அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது என்பது மிக தெளிவு.ராசாவின் மீது நடவடிக்கை எடுக்காத மதிய அரசும் அந்த ஊழலே நடக்கவில்லை என்று மிகபெரிய பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் மாநில அரசும் ஊழலுக்கு துணை நிற்கின்றன என்பது மிக தெளிவு.நியாயங்களையும் நீதிகளையும் பேசி வரும் மத்திய அரசு முதலில் அமைச்சர் ராசாவை நீக்கிவிட்டு விசாரணை நடத்தட்டும், அவர் குற்றமற்றவர் என்று நிருபிக்கப்பட்டால் மீண்டும் பதவிக்கு வரட்டும் அல்லது தண்டனை பெறட்டும் .இதுதான் மக்கள் விரும்புவது .
இது தொடர்பாக இன்று வந்துள்ள இரண்டு செய்திகள் :
மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நீக்க பிரதமர் மன்மோகன்சிங், மேலும் தயக்கம் காட்டக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவால் ஒதுக்கீடு செய்யப்பட்ட "2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசையில் சட்ட மீறல்கள் இருக்கின்றன என்ற தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி மற்றும் நீதிபதி எஸ்.எஸ். நிசார் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தலையிட மறுத்துவிட்டது.2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை உரிமங்கள் ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 2007 அக்டோபர் 1-ம் தேதி என தெரிவித்து ஒரு பத்திரிகைச் செய்தியை 2007 செப்டம்பர் 24-ம் தேதி இரவு தொலைதொடர்புத்துறை வெளியிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துவிட்டன.22 வட்டங்களுக்கு விண்ணப்பித்த "எஸ்டெல்' என்ற நிறுவனம் 6 வட்டங்களுக்கான விண்ணப்பங்களை மறுநாளே தாக்கல் செய்துவிட்டது.மற்ற வட்டங்களுக்கான விண்ணப்பங்களும், தொலைதொடர்புத் துறையால் அறிவிக்கப்பட்ட கடைசி நாளுக்கு வெகு முன்பாகவே, அதாவது அக்டோபர் 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டன.இந்தச் சூழ்நிலையில், எவ்விதக் காரணமும் குறிப்பிடாமல், இரண்டாம் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்டு இருந்த.2007 அக்டோபர் 1-ம் தேதி என்பதை, 2007 செப்டம்பர் 25-ம் தேதி என மாற்றி 2008 ஜனவரி 10-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு ஒரு பத்திரிகைச் செய்தியை தொலைதொடர்புத் துறை திடீரென வெளியிட்டது.அதே நாளன்று பிற்பகல் 3.30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என்றும் அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டது.யார் ஒதுக்கீட்டாளர்கள் என்ற தகவல் முன்கூட்டியே விண்ணப்பதாரர்களுக்கு தரப்பட்டாலொழிய அவர்களால் ஒரு மணி நேரத்திற்குள் 1,500 கோடி ரூபாய்க்கான வரைவோலையைச் சமர்ப்பிக்க எப்படி ஏற்பாடு செய்ய முடியும் என்பது புரியாத புதிராக உள்ளது.இந்த நடவடிக்கையின் மூலம் பகிரங்கமாக சலுகை அளிக்கப்பட்டிருப்பதும், உள்ளுக்குள் பேரம் நடைபெற்றிருப்பதும் தெளிவாகிறது. இதைத் தெரிந்து கொள்ளாததன் காரணமாக, பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்களுடைய வரைவோலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பிக்க முடியவில்லை.விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளை பின்னுக்கு கொண்டு சென்றுவிட்டதால்,2007 செப்டம்பர் 25-ம் தேதிக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட தங்கள் விண்ணப்பங்கள் தகுதியற்றவை ஆகிவிட்டன என்பதை எஸ்டெல் போன்ற நிறுவனங்கள் பிறகு கண்டுபிடித்தன.விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி நாளை முன்தேதியிட்டு மாற்றியமைத்த திடீர் முடிவை எதிர்த்துத்தான் எஸ்டெல் நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ். சிஸ்டானி முன்பு நடைபெற்ற இந்த வழக்கில் எஸ்டெல் நிறுவனத்திற்கு வெற்றி கிடைத்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு முன்பு தொலை தொடர்புத் துறை (டி.ஓ.டி.) மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தது.தனி நீதிபதி மற்றும் இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு நடைபெற்ற வழக்கில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டை முதலில் வருபவருக்கு முதலில் கொடுப்பது என்ற கொள்கை மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மாற்றி அமைத்தது ஆகியவை பிரதமரின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவுகள் எனத் தொலை தொடர்புத் துறை தெரிவித்தது.தொலை தொடர்புத் துறையின் வாதங்களையும், விளக்கங்களையும் தில்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நிராகரித்தவுடன், அதனை எதிர்த்து தொலை தொடர்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.அதே சமயத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ். நிசார் ஆகியோர் முன்பு தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் என்ற வாக்கியத்தை தொலை தொடர்புத் துறை நீக்கியுள்ளது.உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள மேல்முறையீடு வெகு விரைவில் நிராகரிக்கப்படும் என்பது தெளிவாகிவிட்டது.இதற்கிடையில் மூன்று வட்டங்களில் பணிகளை ஆரம்பித்த புகார்தாரரான எஸ்டெல் நிறுவனத்திற்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிர்ப்பந்தம் கொடுக்க முடிவு செய்தார் ராசா.தங்களுடைய வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, தொலை தொடர்புத் துறை அமைச்சருக்கு எதிரான புகாரை எஸ்டெல் நிறுவனம் வேறு வழியின்றி 2010 மார்ச் 8-ம் தேதி திரும்பப் பெற்றுக் கொண்டது. இதன் பிறகு, சமாதான ஒப்பந்தம் ஒன்று தயாரித்து கையொப்பமிடப்பட்டது.தொலைத் தொடர்புத் துறை சார்பில், அந்த ஒப்பந்தத்தை உச்ச நீதிமன்றத்தின் முன்பு இந்தியத் தலைமை வழக்கறிஞர் தாக்கல் செய்தார். ஆனாலும், ராசாவுக்கு நிவாரணம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.இதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு இருக்கிறது என்பது எவ்விதச் சந்தேகமுமின்றி தெளிவாகிறது.மத்திய புலனாய்வுத் துறை இந்த வழக்கை தற்போது விசாரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய புலனாய்வுத் துறை உண்மையைக் வெளிக் கொணருவதைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் ராசா எடுப்பார் என்பது தெளிவாகிறது.நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்றால் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசா நீக்கப்பட வேண்டும். தற்போது உச்ச நீதிமன்ற ஆணையும் அதற்கு ஆதரவாக உள்ளது.எனவே, ராசாவைப் பதவி நீக்கம் செய்ய பிரதமர் மன்மோகன் சிங் மேலும் தயக்கம் காட்டக் கூடாது என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதற்க்கு மத்திய அமைச்சர் ராசாவின் பதில் :
"2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு சட்டப்படி தான் செய்யப்பட்டுள்ளது என்று, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிரதமருக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார். கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஜெயலலிதாவால் வேறு என்ன கேட்க முடியும்' என்று பதில் அளித்தார். தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளின்படி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு நடந்துள்ளது. இதுகுறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன். பிரதமருக்கும் இது தெரியும். சட்டம், விதிமுறைகள் குறித்து தெரியாதவர்கள் பேசுவதற்கு என்ன சொல்ல முடியும், என்றும் அவர் கூறினார்.