புதிய சட்டமன்றக் கட்டடம், செம்மொழி மாநாடு மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகம் என அவரது மூன்று ஆசைகளும் நிறைவேறிவிட்ட நிலையில் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் உருவாகியுள்ளது.
ஆனால் ஒரு வாரத்துக்கு முன் நாகர்கோவிலில் நடந்த திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எண்பத்தாறு வயதுடைய கருணாநிதி, குமரி மாவட்ட மக்களால் மார்ஷல் என அழைக்கப்படும் "நேசமணிக்கு மணிமண்டபம் கட்டுவேன்; வருகின்ற மே மாதம் தேர்தல் நடக்க இருப்பதால் ஜூன் மாதம் நானே வந்து திறப்பேன்" என்று பேசியுள்ளதில் இருந்து, அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் அடுத்த தேர்தலிலும் தாமே தமிழக முதல்வர் என்றும் சூசகமாக அறிவித்துள்ளார் எனக் கொள்ளலாம்
திமுகவில் உட்கட்சிப் பூசல்களும் கோஷ்டிகளும் இருந்தாலும் கருணாநிதியின் மக்களில் இருவரான மு.க ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரின் பின்னால் தனித்தனியாக அணிவகுத்துத் தொண்டர்களும் கட்சியினரும் நின்றாலும் கருணாநிதி என்ற தலைவருக்குக் கட்டுப்பட்டுக் கட்சியினர் கட்டுக்கோப்பாகச் செயல் படுகின்றனர். அவருக்குப் பின் இதே கட்டுப்பாட்டுடன் அக்கட்சி செயல்படுமா?
அ.இ.தி.மு.க.வில் எம் ஜி ஆரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட சூறாவளியைப்போல் கருணாநிதிக்குப் பின் தி.மு.க.வில் ஏற்படாது. எம் ஜி ஆர் தமக்குப் பின் தலைவர்களைக் கட்சியில் அடையாளம் காட்டவில்லை. திடீரென அவர் மறைந்ததும் அவரது மனைவி ஜானகி "திடீர் முதல்வரா"னார். அவருக்கு அதரவாகத் தீவிர எம்ஜிஆர் விசுவாசிகளாயிருந்த ஆர் எம் வீரப்பன், முத்துசாமி, பொன்னையன் போன்ற மூத்த தலைவர்கள் அணிவகுத்து நிற்க,சாத்தூர் ராமச்சந்திரன்,கருப்பசாமிப் பாண்டியன், திருநாவுக்கரசு போன்றோர் ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்தனர். கட்சி ஜா அணி, ஜெ அணி, எனப் பிளவுபட்டது. சட்டமன்றத்துக்குள் காவல்துறை நுழைந்து உறுப்பினர்கள் மீது தடியடி நடத்தியது. பின் சேவல் என்றும் இரட்டைப் புறா என்றும் போட்டியிட்டு, ஜெயலலிதா கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற, ஜா அணி, காணாமல் போக, அனைவரும் ஜெயலலிதாவிடம் சரணடைந்தனர். அக்கட்சியில் இன்று வரை இரண்டாம் நிலைத் தலைவர்கள் யாரும் இல்லை.
ஆனால் கருணாநிதி தம் மகன் ஸ்டாலினைத் தீவிர அரசியலில் ஈடுபடுத்திப் பயிற்சி அளித்தார். கட்சியின் இளைஞர் அணியை ஸ்டாலினின் பொறுப்பில் விட்டு வளர்த்தார். சென்னை மாநகராட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, , அமைச்சராக, இப்போது துணை முதல்வராக எனப் படிப்படியாகத் தமக்குப் பின் கட்சிக்கு ஒரு வாரிசை உருவாக்கித் தந்துள்ளார்.
கடந்தவாரம் காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழவில் பேசிய வை.கோபாலசாமி, தமக்குப் பின் திமுக இருக்காது என்றும் வைகோவின் கட்சிதான் திமுகவாக இருக்கும் என்றும் தழுதழுத்த குரலில் தம்மிடம் கருணாநிதி கூறியதாகக் குறிப்பிட்டார்.
கருணாநிதியை விட வைகோ தைரியசாலிதான்.
மரணப்படுக்கையில் இறுதி மூச்சு வாங்கும் நிலையில் முஸ்லிம் சமுதாயத்தைப் பாதுகாக்குமாறு தம்மிடம் காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் வேண்டினார் என்றும் நெருக்கடிநிலைக் காலத்தில் காமராஜர் தம் கையைப் பிடித்துக்கொண்டு ஜனநாயகத்தை நீங்கள்தாம் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டியதாகவும் அத்தலைவர்களின் மறைவுக்குப் பின் பல முறை கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் வைகோ கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே இப்படிக்கூறியது கருணாநிதியைத் தர்மசங்கடத்துக்குள்ளாக்கியிருக்கும். தம்முடன் பொடாச் சட்டத்தின் கீழ்ச் சிறையிருந்த கணேசமூர்த்திக்குத் தாம் கேட்ட சீட்டைத் தராமல் இருப்பதற்காகக் "கருணாநிதி போட்ட ஸீன்" என்றும் வைகோ கூறினார். அதனால்தானோ என்னவோ நாகர்கோவிலில் முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி, "தாம் தூங்கும் போதே தம்மைக் கொல்ல முயன்றார்கள்" என உருவகமாகச் சொல்லிவிட்டார்.
சி.என்.அண்ணாதுரை, இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், என்.வி.நடராஜன் மற்றும் ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் தி.மு.கழகத்தை உருவாக்கிய போது கருணாநிதி இல்லை. ஆனால் அண்ணாதுரையின் மறைவிற்குப் பின் ஆட்சியையும் கட்சியையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இன்றுவரை கையில் வைத்துக் கொண்டு, பணக்காரர்களின் வரிசையில் இடம்பிடித்துள்ள அவர் இந்நிலைக்கு உயர என்னென்ன (ராஜ)தந்திரங்கள் செய்திருப்பார், அரசியல் சதுரங்கத்தில் எத்தனை விதமாகக் காய் நகர்த்தியிருப்பார்,எத்தனைச் சோதனைகளைச் சந்தித்திருப்பார், எத்தனை சவால்களை முறியடித்திருப்பார் என்று எண்ணிப்பார்க்கையில் பெரு வியப்பு ஏற்படும்.
தமது பதினான்காவது வயதில் பொதுவாழ்வைத் துவக்கிய தக்ஷிணாமூர்த்தி என்ற கருணாநிதி, தம் பகுத்தறிவுக் கனல் தெறிக்கும் திரைப்பட வசனங்களாலும் மேடைப் பேச்சுக்களாலும் ஈர்க்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் ஆதர்சத் தலைவரானார்.
இந்தி எதிர்ப்பிலிருந்து தம் பொதுவாழ்வைத் துவங்கிய அவர் 1965 ஆம் ஆண்டில் மானவர்களிடம் ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு உணர்ச்சியைத் தக்கபடித் தூண்டி விட்டுப் பெரும் போரட்டமாக மாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் ராஜேந்திரன் காவல்துறையால் சுடப்பட்டு இறந்தார். அதன் விளைவாக மாணவர்களின் பேராதரவு தி.மு.கவுக்குக் கிடைத்தது.
தி.மு.க, இஸ்மாயில்சாகிப் தலைமையிலான முஸ்லிம்லீக், ராஜாஜியின் சுதந்திராக்கட்சி, பி.ராமமூர்த்தி தலைமையிலான இடது கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் ம.பொ.சி.யின் தமிழரசுக்கழகம் உட்பட ஏழுகட்சிக் கூட்டணி அமைக்கப்பட்டது. அன்று தமிழ்நாட்டில் நிலவிய அரிசிப் பஞ்சமும் மாணவர் எழுச்சியும் சேர்ந்து 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், காமராஜர் போன்ற பெருந்தலைவர்களைத் தோல்வியுறச் செய்து காங்கிரஸ் ஆட்சியையும் துடைத்து எறிந்ததற்குக் கருணாநிதியின் அரசியல் வியூகங்களும் காரணம் எனலாம். அப்பொதுத் தேர்தல் சமயத்தில் எம் ஆர் ராதாவால் சுடப்பட்ட எம்ஜியாரின் போட்டோவைப் போஸ்டராகப் போட்டுத் தமிழகமெங்கும் ஒட்டச் செய்தது கருணாநிதியின் அரசியல் தந்திரங்களுள் ஒன்று. கருணாநிதி "மூன்றுபடி லட்சியம்; ஒரு படி நிச்சயம்" என்ற கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதியைத் தந்து பொதுமக்களின் ஆதரவைப் பெற்றார். அண்ணாதுரையே எதிர்பாராத பெரு வெற்றியை ஈட்டித் தந்தார்.
1968 ஆம் ஆண்டில் அண்ணாதுரையின் மறைவைத் தொடர்ந்து தமிழக முதல்வரான கருணாநிதி, தாம் முதல் நிலை பெறுவதற்காக, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பரும் இல்லை என்ற தத்துவம் கைகொடுக்க, எதிரியையும் நட்பாக்கிக் கொள்வார், நண்பர்களையும் எதிரியாக்கிக் கொள்வார்.
எந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவன் ராஜேந்திரனைப் பலிகொடுத்துத் தமிழக மாணவர்களின் ஆதரவைத் தம் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்தாரோ அதே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவன் உதயகுமாரைத் தாம் டாக்டர் பட்டம் பெற்றபோது பலிகொடுத்து மாணவச் சமூகத்தை எதிரியாக்கினார்.
தமிழகத்தில் தாம் தோற்கடித்த காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் இரண்டாக உடைந்தபோது, இந்திராகாந்திக்கு ஆதரவளித்து 1971 ஆம் ஆண்டில் தேர்தல் கூட்டணி கண்டு இரண்டாம் முறையும் தமிழக முதல்வரானார் கருணாநிதி.
1971 தேர்தலில், ராய்பரேலி மக்களவைத் தொகுதியில் ராஜ்நாராயணை எதிர்த்து இந்திராகாந்தி பெற்ற வெற்றி செல்லாது என அலஹாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் இந்திராகாந்தியின் அரசியல் வாழ்வுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் நெருக்கடிநிலை அமுல்படுத்தப்பட்டது. அப்போது தாம் ஆட்சியை இழப்பது பற்றிக்கூடக் கவலைப்படாமல் நெருக்கடி நிலையை எதிர்த்து, இந்திராவின் கோபத்துக்கு ஆளாகி ஆட்சியையும் இழந்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிபதி சர்க்காரியா கமிஷனால் விசாரிக்கப்பட்டார்.
1977 தேர்தலில் ஜனதாக்கட்சியுடன் கூட்டணி உறவு வைத்துத் தேர்தலைச் சந்தித்தார் கருணாநிதி. இந்திராவின் ஆட்சி அகற்றப்படுகிறது.
1979 ஆம் ஆண்டு மதுரை வந்த இந்திராகாந்திக்கு, நெருக்கடிநிலைக் காலக் கொடுமைகளுக்காக, திமுகவினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தியபோது திமுகவினரால் இந்திராகாந்தி இரத்தம் வழியும் அளவுக்குத் தாக்கப்படுகிறார்.
ஆனால் 1980 ஆம் ஆண்டில், மீண்டும் இந்திராவுடன் "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!" எனப் புகழ்ந்து தேர்தல் கூட்டணி கண்டார்.
பண்டாரங்கள் என விமர்சித்த பாஜகவுடன் உறவு கொண்டு மத்திய அரசில் பதவி பெற்றார்; இப்போது மீண்டும் காங்கிரஸுடன் உறவு.
இவையெல்லாம் சில உதாரணங்களே!
தி மு கழகத்திலும் ஆட்சியிலும் தம் உயர்வுக்குத் துணை நின்ற, கட்சியில் தமக்கு இணையான செல்வாக்குப் பெற்றிருந்த "நாற்பதாண்டுகால நண்பர்" என அவரே கூறும் எம் ஜி ஆரையே கட்சியில் இருந்து தூக்கி எறிந்தது தான் அவரது அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத, மறக்கக் கூடாத நிகழ்வு.
ஆனால் எதைச் செய்தாலும் எம் ஜி ஆரையோ ஜெயலலிதாவையோ போல் சர்வாதிகாரமாகச் செயல்படாமல், ஜனநாயக ரீதியில் செய்வதாகக் காட்டிக் கொள்ளக் கட்சியின் செயற்குழுவிலோ அல்லது மூத்த தலைவர்களிடமோ ஒப்புதலைப் பெற்றுக்கொள்வார் கருணாநிதி. அப்படித்தான் மு க ஸ்டாலினைத் துணைமுதல்வராக்கினார்.
வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு வலுவற்றது ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியைத் தவிர பிற கட்சிகளில் வாரிசுகள் அரசியலுக்கு வந்ததே இல்லையா?
நேரு, இந்திரா, ராஜீவ், சோனியா, ராகுல், சஞ்சய், மனேகா,வருண் என அக்குடும்பம் அரசியலில் தொடர்கிறது. சேக் அப்துல்லா, அவரது மகன் ஃபரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா எனக் காஷ்மீரில் வாரிசு அரசியல் தொடர்கிறது.
தேவகவுடா தம் மகன் குமாரஸ்வாமியை வாரிசாக்கினார். லாலுபிரசாத் யாதவ் தம் மனைவி ராப்ரிதேவியை வாரிசாக்கினார். இப்போது தம் மகன் தேஜஸ்வியை அடுத்த வாரிசாகக் களம் இறக்குகிறார்.
நானோ என் குடும்பத்தாரோ அரசுப் பதவிகள் பெற மாட்டோம் எனச்சொன்ன பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூடத் தம் மகனை மத்திய அரசில் அமைச்சராக்கினார். எனவே வாரிசு அரசியல் எனக்கூப்பாடு போடுவது சரியில்லை.
அழகிரிக்கு அவரால் ஆதாயம் பெறுவோரின் ஆதரவு அல்லது குறிப்பிட்ட சில பகுதியினரின் ஆதரவுதான் உள்ளதே தவிர, ஸ்டாலினுக்கு உள்ளதைப்போல் பரவலான ஆதரவு இல்லை. ஸ்டாலினைக் கட்சியினர் மட்டுமின்றிப் பொது மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. கருணாநிதியைப்போலக் கட்சியையும் ஆட்சியையும் தலைமையேற்று நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ள
கருணாநிதியின் ஓய்வில்லா உழைப்பும் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும் தோல்வியிலும் துவளாத மன உறுதியும் அரசியல் சாணக்கியத்தனமும் ஸ்டாலினுக்கு வந்துவிட்டால் கருணாநிதியின் தேர்வு தவறாகவில்லை என்பதைத் தமிழ்நாடு காணும். இவற்றை ஸ்டாலின் பெற்றுவிட்டால் கருணாநிதியின் ஓய்வு கட்சியையோ ஆட்சியையோ பாதிக்காது; கருணாநிதியும் மகிழ்வோடு ஓய்வெடுக்கலாம்.
கடந்த அரைநூற்றாண்டு தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் திகழ்ந்து வரும் கருணாநிதியின் ஓய்வு எத்தகைய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ள அவர் ஓய்வு பெறும் வரை பொறுத்திருந்தே ஆக வேண்டும். எப்போது ஓய்வு பெறுவார்? கருணாநிதியும் காலமும்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்!