ஈழ மண் ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கிக் கொண்டிருந்த சமயம் எதிரிக்கு ஆப்பு வைக்குமாற் போல் பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது. போர்மேகம் கவிந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது.
தமிழர்களின் ஆட்சிப் பரப்பெல்லை சுருங்கிக்கொண்டிருந்தது. தொடர் இரசாயன குண்டுவீச்சுக்கள், பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சன்னங்கள் என்று வன்னி அதிர்ந்துகொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பிரதேச எல்லையைக் கடக்க சிங்களம் தொடர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தது.
சிறிய பகுதிக்குள் மக்கள் அனைவரும் குவிந்திருந்தமையால் இழப்புக்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. உணவு, குடிநீர், மருத்துவம் கிடைப்பதே பெரும் சிரமமாக இருந்தது. சிங்களத்தின் படைகளின் எண்ணிக்கையும், உலக நாடுகளின் பலத்த ஆதரவும், எதிரியின் புதுத் தொழில்நுட்பமும் எமக்குப் பாதகமாக அமைந்து, கடுமையான இழப்புக்களை எமது தரப்பு சந்தித்த போதும் போராளிகளின் மனஉறுதியும், வீரமும் எதிரியை எதிர்த்து போரிட வைத்ததோடு, அவனை முன்னே நகரவிடாது தடுத்தும் வைத்திருந்தது.
இந்நிலை தொடருமானால் நாம் இன்னும் பலத்த இழப்புக்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாதவொன்றாகிவிடும் என்பதை உணர்ந்த தலைமை களத்திற்கேற்ப முடிவெடுத்துச் செயற்பட முனைந்தது.
முன்னேறி வரும் எதிரியை சற்றே பின்தள்ள வேண்டிய தேவை தலைமைக்கு ஏற்பட்டது. இதற்காக களமுனையின் நிலையை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்த தலைமை குறைந்த ஆளணியுடன் எதிரிக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தக் கூடியவாறான தாக்குதல் ஒன்றை நடாத்தி, வன்னியின் களமுனையின் போக்கையும் தமிழரின் விதியையும் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டு, அனைத்துத் திட்டங்களும் தயாரானது.
மீண்டும் சிங்களத்தையும் அதற்கு உதவி புரியும் உலக வல்லரசுகளையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குவதற்காக தாக்குதல் திட்டம் இரண்டாக வகுக்கப்பட்டது.
1. முன்னேறி வரும் எதிரிக்கு ஊடறுப்புத்தாக்குதல் மூலம் பெரும் இழப்பைக் கொடுத்து, படையணிகள் பல கோணங்களில் முன்னேறுதல்.
2. சிங்களத்தின் குகைக்குள் சென்று கரும்புலிகளின் சிறப்புப் பிரிவு பெரும் அழித்தொழிப்பு நடவடிக்கையைச் செய்ய வேண்டும்.
ஊடறுப்புப் தாக்குதலுக்கான பொறுப்பை எமது மூத்த தளபதிகளில் ஒருவரான 55 இடம் ஒப்படைக்கப்பட்டது. அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான பொறுப்பை விசேட தாக்குதல் தளபதி ஒருவர் பொறுப்பெடுத்தார்.
அதற்காக கொமாண்டோ கரும்புலிகள் அணியிலிருந்து 26 பேர் கொண்ட குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு, அணித்தலைமையாக பெண்போராளி ஒருவர் நியமிக்கப்பட்டார்.
முதலாவதாக ஊடறுப்பு அணி தாக்குதலைத் தொடங்க வேண்டும். சண்டை குறித்த இலக்கினை அடைந்ததும் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான அணியை தாக்குதல் இலக்கு நோக்கி நகர்த்துதல். இதுதான் திட்டம்.
ஊடறுப்பு தாக்குதலுக்கான நடவடிக்கையினை 55 உடன் தளபதி லோரன்ஸ் அவர்களும் களத்தில் இறக்கப்பட்டார். இவர்களுடன் இணைந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல களமுனைத் தளபதிகள் ஒன்றுகூடி அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். தமிழ் இனத்தின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதாக அமையப்போகும் இந்த முதல் கட்டத் தாக்குதலுக்காக சுமார் ஆயிரம் பேர் கொண்ட தாக்குதல் அணி தயார் செய்யப்பட்டது. தாக்குதலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கென அணிகள், தமது நகர்விற்காகக் காத்திருந்தனர்;.
மார்ச் மாதத்தின் மாலைப் பொழுதொன்றில் தொடர் விமானத் தாக்குதலுக்கும், எதிரியின் சற்றலைட் கண்காணிப்புக்கும் மண்ணைத் தூவிவிட்டு புலிகளின் தாக்குதல்அணிகளும், முதன்மைத் தளபதிகளும் சாலைப்பகுதியிலிருந்த சிறப்புப் பாசறையில் ஒன்றுகூடினர். தாக்குதலுக்கு பொறுப்பாகவிருந்த தளபதி 55 தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்தத் தொடங்கினார்;.
"இந்தச் சண்டைதான் எங்கட தலைவிதியை மாற்றி எதிரிக்கு தலையிடி கொடுக்கிறதாய் இருக்கும்;. எனவே அதற்கான திட்டமும் கடுமையான பயிற்சியும் உங்களுக்கு தரப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் உறுதியோட உங்களுக்கு தரப்பட்டிருக்கிற இலக்கைத் தாக்கியழிக்கிறதில உறுதியோட செயற்படவேணும். மற்றது நாங்கள் இப்ப செய்யப் போற ஊடறுப்புத் தாக்குதல் தான் சிறப்புக் கொமோண்டோக்காரரை அவையின்ர இலக்கை நோக்கிச் செல்ல பாதையெடுத்துக் கொடுக்கப் போகுது. எனவே எல்லாருடைய முழுப்பங்களிப்பும்தான் எமது வெற்றியைத் தீர்மானிக்கப்போகுது. இரவு குறித்த நேரத்தில நகர்வை மேற்கொள்ளக் கூடியவாறு ஆயத்தமாகுங்கோ. அதற்கான ஒழுங்கை தளபதி லோறன்ஸ் மேற்கொள்வார். இனி நீங்கள் உங்களுக்குரிய இடங்களுக்குப் போங்கோ."
என்றவாறு ஏனைய தளபதிகளுடன் அவர் பின்கள வேலைகளை நகர்தச் சென்ற பின், போராளிகள் ஒவ்வொருவரும் தமது சக தோழர்களுடன் கதைத்தபடி இரவு நகர்வதற்கு தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர்;.
இருள் என்ற கறுப்புப் போர்வை மூடத் தொடங்கிய போது தாக்குதல் அணிகளின் நகர்வும் ஆரம்பித்தது. ஊடறுப்புத் தாக்குதல்களுக்கான அணிகள் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறு சிறு பிளாற்றூன்களாகப் பிரிந்து தாக்குதல் இலக்கை நோக்கி நகர்ந்தன. இதே வேளையில் சிறப்புக் கொமோண்டோ அணியும் நகரத் தொடங்கியது. ஊடறுப்பு அணிகளில் ஒரு பகுதி சிறப்பு அணிக்கான பாதையைத் திறப்பதிலும், அவர்களிற்கான காப்பை வழங்குவதிலும் ஈடுபட்டன. சிறப்பணிகள் எல்லையைக் கடக்க, ஊடறுப்பு அணிகள் விசுவமடுப் பகுதியில் அமைந்திருந்த படைத்தளத்தின் மீது உக்கிர தாக்குதலை மேற்கொண்டன.
இத் தாக்குதலின் போது எதிரிக்கு பெருமளவு படைச் சேதத்தை ஏற்படுத்தியதுடன் அங்கிருந்த ஆட்லறிகளைக் கைப்பற்றி, எதிரியின் ஆனையிறவுப் படைத்தளத்தை நோக்கி எம்மவர்கள் எறிகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டனர். தாக்குதலின் தீவிரத்தால் எதிரி நிலைகுலைந்த நேரத்தைப் பயன்படுத்தி சிறப்பணிகள் தமது இலக்கை நோக்கி விரையத்தொடங்கினர்.
ஊடறுப்பு அணிகளின் தாக்குதலை முகம் கொடுக்க புதிய படையினர் வருவிக்கப்பட்டு, எமது ஊடறுப்பு அணி பெட்டி வடிவத்தில் முற்றுகையிடப்படுகின்றது. இந்தச் சமயத்தில் தாக்குதலை வழிநடத்திய முன்னணித் தளபதிகள் விழுப்புண் அடைகின்றனர்.
எது நடந்த போதும் பின்வாங்க சிறிதளவும் விருப்பம் இன்றிப் போராளிகள் ஓர்மத்துடன் சண்டையிட்டவண்ணம் இருந்தனர். உக்கிரமான சண்டையால் இழப்புகள் அதிகமாகிக் கொண்டிருந்தது. 'இனி அங்கே நின்று அதிகளவான போராளிகளை இழக்க வேண்டாம் முற்றுகையை உடைத்து பின்வாருங்கள்' என்ற தலைமையின் உத்தரவிற்கமைய ஊடறுப்பு அணி தளம் திரும்புகின்றது.
உள்நுழைந்த அழித்தெழிப்பிற்கான சிறப்பு அணிகள் கட்டளைப்பீடத்துடன் தொடர்பினை மேற்கொண்டபடி நகர்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பத்து நாட்களின் பின்னர் அவர்களுக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டது. நகர்வின் போது இவர்கள் வைத்திருந்த செய்மதித் தொலைபேசி தண்ணீருக்குள் விழுந்தமையால் அதுவும் செயற்படாமல் போய்விட்டது. எனவே இவர்களுடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.
சிறப்பு அணியின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக கட்டளைப்பீடத்தால் மூன்று முதன்மைப் போராளிகள், அவ்வணி நகர்ந்து சென்ற பாதையூடாக எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் சிறப்பணியின் தொடர்பை எடுப்பதற்கு தேடியலைந்து முடியாது போக, குறிப்பிட்ட நாட்களின் பின்பு பின்தளத்தினை நோக்கி நகர்ந்து வந்து தகவல்களைக் கொடுக்கும்போது ஏற்பட்ட சம்பவமொன்றில் மூவரும் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள நேரிட்டது.
சிறப்பு அணியின் தாக்குதல் திட்டமே எமது தலைவிதியை மாற்றியமைக்க வல்லமை மிக்கதாக இருந்தமையால் அதனது தொடர்பை எடுக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே நாட்டுக்கு வெளியேயுள்ள பல வளங்களைப் பயன்படுத்தி அணியுடனான தொடர்பை ஏற்படுத்த பல முயற்;சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சில தினங்களின் பின்னர் மாற்று ஆதரவு ஆற்றல்களைப் பயன்படுத்தி 'வோக்கி' மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இது சிறப்பு அணியினரை உற்சாகத்துடனும், வேகத்துடனும் நகர உதவியது. நகர்ந்து கொண்டிருந்த சிறப்பணிகள் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில்; தங்களுக்கு நடந்த அனைத்துச் சம்பவங்களையும் கட்டளைப்பீடத்திற்கு தெரிவித்திருந்தனர்.
இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் வோக்கியல் இனி தொடர்பு கொள்வது கஸ்ரமாக இருக்கும் நாங்கள் தரப்பட்ட வேலையை முடிப்போம் என்று கூறியபடி அணி நகரத் தொடங்கியது. இதன் பின்னர் அணிக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு இருக்கவில்லை தமக்குத் தரப்பட்ட இலக்கை அழிக்கவேண்டும் என்று தாக்குதல் அணி ஒருபக்கமும்,
இனி எப்படித் தொடர்பினை மேற்கொள்ளலாம்? எனவும் அதற்கான மாற்று ஒழுங்குகளைச் செய்தபடி கட்டளைப்பீடமும்.
26 பேர் கொண்ட சிறப்பு அணியில் ஒரேயொரு பெண்போராளி மட்டுமே மே மாதம் 2ம் நாள் தன்தளத்திற்கு வந்து தனது போராளித் தோழர்களைச் சந்திக்கிறார்…………..
அப்படி என்றால் ஏனைய 25 பேரும் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?
முற்று முழுதாக உண்மைச்சம்பவங்களுடன் களத்திற்கு திரும்பிய போராளியின் சாட்சியங்களுடன் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டும்.
எத்தனையோ தியாகங்கள்!
எத்தனையோ அர்ப்பணிப்புகள்!
இறுதி வரை எமது வாழ்விற்காக இரத்தம் சிந்தியவர்கள்!
தம்மை ஆகுதியாக்கியவர்கள்!
இவர்களின் வரலாறுகள் என்றைக்கும் வீணாகப் போகக் கூடாது என்பதற்காகவே இந்த வரலாற்றுப்பதிவை மக்களாகிய உங்களுக்குத் தருகின்றோம்.