தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

புதிய தலைமைச் செயலக கட்டிடமும், டாஸ்மாக் பாரும்




எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா, புதிய தலைமைச் செயலக கட்டிடம் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது என்றும், 2011ல் அதிமுக ஆட்சி அமைத்ததும், பழைய புனித ஜார்ஜ் கோட்டையில் தான் ஆட்சி அமைப்பேன் என்றும், புதிய கட்டிடத்தை பயன் படுத்தப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

ஒரு வேளை, 2011ல் அதிமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக சவுக்கு ஆராய்ச்சியில் இறங்கிய போது, கிடைத்த ஆலோசனைகள் இதோ.. … ….

தமிழகம் முழுக்க, அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்தாலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இருப்பது போல சிறந்த பார்கள் எங்குமே இல்லை. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் உள்ள சட்டசபை வளாகம், குளிர் சாதன வசதியோடு, ஸ்பான்ஞ் வைத்த இருக்கைகளோடு, மேசைகளோடு இருப்பதால், இந்தப் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை டாஸ்மாக் பார் என்று அறிவிக்கலாம்.




இப்போது சட்டசபை நடக்கும் நாட்களில் உறுப்பினர்கள் எப்படி உளறுகிறார்களோ, அதே போல “குடி“ மக்கள் அனைவரும் உளறுவது பொருத்தமாக இருக்கும். ஆனால் சட்டசபை போல அல்லாமல் ஆண்டில் சில நாட்கள் மட்டும் நடக்காமல், வருடம் முழுவதும், ஜே ஜே என்று கூட்டம் இருக்கும். காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி போன்ற நாட்களில் மட்டும் விடுமுறை விடலாம்.


ஓவராக குடித்து விட்டு, சளம்பும் குடிமக்களை, இப்போது உள்ள அவைக் காவலர்களை வைத்தே, தூக்கி வெளியே போடலாம். இப்போது நடுநாயகமாக சபாநாயகர் உட்கார்ந்திக்கும் இடத்தையே கிச்சனாக்கி, அங்கே சைடிஷ் ஐட்டங்களை சமைக்கலாம், இவ்வாறு சமைப்பதால், பார் முழுக்க, உணவுப் பொருட்களின் வாசனை பரவி சேல்ஸ் அதிகரிக்கும்.


இந்த பார் திறக்கப் பட்டால், உலகத்திலேயே பெரிய பார் என்று, பாரெல்லாம் புகழும் அளவுக்கு, தமிழகத்துக்கு பெருமை வந்து சேரும். இக்கட்டிடத்தை திறக்கும் முன்பு செட் போட்ட, தோட்டா தரணியையே வைத்து, உள் அலங்காரம் செய்யலாம்.


ஓவராக குடித்து விட்டு “மட்டை“ ஆகும், குடிமக்களை, புதிதாக கட்டப் பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியிலேயே குறைந்த கட்டணத்தில் தங்க வைக்கலாம். இப்போது சட்டமன்ற உறுப்பினர்களை ஏற்றிச் செல்வதற்காக, மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் பேருந்தினை பெரும்பாலான உறுப்பினர்கள் பயன்படுத்துவதில்லை என்பதால், கோயம்பேடு முதல், சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் இருந்து, இந்த பாருக்கு, பேருந்துகள் ஏற்பாடு செய்யலாம்.


பத்திரிக்கையாளர்கள் பல பேர், சென்னை நகரின் மோசமான டாஸ்மாக் பார்களிலும், ப்ரஸ் கிளப் அருகிலும், தண்ணியடித்து மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவதால், தற்போது உள்ள பத்திரிக்கையாளர் மாடத்தை, பத்திரிக்கையாளர்கள் தண்ணியடிப்பதற்கு மட்டும் என்று அறிவித்து விட்டால், பத்திரிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் காக்கப் பட்டு விட்டது என்று சந்தோஷப் படுவார்கள்.

இந்தப் பகுதிக்கு “தண்ணீர் தேசம்“ என்று பெயர் வைக்கலாம்.


தற்போது, உயிரியல் பூங்கா, சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்திருப்பதால், பொது மக்கள் அவ்வளவு தூரம் சென்று விலங்குகளை பார்க்க சிரமப் படுகிறார்கள்.




அதனால், புதிய தலைமைச் செயலக வளாகத்தை உயிரியல் சரணாலயமாக மாற்றி அறிவிக்கலாம். சபாநாயகர் அமரும் இருக்கையில், சிங்கத்தின் கூண்டை அமைப்பது மிகப் பொறுத்தமாக இருக்கும்.


திடீரென்று விலங்குகளுக்குள் சண்டை ஏற்பட்டு ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டால், சட்டசபை நடப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்தும். மேலும், விலங்குகள், தங்கள் பாஷையில், குய்யோ முறையோ என்று கத்துவது, சூடான விவாதம் நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.


பழக்கப் படுத்தப்பட்ட, சொன்னால் டைவ் அடிக்கும், குரங்கு, சைக்கிள் ஓட்டும் யானை, வளையத்தை தாண்டும் நாய் போன்ற விலங்குகளை, தற்போது, அரசுக்கு, ஜால்ரா அடிக்கும் விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர்கள், மற்றும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர்ந்திருக்கும் இடங்களில் வைக்கலாம்.




உலகிலேயே முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப் பட்ட விலங்குகள் சரணாலயம் தமிழகத்தில்தான் உள்ளது என்ற பெருமை நம்மை வந்து சேரும்.


தற்போது சட்டசபை காட்சிகளை தொகுத்து இரவு தொலைக்காட்சிகளில் காட்டுவது போல, டிஸ்கவரி சேனல், அனிமல் ப்ளானெட் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களோடு, லைவ் டெலிகாஸ்ட் செய்ய ஒப்பந்தம் போடலாம். இந்நிறுவனங்கள், இந்த விலங்குகளை படம் பிடிப்பதை விட, தற்போது நடக்கும் சட்டசபையை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டக் கூடும். ஆனால், விலங்குகளின் நலன் மிக முக்கியம் என்பதால் விலங்குகள் பற்றிய ஒளிபரப்புக்கே அனுமதி அளிக்க வேண்டும்.


புலி, சிங்கம் போன்ற அரிய வகை விலங்குகள், அழிந்து வருவது குறித்து, பல்வேறு திட்டங்களை மத்திய அரசு இயற்றி வரும் சூழலில், இது போன்ற அரிய வகை விலங்குகளை, இந்த சட்டசபை வளாகத்துக்குள் பராமரித்தால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்த விலங்குகள், பல்கிப் பெருகி, பெரிய அளவு வளர்ச்சி அடைந்திருப்பதை காண முடியும். இந்த இடத்தை இது போல பயன் படுத்தவதன் மூலம், மிக மிக அரிதான அத்தனை உயிரினங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் ஏராளமாய் பெருக்கி விடலாம்.
பத்திரிக்கையாளர் மாடத்தில், விலங்கியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு ஒதுக்கி விடலாம்.

இந்த இடத்துக்கு “மாக்கள் மன்றம்“ என்று பெயரிட்டு அழைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்

நன்றி. நம்தினமதி நாளேடு
சவுக்கு
 
 
 
 

பொய்மைகளை விதைக்கும் எழுத்தாளர்களும் நமது சமூகத்தின் சாபக்கேடுதான்!


தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு குறித்துத் தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? என்ற கட்டுரைக்கான கோபி என்பவரின் எதிர்வினை குறித்த பதிற்குறிப்பு இது.கோபி எழுதியவரின் உண்மைப் பெயரா அல்லது புனைபெயரா அல்லது இப் பெயரால் பரவலாக அறியப்பட்ட ஒருவரா என்பது தெரியவில்லை. எழுதிய விதத்தைப் பார்க்கும் போது அவர் சொந்தப் பெயரில்தான் எழுதியுள்ளார் போல் தெரிகிறது.

ஒரு எழுத்தாளன் தனது எழுத்துக்குரிய அறநெறிகளைப் பேணிக் கொண்டு, தான் வாழும் நாட்டின் சூழல், சமூகச் சூழல், எழுதும் விடயங்களின் தன்மை, எழுத்தாளனின் விருப்பு போன்றவற்றைக் கவனத்திற்கொண்டு புனைபெயர்களில் எழுதும் வழமை உலகளாவிய ஒரு நடைமுறைதான்.இதனால் ஒரு எழுத்து சொந்தப் பெயரில் எழுதப்படுகிறதா அல்லது புனைபெயரில் எழுதப்படுகிறதா என்பதனைவிட எழுதப்படும் விடயம்தான் முக்கியமானது.இங்கு பெயரில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதனை விட எழுதப்படும் எழுத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம்.

தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு தொடர்பான கட்டுரையினை முழுமையாக, ஆழமாகப் படித்து விட்டுத்தான் கோபி தனது எதிர்வினையினை எழுதினாரா என்ற கேள்வியும் இவரது எழுத்தைப் படிக்கும் போது எழுகிறது.

உண்மையில் கோபி என்னதான் சொல்ல வருகிறார்? தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது இல்லையா? அல்லது இவ்விடயம் தொடர்பாக எந்தவொரு முடிவுக்கும் இவரால் போகமுடியாதிருக்கிறதா? அல்லது தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என நம்புபவர்கள் அவருக்கு மரியாதை வணக்கம் செலுத்தக்கூடாது என்கிறாரா? இது குறித்து குழப்பமற்ற தெளிவான கருத்து எதனையும் கோபி முன்வைத்ததாகத் தெரியவில்லை.இது இவருக்கு இவ்விடயத்தில் உள்ள குழப்பத்தினால் நிகழ்ந்ததா அல்லது எல்லோருக்கும் பிடி கொடுக்காத இவரது 'சாமர்த்தியத்தின்' வெளிப்பாடுதானா என்பதும் புரியவில்லை.ஓன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது.

தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செய்ய வேண்டும் என்று சொல்பவர்களை, தலைவரை நிராகரிப்பவர்களாகவும், அவரது இடத்துக்கு வேறு ஒருவரை அரியாசனம் ஏற்ற முயல்பவர்களாவும் சித்தரித்து, தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செலுத்த வேண்டும் என எழும் குரல்களை அடக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டும் இவரது எழுத்தில் துல்லியமாகத் தெரிகிறது.

இது மிகப் பெரும் அநியாயம் கோபி.

பொங்குதமிழில் இக் கட்டுரைத்தொடர் தைத் திருநாளன்று (14.01.2010) ஆரம்பித்தபோது குறிப்பிடப்பட்டிருந்த சில பகுதிகளை இவ் அங்கத்திலும் மீளக் குறித்திருந்தோம்.

அறிஞர் சத்தியேந்திரா தலைவர் பிரபாகரனுக்கு செய்திருந்த மரியாதை வணக்கம் தொடர்பாகவும் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்று, அவரது சரிகளோடும் தவறுகளோடும் அவர் வாழ்ந்த நான்கு தசாப்த கால போராட்ட வாழ்வுக்கு கட்டுரைத் தொடர் மரியாதை செலுத்துகிறது எனவும் குறிப்பிட்டிருந்தோம்.

இங்கு 'தவறுகள்' எனக் குறிப்பிட்டமை கோபிக்கு எரிச்சல் ஊட்டியுள்ளது போல் தெரிகிறது.

உலகில் எந்த விடுதலைப் போராட்டமும் சரிகளோடும் தவறுகளுடனும்தான் நடைபெற்றிருக்கிறது. உலகின் எந்தத் தலைவரது அரசியலும் சரிகளோடும் தவறுகளோடும்தான் இடம் பெறுகிறது. தலைவர் பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையும் இப் பொது நியதிக்கு உட்பட்டதுதான்.

இதனைத் தலைவர் பிரபாகரனே கூறியிருக்கிறார்.

'நான் கடவுள் இல்லை. என்னிடம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வினை எதிர்பார்க்காதீர்கள்' எனவும்

'நாம் செய்பவையெல்லாம் சரியாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. நமது செயல்கள் சரிகளோடும் தவறுகளுடனும்தான் இருக்கின்றன. இவை 50-60 % சரியாக அமைந்தாலே போதுமானது' எனவும்

தலைவர் பிரபாகரன் தனது நெருக்கமானவர்களுடனான மனந்திறந்த உரையாடல்களில் தெரிவித்திருக்கிறார்.

இக் கட்டுரைத்தொடர், தனது முதல் அங்கத்தில் குறிப்பிட்டவாறு தலைவர் பிரபாகரனுக்குரிய மரியாதையினை வழங்கிய வண்ணம்தான் தனது கருத்துக்களைக் குறித்து வருகிறது.

இக் கட்டுரைத் தொடருக்கு தலைவர் பிரபாகரன் தொடர்பாக வஞ்சகப்புகழ்ச்சி செய்ய வேண்டிய தேவை எதுவும் இல்லை. வஞ்சகப்புகழ்ச்சி செய்யும் பழக்கமும் தாமரையிடம் கிடையாது.

தலைவர் பிரபாகரன் மீது வஞ்சகப்புகழ்ச்சி இக் கட்டுரையில் செய்யப்பட்டுள்ளது எனக் கோபி கருதினால் அது எந்த இடத்தில் செய்யப்பட்டிருக்கிறது என்பதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்போது அது வஞ்சகப்புகழ்ச்சிதானா என்பதனைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதை விடுத்து, கட்டுரை கூற வந்த விடயத்தைக்கூட உரியமுறையில் கவனத்திற்கெடுக்காது வஞ்சகப்புகழ்ச்சி செய்யப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டுவது கட்டுரை கூறவரும் விடயத்தை திசைதிருப்ப திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிற வஞ்சகச்செயலோ என சந்தேகம் எழுகிறது.

அறிஞர் சத்தியேந்திராவினைத் துணைக்கழைத்திருப்பதாகவும் தனது வாதத்துக்கான காரணத்தை முன் வைப்பதற்கு குறைந்தபட்ச முயற்சியினைத் தாமரை எடுக்கவில்லை எனவும் குறைப்பட்டிருக்கிறார் கோபி.

தலைவர் பிரபாகரனுக்கு சத்தியேந்திரா எழுதிய மரியாதை வணக்கக் குறிப்பொன்றில் சுவிஸில் இருந்து எழுதிய கிருஸ்ணா அம்பலவாணர் எழுதிய கருத்தொன்றில் தான் உடன்படுவதாகக்கூறி அவரைத் 'துணைக்கழைத்திருந்தார்'.

இதுதான் அந்தக் கருத்து.

' …மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மரணம் தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துகள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. அந்த மரணம் ஈழத் தமிழனத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்துதான் அதை நாம் நோக்க வேண்டும்… இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது. தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்…'

ஒருவரது கருத்துக்களை இன்னொருவர் பயன்படுத்துவதும் அதனை உரியமுறையில் வெளிப்படுத்துவதும் அறிவியல் வளர்ச்சிக்குத் தேவையான நடைமுறையாக உலகளவில் பின்பற்றப்படுகிறது. இந்த வகையில் இக் கட்டுரைத் தொடரும் சத்தியேந்திராவின் கருத்தொன்றைப் பயன்படுத்தியிருந்தது.

சத்தியேந்திராவை மதிப்புக்குரியராகக் கருதும் கோபி தலைவர் வீரச்சாவு விடயத்தில் அவரது கருத்தினை மதிப்புக்குரியதாகக் கருதவில்லைப் போலும்.

மேலும், தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு குறித்த முடிவுக்கு விசாரணைகளின் அடிப்படைகளிலேயே சென்றதாக கட்டுரைத்தொடர் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

'இந்த விசாரணைகள், முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்கள் வரை தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தமைக்கான ஆதாரபூர்வமான தகவல்கள், சிறிலங்கா அரசபடைகள் முள்ளிவாய்க்கால் பகுதியினை முற்றுகை செய்து வைத்திருந்த விதம், தலைவர் பிரபாகரனின் உடலம் குறித்த விவாதங்கள், இவ் விடயம் தொடர்பாக எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரிடையே இருந்த கருத்துக்கள், அவர்களது செயற்பாடுகள், உலக நாடுகளின் அரச இயந்திரங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்த ஆய்வாளர்கள் இவ்விடயம் குறித்து வகுத்துக் கொண்ட முடிவுகள், சிறிலங்கா அரசும் இராணுவ இயந்திரமும் ஆசுவாசமாக தற்பொழுது இயங்கிக் கொள்ளும் முறைமை உட்பட்ட பல விடயங்களை ஆய்வு செய்தே தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்கு இக் கட்டுரைத் தொடர் வருகிறது.'

இக் கட்டுரைத் தொடர் பல்வேறு தகவல் மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்படுகிறது என்பதனை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

தலைவர் பிரபாகரன் வீரச்சாவு விடயம் தொடர்பாக நாம் திரட்டியிருந்த தகவல்களை ஆராய்ந்து பார்த்தபோது இவர் உயிருடன் இருப்பதாக நம்புவதற்கு எவ்வித அடிப்படைகளும் இருக்கவில்லை.

நாம் திரட்டியிருந்த தகவல்களில், அவரது வீரச்சாவு எப்போது, எவ்வாறு நடந்தது என்பது தொடர்பான மாறுபாடான தகவல்கள் இருந்தனவேயன்றி, இவர் வீரச்சாவடைந்து விட்டார் என்பதில் முரண்பாடான தகவல்கள் ஏதும் இருக்கவில்லை.

இதேவேளை, அவர் உயிருடன் இருப்பதாக வாதிடுபவர்கள், அவர் உயிருடன் இருப்பதாக நம்புவதற்கான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவும் இல்லை.

தனது விசாரணைகளின் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு வந்த இக் கட்டுரைத்தொடர், தலைவர் வீரச்சவடைந்த ஓராண்டு நினைவுக் காலகட்டத்தில் அவருக்குரிய மரியாதை வணக்கத்தைச் செலுத்தியது.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச விரும்பாத எவரும் இதனைத்தான் செய்வார்கள். இவ்வாறு செய்வதற்கு, தனக்குத் தானே உண்மையாக நடப்பதற்கு எவரது அனுமதியும் சம்மதமும் தேவை இல்லை.

சரியெனப்பட்டதைப் பேசுவதற்கு நேர்மைதான் தேவையேயன்றி, எவரையும் திருப்திப்படுத்தும், நிற்கும் இடத்தை மறைக்கும் சாமர்த்தியம் எதுவும் தேவையில்லை.

தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்த செய்தி சிறிலங்கா அரசின் ஊடாகவே முதலில் வெளிவந்தது. அதுவும் குழப்பமான முறையிலேயே வெளிவந்தது. இக் குழப்பம், தலைவர் பிரபாகரனுக்கு மிக எழுச்சியான வீர வணக்க நிகழ்வுகள் தமிழகத்திலும் புலத்திலும் இடம் பெறக்கூடாதென்பதற்காக இந்தியதரப்பின் ஆலோசனையுடன் சிறிலங்கா அரசால் திட்டமிட்டே செய்யப்பட்டது என்ற உதாசீனம் செய்ய முடியாத ஒரு தகவலும் உண்டு.

வன்னிப்படுகொலை நடைபெற்றக் கொண்டிருந்தபோது முத்துக்குமார் உட்பட்ட பலர் தீக்குளித்து, அவர்களின் ஈகம் தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்வினை கொதிப்படைய வைத்திருந்த ஒரு சூழலில் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவுச் செய்தி தமிழகத்தில் ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகள் குறித்த அச்சம் இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்த ஒரு பின்னணியில் இருந்தே இந்தத் தகவலையும் நாம் நோக்க வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதிவரை தலைவர் இருந்தமைக்கான ஆதாரபூர்வமான தகவல் உண்டு. சிறிலங்கா படைகளின் முற்றுகையினை உடைத்துப் புறப்பட்ட தலைவரும் அவரது அணியும் மீண்டு வரவில்லை. அவரது வீரச்சாவு முற்றுகை உடைப்பு முயற்சியின்போதுதான் நடந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதைக்கூற தலைவருடன் இறுதிக்கணம் வரை இருந்த போராளிகளில் ஒருவர்கூட மீண்டு வரவில்லை.

இச் சூழலில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவு எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது தொடர்பாக குழப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டுதான்.

ஆனால் அறிவின் துணையுடன் உண்மையினைத் தேடும் எவருக்கும் தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்பதனை உணர்ந்து கொள்வதில் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதற்கான அடிப்படைகள் ஏதும் இல்லை.

வாழ்க்கையில் நாம் கனவிலும் விரும்பாத செய்தி ஒன்றினை நமது மனம் இலகுவில் ஏற்றுக் கொள்வதில்லை. இத்தகைய விடயங்களில் நமது அறிவுக்கும் மனதுக்குமிடையே பெரும் போராட்டமே நடைபெறுவதுண்டு. தலைவர் வீரச்சாவு விடயத்திலும் மக்கள் பலரது நிலை இவ்வாறுதான் இருந்தது.

தமது மனதுக்கும் அறிவுக்குமிடையே போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு உண்மையினை உணர்த்தியிருக்க வேண்டியதே பொறுப்பானவர்களின் செய்கையாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், வேலியே பயிரை மேய்வது போல இங்கு பொறுப்பானவர்களே பொய்யுரைத்து நிற்கிறார்கள். தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்குத் தாமே வந்து விட்டு மக்கள் மத்தியில் அதனை மறுதலித்து நிற்கிறார்கள்.

தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்த நிலைப்பாடு தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நான்கு வகையான பகுதியினரை இனங்காண முடிந்தது.

தலைவர் பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்றுக்கொண்ட, இதேவேளை அவருக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு பகுதியினர்.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர்.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதில் தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர்.

தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு தாமே வந்து விட்டு, நேரடியாகவும் மறைமுகமாகவும் தலைவர் உயிருடன் இருப்பதாகப் பொய்யுரைத்துக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர்.

இந் நான்கு பகுதியினரில், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று உண்மையாக நம்பும் மக்களை, தலைவர் வீரச்சாவு விடயத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியாது தவிப்பவர்களை கட்டுரை ஆதரவுடன்தான் அணுகியிருந்தது.

இறுதியாகக் குறிப்பிடப்பட்ட, தலைவர் வீரச்சாவு விடயத்தில் பொய்யுரைத்து இயங்கிக் கொண்டிருப்பவர்கள் மீதுதான் கட்டுரை தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது. இவர்கள் இவ்வாறு இயங்குவதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தது.

இவர்கள் உண்மையில் தலைவர் உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டு, அதனை மக்களுக்குக் கூறியிருந்தால் இவர்கள் மீது நமக்கு கோபம் ஏற்பட்டிருக்காது. ஆனால் தாம் உண்மையென கருதுவதை மக்களிடம் கூறாது திட்டமிட்ட முறையில் மறைத்து பொய்யுரைத்தவாறு இவர்கள் இயங்குவதுதான் இவர்கள் மீதான கோபத்தை ஏற்படுத்துகிறது.

இக் கோபமும் இவர்கள் மீதான தனிப்பட்ட கோபம் அல்ல. தலைவர் வீரச்சாவு விடயத்தில் இவர்கள் எடுத்திருக்கும் அரசியல் முடிவின் மீதான கோபம்தான் இது. எவர் மீதும் பழி தீர்க்கும் நோக்கம் எதுவும் இக் கட்டுரைக்கு கிடையாது.

இவர்கள் மீது மட்டுமல்ல, இவ் விடயத்தில், தமக்குள் தாமே தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்கு வந்து விட்டு, தலைவர் உயிருடன் இருப்பதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பொய்மைகளை விதைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மீதும் நமக்கு கோபம் உண்டு. இவர்களும் நமது சமூகத்தின் சாபக்கேடுதான்.

இப் பகுதியினரில் கோபி எப் பிரிவினுள் அடங்குகிறார்?

நேரடியாக தனது எதிர்வினையில் அவர் இது பற்றிப் பேசாதுவிடினும், இவரது எழுத்தை ஆழ்ந்து நோக்கும்போது தலைவர் வீரச் சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்குத்தானே வந்து விட்டு, உயிருடன் இருப்பதான பொய்மையினை விதைக்கும் கூட்டத்தில் ஒருவராகத்தான் இவரும் இருப்பதாகத் தோன்றுகிறது.

தலைவர் உயிருடன் இருப்பதாகப் பொய்யுரைத்து இயங்கிக் கொண்டிருப்போரைத் திருப்திப்படுத்த முயலும் நோக்கத்தைக் கொண்டவராகக்கூட இவர் இருக்கலாம்.

மிகவும் திட்டமிட்ட முறையில் தலைவர் வீரச்சாவு விடயத்தில் பொய்மைகளை விதைப்பது, அது என்ன நோக்கத்துக்காக இருந்தாலும் மிகவும் அயோக்கியத்தனமானது.

தலைவர் வீரச்சாவடையவில்லை என்ற கருத்தை விதைத்து விட்டு, இப்போது அதனைப் பற்றி எதுவும் பேசாது கடந்து செல்லுதலோ அல்லது தலைவருக்கு மரியாதை வணக்கம் செலுத்த முனைவோரை நோக்கி கண்டனங்கள் எழுப்புவதோ இவ் விடயத்தில் பொய்மையினை நிறுவும் ஒரு முயற்சிதான்.

தமக்குத் தெரிந்தே பொய்மைகளை விதைப்பது மட்டுமன்றி உண்மைகள் பேசமுனைவோரை வஞ்சகப்புகழ்ச்சி செய்வோர் என்று சாடுவது நேர்மையீனத்தின் உச்சத்தையே தொட்டு விடுகிறது.

நாம் வீழ்ந்து போனமைக்கு பொய்மைகளை விதைத்த எழுத்துக்களும் ஒரு காரணம் கோபி.

தலைவருக்கு மரியாதை வணக்கம் செலுத்த வேண்டும் என்று கூறுவோர் அவர் இடத்துக்கு வேறு ஒருவரை அரியாசனம் ஏற்ற முயல்கின்றனர் என்றரீதியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஒரு குருரமான சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும்.

தலைவருக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதன் ஊடாக அவரது இடத்தை மறுக்கவோ அல்லது தம்வசப்படுத்தவோ எவராலும் முடியாது. இது மிகவும் அபத்தமான வாதம்.

சாவு வாழ்வின் முடிவல்ல. இது தலைவர் பிரபாகரன் நமக்கெல்லாம் சொல்லித் தந்த ஒரு பாடம். மாவீரர்களை மரியாதை செய்தல் தலைவர் நமக்குக் காட்டித் தந்த ஒரு மரபு.

இன்று மாவீரர்கள் நம் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதன் ஊடாக அவர் நம்மை விட்டு மறைந்து போகப்போதில்லை. அவர் எம்முடன் வாழத்தான் போகிறார். வரலாற்றில் அவரது இடத்தை எவரும் அவரிடம் இருந்து பறித்துவிட முடியாது.

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரோ இல்லையா என்பதனை அப்படியே விட்டு வரலாற்றைக் கடந்து செல்வதற்கு தலைவர் சாதாரண மனிதர் அல்ல. ஈழத் தமிழர் தேசத்தை கடந்த மூன்று தசாப்தங்களாகத் தலைமை தாங்கி நின்றவர் அவர்.

எமது அடுத்த காலடி குறித்த திசை, அதற்கான வழிகாட்டுதல் அவரிடம் இருந்து வருகிறதா, அல்லது வருமா இல்லையா என்பது நமக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தாக வேண்டும்.

தலைவரது வீரச்சாவு விடயத்தில் குழப்பத்தைப் பேணிக்கொண்டு ஈழத் தமிழர் தேசம் தனது விடுதலைப் பயணத்தில் நெடுந்தூரம் பயணிக்க முடியாது. அப்படிப் பயணிக்க முடியும் என்று கருதுபவர்களுடன் இக் கட்டுரை முரண்படுகிறது.

அவரது வாழ்வு கூறும் அரசியல் மட்டுமல்ல, சாவு கூறும் அரசியலும் எமது அடுத்த கட்டப் போராட்டத்துக்கு அவசியமானது.

தலைவர் பிரபாகரனுக்கு விளக்கு வைத்து வணங்குவதனை விட இவரது இலட்சியத்துகாக இயங்குவதே முக்கியமானது என்பது கோபியின் வாதங்களில் ஒன்று.

தலைவரின் இலட்சியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து இயங்குவதற்கு தலைவரின் வீரச்சாவினை ஏற்றுக் கொண்டு, அவருக்கு மரியாதை வணக்கம் செலுத்தி, அவரைத் தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடாக் கொண்டு முன்னேறிச் செல்வதே ஆரோக்கியான அணுகுமுறையாக இருக்க முடியும்.

இது தவிர்ந்து பொய்மையின் அடித்தளத்தில் கட்டப்படும் எந்த ஒரு முன்னெடுப்பும் சேற்று நிலத்தில் கட்டப்படும் கட்டிடம் போல் எந்நேரமும் நிலைகுலையும் ஆபத்தைக் கொண்டது.

நாம் இங்கு ஒரு உதாரணத்தை வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம்.

தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதனை மக்கள் நம்பும் சூழலை வைத்துக் கொண்டு போராட்டத்துக்கான அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறோம் என வைத்துக் கொள்வோம்.

ஒரு கட்டத்தில் போராட்டத்தின் எதிரிகள், தலைவர் பேசுவது போன்று, தலைவரின் குரலை மிமிக்ரி செய்து செய்தியொன்றை மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்வோம்.

'நாம் எம்மைத் தாயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். நமது படையணிகள் தயாராகின்றன. அரசியல், இராஜதந்திர வழிமுறைகள் எதுவும் பயனளிக்கப் போதில்லை. புலத்தில் உருவாக்கப்படுகிற நாடு கடந்த அரசாங்கம், மக்கள் அவைகள், உலகத் தமிழ் பேரவை, எவையும் எனது சம்மதத்துடன் உருவாகியவை அல்ல. அவற்றால் எதுவித பயனும் கிடைக்கப் போதில்லை. சிறிலங்கா அரசுக்கு அதன் மொழியில்தான் நாம் பேச வேண்டும். உரிய நேரத்தில் அதனை நான் ஆரம்பிப்பேன். அது வரை எனது செய்திக்காக காத்திருங்கள் மக்களே!'

இவ்வாறான செய்தியொன்று பரப்பப்படும் பட்சத்தில் இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த மாட்டாதா?

நாம் கட்டிய பொய்மை எனும் அத்திவாரத்தில் எதிரி எழுப்பக்கூடிய ஒரு சுவர்தானே இது!

நாங்கள் பரப்பும் பொய்மைகளைத்தான் மக்கள் நம்புவார்கள். எதிரிகள் பரப்பும் பொய்மைகளை நம்ப மாட்டார்கள் என்ற முடிவுக்கு நாம் போகமுடியுமா?

இப்படியான சூழ்நிலை ஏற்பட்டு மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுமானால் தற்போது புலத்தில் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகளின் எதிர்காலம்தான் என்ன?

இது ஒரு வாதத்துக்காக இங்கு குறிப்பிடப்பட்டாலும் இதில் உள்ள தர்க்கத்தை நாம் உதாசீனம் செய்துவிட முடியாது.

தலைவரின் வீரச்சாவினை ஏற்றுக் கொண்டுதான் நாம் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் எனும் நமது குரலும் இங்கு போராட்டத்தின் குரலாகத்தான் ஒலிக்கிறது.

போராட்டத்தின் நன்மை என்று நீங்கள் கருதுவது மட்டும்தான் போராட்டம் சார்ந்த குரலாகக் கொள்ளும் குத்தகை மனப்பான்மையில் இருந்து விடுபடுங்கள்.

நீங்கள் சிந்திப்பதனைப்போல்தான் எல்லோரும் சிந்திக்க வேண்டும். அல்லது இச் சிந்தனைகளுக்கு பின்னால் வேறு நோக்கங்கள் இருப்பதாகக் கற்பனை பண்ணுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.

தேசியத்தலைவராக உருவெடுப்பது இலகுவானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். தலைவர் பிரபாகரன் தேசியத் தலைவராகுவதற்கும் 20 வருடப் போராட்ட வாழ்க்கை தேவைப்பட்டது.

ஓன்றோடு ஒன்று தொடர்புபடாத விடயங்களில் தேவையற்ற மனப்பிரமைகளுக்குள் அமிழ்ந்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளவும் வேண்டாம்.

மார்க் அன்ரனி உதாரணம் உண்மையான அர்த்தத்தில் இங்கு எவ்வித பொருத்தமும் அற்றது. இங்கு எவரும் வஞ்சகப்புகழ்ச்சி செய்யவும் இல்லை. சேக்ஸ்பியர் தனது நாடகப் பாத்திரத்தில் மார்க் அன்ரனியை தனது எதிரிகள் மீது வஞ்சப்புகழ்ச்சி செய்பவனாகப் படைத்திருக்கிறார். அது அவனது வரலாற்றுப் பாத்திரம் அல்ல. சீசரைக் கொன்றவர்கள் மீது நீண்ட காலத்தின் பின்பும் படையெடுத்தழித்துப் பழிதீர்த்துக்கொண்ட வரலாற்றுப் பாத்திரம் அது. ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை அதனது வரலாற்று முக்கியத்துவத்திலிருந்து பிரித்தெடுத்து, நாடகப் பாத்திரத்தில் காணப்பட்ட எதிரிகள் நோக்கிய குணாம்சத்தைப் பொதுமைப்படுத்தி தவறான இடத்தில் பிரயோகிப்பது எழுத்தாளரின் முதிர்ச்சியின்மையையே வெளிப்படுத்துகிறது.

நிறைவாக, சுட்டெரிக்கும் நெருப்பைக் காட்டி அச்சுறுத்த வேண்டாம் கோபி.

நாமும் தலைவர் பிரபாகரன் மூட்டிய நெருப்பில் முகிழ்த்த தீக் கொள்ளிகள்தான். சுட்டெரிந்து போக மாட்டோம். கவலை வேண்டாம்.

இது தொடர்பான விவாதங்களை பொங்குதமிழ் இத்துடன் நிறைவுசெய்து கொள்கிறது:- ஆசிரியர்



முள்ளிவாய்க்கால் - ஆறாத காயம் - மணியரசன்.

மனக்காயத்தை ஆற்றும் மருந்து காலம்" என்ற முதுமொழி தமிழர்களைப் பொறுத்தவரை பொய்த்து விட்டது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நம் கண்முன்னால் ஈழத்தமிழினம் அழிக்கப்பட்ட பெருந்துயர் மங்கிவிடுமா? மறைந்து விடுமா? காலம் மாறலாம்; காயம் ஆறாது.

       ஓராண்டு முடிகிறது. ஆனால் ஒரு யுகம் நகர்ந்தது போல் கனக்கிறது. பன்னிரண்டு மாதங்களும் வேகமாக ஓடவில்லை. பையப்பைய, நமது கையறு நிலையை அசைபோட்டு, அசைபோட்டு, நமக்கேற்பட்ட மானக்கேட்டை உமிழ் நீராய் விழுங்கி, விழுங்கி, இந்தியா ஈடுபட்டுச் செய்த தமிழின அழிப்பை எண்ணிச் சினந்து சினந்து, ஓராண்டில் ஒரு லட்சம் தமிழர்களும் கடைசி மூன்று நாட்களில் மட்டும் ஐம்பதாயிரம் பேரும் கொல்லப்பட்டதை நினைத்துக் குமைந்து குமைந்து, குமுறிக் குமுறி இந்த பன்னிரண்டு மாதங்களும் படாத பாடுபட்டோம்.

       காலம் நம் கவலைகளைத் தின்னவில்லை; கவலைகள் நம் காலத்தைத் தின்றன.

       போர்க்களத்தில் சாவுகள் நிகழ்வது இயல்பு தானே என்று ஆறுதல் அடைய முடியவில்லை. "பொது மக்கள்" என்று உலகமொழியில் பேசப்படும் தமிழின மக்கள் ஆயுதம் ஏந்தாத மக்கள், உயிர் பிழைக்க இடம்விட்டு இடம் நகர்ந்த மக்கள் திரள், கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டனர். விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வளையத்திற்கு வாருங்கள், பாதுகாக்கிறோம் என்று வரவழைத்துக் கொன்றார்கள். வன்னிப் பெருநிலத்தில் 2008 - 2009 மே வரையிலான ஓராண்டு காலத்தில் ஒரு இலட்சம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டார்கள்.

       ஐ.நா. மன்றத்தால் தடை செய்யப்பட்ட கொத்து வெடிகுண்டுகளை, பாஸ்பரஸ் குண்டுகளைப் போட்டு நம் மக்களை அழித்தனர். ஐ.நா. மன்றம் தடுத்ததா? உலகநாடுகள் தட்டிக் கேட்டனவா?

       இந்தியாவும் சீனாவும் சேர்ந்து கொண்டால், இந்த மண்டலத்தில் எந்த மனிதப் பேரழிவையும், கேள்விமுறையின்றி நடத்திவிடலாம் என்பதை அரங்கேற்றிக் காட்டின. உலகப் பெருநாடுகளைப் பொறுத்த வரை, இந்தியாவும் சீனாவும் பெரிய சந்தைகள். அவற்றுடன் உள்ள உறவில் உரசல் வரக்கூடாது. எவ்வளவு இலட்சம் மனித உயிர்கள் அழிந்தால் என்ன?

       தட்டிக் கேட்க தமிழர்க்கொரு சொந்த நாடில்லையே. நிலக்கோளத்தில் பத்துக்கோடிப் பேர் பல நாடுகளில் பரவிக்கிடந்தும் பன்னாட்டு அநாதைகளாக அல்லவா வாழ்கிறோம்! தாய்த் தமிழகத்தில் ஆறரைக் கோடிப் பேர் வாழ்ந்தும் இந்தியாவின் காலனி அடிமைகளாக அல்லவா கட்டுண்டு கிடக்கிறோம்.

       நாம் விரும்பவில்லை என்றாலும் எதிரிகள் நம் மீது ஒரு போரைத் திணித்தார்கள். நடந்தது ஒரு விடுதலைப்போர்.

       உலகம் வியக்க எதிரிகள் திகைக்க மாபெரும் போர்ப்படைத் தலைவராய், இளம் வயதிலேயே ஈழதேசத்தின் தந்தையாய் உருவெடுத்தார் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன். உலகப்புரட்சி இயக்கங்களில் இருந்து கற்றுக் கொண்டு உலகப்புரட்சி இயக்கங்களுக்குக் கற்றுக் கொடுத்த அரிதிலும் அரிதான புரட்சி இயக்கம் விடுதலைப்புலிகள் இயக்கம்.

       விடுதலைப்புலிகள் அமைப்பின் இருபால் தளபதிகள், போராளிகள் ஒப்பற்ற வீரர்கள், வீராங்கனைகள்! மக்கள் வாழ்வதற்காகத் தங்கள் கழுத்தில் சாவுத்தாலி கட்டியவர்கள்!

       இந்தியாவும் சிங்களநாடும் சேர்ந்து கொண்டு எப்பேர்ப்பட்ட தளபதிகளை, புலிப்போராளிகளை அழித்தார்கள். அமைதிப்பேச்சு நடத்த அழைத்துவிட்டு, அதை நம்பி வெள்ளைக் கொடியுடன் வந்த தளபதிகளை, வீரர்களை சுட்டுக் கொன்றனர்.

       2009 மே 16, 17, 18 ஆகிய கடைசி மூன்று நாட்களில் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதியில் 50 ஆயிரம் தமிழர்கள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் - "பொதுமக்கள்" என்று உலகம் அழைக்கும் பிரிவினர் - கொல்லப்பட்டனர். 25 ஆயிரம் பேர் குற்றுயிரும் குலை உயிருமாய்ப் படுகாயமுற்றுத் துடித்தனர். இதைப்பார்த்து நெஞ்சு பொறாமல், விடுதலைப்புலித் தலைமை தற்காப்புப் போரை நிறுத்திக் கொண்டு, துப்பாக்கிகள் அமைதியடைகின்றன என்று அறிவித்தது.

       முள்ளிவாய்க்கால் என்பது ஓர் ஆண்டின் முன் ஓர் இடத்தின் பெயர். இன்று அது ஓர் இனத்தின் அடையாளம்! வரலாற்றுப் பெருநூலில் ஒரு தொகுப்பின் தலைப்பு. தமிழினத்தின் நெஞ்சில் நிலைத்து விட்ட காயம்!

       தாயக விடுதலைப்போரில் வன்னிப் பெருநிலத்திலும் முள்ளிவாய்க்காலிலும் உயிர் ஈந்த தமிழர்களுக்கு வீரவணக்கம்! விடுதலைப்புலித் தளபதிகளுக்கு, விடுதலைப்புலிகளுக்கு வீர வணக்கம்!

       போர் இன்னும் முடியவில்லை. பொழுது இன்னும் விடியவில்லை. வதைமுகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வாடுகிறார்கள். ஒட்டுமொத்த ஈழமண்ணே இராணுவ முகாமாக்கப்பட்டு விட்டது.

       இன்று ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் சிறிய, பெரிய சிங்களப் படை முகாம்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரம்! அங்கு வாழமுடியாமல் தப்பியோடி அடைக்கலம் தேடிக் கடலெங்கும் தமிழர்கள் அலைகிறார்கள். ஆஸ்திரேலியா நோக்கிச் சென்றவர்களை நடுக்கடலில் இந்தோனேசியா, மடக்கிப் பிடித்து அந்நாட்டின் மொராக் துறைமுகத்தில் வைத்துள்ளது. ஆறுமாதங்களுக்கு மேல் அவர்கள் அங்கே தத்தளிக்கிறார்கள். பசி, பிணி, தூய்மைக்கேடு போன்றவற்றால் அவர்கள் படுந்தொல்லை சொல்லில் அடங்காது. கப்பலிலேயே ஒருவர் இறந்துவிட்டார்.

       தஞ்சமளிப்பார்கள் என்று நம்பி மலேசியாவுக்குப் படகில் சென்ற 75 தமிழர்களை வழிமறித்து அந்நாட்டுக்கப்பல் படை பினாங்குத் துறைமுகத்தில் வைத்துள்ளது.        ஏற்கெனவே தப்பி வந்த விடுதலைப்புலிகளையும் புலித் தளபதிகளையும், முக்கியத் தலைவர்களையும் பிடித்து சிங்கள அரசிடம் ஒப்படைத்துவிட்டோம் என்று கூறி பெருமிதப்படுகிறார் மலேசிய உள்துறை அமைச்சர் இசாமுதீன் உசைன்.

       வன்னி வதைமுகாம்களில் இருந்து சிலரை விடுதலை செய்தது இராசபட்சே அரசு. அவர்கள் தங்கள் ஊருக்குச் சென்றால், அந்த ஊரையே காணோம். சிங்களப்படை அந்த ஊர்களைத் தகர்த்தெறிந்து விட்டது. சில ஊர்களில் சில வீடுகள் விட்டு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வீடுகளில் சிங்களர்கள் குடியிருக்கிறார்கள்.

       வதைமுகாம்களிலிருந்து விடுதலை பெற்று வந்த தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளில் குடியேற முடியவில்லை. மறுபடியும் கோயில்கள், பள்ளிகள் என்று தங்கியுள்ளனர். அந்த அவலம் தாங்காமல் சிலர், கமுக்கமாகப் படகுகள் ஏற்பாடு செய்து அடைக்கலம் தேடி அயல்நாடுகளுக்குப் போகிறார்கள். தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருவதைத் தடுக்கிறது கடலோரக் காவல்படை. மீறிவந்தாலும் தமிழக அகதி முகாம்களில் விலங்குகள் போல் வாழ்வதற்கான வசதிகள் மட்டுமே இருக்கின்றன. எனவே அவர்கள் ஆஸ்திரேலியா, மலேசியா என்று போகிறார்கள். நடுக்கடலில் மறிக்கப்பட்டு, திரும்பிப் போகச் சொல்கின்றன இந்தோனேசிய, மலேசிய நாடுகள்.

       மலேசியாவின் பினாங்குத் துறைமுகத்தில் கடலில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் மக்கள் - "எங்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பினால் அந்நாட்டரசு எங்களைக் கொன்று விடும். அதற்குப்பதில் நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் கடலில் குதித்து இங்கேயே செத்துப் போகிறோம்" என்று கூறியிருக்கிறார்கள்.

       அவர்கள் கூறிய இச்சொற்கள் நம் காதுக்கு வரும்போது நெஞ்சம் பதறுகிறது. செய்வதறியாது திகைக்கிறோம். பெருஞ்சக்தியாய் உடனடியாக மக்களைத் திரட்டிப் போராடி அரசைத் திக்குமுக்காடச் செய்யும் சூழல் இன்று தமிழ்நாட்டில் இல்லை. அடையாளப் போராட்டங்களை நடத்துகிறோம். இன எதிரியாக உள்ள இந்திய அரசோ, கங்காணி வேலை பார்க்கும் தமிழக அரசோ அடையாளப் போராட்டங்களுக்கு அசையாது.

       உண்மையான இன உணர்வுள்ள இளைஞர்கள் பலர் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றனர். தமிழ்த் தேசியப் புரட்சியை, தமிழ் நாட்டு விடுதலையை முன்னிறுத்தி உண்மையாகச் செயல்படும் அமைப்பை உரியவாறு அடையாளங் காணாமல் தங்கள் ஆற்றலை விரையம் செய்கிறார்கள்.

       இதோ ஓர், அவலத்தை, அவமானத்தைப் பாருங்கள். நம்முடைய தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அன்னையார் பார்வதியம்மாள், மருத்துவம் செய்து கொள்வதற்காக மலேசியாவிலிருந்து 16.4.2010 இரவு சென்னை வந்தார். இரவு 10.30 மணியளவில் மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் வந்தவரை, தரையிறங்க விடாமல் தடுத்துவிட்டார்கள் இந்திய அரசின் குடிவரவுத்துறை அதிகாரிகள். தஞ்சாறூரில் இருந்த எனக்கு நள்ளிரவில் செய்தி வருகிறது. சென்னையிலிருக்கும் தோழர்களுக்குச் செய்தி சொல்லி வானூர்தி நிலையம் போகச் சொன்னேன். தோழர்கள் போனார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தலாம் எனில், போதிய எண்ணிக்கை இல்லை.

       சிறிது நேரத்திற்கெல்லாம், பூங்குழலி அவர்களுடனும், அய்யா பழ.நெடுமாறன் அவர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். பார்வதியம்மாவை, அழைத்து வர வானூர்தி நிலையம் சென்றிருந்த அவர்கள், அம்மாவை அதே வானூர்தியில் மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பி விட்டார்கள் என்ற செய்தியைச் சொன்னார்கள். வைகோ வரவேற்க வந்துள்ளார் என்ற செய்தியும் கிடைத்தது.

       நாம் வலுவாக இருந்தால், அந்த நேரத்தில் இல்லாவிட்டாலும் அடுத்தநாள் மீனம்பாக்கம் விமான நிலையத்தை மெய்யாகவே முற்றுகை இட்டிருக்கலாம். இந்திய ஆட்சியாளர்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து கூட்டுச் சதி புரிந்த தமிழக ஆட்சியாளர்களுக்கும் பாடம் புகட்டியிருக்கலாம்.

       எண்பது அகவை மூதாட்டி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையாய் வானூர்தியில் கொண்டு வரப்பட்டவர். அவரை மனிதநேயம் சிறிதுமின்றி தமிழின வெறுப்பையும் தன்னல அரசியலையும் தலையில் சுமந்துள்ளவர்கள், திருப்பி அனுப்பிவிட்டார்கள். இத்தனைக்கும் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் முன்கூட்டியே விண்ணப்பித்து, முறைப்படி விசாரணை நடந்து சென்னைக்குக் கடவுச்சீட்டு பெற்றுள்ளார் பார்வதி அம்மையார்.

       தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் தாயார் தமிழ் இனத்தின் தாயார். அவருக்குச் செய்த இன்னல், தமிழ் இனத்திற்குச் செய்த இன்னல். அவர்க்கு இழைக்கப்பட்ட மதிப்புக் கேடு தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட மதிப்புக் கேடு.

       இவ்வாறான இழிவுகள் கொடுமைகள் நடக்கும்போது நாம் கொந்தளித்துக் குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொண்டால் போதுமா? கொஞ்சம் பேர் கூடி ஆர்ப்பாட்டமோ, உண்ணாப் போராட்டமோ நடத்தினால் போதுமா? இந்த இழிவை - இந்தக் கொடுமையை இழைத்த ஆட்சி யாளர்களைப் பின்வாங்கச் செய்யும் அளவிற்குப் போராட வேண்டாமா?

"கூட்டத்தில் கூடிநின்று கூவிப்    பிதற்றலன்றி

நாட்டத்தில் கொள்ளாரடி - கிளியே நாளில் மறப்பாரடீ"

       என்று இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில், சிலரைப் பார்த்து பாரதியார் பாடிய வரிகள் நமக்கும் பொருந்துமா என்பதை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

       விடுதலைப்புலிகள் போரை நிறுத்தினார்களே தவிர, இலங்கை அரசும் இந்திய அரசும் போரை நிறுத்தவில்லை. தமிழ் இனத்திற்கெதிரான போரின் வடிவத்தை இரு அரசுகளும் மாற்றியுள்ளன. ஆனால் போரைத் தொடர்கின்றன.

       "வடக்கின் வசந்தம்" என்ற தலைப்பில் ஈழத்தின் வடக்கு மாநிலத்தில், தமிழர்களின் விளைநிலங்களை சிங்களர் ஆக்கிரமித்துப் பண்ணைகள் நடத்திட இந்திய அரசும் சிங்கள அரசும் கூட்டாகத் திட்டம் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துச் சிங்களர் நடத்தும் வேளாண்மையை நவீன முறையில் எப்படிச் செய்வதென்று அறிவுரை வழங்க, பயிற்சி தர எம்.எஸ்.சுவாமிநாதனை இந்தியா ஏற்பாடு செய்து தந்துள்ளது.

       தமிழர் நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்து வேளாண்மை செய்ய, குடியிருக்க துணிந்து வரும் சிங்களர்க்கு முன்தொகையாக ரூபாய் ஐந்து லட்சம் சிங்கள அரசு தருகிறது. போருக்குப் பிந்தைய துயர் துடைப்புப் பணிகளுக்காக என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தந்த நிதி சிங்களர் ஆக்கிரமிப்பிற்கும் - சிங்களர் நலனுக்கும்தான் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்தியாவுக்குத் தெரியும்.

       வதைமுகாம்களில் உள்ள தமிழர்களிடமும், வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள தமிழர்களிடமும் கஞ்சா போதைப் பழக்கத்தைத் திட்டமிட்டு சிங்கள அரசு உருவாக்குகிறது. பாலியல் வெறியைத் தூண்டும் படங்கள் - குறுந்தகடுகள் ஆகியவற்றை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ கொடுத்துத் தமிழர்களின் நாட்டத்தை சீரழிவு நுகர்வுப் பண்பாட்டில் திருப்பிவிடுகின்றது.

       தமிழர் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி வலுவோடு ஓர் இனம் இனி இருக்கக் கூடாது. தமிழர்களுக்கான தாயகப்பகுதி என்று இனி ஒரு நிலப்பகுதி இருக்கக்கூடாது என்பதே சிங்கள அரசின் திட்டம். அதற்கு முழு ஒத்துழைப்பை இந்திய அரசு வழங்குகிறது.

       சிங்கள அரசு தனது படை வலுவை - போருக்குப் பின் இரண்டு மடங்காக்கி உள்ளது. எனவே இலங்கையும் இந்தியாவும் போரை நிறுத்தவில்லை.

       இந்த நிலையில் தமிழர் களின் நிகழ்கால, எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும்? இந்தப் பேரழிவிலிருந்து நாம் கற்றுக் கொண்ட படிப்பினைகள் என்ன? இவையே நாம் விடையளிக்க வேண்டிய வினாக்கள்.

       தமிழர்கள் என்று குறிப்பிடும் போது முகாமையாக மூன்று பகுதிகளில் வாழும் தமிழர்களையே களப்பணிக்கு நாம் இப்பொழுது அழைக்க முடியும்.

1. ஈழத்தில் வாழும் தமிழர்கள்

2.புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள்

3. தமிழ்நாட்டுத் தமிழர்கள்.

       இணையத் தளங்களிலும் இம்மூன்று பகுதித் தமிழர்களின் செயல்பாடுகள் பற்றியே விவாதிக்கப்படுகிறது.

       முதலில் படிப்பினைகள் யாவை என்று பார்ப்போம்.

1.இந்தியாவைப் பற்றிய வரையறுப்பு

       தமிழீழ விடுதலைக்கு இந்தியாவை நட்பு நாடாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொண்ணூறுகளின் பிற்பாதியிலிருந்து விடுதலைப் புலிகள் தலைமை பெருமுயற்சி எடுத்தது. அதற்காக, இந்தியப் பெருங்கடலில் இந்தியாவுக்கெதிரான வல்லரசிய சக்திகள் நடமாடாமலும், செல்வாக்குப் பெறாமலும் தமிழீழம் தடுக்கும்; அம்மண்டலத்தில் இந்தியாவின் காவல் அரணாகத் தமிழீழம் விளங்கும்; அது இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தை ஏற்கும் என்று விடுதலைப்புலிகள் தலைமை அறிவித்தது. மாவீரர் நாள் உரைகளிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இக்கருத்தை வலியுறுத்தினார்.

       இந்தியாவை நட்பாக்கிக் கொள்ளும் உத்திகளில் ஒன்றாக, இந்தியாவில் நடைபெறும் தேசிய இன விடுதலைப் போராட்டங்களை மதியுரைஞர் ஆன்டன் பாலசிங்கம் எதிர்த்தார். வடநாட்டிலிருந்து வரும் ஆங்கில ஏடொன்றுக்கு இலண்டனில் செவ்வி கொடுத்தபோது, அவர் காஷ்மீர் விடுதலைப் போராட்டம் தவறானது என்றும், இந்தியா ஒரு கூட்டாட்சியாக இருப்பதால் தமிழ்நாட்டிற்குத் தன்னாட்சி இருக்கிறது, எனவே தனித்தமிழ்நாடு கோரிக்கை தேவையற்றது என்றும் கூறினார். (இலண்டனில் ஆண்டன் பாலசிங்கம் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தபோது மேற்கண்ட அவரது நிலைபாடுகள் சரியல்ல எனச் சுட்டிக்காட்டினேன். விடுதலைப்புலிகளின் இந்த நிலைப்பாட்டை த.தே.பொ.க. ஏற்கவில்லை என்று கடந்த காலங்களில் அவ்வப்போது தமிழர் கண்ணோட்டம் இதழில் எழுதியுள்ளோம்)

2. மேற்கண்ட நிலைபாடு இருந்ததால், விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அமைப்புகளுடன் அரசியல் வழிப்பட்ட உறவு கொள்ளவில்லை. இன அடிப்படையில் ஈழ விடுதலைக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் உதவ வேண்டிய கடமைப்பாட்டின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசிய அமைப்புகளுடன் உறவு கொண்டார்கள்.

3. புலம்பெயர்ந்த நாடுகளுக்கு உரையாற்றச் செல்லும் தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்களையும் தோழர்களையும் அறிமுகப்படுத்தும் போதுகூட இந்தியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொல்வார்களே அன்றி, தமிழ்நாட்டிலிருந்து வந்திருப்பதாகச் சொல்ல மாட்டார்கள். இவ்வாறு சொன்னது வேண்டுமென்றே சொல்லப்பட்டதன்று. நடைமுறை இயல்பு, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு அப்படித் தான் இருக்கிறது.

4. தமிழ்நாட்டு உரிமைச் சிக்கல்களான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்படுவது போன்றவை குறித்து ஈழத்தமிழர்களிடமும், புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் விடுதலைப்புலிகள் எடுத்துரைக்கவில்லை. அவர்களின் செய்தி ஏடுகள், ஊடகங்கள் மேற்கண்ட சிக்கல்கள் குறித்து அக்கறை காட்டவில்லை. ஈழத் தமிழர்களும் இச்சிக்கல்களில் அக்கறை காட்டவில்லை.

       தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்தை ஆதரிக்கக் கடமைப்பட்டவர்கள் என்ற ஒரு வழிப்பாதையே கடைபிடிக்கப்பட்டது.

       தமிழ்த் தேசியர்களாகிய நாமும் ஈழவிடுதலைப் போர் கடுமையாக நடந்து கொண்டுள்ளது. இப்போது இத்திறனாய்வுகளைப் பெரிதுபடுத்தக் கூடாது என்று, ஈழஆதரவுப் போராட்டங்களையே அதிக எண்ணிக்கையில் நடத்தி வந்தோம்.

       முகாமையான மேற்கண்ட நான்கு திறனாய்வுகளைப் படிப்பிணைகளாக இப்போது ஏற்க வேண்டும்.

       ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கும் இந்தியா எப்போதும் பகை சக்தியாகவே நடந்து வந்துள்ளது. 1980களில் ஈழ விடுதலைக் குழுக்களுக்கு போர்ப் பயிற்சி கொடுத்தபோது கூட தமிழ்ஈழம் விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கம் இந்திராகாந்திக்கோ இந்தியாவுக்கோ இல்லை என்று குறுநூல் ஒன்றை விடுதலைப்புலிகள் வெளியிட்டனர். (India and Eelam Tamils crisis, தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு வெளியீடு, 1988)

       சிங்களர்களும், தமிழர்களும் சண்டை போட்டுக் கொண்டு, சமரசம் செய்து வைக்கக் கோரித் தில்லியிடம் இருதரப்பாரும் வரவேண்டும் என்பதே இந்தியாவின் உத்தி. அந்த அளவுக்குத் தமிழர் குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தால் போதும், அந்த அளவுக்கு இக்குழுக்கள் வலுப் பெற்றால் போதும் என்பதே இந்திய அரசின் திட்டம் என்று அந்நூல் சரியாக அடையாளங் காட்டியது.

       ஆயுதப் பயிற்சி பெற்ற குழுக்களில் விடுதலைப்புலிகள் மட்டுமே இந்தியாவின் இராணுவத் தலையீடின்றி சொந்த வலுவில் ஈழவிடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற திட்டம் வைத்திருந்தது. இதைத் தெரிந்து கொண்டு, விடுதலைப்புலிகளைப் பாரபட்சமாக நடத்தத் தொடங்கியது இந்திய அரசு. விடுதலைப் புலிகளுக்குப் பழைய ஆயுதங்களையும், ஏனோ தானோ என்று பயிற்சியும் கொடுத்தது. வலுவற்ற டெலோ போன்ற குழுக்களுக்கு நவீன ஆயுதங்களை வாரி வழங்கி, செயற்கையாக வீங்க வைத்தது. இவை அனைத்தையும் அக்குறுநூலில் அப்போதே விடுதலைப் புலிகள் எழுதியிருந்தார்கள்.

       ஆனால் மேற்கண்ட சரியான நிலைக்கு மாறாக விடுதலைப் புலிகள் நிரந்தரமாக இந்தியாவின் ஆதரவைக் கோரும் உத்தியை 1990களின் பிற்பாதியில் வகுத்துக் கொண்டது முரணாக உள்ளது.

       இந்தியாவைப் பகை சக்தியாக வரையறுத்து, அக்கம் பக்கமாகவோ அல்லது தொலைவுகளிலோ உள்ள மற்ற சில நாடுகளின் நட்பைப் பெற விடுதலைப்புலிகள் முயன்றிருக்க வேண்டும். அவ்வாறு நட்பைப் பெற்றிருந்தால் நாம் பன்னாட்டு அனாதையாக ஆகியிருக்கமாட்டோம். இவ்வளவு பெரிய இழப்புகளை தவிர்த்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். நமக்கும் சில நாடுகள் அதிகாரப்பூவமாகவே உலக அரங்கில் குரல் கொடுத்திருக்கும்.

       இந்தியாவுக்கும் தமிழர்களுக்குமான பகை 4000 ஆண்டு இனப்பகை. ஆரிய-தமிழர் இனப் பகை. சிங்களரும் ஆரியரே! சிங்களர் ஆரியரல்லாதவராக இருந்தாலும் தமிழர்களுக்கு எதிராக அவர்களுக்கே இந்தியா துணை நிற்கும்.

       4000 ஆண்டுகளுக்கு முன் நம் சிந்துவெளி நகரங்களை ஆரியர்கள் அழித்தார்கள். இப்பொழுது நம் கிளிநொச்சி நகரத்தை அழித்து, நம் தேசிய நிர்வாகத்தையும் அழித்தார்கள். நம் படையையும் நம் இனமக்களையும் பேரழிவுக்குள்ளாக்கினார்கள். இனியாவது மூன்று பகுதித் தமிழர்களும் இந்தியாவைப் பகை சக்தியாக வரையறுத்துச் செயல்பட வேண்டும். ஈழவிடுதலை என்ற ஒரு முனைப் பார்வையை விடுத்து, ஈழவிடுதலை - தமிழக விடுதலை என்ற இருமுனைப் பார்வை கொள்ள வேண்டும்.

       இனி, ஈழத்தமிழர்களுக்காதரவாகத் தமிழ் நாட்டுத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்காதரவாக ஈழத்தமிழர்களும் இயல்பாகச் செயல்பட வேண்டும். அதே வேளை ஈழ விடுதலைக்கான போராட்ட வடிவம், உத்திகள் வேறாக இருக்கும். தமிழ்த் தேசியப் புரட்சிக்கான போராட்ட வடிவம் உத்திகள் வேறாக இருக்கும்.

       சர்வதேசியம் தமிழினத்தைக் கைவிட்டுள்ள இன்றைய நிலையில் தமிழர் சர்வதேசியம் ஒன்றை நம்மால் கட்டி அமைக்க முடியும். அதன் அடித்தளமாகத் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும் அமைய வேண்டும். ஏனெனில் தமிழகமும் தமிழீழமும் இரண்டு தமிழ்த் தேசங்கள். அந்தந்தத் தமிழர்களின் வரலாற்றுத் தாயகங்கள்.

       புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி, பல நாடுகளுக்கு உழைப்பாளிகளாய்ப் போய் அந்நாடுகளின் குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டுத் தமிழர்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே மொழி அடிப்படையில் பன்னாட்டு உறவும் இப்போது நிலவுகிறது. எனவே, தமிழர் சர்வதேசியம் அமைக்க நம்மால் முடியும்.

       தமிழர் சர்வதேசியம், வணிக உறவாகவும், பொருளியல் சார்ந்தும் வளர வேண்டும். அவ்வாறு இனம், மொழி, பண்பு, பொருளியல் என்ற அடிப்படையில் தமிழர் சர்வ தேசியத்தை நாம் கட்டி எழுப்பினால் விரைவில் நம்மினமில்லாத நாடுகள் பல நம்மோடு பொருளியல், அரசியல் உறவுகொள்ள வாய்ப்பு ஏற்படும். அப்போது தமிழ் இனத்திற்கும் சர்வதேசிய அரசியலில் ஒரு தாக்கம் இருக்கும்.

       அடுத்து, இந்தப் பேரழிவிலிருந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள், குறிப்பாகத் தமிழ்த் தேசியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?

1. இந்தியாவைப் பகை சக்தியாகக் கருத வேண்டும்

       இந்தியாவின் தலைவர் களான நேரு, பட்டேல், இந்திரா காந்தி போன்றோரைப் புகழ்வதும் இந்திய நாடாளுமன்றத்திற்கு ஏற்கெனவே பெருமை இருந்ததாகக் கூறிக் கொள்வதும் தமிழ்த் தேசிய உணர்ச்சியை ஊட்டாது. இந்திய தேசிய உணர்ச்சியைத்தான் ஊட்டும். நேரு, இந்திரா காந்தி போன்று இப்போதுள்ள சோனியா, மன்மோகன் இல்லையே என்று திறனாய்வு செய்வது இந்திய தேசிய மற்றும் காங்கிரஸ் பார்வையாக இருக்குமே தவிர தமிழ்த் தேசியப் பார்வையாக இருக்காது.

       இந்திய ஆதிக்கத்திலிருந்து தமிழ்த் தேச இறையாண்மையை மீட்கப் போராடாமல் இந்தியாவுடன் ஒத்துப் போனால், இந்தியாவை ஈழவிடுதலைக்கு ஆதரவாக திருப்பி விடலாம் என்று கருதுவதும் அடிப்படையற்ற கற்பனையே.

2. தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியர்களுக்கும் தமிழ் இன உணர்வாளர்களுக்கும் முன்னுரிமைச் செயற்களம் தமிழ்நாடு தான். ஈழம் அடுத்தநிலை ஆதரவுக்களம் தான். அதே போல் ஈழத்தமிழர்களுக்கு முன்னுரிமைச் செயற்களம் ஈழம்தான். அடுத்தநிலை ஆதரவுக் களம்தான் தமிழ்நாடு.

       தமிழ் ஈழம் என்ற ஒருமுனை அரசியலை மட்டும் தமிழ்நாட்டில் நடத்தினால், நிலையான மக்கள் திரள் ஆதரவு பெற்ற இயக்கமாகத் தமிழ்த் தேசிய அமைப்புகள் வளர்ச்சி பெறா. மக்கள் திரள் சக்தி பெறாமல் தமிழ்த் தேசிய அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள் தமிழ்நாட்டிற்கும் உரிய பயன்தராது. ஈழத்திற்கும் உரிய பயன் தராது.

3. தமிழ்த் தேசிய அமைப்பு என்றால் புரட்சிகரத் தமிழ்த் தேசிய அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும். தேர்தலில் பங்கு பெறுவதும், தேர்தலில் பங்கு பெறாவிட்டாலும், தேர்தலுக்குத் தேர்தல் யாருக்காவது வாக்குக் கேட்பது போன்ற செயல்களும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் நடைபெறும் இந்தியத்தேசியம் தவிர வேறன்று.

       ஈழவிடுதலையை ஆதரிக்கும் கட்சிகளுடன் தேர்தல் வகையில் கூட்டுச் சேர்ந்து கொண்டு செயல்பட்டால் அந்நடைமுறை தமிழ்த் தேசிய அமைப்புகளையும் சந்தர்ப்பவாத சக்திகளாகவே மாற்றிவிடும். அதே வேளை ஈழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ அரசின் அடக்குமுறைகளைச் சந்திக்கும் போது, அதை எதிர்க்கக் கூடிய தேர்தல் கட்சிகளுடன் கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது தேவை. அதே போல், மற்ற கட்சிகளின் சனநாயக உரிமைகள் பறிக்கப்படும்போது அவர்களுக்கு ஆதரவாகக் கூட்டுப் போராட்டங்கள் நடத்துவதும் தேவை. தேர்தல் அடிப்படையிலான எந்த அரசியல் கூட்டணியுடனும் நம்மை இணைத்துக் கொள்ளக்கூடாது என்பதே இங்கு வலியுறுத்தப்படும் கருத்து.

       தமிழீழத்துக்கும் தமிழ்த் தேசத்திற்கும் இந்தியா என்பது பகை சக்தி. இலங்கைத் தீவு இந்திய - சீன ஆதிக்க மோதலின் களமாக இருப்பது உண்மை. ஆயினும் இந்த மோதலின் ஊடாக ஏதோ ஒரு கட்டத்தில் இந்தியா தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தரும் என்று கற்பனை செய்து கொள்ளக் கூடாது. இந்த வரையறுப்புகளில் நின்று கொண்டு ஈழவிடுதலைப் புரட்சியின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும். உள்ளதை உள்ளபடி பார்த்தால் மேற்கண்ட வரையறுப்புகளுக்கு வரமுடியும்.

       தமிழீழ விடுதலைப்புரட்சி இப்போது தோல்வியைச் சந்தித்துள்ளது. தோல்வி இல்லை என்றோ, வெறும் பின்வாங்கல் என்றோ கணிக்கக் கூடாது. இது நிரந்தரத் தோல்வி இல்லை. படிப்பினைகளைக் கற்றுக் கொண்டுவிட்டால், வெற்றிக்கான புதிய உத்திகளை வகுக்க முடியும்.

       உலகப்புகழ் பெற்ற பல புரட்சிகள் முதலில் தோற்றுப் பின்னரே வெற்றி பெற்றன. ரசியப்புரட்சி 1905-இல் தோல்வியடைந்தது. அது 1917-இல் வெற்றி பெற்றது. கியூப் புரட்சி 1953-இல் தோல்வியுற்றது. அது 1959-இல் வெற்றி பெற்றது. அல்ஜீரியப் புரட்சியும் முதலில் தோற்றுப் பின்னரே வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் ஆயுதப் புரட்சி செய்து ஆட்சி நடத்தினார்கள். அமெரிக்கப் படையால் அது தோற்கடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட தலிபான்கள் அழிக்கப்பட்டு விட்டனர் என்று கருதப்பட்டது. அமெரிக்கக் கூட்டுப் படைகள் இப்பொழுதும் அங்கு இருந்து தலிபான்களை எதிர்த்துப் போரிடுகின்றன. ஆனால் தலிபான்கள் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி சொந்த ஆட்சி நடத்தி வருகின்றனர். தலிபான்களின் சமூகவியல் கோட்பாடுகள் பலவற்றை நாம் ஏற்கவில்லை. ஆனால் அவர்கள் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடுகிறார்கள் என்ற அளவில் அவர்களின் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

       எனவே புரட்சிகர சக்திகளுக்குத் தோல்வி இல்லை. ஈழவிடுதலைப் புரட்சிக்கும் தோல்வியில்லை. மீண்டும் எழும்.

       இப்பொழுது நாம் தோற்றிருக்கிறோம். நம்மைத் தோற்கடித்தவர்களை நாம் தோற்கடிப்போம். தமிழர் வீரமும், தமிழர் அறமும் ஒருநாளும் தோற்காது. நமக்கு அழிவறியா ஆற்றல் தரும் மொழி நமது தாய்த்தமிழ்!

       வன்னிப் பெருநிலத்தில் - முள்ளிவாய்க்காலில் மண்ணுக்குள் விதையாகிப் போன நம் மக்களும் புலிகளும் பல்லாயிரமாய் பல லட்சமாய் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்!

       இது அவர்களுக்கு முதலாமாண்டு நினைவேந்தல்!

       இப்பொழுது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

       ஈழத்தமிழர்களைக் காக்க தம்முடலைத் தணலுக்கீந்த முத்துக் குமார் உள்ளிட்ட நெருப்புப் போராளிகள் 18 பேர்க்கும் வீரவணக்கம் செலுத்துவோம்!

       தமிழீழம் வெல்க!

       தமிழ்த்தேசம் மலர்க!

தமிழர்கள் வாழ்ந்த பூமி இன்று சிங்களவனின் கையில் - தமிழர்களுக்கு அங்கு இடம் இல்லை.

டக்கு இலங்கையில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் இன்றைய உண்மையான நிலவரம் என்ன?

பல்லாயிரம் தமிழர்கள் பதில் அறியத் துடிக்கும் கேள்வி இது. இதற்கான பதிலைத் தருகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பியான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள அவரது பேட்டி: 

புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். வெளி உலகுக்கு அதன் 'ரகசியங்கள்' தெரிந்துவிடக் கூடாது என்பதில் மூர்க்கமாக இருக்கும் இலங்கை அரசு, தமிழ் எம்.பிக்களைக்கூட அங்கு போகவிடாமல் தடுத்து வருகிறது.

கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும், கடந்த வாரம் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன். சென்னை வந்துள்ள அவரைச் சந்தித்து, சில கேள்விகளை முன் வைத்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 13 எம்.பி-க்கள் இருக்கும்போது, நீங்கள் ஒருவர் மட்டும் முல்லைத் தீவுக்குச் சென்று வந்தது எப்படி?

புதிய எம்.பி-க்கள் அனைவரும்தான் கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி கேட்டோம். ஆனால், இழுத்தடித்தனர். 'பூடானில் சார்க் மாநாடு முடிந்த பிறகு போக லாம்' என்றது இலங்கை அரசு. அது முடிந்த பிறகும் அனுமதி வரவில்லை. இப்படி, கூட்டமைப்பு எம்.பி-க்கள் சேர்ந்து செல்வது தள்ளிக்கொண்டே போக... நான் எங்கள் கட்சியினருடன் சேர்ந்து கிளிநொச்சி ஊடாக முல்லைத் தீவுக்குச் சென்று வந்தேன்.

எந்த வழியாகச் சென்றீர்கள்? வழியில் ராணுவத் தடைகள் இருந்தனவா?

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆனையிறவு, கிளிநொச்சி, மாங் குளம் ஊடாக முல்லைத் தீவு சென்றோம். வழியெங்கும் பல இடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். படை முகாம்களும், சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன. மாங்குளத்தில் இருந்து முல்லைத் தீவுக்குச் செல்லும் சாலையில், நான்காவது கிலோ மீட்டரில் ஒரு பெரிய சோதனைச் சாவடி. அங்கே வாகன இலக்கத்தைப் பதிவுசெய்துகொண்டு, பயணத்தைப்பற்றிக் கேட்டார்கள். முல்லைத் தீவு மாவட்ட அரசு அதிபரைச் சந்திக்கச் செல்வதாகக் கூறியதும் விட்டுவிட்டார்கள்.

எங்கெங்கே சென்றீர்கள்? இப்போது, அந்த இடங்கள் எப்படி உள்ளன?

கிளிநொச்சி, முல்லைத் தீவு நகரம், தண்ணீரூற்று, முள்ளிய வளை, ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு ஆகிய இடங்களைப் பார்த்தோம். சுமார் மூன்று லட்சம் வீடுகள் இருந்த இரண்டு மாவட்டங்களில், பெரும்பாலான கட்டடங்கள் முற்றிலுமாகச் சேதம் அடைந்துள்ளன. மாவட்ட அரசு அதிபர் கட்டடம்போன்ற சில இடங்களில்தான் பாதிப்பு இல்லை!

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமை என்ன?

மீள்குடியேற்றப்பட்ட என்று சொல்வதைவிட, 'முகாமில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட' என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். சொந்த ஊருக்குத் திரும்பினார்களே தவிர, அங்கே சொந்த வீடுகளே இல்லை. 99 சதவிகிதம் பேரின் வீடுகள் முழுதுமோ, பயன்படுத்த முடியாத அளவுக்கோ ராணுவத் தாக்குதலால் தகர்க்கப்பட்டுள்ளன. பெரிய பெரிய கல் வீடுகளில் வாழ்ந்தவர்களும் இப்போது மரத்தடிகளில்தான் சுருண்டு கிடக்கிறார்கள். ஊர் திரும்புவோருக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் சார்பில், 5,000 ரூபாய் பணம் தருகின்றனர். வீடுகளைச் செப்பனிட இந்தத் தொகை கொஞ்சமும் போதாது. அகதிகள் ஆணையம் வழங்கும் 10 தகரங்களையோ தார்ப்பாலினையோ வைத்து டென்ட் அடித்துக்கொண்டு, அதில்தான் மக்கள் பசியில் கிடக்கின்றனர்!

மக்கள், வயிற்றுப் பசியாற என்ன செய்கிறார்கள்?

இரண்டு மாவட்டங்களிலும் விவசாயமும் மீன்பிடியும்தான் தொழில்கள். இங்குள்ள 75 சதவிகித மக்கள் உழைத்து வளமாக வாழ்ந்தவர்கள். இன்று அடிமட்டத்துக்கு வந்துவிட்டார்கள். ஒட்டு சுட்டான், முத்தையன்கட்டு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெல் பயிரிடப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் 10 ஏக்கர், 20 ஏக்கர் என்று பயிர்செய்து வந்தனர். ஏராளமான காய்கறி களையும் பயிரிட்டு வட மாகாணம் முழுவதும் தந்தவர்கள் அவர்கள். ஆனால், அவர்களால் அங்கு இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. விதை நெல் கிடையாது, உரம், கிருமிநாசினிக்கு வழி இல்லை, உழைக்கக் கருவிகள் இல்லை. உணவுக்கும் வழி இல்லை.

பல விவசாயிகளின் நிலங்களில் ராணுவம் முகாம்கள் அமைத்துவிட்டது. பல இடங்களில் ராணுவ நிரந்தர முகாம்களுக்காக, பெரும் அளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதில், விவசாய நிலங்களும் அடக்கம். மேலும், மாடுகளையும் அபகரித்துவிட்டார்கள். பல பகுதிகளுக்குச் செல்லவிடாமல் மக்களை ராணுவம் தடுப்பதால், காணாமல்போன மாடுகளைத் தேடவும் வாய்ப்பு இல்லை. நீண்டகாலம் உரிமையாளரின் பராமரிப்பு இல்லாததால், அந்த மாடுகள் கட்டாக்காலி மாடுகளாகத் திரிகின்றன. இவற்றில், கணிசமானவற்றை ராணுவத்தினரின் பண்ணைகளில் பார்த்த தாகக் கூறிய மக்கள், அதைக் கேட்கும் துணிவின்றி நிற்கிறார்கள்.

மீனவர்களின் நிலையும் படுமோசம். அவர்களுக்கு வலையோ, படகு இயந்திரமோ எதையும் வழங்கவில்லை. மீன் பிடிக்க பல இடங்களில் அனுமதி அளித்ததாக அரசு கூறுகிறது. ஆனால், வற்றாப்பளை என்ற மீனவக் கிராமத்தில் நந்திக்கடலை ஒட்டி, குறிப்பிட்ட பகுதியில் (கடைசிக்கட்டப் போரில் மக்கள் அரசுப் பகுதிக்கு நடந்து வந்த பகுதி இது) மட்டும்தான் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதுவும் நடந்தே சென்று மீன் பிடிக்கக்கூடிய சிறிய பகுதியில் மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளதால், அதிகம் பேர் குவிய... குறைவான மீன்களே கிடைக்கின்றன. ஒரு நாளைக்கு இலங்கைப் பணத்தில் 100, 150 ரூபாய் வரை கிடைத்தாலே பெரிய விஷயம். (இந்திய மதிப்பில் 50 முதல் 75 ரூபாய் வரை) ஒரு சிறிய குடும்பத்துக்கே இந்தத் தொகை போதாது. குழந்தை உள்ள குடும்பத்தினர், வாரம்தோறும் உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சீனியை விற்று, அதன் மூலம் குழந்தைகளுக்குப் பால் மாவு வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை!

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்... ஆனால், உரிய முறையில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக அரசுத் தரப்பு கூறுகிறதே?

இதற்கு நான் ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும். கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்திபுரம் என்று ஒரு கிராமத்தில், 400 குடும்பங்கள் முன்பு இருந்தன. இவர்கள் முகாம்களில் இருந்து வந்ததும், 100 குடும்பங்களுக்கு மட்டும் கல்வீடுகள் கட்டித் தரப்பட்டன. ஆனால், அவர்களை அங்கே வசிக்கவிடாமல் மீண்டும் முகாம்களுக்கே அனுப்பி விட்டனர்.

மேலும், முகாம்களில் இருந்து ஊருக்கு அனுப் பப்படும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 தரப் படுவது தவிர, 20 ஆயிரம் ரூபாய் வங்கியில் போடப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படி வங்கியில் பணம் செலுத்தப்பட்டு, பாஸ் புத்தகம் எதுவும் யாருக்கும் இது வரை வழங்கப்படவில்லை!

இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் ஆயிரக்கணக்கான வாகனங்களை விட்டுச்சென்றார்களே... அவற்றின் கதி..?


எனக்குத் தெரிய கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் 35 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள், 10 ஆயிரம் டிராக்டர்கள் இருந்தன. அவற்றைக் கேட்டபோது, புலிகள் அழித்துவிட்டதாக முதலில் ராணுவம் கூறியது. நாங்கள் பலமுறை இதுகுறித்து முறையிட்ட பிறகு இப்போது, 100 மோட்டார் சைக்கிள்கள் இருப்பதாகவும், பெற்றுக்கொள்ளலாம் என்றனர். ஆனால், மொத்த வாகனங்களையும் ராணுவத்தினர் உதிரி பாகங்களாகப் பிரித்து விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடைசியாகப் போர் நடந்த கடலோரப் பகுதியில் என்ன பார்த்தீர்கள்?

ராணுவத் தாக்குதல் நடந்த முள்ளி வாய்க்கால், மாத்தளன் கடல்பகுதியை ராணுவம் தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறது. மாங்குளத்தில் இருந்து முல்லைத் தீவுக்கு என்னை அனுமதித்த படையினர், ஒட்டுசுட்டான் சந்தி என்ற இடத்துக்கு மேல் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் என்று நான் கூறியும், 'உங்களுக்கு மாவட்ட அரசு அதிபரைச் சந்திக்கத்தான் அனுமதி உள்ளது' என்று தடுத்துவிட்டார்கள். அதற்கு, அங்கே கண்ணிவெடிகளை அகற்றுவதாக அரசுத் தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.

அங்கு கண்ணிவெடி அகற்றப்படுவது உண்மைதானா? இதுபற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

வற்றாப்பளை கிராமத்தில் மட்டும் 15 பேர்கொண்ட குழுவினர் கண்ணிவெடியை அகற்றும் பணியில் ஈடுபட் டிருந்தனர். இதேபோல, எல்லாக் கிராமங்களிலும் கண்ணிவெடி இருக்கவேண்டும் என்பதில்லை. அப்படிச் சொல்வது தவறு. ஓரிரு இடங்களில் கண்ணிவெடிகளை புலிகளும் வைத்திருக்கலாம், ராணுவமும் தற்காப்புக்காக வைத்திருக்கலாம். 

ஆனால், கடைசிக் கட்டத் தாக்குதல் நடத்தப்பட்ட மாத்தளன், முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் நின்ற மக்கள், தங்கள் நகைகளையும் உடைமைகளையும் அங்கு பல இடங்களில் புதைத்துவைத்துள்ளனர். அவற்றை ராணுவத்தினர் எடுத்துக்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்தார்கள். இலங்கை ராணுவத்தின் மீது போர்க் குற்றச்சாட்டு வலுத்துவரும் நிலையில், அரசாங்கத்தின் தடையானது சந்தேகங்களை வலுவாக்குகிறது...., என்று கவலை வார்த்தைகளில் இறக்கிவைத்தார் சுரேஷ் பிரேமச் சந்திரன் எம்.பி!




போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை காட்டியும் அசையாத இலங்கை : ஜூனியர் விகடன்

போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை காட்டியும் அசையாத இலங்கை : ஜூனியர் விகடன்
 
 
இலங்கை அரசு போர்க் குற்றங்களை இழைத்திருக்கிறது. எனவே, அதன் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்' என்ற குரல்கள் வலுவடைந்து வருகின்றன. கடந்த 17-ம் தேதி, பிரஸல்ஸ் நகரை தலைமையிடமாகக்கொண்ட 'இன்டர்நேஷனல் கிரைஸிஸ் குரூப்ஸ்' என்ற மனித உரிமை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்ததற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன என்றும், ஐ.நா. சபை உடனடியாக இலங்கை அரசின் மீது விசாரணையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. தமது குற்றச்சாட்டுக்குப் போதுமான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்றும் அந்த அறிக்கை வெளியிட்ட குழு தெரிவித்திருந்தது.

இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப்ஸைத் தொடர்ந்து 'ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்' என்ற அமைப்பும் இதே விதமான குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறது. கடந்த 20-ம் தேதி அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களைச் செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் தமக்குக் கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

அத்துடன், தமிழ்ப் போராளி ஒருவர் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவது பற்றிய ஐந்து புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது. இதுபோன்று, இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரால் எடுக்கப்பட்ட 200 புகைப்படங்கள் தம்மிடம் உள்ள தாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த புகைப்படங்களில், ஒருவர் தென்னை மரம் ஒன்றோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிற காட்சியும், அவருடைய உடம்பிலும் முகத்திலும் இரத்தம் வழிகிற காட்சியும், அவரைச் சுற்றி இராணுவ உடை அணிந்தவர்கள் நிற்பதும், அதில் ஒருவர் அவரது முகத்துக்கு நேராக கத்தியை காட்டுவதும் தெரிகிறது.

இந்தக் காட்சிகள் இரண்டு புகைப்படங்களில் உள்ளன. அடுத்து வரும் மூன்று புகைப்படங்களில் அந்த இளைஞர் செத்துக் கிடப்பதும், அவர் மீது விடுதலைப் புலிகளின் கொடி போடப்பட்டிருப்பதும் தெரிகிறது. அந்தப் புகைப் படத்தில் இருப்பவரைப்பற்றி விசாரித்ததில், அந்த இளைஞர் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்திருப்பதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

இந்தப் புகைப்படங்களை ஆராய்ந்த நிபுணர் ஒருவர், இறந்து கிடக்கும் இளைஞனின் புகைப்படத்தில் முகத்தில் ஒட்டிக்கொண்டு இருப்பது மூளையின் சிதைவுகள்போல் உள்ளது. அவர் பின்னந்தலையில் கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவதாகவும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்டர்நேனஷல் கிரைஸிஸ் குரூப்ஸின் அறிக்கை இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விரிவாகவே விவரித்துள்ளது. 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் கடைசி ஐந்து மாதங்களில் பலமுறை இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியிருக்கிறார்கள்.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்த சண்டையில் இருதரப்பினருமே பல்வேறு வன்கொடுமைகளைச் செய்திருக்கிறார்கள் என்ற போதிலும், அத்துமீறல்களின் அளவும் தன்மையும் 2009 ஜனவரிக்கும், போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்த மே மாதத்துக்கும் இடையில் மிக அதிகமாக இருந்தன. இடைப்பட்ட மாதங்களில் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கொல்லப்பட்டனர். பலர் படுகாயப்படுத்தப்பட்டனர். பலர் உணவும் மருந்தும் இன்றிச் சாகடிக்கப்பட்டனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவம் மேல்மட்டத்தில் இருந்தவர்களின் ஒத்துழைப்போடு போர்க் குற்றங்களைச் செய்திருக்கிறது என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

விடுதலைப் புலிகள் மற்றும் அதன் தலைவர்கள் ஆகியோரும்கூட போர்க் குற்றங்களைச் செய்துள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் நீதியை எதிர்கொள்வதற்கு வாய்ப்பு இன்றி இறந்துவிட்டனர்.

இலங்கை அரசாங்கம் நியாயமான விசாரணையை மேற்கொள்வதற்குத் தகுதியற்றது என்பதாலும், பல்வேறு நாடுகளும் இலங்கை மாதிரியைத் (srilankan model) தமது உள்நாட்டு முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்குப் பயன்படுத்தக்கூடிய ஆபத்து இருப்பதாலும், சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப்ஸிடம் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளச் செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின்மீது வேண்டுமென்றே குண்டுகளை வீசியது: ஜனவரி மாதம் முதற்கொண்டே அரசாங்கமும் இராணுவமும், பொதுமக்களை மிகவும் குறுகிய பாதுகாப்பு வளையத்துக்குள் செல்லுமாறு வற்புறுத்தி, அங்கு வந்தவர்களைக் கண்மூடித்தனமாகக் குண்டு வீசித் தாக்கினார்கள். பொதுமக்களுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் தெரிந்திருந்தும் மே மாதம் வரை தொடர்ந்து அவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு:

காயப்பட்டவர்களாலும், நோயாளிகளாலும் நிரம்பி வழிந்த மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள் எங்கே இருக்கின்றன எனத் தெரிந்தும், வேண்டுமென்றே அவற்றின் மீது குண்டுகளை இலங்கை இராணுவம் வீசியது. சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்ந்து இதுபற்றி அரசுத் தரப்பில் தகவல்களைத் தெரிவித்தும்கூட, மே மாதம் வரை குண்டுகள் வீசப்பட்டு, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சேவை மையங்கள் மீது தாக்குதல்:

மனிதாபிமான ரீதியிலான சேவைகளை ஆற்றிய மையங்கள் எங்கெங்கு செயல்படுகின்றன என்பது தெரிந்திருந்தும், அங்கு அவற்றின் ஊழியர்கள், வாகனங்கள், பொதுமக்கள் இருப்பது தெரிந்திருந்தும், குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துக்காட்டியும், உணவு மற்றும் மருந்து விநியோகங்களைத் தடுத்து நிறுத்தியும் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் துன்புறுத்தப்பட்டனர்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டதாக இன்டர்நேஷனல் கிரைஸிஸ் குரூப்ஸ் கூறியுள்ளது.

இலங்கை இராணுவம் மட்டுமின்றி விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களைச் செய்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

குண்டு வீச்சுக்குப் பயந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குத் தப்பித்துச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டு பலரைக் கொன்றது மற்றும் படுகாயப்படுத்தியது. போர் நடக்கும் பகுதியில் உணவுப்பொருட்கள் இல்லாமையாலும், குண்டுவீச்சினாலும் உயிருக்கு ஆபத்து இருப்பது தெரிந்திருந்தும், பலர் காயப்பட்ட நிலையிலும் அந்தப் பகுதியைவிட்டு வெளியேற புலிகள் அனுமதிக்கவில்லை. வேலை செய்வதற்கும், சண்டைபோடுவதற்கும், பொதுமக்களில் பலரைக் கட்டாயப்படுத்தியது, எதிர்ப்பு தெரிவித்தவர்களை அடித்து உதைத்தது ஆகிய குற்றங்களை விடுதலைப் புலிகள் செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009 ஆகஸ்ட் மாதம் முதல் இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் சேகரித்த ஆதாரங்கள், போர் நடந்த முறை குறித்தும் இருதரப்பிலுமான அரசியல் மற்றும் இராணுவத் தலைமைப் பொறுப்புகளை வகித்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்துவதற்குப் போதுமான ஆதாரங்களாக உள்ளன.

நம்பகமான கண்ணுற்ற சாட்சிகள், புகைப்படங்கள், வீடியோப் பதிவுகள், செய்மதிப் படங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் வழியே பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவல்கள், பல்வேறு தரப்புகளில் இருந்தும் பெறப்பட்ட ஆவணங்கள் என ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இழைக்கப்பட்ட குற்றங்களில் இவை கொஞ்சம்தான், ஆனால் கடந்த வருடம் நடைபெற்ற யுத்தத்தைப்பற்றி ஆராய்வதற்கு இது முதல்படியாக இருக்கும். விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படையில் சேர்த்தது மற்றும் சரணடைய வந்தவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்றது ஆகியவை குறித்து மேலும் விசாரிக்கப்பட வேண்டும்.

இலங்கை இராணுவத்தையும், விடுதலைப்புலிகளையும் குற்றம்சாட்டும் இன்டர்நேஷனல் கிரைஸிஸ் குரூப், சர்வதேசச் சமூகத்தையும் கடுமையாக விமர்சித்து இருக்கின்றது. மிகப் பெரிய இனப் படுகொலை நடத்தப்பட்டபோது சர்வதேச நாடுகள் அதைத் தடுப்பதற்கு சரியான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாததை அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் இராணுவ அத்துமீறல்கள் நடந்துகொண்டு இருந்தபோது, சர்வதேசச் சமூகம் கண்ணை மூடிக்கொண்டு இருந்தது. ஒருசில நாடுகள் அமைதி காக்குமாறு அறிக்கைகள் விட்டன, வேறு எதுவும் உருப்படியாகச் செய்யவில்லை. பலநாடுகள் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என அறிவித்து அவர்களின் வீழ்ச்சியை ஆதரித்தன. அவை, இலங்கை அரசாங்கத்தின் கடுமையான அணுகு முறையை ஆதரித்தன.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறவில்லை. போர் குறித்த சட்டங்களை மீறியும், மிகப் பெரிய மனித அவலத்தை நடத்தியும்தான் கடைசியில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அழிக்க முடிந்தது. இது உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களிடையே கசப்பு உணர்வை உண்டு பண்ணியது மட்டுமின்றி, அங்கு ஓர் அமைதித் தீர்வை ஏற்படுத்துவதற்கும் தடையாக மாறியது. ஐ.நா சபையின் நம்பகத்தன்மையையும் குலைத்துவிட்டது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

போர்க் குற்றங்களைப்பற்றி எடுத்துக் கூறியுள்ள இன்டர்நேஷனல் கிரைஸிஸ் குரூப்ஸ், இன்னோர் ஆபத்தையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இலங்கையில் தமது உரிமைகளுக்காகப் போராடிய தமிழர்கள் மிகக் கொடூரமாக இராணுவத்தால் ஒடுக்கப்பட்ட நிகழ்வானது, பல்வேறு நாடுகளுக்கு மிக மோசமான முன்னுதாரணமாக மாறக் கூடிய ஆபத்து இருக்கிறது. தமது சொந்த நாட்டு மக்கள் மீது விமானத் தாக்குதலைத் தொடுக்க பெரும்பாலும் அரசாங்கங்கள் தயக்கம் காட்டுவதே உலக நடைமுறை. ஆனால், தமது குடிமக்கள் மீதே விமானத் தாக்குதலை நடத்தி பல்லாயிரக்கணக்கானவர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசின் நடவடிக்கை இன்று மற்ற நாடுகளுக்குத் தைரியம் அளித்திருக்கிறது. தாமும் இதே பாணியைப் பின்பற்றி தமது நாடுகளில் இருக்கும் எதிர்ப்புக் குழுவினரை ஒடுக்குவதற்கு இன்று அரசாங்கங்கள் சிந்திக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

மனித உரிமைகளைப்பற்றி கவலைப்படாத, பேச்சுவார்த்தைக்கு முன்வராத, கட்டுப்பாடில்லாத இராணுவ நடவடிக்கையை மேற்கொள்கிற இலங்கையின் அணுகுமுறையை இப்போது எல்லா நாடுகளுமே தமக்கான முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள நினைக்கின்றன. கலகக் குழுக்களை எதிர்கொள்வதற்கு வெற்றிகரமான உதாரணமாக இது மாறிவிட்டது! என்கிற இந்த அறிக்கை, இலங்கை அரசு (இனியாவது!) எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும், ஐ.நா. சபையும், அதன் உறுப்பு நாடுகளும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் சுவிட்சர்லாந்து முதலான நாடுகளுக்கு ஒரு வேண்டுகோளையும் இந்த அறிக்கை முன்வைத்துள்ளது.

இந்த நாடுகள் தமது நாடுகளில் உள்ள விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்றும், தமது அதிகார வரம்புக்கு உட்பட்ட விதத்தில் இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்களைப்பற்றி இந்த நாடுகளே விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமது நாடுகளுக்கு தஞ்சம்கோரி வருகின்ற ஈழத் தமிழர்களை குறிப்பாக, போர்க் குற்ற விசாரணை தொடர்பான சாட்சிகளை இந்த நாடுகளின் அரசாங்கங்கள் கௌரவமாக நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசின் மீது பல்வேறு விதமான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் அறிக்கையும் இதே கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது. அது மட்டுமின்றி, இலங்கை அரசு கண்துடைப்பாக சில விசாரணை கமிஷன்களை அமைத்துள்ளது. அதை சர்வதேச சமூகமும், ஐ.நா. சபையும் நம்ப வேண்டாம். இது உலக நாடுகளை ஏமாற்றுவதற்கு இலங்கை கையாளும் வழக்கமான தந்திரம். இலங்கையில் இதுபோல் ஒன்பது கமிஷன்கள் அமைக்கப்பட்டன. ஆனால், ஒன்றுகூட உருப்படியான பரிந்துரையை வழங்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது.

தவிர, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் இலங்கை விவகாரத்தில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விமர்சித்திருக்கிறது-.

கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி அவர் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு கமிட்டி ஒன்றை நியமிக்கப்போவதாகத் தெரிவித்தார். ஆனால், அதன் பிறகு இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த கமிட்டிக்கு ஓர் உறுப்பினரைக்கூட அவர் நியமிக்கவில்லை. பான்-கி-மூனின் இத்தகைய மெத்தனமான அலட்சியப்போக்கு, இலங்கை போன்று மனித உரிமைகளை மீறுகின்ற இனப் படுகொலைகளைச் செய்கின்ற அரசாங்கங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துவிடும் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் இந்த அறிக்கைகளால் இப்போது இலங்கை அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

வழக்கம்போல இந்தியாதான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று ராஜபக்ஷ எதிர்பார்க்கிறார். இந்தியாவும்கூட அதற்குத் தயாராக இருக்கிறது என்பதைத்தான் அண்மைக் கால நிகழ்வுகள் காட்டுகின்றன. விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீட்டித்துள்ள மத்திய அரசு, அதற்காகக் கூறியுள்ள காரணங்கள் ராஜபக்ஷவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த ஆண்டு ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்நாட்டு மக்கள், நாடாளுமன்றத் தேர்தல் சந்தடியில் அதைக் கவனிக்கத் தவறிவிட்டனர். சர்வதேசச் சமூகம் விழிப்படைந்து வரும் இந்த நேரத்திலாவது தமிழ்நாட்டு மக்கள் தமது குரலை உயர்த்தி இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை நடத்தும்படி வலியுறுத்த வேண்டும்!

 ஜூனியர் விகடன் : அட்டைப்பக்க  செய்தி

நக்கீரன் ஜெகத் கஸ்பர் மற்றும் ராம் -ராஜபக்சேயின் புதிய நாடகம்.

ஒரு துரோக சினிமா தயாரகிறது!


மானமும் வீரமும் மட்டுமல்ல… துரோகமும் வஞ்சமும் கூட தமிழனின் கூடப் பிறந்த குணங்கள்தான் என்று சொல்ல வைக்கின்றன, ஈழப்போருக்குப் பின்னர் தெரிய வரும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள்.


தமிழினத்தின் விடியலுக்கு தேசியத் தலைவர் பிரபாகரன் பட்ட பாடுகளையெல்லாம், ரொம்ப சுலபமாக காட்டிக் கொடுத்து கருவறுப்பு வேலை செய்துள்ளனர், அவரை தலைவர் என்று சொல்லி பிரமாதமாய் நடித்து வந்தவர்கள்.

இலங்கையின் வடக்குப் பகுதி காடுகள் அதிர்கின்றன, மீண்டும் யுத்தம் பிறக்கிறது, இதோ புதிய படை புறப்பட்டுவிட்டது, அதை நேரில் பார்த்த நிருபரின் அனுபவம் என புதிய கதைகள் முளைத்த அடுத்த சில மணி நேரங்களில், அதன் பின்னணி பற்றிய திடுக்கிடும் உண்மைகள் வந்தவண்ணம் உள்ளன.

இதுபற்றிய ஆனந்த விகடன் கட்டுரையைத் தருகிறோம்:

ராஜபக்சே டைரக்ஷனில் டூப்ளிகேட் புலி!

மிழ் உணர்வாளர்களின் நெற்றியில் மிகப் பெரிய 'ராம நாமம்' போட்டுப் பார்க்கிறது ஒரு கும்பல். 'கிளம்பிட்டார்ல எங்க ஆளு' என்று ஒரு பிரிவும், 'இதுக்குப் பின்னால பெரிய சதி இருக்குங்க' என்று இன்னொரு குழுவும் சொல்ல, ஈழ விவகாரத்தில், இன்னொரு விவகாரமாகக் கிளம்பி இருக்கிறார் கேணல் ராம்!

"நான்காம் கட்ட ஈழப் போரில் எங்கள் படையணி ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு, போராட்டத்தின் தேவையை உணர்ந்த நாங்கள், சிதறிக்கிடந்த புலிகளை ஒன்றிணைக்கும் பொறுப்பை மேற்கொண்டோம். கடந்த ஓராண்டாக நாங்கள் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

என்னைக் குறிவைத்து 15 முறை சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட போர்க்கள அனுபவத்தின் காரணமாக நான் தப்பித்து வருகிறேன். எங்கள் படையணியினரின் வீரமும், மன உறுதியும், தாய் நாட்டின் விடுதலை வேட்கையும்தான் எங்களை இயங்கவைக்கிறது. சிங்கள ராணுவத்துக்கு நாங்கள் சவாலாக இருந்து வருகிறோம்!"- என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தளபதியாக தன்னைத்தானே பிரகடனப்படுத்தி வரும் கேணல் ராம் என்பவர் அறிவித்திருக்கிறார். இவரைப் பார்த்து யாருமே அதிர்ச்சி அடையவில்லை.

ஆனால், 'இவருக்குப் பின்னால் யார்?' என்ற சந்தேகம் மட்டுமே மிச்சமாகி இருக்கிறது.

ராஜபக்சே டைரக்ஷனில் தயாராகும், 'டூப்ளிகேட் புலி' என்ற துரோக சினிமாவின் தொடக்கமாகவே, இதை விவரம் அறிந்தவர்கள் உணர்வார்கள்.

2009-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரனின் மர்மத்துக்குப் பிறகு தடியெடுத்தவர் எல்லாம் தமிழ்ப் புலித் தலைவராகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். 'பிரபாகரன் என்னைத்தான் அடுத்த தலைவராக அறிவித்துப் போனார்' என்று சொன்ன கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன், 'கைது' செய்யப்பட்டு தனி பங்களாவில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

'மக்கள் விடுதலை ராணுவம்' என்ற அமைப்பு தங்களைப் புதிய போராளிகளாக, தனி நாட்டுக்காகப் போராடுவதாக அறிவித்தது. 'ஆதரவாளர்களைக் கண்டுபிடிக்க செய்யப்பட்ட செட்டப்' என்று அந்தப் பேட்டி அம்பலப்படுத்தப்பட்டது. புலிகளின் புதிய ஊடகத் துறை – அதிகாரபூர்வ இணையதளம் என்ற பெயரில் அடுத்ததாக ஒரு பரபரப்பு கிளம்பியது.

அது யார் என்று விசாரித்தால், 21 ஆண்டுகளுக்கு முன்னால் இயக்கத்தைவிட்டு வெளியேறி, உளவு அமைப்புகளின் இன்ஃபார்மராக மாறிவிட்ட குண்டப்பா, அதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது… கேணல் ராம்!

கிழக்கு மாகாணத்தை ராணுவம் கைப்பற்றிய பிறகு, அந்த மாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சிறப்புத் தளபதியையும் தாக்குதல் தளபதியையும் 2008-ம் ஆண்டு மே மாதம் பிரபாகரன் நியமித்தார். மட்டக்களப்புக்கு கேணல் கீர்த்தி, திரிகோணமலைக்கு கேணல் வசந்தன், அம்பாறைக்கு கேணல் ராம் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். பிரபாகரனுக்குக் கீழ் அணி வகுத்த அத்தனை தளபதிகளும், பிரிகேடியர் பால்ராஜ் மறைவைத் தொடர்ந்து ஒரே இடத்தில் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது, கீர்த்தி, வசந்தன் இருவரை மட்டுமே வரச் சொல்லி இருந்தார் பிரபாகரன். ராமுவுக்கு அழைப்பு இல்லை.

கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பிறகு, கிழக்கு மாகாணத்தில் தனித்துவிடப்பட்டார் ராம். "கிழக்கு மாகாணத்தில் எஞ்சியிருக்கும் புலிகள், அரசாங்கத்திடம் சரணடைய என்னுடைய உதவியை நாடி வருகிறார்கள். ராம் என்று அறியப்பட்ட தலைவர், கடந்த சில தினங்களாக என்னைத் தொடர்புகொண்டு வருகிறார்" என்று கருணா அளித்த பேட்டி ராமை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. கருணாவின் முயற்சியால், ராம் சரணடைந்ததாகத் தகவல் கள் வெளியாகின.

ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து ராம் தப்பிவிட்டதாக அடுத்த தகவல் வந்தது. ராணுவத்தின் வசம் இருந்து எவரும் எளிதில் தப்பிவிட முடியாது. அதுவும் கேணல் பொறுப்பில் இருந்தவரை, 'நாலாவது மாடி'யில் வைத்து நையப்புடைத்து விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ராம் மட்டும் 'தப்பினார்'.

தலைமறைவான ராம், அடுத்த சில நாட்களில் தன்னைப் புதிய தளபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டார். சந்தேகம் அதிகமானது. மாவீரர் தினத்தன்று உரையும் நிகழ்த்தி, அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார். "இந்தச் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும். இதற்காக, நாம் எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்யத் தயாராக உள்ளோம். அத்துடன், ஆயுத வன்முறைகளையும் முற்றாகக் கைவிடத் தயாராக உள்ளோம்" என்று பகிரங்கமாக அறிவித்தார் ராம்.

இவை அனைத்தும் கடந்த நவம்பர் மாதம் நடந்தவை. தலைமறைவானவர், தலைமறைவாகத்தான் முடியுமே தவிர, பின்னால் குயிலோசை கேட்க… மாவீரர் உரையாற்ற முடியாது. அவர் பேசி முடித்த சில நிமிடங்களில் முக்கியமான அனைத்து இணைய தளங்களுக்கும் அப்பேச்சு அனுப்பி வைக்கப்பட்டது. அதுவும், அந்த பி.டி.எஃப். ஃபைலுக்கு 'மகா வீர' என்ற சிங்கள வார்த்தையைக் குறிச் சொல்லாக வைத்து இருந்தார்கள். 'இது நம்முடைய நிலம். இங்கு அந்நியன் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறான்' என்பதுதான் புலிகள் இதுவரை வைத்த குற்றச்சாட்டு. முதன்முதலாக ராம், தமிழர்களைச் சிறுபான்மை இனம் என்று சொல்லிக்கொண்டார். 'தமிழீழ மனோபாவம்கொண்டவரால் அப்படி ஒரு பேச்சை எழுதியிருக்கவே முடியாது' என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தன.

ஆயுதம் உள்பட அனைத்தையும் விட்டுவிட்டு போராடப்போவதாக பகிரங்கமாக அறிவித்த அந்த ராம், இப்போது புலிப் படையை உருவாக்கி காட்டுக்குள் போராடிக்கொண்டு இருப்பதாகக் கதை கட்டப்படுகிறது. இதற்குப் பின்னணியில் சிங்கள உளவுத் துறையின் கைங்கர்யம் அதிகமாக இருப்பதாகவே தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் பேச்சு.

பொறிக்குள் தேங்காய் சில்லைவைத்து எலி பிடிக்கும் தந்திரம்போல, ராம் என்ற ஒருவரைக் காட்டி யாரெல்லாம் புலி ஆதரவாளர்கள், நிதி உதவி எங்கிருந்து கிடைக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சிங்கள உளவுத் துறை திட்டமிட்டது. "ராம் தன்னைத் தலைவராகப் பிரகடனப்படுத்தியதும், புலிப் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள், ராமைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். வர மறுத்த ராம், குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி அங்கு அவர்களை வரச் சொன்னார். புலிகள் போகவில்லை. மாறாக, ராமுடன் இருக்கும் இரண்டு பேர் பெயரைச் சொல்லி, அவர்களையாவது எங்களிடம் அனுப்பிவைக்கக் கேட்டனர். அதற்கும் ராம் உடன்படவில்லை. பொதுவாகவே, ராணுவக் கட்டுப்பாட்டில் சிக்கியவர்கள்தான் தங்களது இடத்துக்கு மற்றவர்களை அழைப்பார்கள்.

ராம் மீது அதன் பிறகுதான் சந்தேகம் வந்தது. அவரை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று புலிப் புலனாய்வினர் அறிவித்தார்கள்" என்று விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

புலிகளைத் தலையெடுக்கவிடாமல் தடுப்பது, அவர்களது வெளிநாட்டுக் கட்டமைப்பை உடைப்பது, புலம் பெயர் நாடுகளில் உள்ள ஈழத் தமிழர் அரசியலைச் சிதைப்பது… ஆகிய மூன்று இலக்குகளை சிங்களப் புலனாய்வுத் துறை தனது திட்டமாக வைத்துள்ளது. அதற்கு ராம் 'கையாள்' ஆக்கப்பட்டு உள்ளார்.

ராம், ஆயுதப் பயிற்சி பெற்றது தமிழகத்தில்தான். 1982-ல் கொளத்தூர் முகாமில்தான் பயிற்சி பெற்றதாகச் சொல்லி இருக்கிறார். உண்மை என்னவெனில், புலிப் படையின் 9-வது பிரிவில் பயிற்சி பெற்றவர் ராம். முதல் இரண்டு பிரிவுகளுக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்தது, 3, 6, 10 பிரிவுக்கு கொளத்தூரிலும், 4,5 பிரிவுக்கு வத்திராயிருப்பு மலையிலும், 7,8,9 பிரிவுக்கு திண்டுக்கல்லிலும் பயிற்சிகள் தரப்பட்டன. அதாவது, தன்னுடைய சுய கதையைக்கூட சுத்தமாகச் சொல்லத் தெரியாத அளவுக்குக் குழம்பி இருக்கிறார் ராம்.

"இவரைவைத்து புலிகள் அமைப்பு மீண்டும் இயங்குவதாகச் சொல்வதன் மூலமாக, இலங்கையை எப்போதும் பதற்றமுள்ள நாடாகவே காட்டிக்கொள்ள ராஜபக்சே விரும்புகிறார். பயங்கரவாதம் நாட்டில் இருக்கிறது என்ற பூச்சாண்டியைக் காட்டியே, தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள நினைக்கிறார்" என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

இது போன்ற தகவலை இங்கு பரப்புவதும் அரசியலுக்குத் தேவையாக இருக்கிறது. 11-வது முறையாக விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் இந்த மாதம் தடை செய்யப்பட்டு உள்ளது. முற்றாக ஒழிக்கப்பட்ட இயக்கத்தை ஏன் தடை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழாமல் இருக்க… இயக்கம் இருப்பதாக போலித் தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள். இதைவைத்து ஈழம், ஈழ மக்கள் துயரங்கள், அவலங்களைப் பேசுவதையே பயங்கரவாதமாகப் பார்க்கத் தூண்டும் காரியத்துக்கு ராம் பயன்படுத்தப்படுகிறார். நிஜப் புலிக்குப் பயந்தவர்கள், டூப்ளிகேட் புலியைக் காட்டிப் பயமுறுத்துகிறார்கள்.

'விழிப்புதான் விடுதலைக்கு முதல் படி' என்று பிரபாகரன் சொன்னதாகச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்யும் புலம்பெயர் எழுத்தாளர் ஒருவர், 'எம்முடைய எதிரி, எமது மண்ணில், எமது இடத்திலேயே பிறந்துவிட்டான்' என்று எழுதியிருக்கிறார்.

வீரன் முளைக்கும்போதே, துரோகியும் துளிர்க்கிறான் என்பார்கள். ஆனால், வீரனின் வெற்றிக்கு முன், துரோகியின் தோல்வி அறிவிக்கப்படும்!

நன்றி: ஆனந்த விகடன்

துரோகத்தின் மழுப்பல் வார்த்தைகள் அல்லது துரோகிக்கு சாமரம் வீசுபவரின் வார்த்தைகள் .


 

karunanidhi_subavee

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா அவர்களை, மருத்துவ உதவிக்காகச் சென்னைக்கு அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன், திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ஆகிய நானும், 26.04.2010 இரவு 8 மணிக்குத் தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம். ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றோம். அச்சந்திப்பின்போது துணை முதல்வர் அவர்களும், சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அவர்களும் உடன் இருந்தனர். அச்சந்திப்பையும், அதன்பின் நடைபெற்ற செயல்பாடுகளையும் பதிவு செய்ய வேண்டியமை, காலத்தின் தேவையாக உள்ளது.

மனுவைப் படித்துப் பார்த்த முதல்வர் "இதுல எனக்கு என்ன இருக்கு? அவுங்களை நான் ஏன் தடுக்கப் போறேன்? நான்தான் சட்டமன்றத்திலேயே சொன்னேனே... அவுங்ககிட்ட இருந்து கடிதம் வந்தா, உடனே பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி, அவுங்களை வர வைக்கலாம்" என்றார். எங்கள் மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. வீரமணி அய்யா, கலைஞரின் அருகில் சென்று, "அப்ப கடிதம் வந்தா, உடனே டெல்லிக்கு அனுப்பிடலாம் இல்லையா?" என்று கேட்க, "அடுத்த நிமிடமே அனுப்பிடலாம்" என்று சொல்லி முதலமைச்சர் சிரித்தார்.

பிறகு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், "இந்தத் தகவல் அவுங்க இங்க வரதுக்கு முன்னாடியே நமக்கு வந்திருந்தா, ஒரு பிரச்சினையும் இல்லாம எல்லாம் நல்லா முடிஞ்சிருக்கும்" என்று முதல்வர் குறிப்பிட்டார்.

மேலே உள்ள கூற்றில் இருக்கும் உண்மையைத் தமிழக மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் நம் தமிழீழ உறவுகளும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே நம் பணிவான வேண்டுகோள்.

அம்மா சென்னை விமான நிலையம் வந்திறங்கி, அங்கு சிக்கல்கள் ஏற்பட்ட பின்னரே, நள்ளிரவில் நண்பர் திருமாவளவனோடும், என்னோடும் வெளிநாட்டு நண்பர்கள் தொடர்பு கொண்டனர். "கலைஞரையும், எங்களையும் இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா?" என்று வருத்தத்துடன் கேட்டேன். "இல்லையில்லை, நாங்கள் யாருக்குமே சொல்லவில்லை" என்று கூறினார். "அப்படியானால், நெடுமாறன் அய்யாவிற்கும், அண்ணன் வைகோ விற்கும் மட்டும் எப்படிச் செய்தி தெரிந்தது?" என்ற கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லை.

அதற்கான விடை இப்போது தெரிந்திருக்கிறது. 'தென்செய்தி' இதழில் பூங்குழலி எழுதியுள்ள முகப்புக் கட்டுரையில், "ஒரு வார காலமாக, எந்நேரமும் வரலாம் என்று காத்திருந்ததால்..." எனக் குறிப்பிட்டுள்ளார்.

'இரவு 8.30 மணிக்கே அப்பா (நெடுமாறன் அய்யா) மூலம் பார்வதி பாட்டி வர இருப்பதை அறிந்தேன்' என்றும் குறிப்பிடுகின்றார். எனவே, நெடுமாறன், வைகோ இருவருக்கும் ஏற்கனவே செய்தி சொல்லப்பட்டிருப்பது தெளிவாகின்றது.

அந்த 8.30 மணிக்கு, எங்கள் மூவரில் யாரேனும் ஒருவருக்குச் செய்தி தெரிந்திருந்தால் கூட, அதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்க முடியும்.

என்ன செய்வது... கலைஞரையும், கலைஞரின் ஆதரவாளர்களையும் அவர்கள் நம்பவில்லை. ஆனால், பிரபாகரனின் பெற்றோர் பெயரைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், அவர்கள் மீண்டும் இங்கு திரும்ப வருவதைச் சட்டத்திற்கு உட்பட்டோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ தடுத்திட வேண்டும் என்றும் 2003 இல் கடிதம் எழுதிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அவருடைய ஆதரவாளர்களையும், வெளிநாட்டில் வாழும் தமிழீழத் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் நம்புகின்றனர்.

அந்த அடிப்படையில், போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே, வைகோவை ஜெயலலிதா இயக்குகின்றார். வைகோ, அய்யா நெடுமாறனை இயக்குகின்றார். எனவேதான், கலைஞருக்கு எதிராக ஜெயலலிதாவின் தலைமையிலோ, வைகோவின் தலைமையிலோ நடந்திருக்க வேண்டிய உண்ணாவிரதம், நெடுமாறன் ஐயா தலைமையில் நடைபெற்றது.

அம்மாவை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரவேண்டும், ஈழ மக்களுக்கு எவ்வகையிலேனும் உதவ வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, எப்படியேனும் கலைஞர் அரசுக்கு எதிராக ஏதேனும் ஒன்றைக் கையில் எடுக்க வேண்டும் என்ற முனைப்பே இங்கு கூடுதலாகத் தென்படுகின்றது.

இனியும் தயங்காமல், இரண்டு செய்திகளை நாம் வெளிப்படையாகப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. 1. அகவை முதிர்ந்த, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தாயைத் திருப்பி அனுப்பிய அதிகாரிகளின் செயல் எப்படி மனித நேயமற்றதோ, அவ்வாறே அத்தாயை வைத்து உள்ளூர் அரசியல் செய்ய நினைப்பதும் மனித நேயமற்ற செயலே.

2. ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை, தமிழ்த்தேசியத் தலைவர்கள் இனியேனும் தயவுசெய்து விட்டுவிட வேண்டும் என்று, பெரியார் திடல் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார் நண்பர் திருமாவளவன். அது அவர்களால் முடியாதெனில், நடுநிலையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் போலித்தனத்தையாவது உதறிவிட்டு, தாங்கள் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களாகவே செயல்படுகின்றோம் என்னும் உண்மையையேனும் உலகுக்கு உரைத்திட வேண்டும்.

கலைஞர் மீதான அவதூறுகளுக்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 03.05.10அன்று துணை முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பும், அன்று இரவு முதல்வர் அளித்த பேட்டியும் அமைந்துள்ளன.

மலேசியாவிலிருந்து பெறப்பட்ட அம்மாவின் கடிதத்தை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பியதுடன் நிற்காமல், அவரது மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்று கூறியுள்ள முதல்வரின் கனிவைத் தமிழ்கூறு நல்லுலகம் வரவேற்றுப் போற்றுகிறது. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் தம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்து மகிழ்கின்றனர்.

- சுப.வீரபாண்டியன்




நல்ல போராட்டம் கேரளாவின் சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டன.

நல்ல போராட்டம் கேரளாவின் சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டன.
 
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் தலையங்கம் எழுதுகிறேன். அதற்க்கு காரணம் நான் செய்கின்ற தொழில்  அதன் சம்பந்தமாக நான் செலவிட வேண்டிய நேரம்.
 
இனிமேலும் இது போன்று இடைவெளிகள் இருக்காது. தினமும் ஒரு கருத்தை இங்கே பதிவேன்.
 
நேற்று முன்தினம்  நடந்த மதிமுக வின் சாலை மறியல் போராட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதை ஏன் பத்திரிக்கைகள் அதிகம் கண்டு கொள்ளவில்லை.
 
நான் மாலை மலரை இணையத்தில் பார்த்தேன் அவர்களுக்கு ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி விவகாரம் பெரிதாய் தெரிந்துள்ளது ஆனால் வேகாத வெயிலில் பல லக்ஷம் பேரை ,வைகோ ,  நேரடியாக சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி தமிழகத்தின் மிக முக்கியமான வாழ்வாதார பிரச்சினைகளை ஒட்டி நடந்த இந்த போராட்டத்தை பற்றி ஏன் எழுதவில்லை ?
 
நேற்றைய தினமலர் கூட ஒரு செய்தியை கூட வெளியிடவில்லை.  ஏன் வைகோ வையும் மதிமுக வையும் அங்கீகரிக்க மறுக்கிறார்கள் ?
 
எனக்கு தெரிந்து வைகோ வின் இந்த போராட்டம் சமீப கால அரசியலில்  மிக பெரியது.  உண்மை நிலவரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லக்ஷம் பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.
 
கைதானவர்கள் பத்தாயிரத்தில் இருப்பார்கள்.
 
இந்த போராட்டத்தை வைகோ மட்டும் நடத்தவில்லை பல அமைப்புகளும் கட்சிகளும் சேர்ந்துதான் நடத்தியுள்ளது. நெடுமாறன், கொளத்தூர் மணி ,அர்ஜுன் சம்பத், மணியரசன் போன்றோரும் சேர்ந்து நடத்தியுள்ள நல்ல போராட்டம்.
 
பத்திரிக்கைகள் நடு நிலை தவறி வருகின்றன என்பதை இது தெளிவாய் காட்டுகிறது.


நன்றி
வணக்கம்
 

தமிழர்கள் வாழ்ந்த பூமி இன்று சிங்களவனின் கையில் - தமிழர்களுக்கு அங்கு இடம் இல்லை.

வடக்கு இலங்கையில், இறுதிப் போர் நடந்த பகுதிகளில் இன்றைய உண்மையான நிலவரம் என்ன?

பல்லாயிரம் தமிழர்கள் பதில் அறியத் துடிக்கும் கேள்வி இது. இதற்கான
பதிலைத் தருகிறார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பியான சுரேஷ்
பிரேமச்சந்திரன்.

ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள அவரது பேட்டி:

புலிப் போராளிகளின் படைத்தளமாக இருந்த முல்லைத் தீவுக் கடல்தளம், இன்று
புதிர்கள் மண்டிக்கிடக்கும் பூகம்பப் பிரதேசம். வெளி உலகுக்கு அதன்
'ரகசியங்கள்' தெரிந்துவிடக் கூடாது என்பதில் மூர்க்கமாக இருக்கும் இலங்கை
அரசு, தமிழ் எம்.பிக்களைக்கூட அங்கு போகவிடாமல் தடுத்து வருகிறது.

கடுமையான நெருக்கடிகளுக்கு நடுவிலும், கடந்த வாரம் கிளிநொச்சி, முல்லைத்
தீவு மாவட்டங்களுக்குச் சென்று வந்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன். சென்னை வந்துள்ள அவரைச் சந்தித்து,
சில கேள்விகளை முன் வைத்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 13 எம்.பி-க்கள் இருக்கும்போது, நீங்கள்
ஒருவர் மட்டும் முல்லைத் தீவுக்குச் சென்று வந்தது எப்படி?

புதிய எம்.பி-க்கள் அனைவரும்தான் கிளிநொச்சி, முல்லைத் தீவு
மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதி கேட்டோம். ஆனால், இழுத்தடித்தனர்.
'பூடானில் சார்க் மாநாடு முடிந்த பிறகு போக லாம்' என்றது இலங்கை அரசு.
அது முடிந்த பிறகும் அனுமதி வரவில்லை. இப்படி, கூட்டமைப்பு எம்.பி-க்கள்
சேர்ந்து செல்வது தள்ளிக்கொண்டே போக... நான் எங்கள் கட்சியினருடன்
சேர்ந்து கிளிநொச்சி ஊடாக முல்லைத் தீவுக்குச் சென்று வந்தேன்.

எந்த வழியாகச் சென்றீர்கள்? வழியில் ராணுவத் தடைகள் இருந்தனவா?

யாழ்ப்பாணத்தில் இருந்து ஆனையிறவு, கிளிநொச்சி, மாங் குளம் ஊடாக முல்லைத்
தீவு சென்றோம். வழியெங்கும் பல இடங்களில் ராணுவத்தினர் உள்ளனர். படை
முகாம்களும், சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன. மாங்குளத்தில் இருந்து
முல்லைத் தீவுக்குச் செல்லும் சாலையில், நான்காவது கிலோ மீட்டரில் ஒரு
பெரிய சோதனைச் சாவடி. அங்கே வாகன இலக்கத்தைப் பதிவுசெய்துகொண்டு,
பயணத்தைப்பற்றிக் கேட்டார்கள். முல்லைத் தீவு மாவட்ட அரசு அதிபரைச்
சந்திக்கச் செல்வதாகக் கூறியதும் விட்டுவிட்டார்கள்.

எங்கெங்கே சென்றீர்கள்? இப்போது, அந்த இடங்கள் எப்படி உள்ளன?

கிளிநொச்சி, முல்லைத் தீவு நகரம், தண்ணீரூற்று, முள்ளிய வளை,
ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு ஆகிய இடங்களைப் பார்த்தோம். சுமார் மூன்று
லட்சம் வீடுகள் இருந்த இரண்டு மாவட்டங்களில், பெரும்பாலான கட்டடங்கள்
முற்றிலுமாகச் சேதம் அடைந்துள்ளன. மாவட்ட அரசு அதிபர் கட்டடம்போன்ற சில
இடங்களில்தான் பாதிப்பு இல்லை!

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் நிலைமை என்ன?

மீள்குடியேற்றப்பட்ட என்று சொல்வதைவிட, 'முகாமில் இருந்து வெளியே
அனுப்பப்பட்ட' என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். சொந்த ஊருக்குத்
திரும்பினார்களே தவிர, அங்கே சொந்த வீடுகளே இல்லை. 99 சதவிகிதம் பேரின்
வீடுகள் முழுதுமோ, பயன்படுத்த முடியாத அளவுக்கோ ராணுவத் தாக்குதலால்
தகர்க்கப்பட்டுள்ளன. பெரிய பெரிய கல் வீடுகளில் வாழ்ந்தவர்களும் இப்போது
மரத்தடிகளில்தான் சுருண்டு கிடக்கிறார்கள். ஊர் திரும்புவோருக்கு ஐ.நா.
அகதிகள் ஆணையம் சார்பில், 5,000 ரூபாய் பணம் தருகின்றனர். வீடுகளைச்
செப்பனிட இந்தத் தொகை கொஞ்சமும் போதாது. அகதிகள் ஆணையம் வழங்கும் 10
தகரங்களையோ தார்ப்பாலினையோ வைத்து டென்ட் அடித்துக்கொண்டு, அதில்தான்
மக்கள் பசியில் கிடக்கின்றனர்!

மக்கள், வயிற்றுப் பசியாற என்ன செய்கிறார்கள்?

இரண்டு மாவட்டங்களிலும் விவசாயமும் மீன்பிடியும்தான் தொழில்கள். இங்குள்ள
75 சதவிகித மக்கள் உழைத்து வளமாக வாழ்ந்தவர்கள். இன்று அடிமட்டத்துக்கு
வந்துவிட்டார்கள். ஒட்டு சுட்டான், முத்தையன்கட்டு கிராமங்களில்
ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நெல் பயிரிடப்பட்டது. ஒவ்வொரு குடும்பமும் 10
ஏக்கர், 20 ஏக்கர் என்று பயிர்செய்து வந்தனர். ஏராளமான காய்கறி களையும்
பயிரிட்டு வட மாகாணம் முழுவதும் தந்தவர்கள் அவர்கள். ஆனால், அவர்களால்
அங்கு இப்போது எதுவும் செய்ய முடியவில்லை. விதை நெல் கிடையாது, உரம்,
கிருமிநாசினிக்கு வழி இல்லை, உழைக்கக் கருவிகள் இல்லை. உணவுக்கும் வழி
இல்லை.

பல விவசாயிகளின் நிலங்களில் ராணுவம் முகாம்கள் அமைத்துவிட்டது. பல
இடங்களில் ராணுவ நிரந்தர முகாம்களுக்காக, பெரும் அளவில் நிலம்
கையகப்படுத்தப்பட்டுள்ளதில், விவசாய நிலங்களும் அடக்கம். மேலும்,
மாடுகளையும் அபகரித்துவிட்டார்கள். பல பகுதிகளுக்குச் செல்லவிடாமல்
மக்களை ராணுவம் தடுப்பதால், காணாமல்போன மாடுகளைத் தேடவும் வாய்ப்பு
இல்லை. நீண்டகாலம் உரிமையாளரின் பராமரிப்பு இல்லாததால், அந்த மாடுகள்
கட்டாக்காலி மாடுகளாகத் திரிகின்றன. இவற்றில், கணிசமானவற்றை
ராணுவத்தினரின் பண்ணைகளில் பார்த்த தாகக் கூறிய மக்கள், அதைக் கேட்கும்
துணிவின்றி நிற்கிறார்கள்.

மீனவர்களின் நிலையும் படுமோசம். அவர்களுக்கு வலையோ, படகு இயந்திரமோ
எதையும் வழங்கவில்லை. மீன் பிடிக்க பல இடங்களில் அனுமதி அளித்ததாக அரசு
கூறுகிறது. ஆனால், வற்றாப்பளை என்ற மீனவக் கிராமத்தில் நந்திக்கடலை
ஒட்டி, குறிப்பிட்ட பகுதியில் (கடைசிக்கட்டப் போரில் மக்கள் அரசுப்
பகுதிக்கு நடந்து வந்த பகுதி இது) மட்டும்தான் மீன் பிடிக்க அனுமதி
அளிக்கப்படுகிறது. அதுவும் நடந்தே சென்று மீன் பிடிக்கக்கூடிய சிறிய
பகுதியில் மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளதால், அதிகம் பேர் குவிய...
குறைவான மீன்களே கிடைக்கின்றன. ஒரு நாளைக்கு இலங்கைப் பணத்தில் 100, 150
ரூபாய் வரை கிடைத்தாலே பெரிய விஷயம். (இந்திய மதிப்பில் 50 முதல் 75
ரூபாய் வரை) ஒரு சிறிய குடும்பத்துக்கே இந்தத் தொகை போதாது. குழந்தை உள்ள
குடும்பத்தினர், வாரம்தோறும் உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும்
அரிசி, பருப்பு, சீனியை விற்று, அதன் மூலம் குழந்தைகளுக்குப் பால் மாவு
வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை!

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்... ஆனால், உரிய முறையில் மக்களை
மீள்குடியேற்றம் செய்வதாக அரசுத் தரப்பு கூறுகிறதே?

இதற்கு நான் ஓர் உதாரணத்தைச் சொல்ல முடியும். கிளிநொச்சி மாவட்டத்தில்
சாந்திபுரம் என்று ஒரு கிராமத்தில், 400 குடும்பங்கள் முன்பு இருந்தன.
இவர்கள் முகாம்களில் இருந்து வந்ததும், 100 குடும்பங்களுக்கு மட்டும்
கல்வீடுகள் கட்டித் தரப்பட்டன. ஆனால், அவர்களை அங்கே வசிக்கவிடாமல்
மீண்டும் முகாம்களுக்கே அனுப்பி விட்டனர்.

மேலும், முகாம்களில் இருந்து ஊருக்கு அனுப் பப்படும் ஒவ்வொரு
குடும்பத்துக்கும் 5,000 தரப் படுவது தவிர, 20 ஆயிரம் ரூபாய் வங்கியில்
போடப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அப்படி வங்கியில் பணம்
செலுத்தப்பட்டு, பாஸ் புத்தகம் எதுவும் யாருக்கும் இது வரை
வழங்கப்படவில்லை!

இடம்பெயர்ந்த மக்கள் தங்களின் ஆயிரக்கணக்கான வாகனங்களை
விட்டுச்சென்றார்களே... அவற்றின் கதி..?

எனக்குத் தெரிய கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் 35 ஆயிரம்
மோட்டார் சைக்கிள்கள், 10 ஆயிரம் டிராக்டர்கள் இருந்தன. அவற்றைக்
கேட்டபோது, புலிகள் அழித்துவிட்டதாக முதலில் ராணுவம் கூறியது. நாங்கள்
பலமுறை இதுகுறித்து முறையிட்ட பிறகு இப்போது, 100 மோட்டார் சைக்கிள்கள்
இருப்பதாகவும், பெற்றுக்கொள்ளலாம் என்றனர். ஆனால், மொத்த வாகனங்களையும்
ராணுவத்தினர் உதிரி பாகங்களாகப் பிரித்து விற்றுவிட்டதாகக்
கூறப்படுகிறது.

கடைசியாகப் போர் நடந்த கடலோரப் பகுதியில் என்ன பார்த்தீர்கள்?

ராணுவத் தாக்குதல் நடந்த முள்ளி வாய்க்கால், மாத்தளன் கடல்பகுதியை
ராணுவம் தன் பாதுகாப்பில் வைத்திருக்கிறது. மாங்குளத்தில் இருந்து
முல்லைத் தீவுக்கு என்னை அனுமதித்த படையினர், ஒட்டுசுட்டான் சந்தி என்ற
இடத்துக்கு மேல் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்
என்று நான் கூறியும், 'உங்களுக்கு மாவட்ட அரசு அதிபரைச் சந்திக்கத்தான்
அனுமதி உள்ளது' என்று தடுத்துவிட்டார்கள். அதற்கு, அங்கே கண்ணிவெடிகளை
அகற்றுவதாக அரசுத் தரப்பில் காரணம் சொல்லப்படுகிறது.

அங்கு கண்ணிவெடி அகற்றப்படுவது உண்மைதானா? இதுபற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள்?

வற்றாப்பளை கிராமத்தில் மட்டும் 15 பேர்கொண்ட குழுவினர் கண்ணிவெடியை
அகற்றும் பணியில் ஈடுபட் டிருந்தனர். இதேபோல, எல்லாக் கிராமங்களிலும்
கண்ணிவெடி இருக்கவேண்டும் என்பதில்லை. அப்படிச் சொல்வது தவறு. ஓரிரு
இடங்களில் கண்ணிவெடிகளை புலிகளும் வைத்திருக்கலாம், ராணுவமும்
தற்காப்புக்காக வைத்திருக்கலாம்.

ஆனால், கடைசிக் கட்டத் தாக்குதல் நடத்தப்பட்ட மாத்தளன், முள்ளிவாய்க்கால்
கடலோரத்தில் நின்ற மக்கள், தங்கள் நகைகளையும் உடைமைகளையும் அங்கு பல
இடங்களில் புதைத்துவைத்துள்ளனர். அவற்றை ராணுவத்தினர்
எடுத்துக்கொள்ளக்கூடும் என்றும் தெரிவித்தார்கள். இலங்கை ராணுவத்தின்
மீது போர்க் குற்றச்சாட்டு வலுத்துவரும் நிலையில், அரசாங்கத்தின்
தடையானது சந்தேகங்களை வலுவாக்குகிறது...., என்று கவலை வார்த்தைகளில்
இறக்கிவைத்தார் சுரேஷ் பிரேமச் சந்திரன் எம்.பி!