தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

பென்னாகரம் தொகுதி என்ன நடக்கிறது - ஒரு பார்வை



பென்னாகரம் தொகுதி என்ன நடக்கிறது - ஒரு பார்வை
 
பென்னாகரம் தேர்தல் பிரசாரத்துக்கு, முதல்வர் கருணாநிதி வருவதால், பா.ம.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பென்னாகரம் தொகுதியில், வரும் 20 முதல் 25ம் தேதி வரை, முக்கிய கட்சியின் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில், கடைசியாக நடந்த இடைத்தேர்தல்களில், முதல்வர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்துக்கு செல்லாத நிலையில், பென்னாகரத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்துக்கு திடீர் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது, தி.மு.க.,வினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.கருணாநிதி பிரசாரம் பெருமளவில் கை கொடுக்கும் என, தி.மு.க.,வினர் எதிர்பார்க்கின்றனர்.

தி.மு.க.,வினர் வழங்கும் இலவசப் பொருட்கள் குறித்து தேர்தல் கமிஷன், போலீஸ் என, புகாருக்கு மேல் புகார்களை கொடுத்து, ஆளுங்கட்சியினர் மீதான அதிருப்தியை தொகுதி யில் பா.ம.க.,வினர் ஏற்படுத்தியுள்ளனர்.தி.மு.க.,வின் இந்த நடவடிக்கைகள் வெட்ட வெளிச்ச மாகியதால், அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் சோர்வும், கட்சி தலைமையின் கண்டிப்புக்கும் தி.மு.க.,வினர் ஆளாக நேரிட்டது.

தொகுதியில் பா.ம.க., ஏற்படுத்தியுள்ள மாயையை உடைக்கவே, கருணாநிதி பிரசாரத்துக்கு கடைசி நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.முதல்வர் கருணாநிதியின் இந்த திடீர் பிரசார அறிவிப்பால், பா.ம.க., - அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உள்ள அனைத்து வன்னியர் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், பேச வாய்ப்பு வழங்கப் பட உள்ளது.

வன்னியர் அமைப்புகளில் இருந்தவர்கள், பா.ம.க.,வில் இருந்த போது ஏற்பட்ட இன்னல்களை குறிப்பிட்டு பேசவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதே போல், 'வன்னியர்களுக்கு தி.மு.க., அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டும், இன்னும் உருக்கமாக முதல்வர் கருணாநிதியின் பேச்சு அமையும்' என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பென்னாகரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 23ம் தேதி இரவு சென்னையில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல்வர் கருணாநிதி செல்கிறார். மொரப்பூர் ரயில் நிலையம் சென்றதும், அங்கிருந்து, தர்மபுரி செல்கிறார். 24ம் தேதி மாலை பென்னாகரம் அண்ணாதுரை திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகிறார். அன்று இரவே மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை புறப்பட்டு செல்வதாக தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் வருகையால் சுவர் விளம்பரங்கள் புதுப்பிப்பு:பென்னாகரம் தொகுதிக்கு, முதல்வர் கருணாநிதி வருவதையொட்டி, சுவர் விளம்பரங்களை புதுப்பிக்கும் பணியில் தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர்.பென்னாகரம் இடைத்தேர்தல் ஜனவரி 20ம் தேதி நடைபெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தி.மு.க.,வினர் தொகுதி முழுவதும் சுவர் விளம்பரங்கள் செய்தனர்.தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மார்ச் 27ல் இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து பிரசாரம் செய்து வந்த நிலையிலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியுடைய சுவர் விளம்பரங்களே காணப்பட்டன.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., ஆகியோர் பிரசாரம் செய்ய உள்ளனர்.அதனால், பென்னாகரம் - தர்மபுரி சாலையின் முக்கியப் பகுதிகளில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு புதிதாக எழுதப்பட்டு வருகிறது.முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டி கட்சியினர் தர்மபுரியில் டிஜிட்டல் பேனர் தயார் செய்வதில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.

22 - 25 தேதிகளில் ஸ்டாலின் பிரசாரம்:பென்னாகரம் தொகுதியில் துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 22 முதல் 25ம் தேதி வரை, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்கான சுற்றுப்பயண திட்டங்களை தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர்கள் தயார் செய்து வருகின்றனர். பயண திட்டம் குறித்து ஸ்டாலின் பார்வைக்கு எடுத்து செல்லப்பட்டு, ஒப்புதல் கிடைத்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி: தர்மபுரியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, நேற்று பயிற்சி நடந்தது.பென்னாகரம் தொகுதிக்கு வரும் 27ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில், 250 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இப்பணியில் 1,230 மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்கள்275 பேரும் நுண் பார்வையாளர்களாக பணிபுரிய நியனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் பார்வையாளர்களுக்கு நுண் பார்வையாளர்கள் நேரடியாக தகவல்கள் அளிப்பர். ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி, தர்மபுரி டான் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி பி.டி.ஆர்., மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நேற்று நடந்தது.

கனிமொழி பிரசாரம்:பென்னாகரத்தில், வரும் 20, 21ம் தேதியில் கனிமொழி எம்.பி., பிரசாரம் செய்ய உள்ளார்.மொத்தம் 39 கிராமங்களில் பிரசாரம் செய்யும் அவர், ஒவ்வொரு இடத்திலும் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை, வேனில் இருந்து பிரசாரம் செய்ய உள்ளார்.

250 ஓட்டுச் சாவடிகளிலும் 'வெப் கேமரா':பென்னாகரம் இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவு நடக்கும் 250 ஓட்டுச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு நடவடிக்கைகளை, வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு நிகழ்வுகளை ஓட்டுச்சாவடிகளில் பொருத்தப்படும் வெப் கேமராக்கள் மூலம் மாநில தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டு அறை, மாவட்ட தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டு அறையிலும் இன்டர்நெட் மூலம் தெரியும் வகையில் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாப்பாரப்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், மாவட்ட தேர்தல் அலுவலர் அமுதா மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் சஞ்சய்பூஸ் ரெட்டி, அஹுஜா, தேர்தல் அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில், இதற்கான சோதனை நடந்தது.