வாரியம் அமைத்ததும் எல்லா வேலைகள் முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. வாரியம் அமைப்பது அந்த தொழில் புரிபவர்களிற்கு ஒரு அரசு பார்வையிலான அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது அவ்வளவுதான்.
இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டியது, தென்னை மட்டுமே விவசாயம் இல்லை. தென்னை விவசாயம் செய்பவர்கள் பத்து சதவீததினரை தவிர அனைவரும் அரசியல் செல்வாக்குள்ள , அதிகாரமுள்ள பெரும் விவசாயிகள். தென்னை விவசாயத்தை எடுத்து கொண்டால் அதை மட்டுமே நம்பி , கரிசல் பூமியை போல அல்லது வானம் பார்த்த பூமியினது விவசாயிகள் போல, விவசாயம் செய்பவர்கள் இல்லை. அவர்கள் பிற தொழில் செய்பவர்களாக இருப்பார்கள் தென்னையும் பயிரிடும் விவசயிகள இருப்பார்கள் இன்னும் சிலர் வரி கணக்கை தென்னையில் நட்ட கணக்கு காண்பிப்பதற்கான விவசாயம் செய்பவர்கள்.
இன்னும் சில தென்னை விவசாயிகள், அதிகபடியான நிலங்களை வைத்து கொண்டிருப்பவர்கள் நீண்ட காலம் அந்த நிலத்தினை தரிசாக கேட்டு போக விடாமல் இருக்கவும் தென்னை போன்ற பண பயிற்றினை பயிரிட்டு விவசாயம் செய்கிறார்கள். தென்னை மரத்தை உண்டாக்கி பண்ணையாக விற்பவர்களும் உண்டு. ஆக மொத்தத்தில் தென்னை விவசாயிகள் அந்த விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் இல்லை.தென்னை மரம் நேரடியாக தொழில் சார்ந்த பண பயிர். இதனை விவசாயம் செய்பவர்கள் அனைவரும் பெரும் அதிகாரம் உள்ளவர்கள் அல்லது அழுத்தம் கொடுக்க கூடிய இடத்தில உள்ளவர்கள் , அவர்கள் கேட்டார்கள் அரசாங்கம் வாரியம் அமைத்து விட்டது.
மழை பொய்த்தால் வாழ்வும் பொய்த்து விடும் :
கரிசல் பூமியில் , வானம் பார்த்த நிலத்தில் , எந்த பாசன வசதியும் இல்லாமல் வானம் கொடுக்கும் மழை நீரை மட்டுமே நம்பி , ஒரு வருடம் கொடுக்கும் மறு வருடம் மழை இல்லை என்ற நிலையில் விவசாயத்தினை ஒரு பெரும் போராட்டமாய் நடத்தி வரும் கரிசல் காட்டு விவசாயி அல்லது வானம் பார்த்த பூமியின் விவசாயின் வாழ்வுதான் இப்போது மிகவும் அவல நிலையில் உள்ளது. இதை நாம் சொல்வதனால், பாசனம் பெரும் (கிணற்று பாசனம், ஏறி பாசனம், ஆற்று பாசனம் ) விவசாயி நலமாக உள்ளன் என்று அர்த்தம் இல்லை. அவனாவது ஒரு சிறு நம்பிக்கை தண்ணீர் வரும் என்ற நிம்மதியில் இருக்கிறான். ஆனால் வானம் பார்த்த விவசாயி அந்த வானத்தை நம்பி மட்டுமே வாழ்கிறான்.
வரைமுறை இல்லா விவசாய வாழ்வு :
ஆடி பட்ட விவசாயம் என்பதெல்லாம் இப்போது போய்விட்டது. புரட்டாசி மாதம் தான் இப்போது மழையே பெய்ய ஆரம்பிக்கிறது. இந்த புரட்டாசி மாதத்திற்குள் அவன் மூன்று அல்லது நான்கு முறை புழுதியில் விதைக்கிறான் ( அவனது விவசாயம் பெரும்பாலும், பருத்தி, மக்காசோளம், கம்பு, கேழ்வரகு, மிளகாய், உளுந்து தான்), இதில் மிளகாய் நாற்றை நன்றாய் மழை பெய்தால் , பூமி நனைந்த பின்னர்தான் நட்ட முடியும் மற்ற அனைத்தையும் சீட்டு விளையாட்டு போல புழுதியில் விதைத்து , இந்த விதைப்பு வேலையில் அவன் கடனாளி ஆகிவிடுகிறான்.
விவசாயத்தை கெடுக்கும் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் :
நூறு ரூபாய் , தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் "சும்மா" இருந்தால் எண்பது ரூபாய் நிச்சயம் எனும் பொழுது இந்த விவசாய வேலைகளிற்கு யாரும் வருவதில்லை. நவீன கருவிகளை பயன்படுத்து வசதியும் கல்வியும் இந்த விவசாயிக்கு இல்லை. இதனூடேயும் விவசாயம் செய்து, வானம் கொடுக்கும் மழையை நம்பி வாழும் விவசாயி , அவனது வாழ்வு மிக பெரிய போராட்டமே. இந்த போராட்டத்தில் ,போராடி ஓய்ந்து சிறுது அறுவடை செய்து வீட்டில் அவன் வைத்து கொள்ள முடியாது. வாங்கி வைத்துள்ல கடன் அவனை நெருக்கும். சில விவசாயிகள் விலை பொருட்களை களத்து மேட்டிலேயே விற்று விடுவதுண்டு. விலை அவன் வைக்க முடியாது. வியாபாரி வைப்பான்.
விளை பொருள் வங்கி :
இப்படி போராடி விவசாயமே போராட்டமாய் இருக்கும் கரிசல் பூமியின் விவசாயி அல்லது வானம் பார்த்த பூமியின் அனைத்து விவசாயிகளிர்க்கும் ஒரு நலவாரியம் அமைப்பது காலத்தின் தேவை. விவசாயத்திற்கான இட்டு விதைகளை கொடுப்பது, நவீன முறையில் கருவிகளை பயன்படுத்தி விவசாயத்தை அவனுக்கு சொல்லி கொடுப்பது , விளைந்தவைகளை எப்படி சேமிப்பது எனபது போன்ற வசதிகளையும் , அல்லது விலை பொருள் வங்கி என்று ஒன்றை ஏற்படுத்தி அவன் எந்த அளவிற்கு விவசாயம் செய்கிறானோ அந்த அளவிற்கு ,விளை பொருட்களை கணக்கிட்டு , அதற்க்கு ஒரு நிச்சய விலையையும் கொடுத்து , அந்த பணத்தில் பெரும் பகுதியை முன்பணமாய் கொடுத்தால், பின்னர் பொருள் விளைந்ததும் இந்த வங்கியே அந்த பொருட்களை வாங்கி சேமித்தால் , அது அவன் வாழ்வை செழுமையாக்கும் அவனை நம்பி வாழும் கிராமமும் செழிப்பு அடையும்.
தென்னை விவசாயிகள் போல கோரிக்கை வைக்கும் அளவிற்கு ஒழுங்கு படுத்தப்பட்ட அமைப்பாய் இந்த விவசாயிகள் இல்லை. ஒன்றும் அவர்கள் கேட்கவில்லை என்பதற்காய் அவர்களுடைய வாழ்வு மிக சிறப்பாய் உள்ளது என்று அர்த்தம் இல்லை. இப்படி வானம் பார்த்த பூமி விவசாயத்தினை போல இன்னும் பல சங்கடங்களையும் கஷ்டங்களையும் அனுபவிக்கும் விவசாய பகுதிகள் பல உண்டு .அரசாங்கம் அவரற்றை இனம் கண்டு அவர்களிற்கான தேவைகளை நிறைவேற்றினால் , அவர்கள் விவசாயத்தினை தொடர்ந்து செய்வார்கள் , விலைவாசி ஓரளவுக்கேனும் கட்டுபாட்டில் இருக்கும். அல்லது அவர்களும் ஏதாவது ஒரு நகரத்திற்குள் போய் வாழ தொடங்கி விடுவார்கள். விவசாயத்தினை விட்டு விடுவார்கள்.
மேலே கட்டுரை அல்லது தலையங்கம் தொடர்பாக இன்று வந்துள்ள செய்தி :
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நல வாரியத்தை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்த வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்பு முதல்வர் வெளியிட்டார்.
இப்போது அதன் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பட்டியலுடன் அறிவிப்பை சனிக்கிழமை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் என். ராஜ்குமார் மன்றாடியார் இதன் தலைவராகவும், பொள்ளாச்சி அருகே ஆனைமலை தாத்தூரைச் சேர்ந்த டி.ஏ. கிருஷ்ணசாமி கவுண்டர் துணைத் தலைவராகவும் இருப்பர்.இது தவிர டி.கே. சுப்பிரமணியம், (முன்னாள் எம்.எல்.ஏ.), இரா. கலைச்செல்வன் (காசங்காடு, பட்டுக்கோட்டை), வி.கே. சின்னச்சாமி (முன்னாள் எம்.எல்.ஏ.), மு.ஏ. கந்தசாமி கவுண்டர் (சுல்தான்பேட்டை, சூலூர்), ராசு என்கிற கந்தசாமி (தாராபுரம், திருப்பூர்), அ. தமிழ்த் தென்றல் (சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம்), மகுடபதி (ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர்), எம். குமரேசன் (பட்டிவீரன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்), ஆர். நாகராஜன் (பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சை மாவட்டம்), எஸ். சன்னாசி (சின்னமனூர், தேனி மாவட்டம்), ஆர். வெங்கடாசலம் (ஆத்தூர், சேலம் மாவட்டம்), பி.என். வேலுசாமி (ஒடக்கல்பாளையம், சூலூர்), சா. இராஜசேகரன் (பெத்தாம்பாளையம், திருப்பூர்), ஏ.சி. விசுவநாதன் (ஆம்பூர், வேலூர் மாவட்டம்), பேராசிரியர் ஹென்றி லூயிஸ் (நாகர்கோவில், கன்னியாகுமரி) ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர்.
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை இயக்குநர் இந்த வாரியத்தின் உறுப்பினர் செயலராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.