நவம்பர் 7 மகிழ்ச்சியின் புரிதல்
நவம்பர் புரட்சி! மகிழ்ச்சி!
சரி…. நாம் என்ன செய்யப் போகிறோம்?
தொழிலாளர் வர்க்கத்தின் துயரங்களுக்காக
அழாத விழிகள்….
தொழிலாளர் வர்க்கத்தின் வெற்றிக்காக
சிரிக்காத உதடுகள்…
தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக
இயங்காத இதயங்கள்…
இருந்தாலும் இறந்தனவே!
பிறப்பின் உருவத்தை
உன் கருப்பை தீர்மானிக்கலாம்
பிறப்பின் உணர்ச்சியை… இலட்சியத்தை
உன் கருத்துதான் தீர்மானிக்கிறது…
மனிதனாக வேண்டுமா? வா!
பாட்டாளி வர்க்க பக்கம்!
புரட்சியின் மகிழ்ச்சியை
துய்த்திட வேண்டுமெனில்,
புரட்சியின் வலிதனை உணர்ந்திட வேண்டும்!
புரட்சியின் வழிதனில் துணிந்திட வேண்டும்!
நீரலை எதிர்த்து… ஓர் இலைப்பற்றி
தன்னந்தனியாய் போராடிப் போராடி
கரைசேரும் சிற்றெறும்பின்
விடாப்பிடி வேண்டும்!
இடையில் ஆயிரம் இன்னல்கள் தாண்டி…
இல்லற முரண்களின் சுயநலம் தாண்டி…
உடன்வரும் தோழர்கள் அன்பினில் தோய்ந்து
முரண்படும் தோழமை இயங்கியல் அறிந்து
முற்றிலும் புரட்சியே சரியென உணர்ந்து
பற்றிடும் உணர்ச்சியில் பாதம் அழுந்து!
புரட்சியின் வேகத்திற்கு நீ பொருந்து! பொருந்து!
பார்! புரட்சியின் இனிமை புரியும் உனக்கு.
என்வேலை… என் சூழல்…
இனிய காதலி… மனைவி, மக்கள்
என தன்நிலை பார்த்து
வேலை செய்வதல்ல புரட்சி,
மக்கள் நிலையைப் பார்த்து
இப்போதே மாறவேண்டும் சமூகம் என
தன்னிரக்கம் தகர்த்து
வேலை செய்வதே புரட்சி!
அய்வகை நிலமும், செய்தொழில் அனைத்தும்
உன் கண்ணெதிரே அழிகிறது!
அந்நிய மூலதனத்தின் நச்சுச்சூழலில்
நம் அன்னையின் மார்பில் சுரக்கிறது,
குரோமியமும், காரியமும்.
மான்சான்டோ மலட்டு விதைகளால்
இந்தியத் தாய்களின் கருப்பையும்
இனி தரிசாக…
மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்…. வெண்டைக்காய்…
மன்மோகன்சிங்…. ப.சிதம்பரம்…
இந்த வரிசையில் உன்னையும் சேர்க்க சம்மதமா?
நவம்பர் புரட்சியோடு அடையாளப்படுத்திக்கொள்ளும்
உன்னையே நம்புகிறது ஊர், உலகம்.
உறியப்பட்ட இயற்கை வளங்களின்
அரசியல் புரியாமல்…
ஒரு வாய் தண்ணீருக்காக
உன் வாசல் வந்து கத்துகிறது மாடு!
ஓசையற்ற தறிக்கட்டைகளின்
உள்சோகம் நீ உணராவிட்டால்,
கடைசியில் உன் இதயமும்
செல்லரித்துப் போகலாம்!
கயர்லாஞ்சியிலோ… கடலூர் பக்கத்திலோ
சிதைக்கப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின்
போராட்ட உணர்ச்சியோடு பொருந்தாதவருக்கு
நவம்பர் புரட்சியின் நல்லிசை சொந்தமில்லை!
குறுஞ்செய்தி… பரிமாற்றம்…. மகிழ்ச்சி…
விழா இரைச்சலுக்கிடையே… விட்டுவிடாதே!
'நோக்கியா கட்டிங் மிசினில்' பணிக்கொலையான
தொழிலாளி அம்பிகாவின் துடிதுடித்த குரல்
உனக்கு கேட்கிறதா?
நச்சரிக்கும் அந்தத் தோழியின் குரல்
இந்த நவம்பர் புரட்சியில் உன்னிடம் வேண்டுவது,
முதலாளித்துவக் கொலைக்களங்களுக்கு எதிராக
ஏதாவது செய் என்பதல்ல…
புரட்சிக்குக் குறைவாக
வேறெதுவும் வேண்டாம் என்பதே!
விழா மகிழ்ச்சியில்…
இந்த வேண்டுகோளை விட்டுவிடாதே,
செய்… வேலை நிறைய இருக்கிறது…
புரிந்துகொள்!
புரட்சியின் பணிச்சுமை ஏற்பவர் எவரோ?
புரட்சியின் மகிழ்ச்சிக்கு
உரியவர் அவரே!
—துரை.சண்முகம்