தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா? கருணாநிதியின் விளம்பரத்திற்க்கா?

செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா? கருணாநிதியின் விளம்பரத்திற்க்கா?

தமிழ்நாட்டில் தமிழிலேயே படிக்காமல் மழலை முதல் உயர்கலவி வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், தமிழே தெரியாமல் அண்டை மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலம் மொழி வழிகளிலேயே படிக்கிற வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது ஆனால், மருத்துவ படிப்பு மற்றும் உயர் கல்விகளே தமிழிலில் படிக்க வழியில்லை.


தமிழகத்தின் உயர் வழக்கு மன்றத்திற்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம், என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் இன்னும் மாற்றவில்லை அதிலும் தமிழில் பேச முடியாது.


தமிழக அரசு அலுவலகங்களில் கூட தமிழில் ஆட்சி நடைமுறைகள் முழுமையாக இல்லை.
தமிழகத்தில் இருக்கிற இந்திய அரசு அலுவலகங்களில் தமிழகமே நுழைய முடியாது. வங்கிகளில் தமிழ் இல்லை, வழிபாட்டில் தமிழ் இல்லை


இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவர வேண்டுமான முயற்சி திராவிட கட்சிகளிடம் இல்லை. முத்தமிழ் அறிஞர், ஐந்தமிழ் அறிஞர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கருணாநிதிக்கு தமிழனைத் தமிழில் படிக்க வைக்க முடியவில்லை.


தில்லியில், மும்பையில் ஓடும் வண்டிகளில் இந்தியில் எண்கள் உள்ளன. கருநாடகத்தில் கன்னடத்தில் எண்கள், குஜராத்தில் குஜராத்திதியில் எண்கள், வங்காளத்தில் வங்காள மொழியில் எண்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தமிழில் எண்கள் எழுதினால் விதி மீறல் என்று சிறைப்படுத்துகிறது தமிழக அரசு.


தமிழினத் தலைவர் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்தும் தமிழை கல்வி மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ நடைமுறைப்படுத்த இயலவில்லை என்றால் அவர் எதை நோக்கி மாநாடு அறிவிக்கிறார்.


செம்மொழி என்று இந்திய அரசு தமிழை ஏற்றிருப்பது சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கூட அல்ல.


ஆண்டுதோறும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி உருவாய் ஒதுக்குகிற இந்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு ஒரு கோடி மட்டும் ஒதுக்குகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்தால் தமிழ் எந்த அளவு இழிவுக்குள்ளாக்கப்படுகிறது என்பது தெரியும்.


தமிழக மக்களின் வாயை அடைப்பதற்கு தமிழைச் செம்மொழி என்கிற அறிவிப்பை ஒப்புக்கு இந்திய அரசு செய்திருக்கிறது என்றால், அதற்கு விழாச் சிறப்பு மாநாடு நடத்தி பெருமைப்பட்டுக் கொள்வது தமிழர்களின் காதுகளில் பூச்சுற்றவே அல்லாமல் வேறொன்றும் இல்லை.


மொத்தத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஏதும் செய்ய இயலாத கலைஞர் கருணாநிதி, தமிழுக்குச் செய்ததாய் விளம்பரம் தேடிக் கொள்வதற்குத்தான் இந்த மாநாடு.


இப்படி விளம்பரம் தேடத் தான் இந்த மாநாடு பயன்படும் என அறிந்தே உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினர் 9 ஆம் உலகத் தமிழ் மாநாட்டினை இப்போது நடத்த இசைவு தரவில்லை.


அந்த தோல்வியை மறைப்பதற்காக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் புதிதாக ஒரு தலைப்பை உருவாக்கிப் புது வேடம் கட்டித் தன் காட்சித் திரையை இறக்குகிறார் கருணாநிதி.


ஆக, தமிழ் வளர்ச்சிக்குரிய மாநாடு இது இல்லை என்பதும் கலைஞர் கருணாநிதி தம் விளம்பரத்திற்கு நடத்திக் கொள்ளும் மாநாடு என்பதும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.