இந்து புராணக் குப்பைகளில் சூப்பர் ஸ்டார் அவதாரம் என்று போற்றப்படும் கிருஷ்ணன், என்ற கிரிமினலின் லீலைகள் எப்படி வருணிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் படித்திருப்போம். கிருஷ்ணன் கோபியர்களின் சேலையைப் பிடித்து இழுத்தது, குளத்தில் குளிக்கும் போது எட்டிப் பார்த்தது போன்ற 'ஈவ் டீசிங்' வேலைகளை அன்றைய வியாசனில் இருந்து நேற்றைய கண்ணதாசன் வரை எப்படியெல்லாம் விதந்தோதி எழுதியிருந்தார்கள் என்பதைப் பார்த்திருக்கிறோம்.
அவன் துவாபர யுகத்தில் வெண்ணை திருடித் தின்றதையும், கோபியரோடு குத்தாட்டம் போட்டதையும் புராணமாகவும் வரலாறாகவும் போற்றும் ஒரு தேசத்திற்கு கலியுகத்தில் மீண்டும் ஒரு 'அவதாரம்' எழுந்தருளினால் காட்சிகள் எப்படியிருக்கும் என்பதை கடந்த சில நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த மாதம் 6ம் தேதி இந்திய ஆளும் வர்க்கத்தின் சமூகத்திலும் தரகு முதலாளிகளின் சமூகத்திலும் 'ஒபாமாவதார்' எழுந்தருளியது. அவதாரம் சும்மா வருமா…? கூடவே உளவுத்துறை, ஒற்றர்கள், அமெரிக்க அரசு அதிகாரிகள், பாதுகாப்புக்காக கமாண்டோக்கள், பத்திரிகையாளர்கள் என்று தன்னோடு சேர்த்து ஒரு மூவாயிரம் பேரையும் கூட்டி வந்துள்ளார். இந்த மந்தையையும், மந்தையின் மேய்ப்பரையும் பாதுகாக்க அமெரிக்க அரசு நாளொன்றுக்கு 900 கோடி ரூபாய் செலவு செய்கிறதாம். மூன்று நாள் கணக்கு – சுமார் 2700 கோடிகள்! கொஞ்சம் காஸ்ட்லியான அவதாரம் தான். போகும்போது "பில்லை சார் கையில கொடுத்திடு" என்று மன்மோகன்சிங்கை கையைக் காட்டி விட்டு பரிவாரங்கள் கிளம்பிவிடும். 2700 கோடி என்பது அமெரிக்காவின் செலவுக் கணக்கு தான் – இதற்குச் சற்றும் குறையாத வகையில் இந்திய அரசும் மொய் வைத்திருக்கும். மொய்க் கணக்கு நோட்டை நாம் எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது.
வந்து இறங்கியுள்ள துரைமார்களுக்கு துரைசானிகளுக்கும் மனம் கோணாமல் சேவை செய்து விட வேண்டும் என்ற பதைப்பில் இந்திய ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் நாணிக் கோணிக் கொண்டு நிற்பதைக் காணக் கண் கோடி வேண்டும். மும்பை தாஜ் ஓட்டலின் அத்துணை அறைகளையும் ஒபாமாவதாருக்கும் அவரின் சம்சாரவதாருக்குமாகச் சேர்த்து முன்பதிவு செய்து விட்டார்கள்.
சீமைத்துரைக்கும் அவரது பரிவார தேவதைகளுக்கும் லோக்கல் சோம பானமா ஊத்திக் கொடுக்க முடியும்? இவர்களுடைய தாக சாந்திக்காக வாங்கப்பட்டிருக்கும் சீமை பானம் பாட்டில் ஒன்றின் விலை மட்டும் 5 லட்சம் ரூபாயாம்! மூவாயிரம் பேருக்கும் மூன்று நாட்களுக்கு "தண்ணி செலவு" மட்டும் எவ்வளவு ஆகுமோ தெரியவில்லை. தலைக்கு "ஆஃப்" அடித்தாலும் மூணு நாளுக்கு 225 கோடி ரூபாய் கணக்கு வருகிறது.
அப்புறம் இந்த 3000 பேருக்கும் கம்பெனி கொடுத்த வகையில் நம்மூர் அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுக்கான செலவு, அனைவருக்குமான சாக்கனா செலவு இதெல்லாம் தனி. மொத்தத்தில் என்ன செலவு ஆகியிருக்கும் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இதெல்லாம் அரசாங்க ரகசியங்கள். அமெரிக்க சக்ரவர்த்தி திவாலாகி டவுசர் கிழிந்த நிலையில் விஜயம் செய்யும்போதே இவ்வளவு தடபுடலான வரவேற்பு! இன்னும் இருக்கவேண்டிய படி இருந்தால் என்ன நடக்குமோ, கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
"ரெம்ப நல்லவர்" என்று அமெரிக்காவிடம் பேரெடுத்தவரான, இதே மன்மோகன் சிங் தான் அழுகி வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க அத்தனை பகுமானம் காட்டியவர். முதலாளித்துவ ஊடகங்களுக்கு இந்த ஆபாசங்களெல்லாம் ஒரு பொருட்டேயில்லை – மிஷேல் ஒபாமா "பாண்டி" விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, புருசனோடு சேர்ந்து டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் கதை கதையாக முன்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.
செத்துப் போன பார்ப்பன இந்து மதத்தைப் புதைக்காமல் விட்டதைப் போல இந்த அதிகாரவர்க்கத் தரகர்களையும் விட்டுவிட்டால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் இந்த ஒபாமாவதார ஆபாசங்களும் கிருஷ்ணாவதாரக் கதையைப் போல் ஒரு புராணமாக செட்டில் ஆகிவிடும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை.
இந்தியாவின் 'பெரும்' இடதுசாரிக் கட்சியான சி.பி.எம் கட்சி தமது பலத்தை அணிதிரட்டாமல் ஒபாமாவுக்கு வெறும் அடையாள எதிர்ப்பு காட்டப்போதாக அறிவித்ததையே பொறுக்க முடியாமல் ஆன்மீகப் பேரொளி சிரீ.சிரீ ரவிசங்கர் கண்டித்திருக்கிறார்.
ஆளும் வர்க்கத்துக்கே மிகவும் பிடித்தமான 'தீவிரவாதப்' பிரச்சினையில் தான் சரியாக ஒத்துழைக்கவில்லை என்பது அவர்களது மனக்குறை. அதற்கே இந்த சாமியார் குதிக்கிறார். 'அதிதி தேவோ பவ:' என்ற ஹிந்து கலாச்சாரமே பாதிக்கப்பட்டு விட்டதாக பதறுகிறார். ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாகக்கூறி டாக்டர் ஸுப்ரமண்யம் ஸ்வாமி அவர்கள், ஸுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் போடக்கூடும். ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளும் களத்தில் குதிக்கக் கூடும்.
ஒபாமா வருகையின் ஒவ்வொரு நொடியும், ஆளும் வர்கத்தின் பவ்யமும், தரகு முதலாளி வர்க்கத்தின் ஏக்கப்பார்வைகளும் முதலாளித்துவ ஊடகங்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காட்சி தான் பாக்கி; ஒபாமாவும் மிஷேலும் நடந்து வரும் போது 'எசமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்…' என்று பாடிக் கொண்டே சோனியாவும் மன்மோகனும் துண்ணூறு பூசிக் கொள்ளும் காட்சி!
வாராது வந்த இந்த மாமணி ஒன்றும் சும்மாங்காச்சுக்கும் இந்தியாவுக்கு இன்பச் சுற்றுலா வரவில்லை. இப்போது அமெரிக்காவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பொருளாதாரப் பெருமந்தத்தைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஒபாமா, தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. அவர் கொண்டுவந்த காப்பீட்டு மசோதா அமெரிக்கர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்நாட்டில் பணப்புழக்கத்தையும் வேலைவாய்ப்பையும் தூண்டிவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
இந்தப் பின்னணியில்தான் இந்தியா இராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதத்திற்கு உயர்த்தியுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடிகள் ($30 Billion) மதிப்புக்கு இராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய இந்திய அரசு பட்ஜட் ஒதுக்கீடு செய்துள்ளதையும் இதனுடன் இணைத்துப் பார்த்தால் ஓரளவு தெளிவான சித்திரம் கிடைக்கும்.
மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுச் செயலர் ராபர்ட் ஓ ப்ளேக்கின் கூற்றுப்படி, அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்கள் இந்திய பாதுகாப்புத் துறையின் டென்டரில் பங்கேற்கிறது – இந்த டென்டரை அமெரிக்கா வென்றால் அது அமெரிக்காவில் 27,000 வேலைகளை உருவாக்கும் என்கிறார் பிளேக். அவர்கள் எப்போதுமே தொழிலாளிகளுக்கு கிடைக்கப்போகும் "ஜாப்" பற்றித்தான் கணக்கு சொல்வார்கள். முதலாளிகளுக்கு கிடைக்கப் போகும் இலாபக்கணக்கை சொல்வது அமெரிக்க மரபு அல்ல. அந்த இலாபமும், இந்திய பாதுகாப்புத் துறையின் சுயேச்சைத் தன்மையைக் குலைப்பதால் கிடைக்கப் போகும் பலனும் தனி கணக்கு. முதலில் F-16 ரக போர் விமானங்கள் டென்டரில் இருந்து நிராகரிக்கப் பட்டதையும், பின்னர் அதை திரும்பச் சேர்த்துக் கொண்டதையும் இப்போது நினைவு படுத்திப் பாருங்கள்.
இதுல ஒரு உள் குத்தும் இருக்கிறது. பாக்கிஸ்தான் விமானப்படையிலும் இந்த எஃப்-16 விமானங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் வரப்போகின்றன என்றால் இரண்டில் எது உசத்தியான தேசபக்தி விமானமென்பது தெரியவில்லை.
மேலே சொன்னது இராணுவத் துறையில் மட்டும் தான். உலகளவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15% அணு சக்தியிலிருந்து உற்பத்தியாகிறது. அணு உலைகளினால் ஏற்படும் கதிர்வீச்சு ஆபத்துகளைக் கணக்கில் கொண்டு அங்கே கழித்துக் கட்டப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் சுமத்தவும், அணு தொழில் நுட்பத்தில் இந்தியா பெற்றிருக்கும் சுயேச்சைத் தன்மையைக் குலைக்கவும் போடப்பட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அணு உலைகளை அமைப்பதிலுயும் இந்திய அரசு அந்நிய முதலீடுகளை அனுமதித்திருக்கிறது.
இப்படி இறக்குமதி செய்து நிறுவப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பில் இருந்து அந்நிய முதலாளிகளைக் கழற்றி விடும் வகையிலான சட்டத்தையும் அண்மையில்தான் மன்மோகன் அரசு நிறைவேற்றியிருக்கிறது தொழில்நுட்பக் கோளாறுகள், இயந்திரக் கோளாறுகள், பாதுகாப்புக் குறைபாடுகள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளுக்கான பொறுப்பில் இருந்து அமெரிக்க, அந்நிய முதலாளிகளைத் தப்புவிக்கும் CSC (Convention for supplimentary compensation for nueclear damage) ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது. எல்லாம் திட்டமிட்டபடி வரிசைப் படி செய்து முடித்ததற்காக தன் அடிமைகளை ஒரு வார்த்தை பாராட்டி விட்டு ஒரு மேஸ்திரி பார்வை பார்த்து விட்டுச் செல்லவும், அப்படியே சம்சாரத்தோடு தீவாளி கொண்டாடவும் ஒபாமா வந்து விட்டார்.
இந்திய அமெரிக்க அறிவுத்துறை முன்முயற்சி, விவசாயத்துறையில் அமெரிக்கா கொண்டு வரும் உமியையும், இந்தியா கொண்டுவரும் அவலையும் ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதித் தின்பதற்கான ஒப்பந்தம், அப்புறம் 4 கோடி குடும்பங்களின் வயிற்றுப் பிழைப்பான சில்லறை வணிகம் முதலான சில்லறை சமாச்சாரங்களை அமெரிக்காவுக்கு திறந்து விடுவதற்கான சுபமுகூர்த்த நாட்கள்.. போன்றவை இந்த விஜயத்தின் போது முடிவாக இருக்கின்றன.
திவான் பகதூர் மன்மோகன் சிங்கின் விசுவாசத்தையும் சேவையையும் மெச்சி, தெற்காசியப் பிராந்திய பாதுகாப்பு என்ற எல்லையைத் தாண்டி, ஆப்பிரிக்கா உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவின் சார்பில் ரோந்துப் பணியில் ஈடுபடும் "பங்களா நாய்" பதவியையும் இந்தியாவுக்கு வழங்கவிருக்கிறார் ஓபாமா.
குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு, கையது கொண்டு வாயது பொத்தி, "எசமான,.. அப்டியே இந்த பாகிஸ்தானை 'லைட்டா' கண்டிச்சி ஒரு வார்த்தை ஒங்க வாயால சொல்லிட்டு போனீங்கன்னா…" என்று ஒபாமாவிடம் இழுத்துப் பார்த்தார் மன்மோகன்சிங்.
"பாகிஸ்தானில் குழப்பம் நிலவுவது (அதாவது நீ குழப்பம் விளைவிப்பது) உனக்கு நல்லதல்ல. பாகிஸ்தான் வளமாகவும், வலிமையாகவும், ஸ்திரமாகவும் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது" என்று கூறி நறுக்கென்று மன்மோகன் சிங்கின் தலையில் ஒரு குட்டு குட்டி விட்டார் ஒபாமா. டர்பன் மறைத்திருப்பதால், வீக்கம் வெளியில் தெரியவில்லை. "இருக்கட்டும்.. இருக்கட்டும்… அதனாலென்ன.. சும்மா ஒரு இதுக்கு சொன்னேன் மன்னா…" என்று தலையைத் தடவிக் கொண்டுவிட்டார் மன்மோகன்சிங்.
பரமசிவனுக்கு ஒரு பாம்பு. அமெரிக்காவின் கழுத்திலோ இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு பாம்புகள். இருந்தாலும் "நீதான் நல்ல பாம்பு" என்று இந்தியாவுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார் ஒபாமா.
மொதல்ல நல்லவரா இருந்தாதானே அப்புறமா இந்தியா வல்லவராக முடியும்?
திரும்பிச் செல்லும் போது ஒபாமார மிஷேலிடம் சொல்வாராயிருக்கும் – "நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் ரெண்டு பேருக்கும் நாக்குதான் கொஞ்சம் நீளம். ஓயாமல் நக்கித் தொலைக்கிறார்கள் " என்று!