தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!

தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்

தீபாவளி தமிழன் பண்டிகை இல்லை என்று நண்பர் தமிழ் ஓவியா கிட்டத்தட்ட ரவுண்டு கட்டி அடித்தார்.தோழர்  தமிழச்சி பெரியாரின் கட்டுரையை பிரசுரித்தார். தோழர் மதிமாறனும் தனது பதிவில் ராவணண், நரகா அசுரனைக் கொன்ற இராமன் மற்றும் கண்ணனை பழிதீர்க்க உறுதி எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். எனினும் பதிவுலகில் தீபாவளி குறித்த கொண்டாட்டத்தில் பெரிய மாற்றம் இல்லை. இரண்டுக்கும் நடுவில் ஊசாலடும் சில முற்போக்காளர்களின் நிலை? நண்பர் லக்கி லுக் சென்ற ஆண்டு ரோசா வசந்தால் எழுதப்பட்ட கட்டுரையை மீள்பதிவு செய்து இனி குழந்தைகளுக்காக தானும் தீபாவளியைக் கொண்டாடும் மனநிலைக்கு வந்து விட்டதாக சோகமான தொனியில் குறிப்பிடுகிறார். மாதவராஜூம் மகனுக்காக தீபாவளியைக் கொண்டாட வேண்டியிருக்கிறது என்கிறார். வாசகர்கள் இந்தப் பதிவுகளை படித்து விட்டு இந்த பதிவை தொடருங்கள்.

குத்துமதிப்பாக சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட தீபாவளி பெரும்பான்மை தமிழ் மக்களின் பண்டிகையாக இல்லை. கிராமங்களும், விவசாயமும் கோலேச்சிய அந்தக் காலத்தில் இயல்பாக பொங்கல்தான் வாழ்க்கையுடன் இணைந்து கொண்டாடப்பட்டு வந்தது. அப்போதும் சரி அதற்கு முன்னரும் சரி தீபாவளி, நவராத்திரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலான பண்டிகைகளை பார்ப்பன – 'மேல்'சாதியினர்தான் கொண்டாடி வந்தனர். இன்றும் கூட தீபாவளியைக் கழித்து விட்டுப்பார்த்தால் மற்ற பண்டிகைகள் 'மேல்' சாதியினர் மட்டுமே கொண்டாடுகின்றனர்.

அகில இந்திய அளவிலும் நிலைமை அன்று இதுதான். இன்றும் கூட கேரளாவில் ஓணத்தையும், வங்கத்தில் துர்கா பூஜையையுமே பிரதானமாக கொண்டாடுகிறார்கள். இப்படி இந்தியா முழுவதும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்று சொல்ல இயலாது.

இந்தியாவில் இருந்த பூர்வ பழங்குடி மக்களை ஆரியர்கள் வென்று ஆக்கிரமித்த தொல்குடி கதைகளே புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் எழுதப்பட்டன. அவ்வகையில் பார்ப்பன இந்து மதப் பண்டிகைகள் அனைத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான செய்திகளையே கொண்டிருக்கின்றன. வருண, சாதி, பாலின ரீதியாக அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எவரும் இந்து மதப்பண்டிகைகளை கொண்டாட முடியாது. மனித குலம் தான் கடந்து வந்த பாதையின் வெற்றிப்படிகளை நினைவுகூரும் வண்ணம் கொண்டாடப்பட வேண்டிய பண்டிகைகள் இங்கே இந்தியாவில் எதிர்மறையாகவே இருக்கின்றன.

இந்தக் கருத்தை ஒப்புக்கொண்டாலும் இன்று தீபாவளி என்பது மக்கள் பண்டிகையாக மாறிவிட்டது என்பதையும் ஒப்புக் கொள்ளவேண்டும். தீபாவளிக்கென்று தனி சந்தை உள்ளதைக் கண்டு கொண்ட முதலாளிகள் அதன் வீச்சை கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரிக்க வைத்திருக்கின்றனர். ஊடகங்கள் வாயிலாக தீபாவளியின் மகத்துவம் நுகர்வு கலாச்சாரச் சந்தையை குறி வைத்து உப்ப வைக்கப்பட்டது. சமீப ஆண்டுகளாக புத்தாண்டு மற்றும் காதலர் தினத்தையே இளைஞர்கள் மத்தியில் மாபெரும் கொண்டாட்டமாக மாற்றிய முதலாளிகள் தீபாவளியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?

இனிப்பு, புத்தாடை, பட்டாசு என குழந்தைகள் உலகம் தீபாளியை மையமாக வைத்து சுழல்வதும் உண்மைதான். தீபாவளி அன்று உலகமே கொண்டாடுவதான பிரமையிலிருந்து தன் குழந்தைகளுக்கும் ஏதாவது செய்ய வேண்டுமென்பதை ஏழைகளே ஏற்றுக் கொள்ளும் வண்ணம் தீபாவளி உருவெடுத்து விட்டது.

எனினும் தீபாவளி நகரம் சார்ந்த நடுத்தர வர்க்கத்தின் பண்டிகையாகத்தான் இன்னமும் இருக்கிறது. தீபாவளியன்று வீட்டில் இட்லி, தோசை சுடுவதையே கொண்டாட்டமாக நினைக்கும் கிராமங்கள், நகரங்கள் போன்று தீபாவளியை கொண்டாட முடிவதில்லை. ஒருபுறம் நிலவுடைமையின் ஆதிக்க சிந்தனைகள், மறுபுறம் முதலாளித்துவத்தின் நுகர்வுக் கலாச்சார அடிமைத்தனம் இரண்டின் கூட்டு விளைவான தீபாவளியை முற்போக்கு சிந்தனையை ஏற்றுக் கொண்டோர் கொண்டாட வேண்டிய பண்டிகை அல்ல. எனினும் குழந்தைகளுக்காக அதை கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் என்ன, இல்லையென்றால் அறியாத குழந்தைகள் மீது நாம் வன்முறை ஏவ முடியுமா என்பதே அந்த முற்போக்காளர்களின் ஊசலாட்டம்.

சமூக மாற்றத்திற்கான மதிப்பீடுகள் சூழலின் விளைவாக பின்பற்றப்படும் ஒன்றல்ல, மாறாக சூழலின் மீது எதிர்வினையாற்றும் தன்மையுடையவை. உலகமே கொண்டாடுகிறது எனினும் அது தவறென்றால் தவறென்றே கூற வேண்டும். அதில் கொஞ்சம் விட்டுக்கொடுப்பது என்பது நாம் நமது போராட்டத்தை கொஞ்சம் விட்டுக்கொடுப்பதும் ஆகிவிடுகிறது.

வரதட்சணை வாங்குவது தவறு, எனக்கு அதில் ஒப்புதல் இல்லை, ஆனால் உலகமே வாங்குவதால், என் பெற்றோர் என்ன விரும்புகிறார்களோ அதுவே என் விருப்பம் என்பதால் நானும் வாங்குகிறேன் என்று ஒருவன் சொன்னால் உங்கள் பதில் என்ன? சமூகத்தில் நமது நட்பு வட்டாரத்தில் யாரெல்லாம் வரதட்சணை வாங்கவில்லை, அல்லது கொடுக்கவில்லை என்று பாருங்கள் இறுதியில் நீங்களாவது மிஞ்ச வேண்டுமென விரும்புகிறீர்களா இல்லையா? இதை உலக வழக்கு தீர்மானிக்கட்டும் என்று விட்டுக்கொடுத்தால் உங்களிடம் பின்னாட்களில் காரியவாதம் பிழைப்புவாதம் எல்லாம் கொடிகட்டிப் பறக்கும். வரதட்சணை வாங்குபவன் எனது நண்பனாக இருக்க முடியாது என்று சொல்வதற்கு கூட பலர் தயாரில்லை. நட்பு வட்டாரத்திற்கு இத்தகைய மதிப்பீடுகள் இருக்க முடியாது. ஆனால் தோழமைக்கு இருக்கிறது. இன்னும் கூடுதலான மதிப்பீடுகள் இருக்கிறது.

பொதுவுடமை சிந்தனையில் அழுத்தமாக வாழும் எங்களுக்கு சாதி மறுப்புத் திருமணம், தாலி மறுப்பு திருமணம், தீபாவளிக்கு பதிலாய் நவம்பர் புரட்சி தினம், பள்ளியில் சாதியில்லாமல் குழந்தைகளை சேர்ப்பது, பார்ப்பனியத்தின் பண்பாட்டுகெதிராக மாட்டுக்கறி உண்பது முதலானவை சகஜமான விசயங்கள்தான். ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் அதற்கென போரடியதன் பக்கங்கள் நிறைய உண்டு. இதில் உலக வழக்கை அமல்படுத்தினால் இறுதியில் சமூக மாற்றமும் புரட்சியும் கூட கதைக்குதவாதவையாக மாறி விடும். போலிக் கம்யூனிஸ்டுகளின் வாழ்வில் அதைக் காணலாம். தீபாவளிக்கும், திருவண்ணாமலை தீபத்துக்கும் அவர்களின் தினசரியான தீக்கதிர் சிறப்பிதழ் வெளியிடுகிறது. ஆட்டோ தொழிலாளர்கள் ஆயத பூஜையை நேர்த்தியாக கொண்டாடுகிறார்கள். த.மு.எ.க.ச கூட்டத்தில் தாலிகளும், மல்லிகையும் 'மணம்' பரப்புகின்றன.

இவற்றையெல்லாம் கேள்வி கேட்டால் மக்கள் எப்படி வாழ்கிறார்களோ அதைத்தான் பின்பற்ற முடியும் இல்லையென்றால் மக்களிடம் இருந்து தனிமைப் பட்டுவிடுவோம் என்ற பதில் ரெடிமேடாய் வரும். அண்டை வீட்டு முசுலீமை எதிரியாகப் பார்க்கும் குஜராத்தின் சராசரி இந்து கூட தன்னை நியாயப்படுத்த அதே பதிலைச் சொல்லலாம். அதனால்தான் இரண்டாயிரம் முசுலீம்கள் கொல்லப்பட்டும் அதன் நாயகனான மோடி மீண்டும் முதல்வராக தெரிவு செய்யப்படுகிறார். எனவே பெரும்பான்மை எப்படி வாழ்கிறதோ அப்படித்தான் நாமும் வாழ முடியும் என்ற வாதமே அடிப்படையில் தவறு.

பெரும்பான்மை மனித குலத்தின் இழுக்குகள் அத்தனையும் சிறுபான்மை மனித இனம் நடத்திய விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகவே அகற்றப்பட்டன. இல்லையென்றால் 'சதி' எனப்படும் உடன் கட்டை ஏறுவதும், பால்யவிவாகமும், பார்ப்பன விதவைப் பெண்களுக்கு மொட்டை அடிப்பதும் இன்றும் தொடர்ந்திருக்கும். தேவதாசி முறையை தடை செய்வது பெரும்பான்மை இந்துக்களை புண்படுத்தும் செயல் என்று வாதாடினார் சத்யமூர்த்தி அய்யர். மறுத்து போராடினார்கள் ராமாமிருதம் அம்மையாரும்,  பெரியாரும். இறுதியில் வரலாற்றில் வென்றது யார்?

இன்று உடன்கட்டை ஏறுவது சட்டரீதியாகவும், சமூகரீதியாகவும் தடை செய்யப்பட்டிருந்தாலும் ரூப்கன்வரை ராஜஸ்தானத்து இந்துக்கள் இன்றும் போற்றும் நாட்டில் நாம் பார்ப்பன இந்துமதத்தின் பிற்போக்குகளையெல்லாம் வீழ்த்தி விட்டதாக எண்ண முடியாது. பெரியார், அம்பேத்கர் எண்ணியதெல்லாம் செயலுக்கு வந்து விட்டதாகவும் கூற முடியாது. இந்தச் சூழ்நிலையில் நாம் நமது மதிப்பீடுகள் குறித்து எவ்வளவு விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்?

மாட்டுப் பொங்கலுக்கு கூட தனது மாடுகளுக்கு கருப்பு சிவப்பு வர்ணமடித்து, அழகு பார்க்கும் தி.மு.க வின் இலட்சியவாதத் தொண்டன் இன்றில்லை. பார்ப்பன எதிர்ப்பு மரபை கொண்டாடிய அவனது நேற்றைய பெருமையில் சிறு துளி கூட இன்று காணக்கிடைப்பதில்லை. ரஜினி ரசிகர்கள், இந்து முன்னணி தொண்டர்கள், ஆதிக்கசாதி வெறியர்கள் முதலானோருக்கும் ஒரு தி.மு.க தொண்டனுக்கும் இன்று அடிப்படையில் என்ன பெரிய வேறுபாடு உள்ளது? அவ்வப்போது கருணாநிதி விழிப்படைந்து ஆதிசங்கரன் பொட்டு வைத்ததையெல்லாம் கண்டித்தாலும் கோபாலபுரமே தீபாவளியைக் கொண்டாடும்போது, சன் டி.வியும், கலைஞர் டி.வியும் போட்டி போட்டுக்கொண்டு தீபாவளியை கொண்டாடும்போது கலைஞரின் பகுத்தறிவு மரபு யாரைப்பார்த்து அழும்? 'தீ பரவட்டும்' பரப்புவதை மறந்த உடன்பிறப்புகள் இன்று பட்டாசைத்தான் பரப்புகிறார்கள்.

முற்போக்கு மதிப்பீடுகளை ஒரு இயக்கமாய் பின்பற்றி வாழும் பலம் ஒரு தனிநபராய் நின்று ஒழுகுவதில் பெரும்பாலும் சாத்தியமே இல்லை. பொதுவில் ஒரு கட்சி இயக்கத்தில் சேருவதை சிறுபத்திரிகை மரபு ஏளனமாக பார்க்கும் வியாதி அப்பத்திரிகைகளை படிப்பவர்களையும் தொற்றுவதற்கு தவறுவதில்லை. இதே போல அம்பேத்காரையும், பெரியாரையும் தனியே படித்து வாழ்பவர்கள் கூட இறுதியில் தனிமை காரணமாக இந்துத்வ 'பெரு'மரபில் சங்கமித்து விடுகிறார்கள். அதற்கு தோதாக அப்பெரியவர்கள் கண்ட இயக்கங்கள் இன்று தோற்றிருக்கின்றன. வீரமணியின் பகுத்தறிவு அவரது மகனை பட்டாபிஷேகம் செய்து பார்ப்பதற்கே சரியாக இருக்கும் போது பெரியாரை பரப்புவதெல்லாம் எங்கனம் சாத்தியமாகும்?

தீபாவளிக்கு புதிய உள்ளடக்கத்தை கொடுக்கலாம் என்கிறார் ரோசா வசந்த். ஏதோ நல்லது வெல்லட்டும், கெட்டது தோற்கட்டும் என்றாவது மக்களின் இந்த பண்டிகை மனோபாவத்தை ஆதரிக்கலாமே என்பதுதான் இந்த வாதம். கூடுதலாக குழந்தைகளின் கொண்டாட்டத்தையாவது அங்கீகரிக்கலாம் என்பது இதன் உட்கிடை. பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்பையெல்லாம் கட்டுடைத்து உண்மைகளை புதிய உள்ளடக்கத்தில் கொண்டு சேர்க்கும் பணிதான் நமக்குத் தேவையான ஒன்று. பார்ப்பன எதிர்மரபை சாருவாகனர் தொடங்கி, சம்புகன், நந்தன், பெரியார் வரைக்கும் நாம் கண்டுபிடித்து ஒன்று சேர்த்து பெரும் தீயாய் பற்றவைக்கும் கடமை இருக்கும் வேளையில் தீபாவளியை எப்படி அங்கீகரிப்பது? தீபாவளியை மக்களிடம் புரியவைக்கும் முயற்சிக்கு பதிலாக அதற்கு புதிய கதை ஒன்றை கதைக்கும் முயற்சியின் அவசியம் என்ன?

நமது குழந்தைகளுக்கு பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆக்கிரமிப்பு கதைகளை சொல்லித் தரவேண்டும். அதிலிருந்து விடுபடும் அவசியத்தை தொடர்ந்து கற்பிக்க வேண்டும். மனித குலம் பெருமைப்படும் தினங்களின் முக்கியத்துவத்தை சொல்லித் தரவேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தீபாவளியின் பட்டாசு, புதுத்துணிகளுக்கு அடிபணியவேண்டுமென்றால் குழந்தைகள் வளர்ந்த பிறகு குஜராத்'இந்துக்கள்' போலத்தான் இருப்பார்கள், பரவாயில்லையா?

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புக்களின் தோழர்களது குடும்பத்தின் குழந்தைகளை அப்படித்தான் வளர்க்கிறோம். கோடை விடுமுறையில் அவர்களுக்கென்று விசேட முகாம்களை தமிழகம் எங்கும் நடத்துகிறோம். அதில் அவர்கள் பற்றியொழுக வேண்டிய மதிப்பீடுகளை குழந்தைகளுக்கேற்ற வடிவில் கொண்டு செல்கிறோம். எங்கள் குழந்தைகளிடம் தீபாவளி குறித்த ஏக்கம் இருப்பதில்லை. ஏனெனில் அங்கே நவம்பர் புரட்சி தினம் என்ற மாற்று உள்ளது. மாற்று இல்லாதவர்கள்தான் தீபாவளிக்கு புது கதை வசனம் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் இப்படி சொல்லத் தோன்றுகிறது. மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதால் அஞ்சத் தேவையில்லை. அதை நமது முயற்சியால் இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் மாற்ற முடியும். இந்திய உழைக்கும் மக்கள் பார்ப்பனியத்தை வென்று பெற்ற உரிமைகளே அதற்கு சான்று. சுருங்கக்கூறின் இந்தியாவில் பார்ப்பனியத்தின் இந்து மத மரபு, அதை எதிர்க்கும் புரட்சிகர மரபு என்று இரண்டுதான் இருக்க முடியும். புரட்சிகர மரபைத் தெரிவு செய்தவர்களிடம் ஊசலாட்டம் இருக்க வாய்ப்பில்லை. இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒரு இல்லாத இடத்தை தேடிக்கொண்டிருக்கும் 'முற்போக்காளர்கள்'தான் இங்கே பரிதாபத்திற்குரியவர்கள். தீபாவளியின் கொண்டாட்ட வெள்ளத்தில் மூழ்கி கரைசேர முடியாமல் தத்தளிப்பவர்கள் இவர்கள்தான்.