அமெரிக்காவில் குர்ஆன் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து காஷ்மீரில் திங்கள்கிழமை மீண்டும் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. பல்வேறு அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் தனியார் பள்ளி ஒன்றையும் வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். வன்முறை மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரிவினைவாதிகள் மக்களை தூண்டிவிட்டு வருகின்றனர். தினமும் போராட்டம், ஊர்வலம், கல்வீச்சு, தீ வைப்பு என ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் பதற்றம் நிலவுகிறது. ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து பிறப்பித்தாலும், பிரிவினைவாத ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் குர்ஆனை எரித்ததாக பரவிய வதந்தியை அடுத்து, காஷ்மீரில் இளைஞர்கள் திங்கள்கிழமை மீண்டும் வன்முறையில் ஈடுபட்டனர்.
பாரமுல்லா மாவட்டம் தங்மார்ங் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பள்ளி ஒன்றை வன்முறையாளர்கள் சூறையாடி தீ வைத்தனர். கும்பலை கலைக்க பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போதும் கும்பல் கலைந்து செல்லவில்லை. பள்ளிக்கு தீ வைத்த தகவல் அறிந்து தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால், கும்பல் கலைந்து செல்லாமல், தொடர்ந்து கல்வீச்சில் ஈடுபட்டதால், பள்ளியை தீயணைப்பு வீரர்களால் நெருங்க முடியவில்லை. அதற்குள் பள்ளி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால், பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர். தடியடி நடத்தியும் கும்பல் கலையாததால், துப்பாக்கி சூடு நடத்தினர். அதில், நிசார் அகமது பட் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர்.
மாவட்டத்தின் பிற இடங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், சமூக நலவாழ்வு அலுவலகம், சுற்றுலா துறை அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். நீதிமன்ற சேம்பர், வீடுகள், வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தினர். போலீஸ் நிலையத்தை சூறையாட கும்பல் முயற்சித்தது. அப்போது கும்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேறு வழியின்றி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகர் விமான நிலையம் அருகே ஹம்ஹமா பகுதியிலும் கல்வீச்சு நடந்தது. பாதுகாப்புப்படை வீரர்கள் கலவர கும்பலை விரட்டி அடித்ததில் பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நசீர் அகமது கனி, அமீர் சோபி, இஷ்பக் ஹமித் ஆகியோர் உடலில் குண்டுகள் பாய்ந்தன. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜாகிர் அகமது, முசாபர் அகமது, பிலால் அகமது ஆகிய 3 பேர் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மத்திய காஷ்மீர் பத்காம் மாவட்டத்தில் வன்முறையாளர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்காரர் ஒருவர் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி இறந்தார். மேலும், சப்ஸி மாண்டி, ஷாலிமார் போன்ற பகுதிகளிலும் வன்முறை கும்பல் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து, அவந்திபோரா, லெத்போரா, பாம்போர், ஸ்ரீநகர், அனந்தநாக், புல்வாமா உட்பட பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
திடீர் வன்முறையால் ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. துப்பாக்கிச் சூட்டில் நேற்று மட்டும் 14 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கடந்த 3 மாதங்களில் நடந்த வன்முறைகளின் போது துப்பாக்கி சூட்டில் பலியானோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.