகங்களின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பு துறை (டிராய்) விதிமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
* சில தனியார் நிறுவனங்களுக்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்குவதிலும் வெளிப்படையற்ற தன்மை பின்பற்றப்படவில்லை.
* உரிமம் பெற்ற சில நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற இந்திய நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன. ஸ்வான் நிறுவனம், தனது 45 சதவீத பங்குகளை "எடிசலாட்'என்ற ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனத்துக்கு 4,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. யுனிடெக் நிறுவனம், தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
* உரிமம் பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வேறு நிறுவனங்களுக்கு விற்றதால், பெரிய அளவில் பயன் அடைந்துள்ளன. அதே நேரத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
* உரிமம் வழங்கும் நடைமுறையில் வெளிப்படையான அணுகுமுறை பின்பற்றப்படவில்லை.
* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
* அனுபவம் இல்லாத "ஸ்வான்' நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
* "3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்க கிடைத்த வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாய். ஆனால், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 10 ஆயிரத்து 772 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? உலகம் முழுவதும் மொபைல் போன் பயன்பாடுகள் அதிகரித்து விட்டன. எனவே, தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு தேவையான சிக்னல்களை பெறுவதற்கான அலைவரிசைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்புக்கான அலைக்கற்றைகளின் (ஸ்பெக்ட்ரம்) கட்டுப்பாடு, அந்தந்த நாட்டு அரசுகளின் கைகளில் உள்ளன. இதை உலக அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் சர்வதேச தொலைத் தொடர்பு யூனியன் ஈடுபட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், தங்களின் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல, இந்த அலைக்கற்றைகள் அவசியம். எனவே, மத்திய அரசிடம் இருந்து, இந்த அலைக்கற்றைகளை தனியார் நிறுவனங்கள் பெறுகின்றன. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் அலைக்கற்றைகள், நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம் தலைமுறை (3ஜி) என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.
1.76 லட்சம் கோடியில் என்ன செய்யலாம்?
* 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு, இந்த 1.76 லட்சம் கோடி ரூபாய் சமம்.
* மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் இந்த தொகை ஆறில் ஒரு பங்கு.
* பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபம் மற்றும் டிவிடென்ட் மூலம், அரசுக்கு 51 ஆயிரத்து 309 கோடி ரூபாய் கிடைக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொகை, அதை விட மூன்று பங்கு அதிகம்.
* பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 25 ஆயிரத்து 154 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு தொகை இதை விட ஏழு மடங்கு அதிகம்.
* கல்விக்காக பட்ஜெட்டில் அரசு ஒதுக்கும் தொகையை விட, ஊழல் நடந்ததாக கூறப்படும் தொகை மூன்று மடங்கு அதிகம்.
இந்தியாவின் மிகப் பெரிய ஊழல்கள்: மகாவீரர், புத்தர் போன்ற மகான்களின் மிகச் சிறந்த போதனைகளால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு புகழ் கிடைத்தது அந்த காலம். இதற்கு பின், மகாத்மா காந்தியின் அஹிம்சை போராட்டங்கள், இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. ஆனால், தற்போது இந்திய அரசியல்வாதிகளின் ஊழல் வரலாறு தான், இந்தியாவை உலகுக்கு அடையாளப் படுத்தும் விஷயமாக மாறி விட்டது என்பது வேதனையான உண்மை. இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல்களில் சில:
1. பங்குச் சந்தை ஊழல் 1,000 கோடி
2. சர்க்கரை ஊழல் 650 கோடி
3. போபர்ஸ் ஊழல் 65 கோடி
4. ஹவாலா ஊழல் 65 கோடி
5. எம்.பி., டிரேடிங் 32 கோடி
6. உர ஊழல் 133 கோடி
7. மருத்துவ உபகரண ஊழல் 5,000 கோடி
8. இந்தியன் வங்கி 1,336 கோடி
9. மாட்டுத் தீவன ஊழல் (பீகார்) 1,000 கோடி
10. நில ஊழல் (பீகார்) 400 கோடி
11. வேட்டி - சேலை ஊழல் (தமிழகம்) 11 கோடி
12. நிலக்கரி ஊழல் (தமிழகம்) 750 கோடி ஊழல் செய்யப்பட்ட இந்த தொகையை, நாட்டின் கட்டமைப்புக்கு வசதிக்கு பயன்படுத்தியிருந்தால், இந்தியா, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் எப்போதோ இடம் பெற்றிருக்கும்.