தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மா அவர்களை, மருத்துவ உதவிக்காகச் சென்னைக்கு அழைத்துவர வேண்டும் என்ற கோரிக்கை மனுவுடன், திராவிடர் கழகத் தலைவர் அய்யா வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் ஆகிய நானும், 26.04.2010 இரவு 8 மணிக்குத் தமிழக முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம். ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவரோடு கலந்துரையாடும் வாய்ப்பைப் பெற்றோம். அச்சந்திப்பின்போது துணை முதல்வர் அவர்களும், சட்டத்துறை அமைச்சர் துரை முருகன் அவர்களும் உடன் இருந்தனர். அச்சந்திப்பையும், அதன்பின் நடைபெற்ற செயல்பாடுகளையும் பதிவு செய்ய வேண்டியமை, காலத்தின் தேவையாக உள்ளது.
மனுவைப் படித்துப் பார்த்த முதல்வர் "இதுல எனக்கு என்ன இருக்கு? அவுங்களை நான் ஏன் தடுக்கப் போறேன்? நான்தான் சட்டமன்றத்திலேயே சொன்னேனே... அவுங்ககிட்ட இருந்து கடிதம் வந்தா, உடனே பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பி, அவுங்களை வர வைக்கலாம்" என்றார். எங்கள் மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. வீரமணி அய்யா, கலைஞரின் அருகில் சென்று, "அப்ப கடிதம் வந்தா, உடனே டெல்லிக்கு அனுப்பிடலாம் இல்லையா?" என்று கேட்க, "அடுத்த நிமிடமே அனுப்பிடலாம்" என்று சொல்லி முதலமைச்சர் சிரித்தார்.
பிறகு அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், "இந்தத் தகவல் அவுங்க இங்க வரதுக்கு முன்னாடியே நமக்கு வந்திருந்தா, ஒரு பிரச்சினையும் இல்லாம எல்லாம் நல்லா முடிஞ்சிருக்கும்" என்று முதல்வர் குறிப்பிட்டார்.
மேலே உள்ள கூற்றில் இருக்கும் உண்மையைத் தமிழக மக்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் வாழும் நம் தமிழீழ உறவுகளும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே நம் பணிவான வேண்டுகோள்.
அம்மா சென்னை விமான நிலையம் வந்திறங்கி, அங்கு சிக்கல்கள் ஏற்பட்ட பின்னரே, நள்ளிரவில் நண்பர் திருமாவளவனோடும், என்னோடும் வெளிநாட்டு நண்பர்கள் தொடர்பு கொண்டனர். "கலைஞரையும், எங்களையும் இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா?" என்று வருத்தத்துடன் கேட்டேன். "இல்லையில்லை, நாங்கள் யாருக்குமே சொல்லவில்லை" என்று கூறினார். "அப்படியானால், நெடுமாறன் அய்யாவிற்கும், அண்ணன் வைகோ விற்கும் மட்டும் எப்படிச் செய்தி தெரிந்தது?" என்ற கேள்விக்கு அவர்களிடம் விடை இல்லை.
அதற்கான விடை இப்போது தெரிந்திருக்கிறது. 'தென்செய்தி' இதழில் பூங்குழலி எழுதியுள்ள முகப்புக் கட்டுரையில், "ஒரு வார காலமாக, எந்நேரமும் வரலாம் என்று காத்திருந்ததால்..." எனக் குறிப்பிட்டுள்ளார்.
'இரவு 8.30 மணிக்கே அப்பா (நெடுமாறன் அய்யா) மூலம் பார்வதி பாட்டி வர இருப்பதை அறிந்தேன்' என்றும் குறிப்பிடுகின்றார். எனவே, நெடுமாறன், வைகோ இருவருக்கும் ஏற்கனவே செய்தி சொல்லப்பட்டிருப்பது தெளிவாகின்றது.
அந்த 8.30 மணிக்கு, எங்கள் மூவரில் யாரேனும் ஒருவருக்குச் செய்தி தெரிந்திருந்தால் கூட, அதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்க முடியும்.
என்ன செய்வது... கலைஞரையும், கலைஞரின் ஆதரவாளர்களையும் அவர்கள் நம்பவில்லை. ஆனால், பிரபாகரனின் பெற்றோர் பெயரைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும், அவர்கள் மீண்டும் இங்கு திரும்ப வருவதைச் சட்டத்திற்கு உட்பட்டோ, சட்டத்திற்குப் புறம்பாகவோ தடுத்திட வேண்டும் என்றும் 2003 இல் கடிதம் எழுதிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும், அவருடைய ஆதரவாளர்களையும், வெளிநாட்டில் வாழும் தமிழீழத் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் நம்புகின்றனர்.
அந்த அடிப்படையில், போயஸ் தோட்டத்தில் இருந்தபடியே, வைகோவை ஜெயலலிதா இயக்குகின்றார். வைகோ, அய்யா நெடுமாறனை இயக்குகின்றார். எனவேதான், கலைஞருக்கு எதிராக ஜெயலலிதாவின் தலைமையிலோ, வைகோவின் தலைமையிலோ நடந்திருக்க வேண்டிய உண்ணாவிரதம், நெடுமாறன் ஐயா தலைமையில் நடைபெற்றது.
அம்மாவை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரவேண்டும், ஈழ மக்களுக்கு எவ்வகையிலேனும் உதவ வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, எப்படியேனும் கலைஞர் அரசுக்கு எதிராக ஏதேனும் ஒன்றைக் கையில் எடுக்க வேண்டும் என்ற முனைப்பே இங்கு கூடுதலாகத் தென்படுகின்றது.
இனியும் தயங்காமல், இரண்டு செய்திகளை நாம் வெளிப்படையாகப் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. 1. அகவை முதிர்ந்த, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தாயைத் திருப்பி அனுப்பிய அதிகாரிகளின் செயல் எப்படி மனித நேயமற்றதோ, அவ்வாறே அத்தாயை வைத்து உள்ளூர் அரசியல் செய்ய நினைப்பதும் மனித நேயமற்ற செயலே.
2. ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை, தமிழ்த்தேசியத் தலைவர்கள் இனியேனும் தயவுசெய்து விட்டுவிட வேண்டும் என்று, பெரியார் திடல் கூட்டத்தில் கேட்டுக் கொண்டார் நண்பர் திருமாவளவன். அது அவர்களால் முடியாதெனில், நடுநிலையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் போலித்தனத்தையாவது உதறிவிட்டு, தாங்கள் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களாகவே செயல்படுகின்றோம் என்னும் உண்மையையேனும் உலகுக்கு உரைத்திட வேண்டும்.
கலைஞர் மீதான அவதூறுகளுக்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 03.05.10அன்று துணை முதல்வர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பும், அன்று இரவு முதல்வர் அளித்த பேட்டியும் அமைந்துள்ளன.
மலேசியாவிலிருந்து பெறப்பட்ட அம்மாவின் கடிதத்தை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்து அனுப்பியதுடன் நிற்காமல், அவரது மருத்துவச் செலவுகளையும் அரசே ஏற்கும் என்று கூறியுள்ள முதல்வரின் கனிவைத் தமிழ்கூறு நல்லுலகம் வரவேற்றுப் போற்றுகிறது. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் தம் நெஞ்சார்ந்த நன்றியினைத் தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தெரிவித்து மகிழ்கின்றனர்.
- சுப.வீரபாண்டியன்