திராவிட நாட்டு வாழ்த்து
சீருடைய நாட்டு - தம்பி
திராவிட நன்னாடு
பேருடைய நாடு - தம்பி
பெருந்திராவிடந்தான்
ஓர் கடவுள் உண்டு - தம்பி
உண்மை கண்ட நாட்டில்
பேரும் அதற்கில்லை - தம்பி
பெண்டும் அதற்கில்லை
தேரும் அதற்கில்லை - தம்பி
சேயும் அதற்கில்லை
ஆரும் அதன் மக்கள் - அது
அத்தனைக்கும் வித்து
உலதுரு தெய்வம் - அதற்
குருவ மில்லை தம்பி
அல்லி வைத்த ஆப்பி - தம்பி
அதிற் கடவுளில்லை
குள்ளமில்லை தெய்வம் - அது
கோவில்களில் இல்லை
தெள்ளு பொடி பூசும் - தம்பி
சிவன் கடவுளல்ல
(அறுபதுடன் ஒன்று) தம்பி
அரி கடவுளல்ல
அறுமுகமும் அல்ல - தம்பி
ஐங் கையனும் அல்ல
அறு சமயம் சொல்லும் - தம்பி
அது கடவுள் அல்ல
பிற மதத்தில் இல்லை - அந்தப்
பெரிய பொருள் தம்பி
திராவிடர்கள் முன்னே - தம்பி
தெரிந்துணர்ந்த உண்மை
ஒரு மதமும் வேண்டாம் - தம்பி
உண்மை உடையார்க்கே
பெரு மதங்கள் என்னும் - அந்தப்
பேய் பிடிக்க வேண்டாம்
திருட்டுக் குருமாரின் - கெட்ட
செயலை ஒப்ப வேண்டாம்!
காணிக்கைகள் ஒட்டி - நீ
கண்கலங்க வேண்டாம்!
ஏணி ஏற்ற மாட்டார் - தம்பி
(எழுபதுடன்) வாழி!
தோணியினில் ஏற்றி - நல்ல
சொர்க்கம் சேர்க்க மாட்டார்
நாண மற்ற பேச்சை - நீ
நம்ம வேண்டாம் தம்பி
சாதியில்லை தம்பி - மக்கள்
தாழ் வுயர்வுமில்லை
- பாவேந்தர்