தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு குறித்துத் தொடரும் சர்ச்சை: காரணங்கள் எவை? என்ற கட்டுரைக்கான கோபி என்பவரின் எதிர்வினை குறித்த பதிற்குறிப்பு இது.கோபி எழுதியவரின் உண்மைப் பெயரா அல்லது புனைபெயரா அல்லது இப் பெயரால் பரவலாக அறியப்பட்ட ஒருவரா என்பது தெரியவில்லை. எழுதிய விதத்தைப் பார்க்கும் போது அவர் சொந்தப் பெயரில்தான் எழுதியுள்ளார் போல் தெரிகிறது.
ஒரு எழுத்தாளன் தனது எழுத்துக்குரிய அறநெறிகளைப் பேணிக் கொண்டு, தான் வாழும் நாட்டின் சூழல், சமூகச் சூழல், எழுதும் விடயங்களின் தன்மை, எழுத்தாளனின் விருப்பு போன்றவற்றைக் கவனத்திற்கொண்டு புனைபெயர்களில் எழுதும் வழமை உலகளாவிய ஒரு நடைமுறைதான்.இதனால் ஒரு எழுத்து சொந்தப் பெயரில் எழுதப்படுகிறதா அல்லது புனைபெயரில் எழுதப்படுகிறதா என்பதனைவிட எழுதப்படும் விடயம்தான் முக்கியமானது.இங்கு பெயரில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதனை விட எழுதப்படும் எழுத்தில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியம்.
தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு தொடர்பான கட்டுரையினை முழுமையாக, ஆழமாகப் படித்து விட்டுத்தான் கோபி தனது எதிர்வினையினை எழுதினாரா என்ற கேள்வியும் இவரது எழுத்தைப் படிக்கும் போது எழுகிறது.
உண்மையில் கோபி என்னதான் சொல்ல வருகிறார்? தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது இல்லையா? அல்லது இவ்விடயம் தொடர்பாக எந்தவொரு முடிவுக்கும் இவரால் போகமுடியாதிருக்கிறதா? அல்லது தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என நம்புபவர்கள் அவருக்கு மரியாதை வணக்கம் செலுத்தக்கூடாது என்கிறாரா? இது குறித்து குழப்பமற்ற தெளிவான கருத்து எதனையும் கோபி முன்வைத்ததாகத் தெரியவில்லை.இது இவருக்கு இவ்விடயத்தில் உள்ள குழப்பத்தினால் நிகழ்ந்ததா அல்லது எல்லோருக்கும் பிடி கொடுக்காத இவரது 'சாமர்த்தியத்தின்' வெளிப்பாடுதானா என்பதும் புரியவில்லை.ஓன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது.
தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செய்ய வேண்டும் என்று சொல்பவர்களை, தலைவரை நிராகரிப்பவர்களாகவும், அவரது இடத்துக்கு வேறு ஒருவரை அரியாசனம் ஏற்ற முயல்பவர்களாவும் சித்தரித்து, தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செலுத்த வேண்டும் என எழும் குரல்களை அடக்க வேண்டும் என்ற முனைப்பு மட்டும் இவரது எழுத்தில் துல்லியமாகத் தெரிகிறது.
இது மிகப் பெரும் அநியாயம் கோபி.
பொங்குதமிழில் இக் கட்டுரைத்தொடர் தைத் திருநாளன்று (14.01.2010) ஆரம்பித்தபோது குறிப்பிடப்பட்டிருந்த சில பகுதிகளை இவ் அங்கத்திலும் மீளக் குறித்திருந்தோம்.
அறிஞர் சத்தியேந்திரா தலைவர் பிரபாகரனுக்கு செய்திருந்த மரியாதை வணக்கம் தொடர்பாகவும் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்று, அவரது சரிகளோடும் தவறுகளோடும் அவர் வாழ்ந்த நான்கு தசாப்த கால போராட்ட வாழ்வுக்கு கட்டுரைத் தொடர் மரியாதை செலுத்துகிறது எனவும் குறிப்பிட்டிருந்தோம்.
இங்கு 'தவறுகள்' எனக் குறிப்பிட்டமை கோபிக்கு எரிச்சல் ஊட்டியுள்ளது போல் தெரிகிறது.
உலகில் எந்த விடுதலைப் போராட்டமும் சரிகளோடும் தவறுகளுடனும்தான் நடைபெற்றிருக்கிறது. உலகின் எந்தத் தலைவரது அரசியலும் சரிகளோடும் தவறுகளோடும்தான் இடம் பெறுகிறது. தலைவர் பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையும் இப் பொது நியதிக்கு உட்பட்டதுதான்.
இதனைத் தலைவர் பிரபாகரனே கூறியிருக்கிறார்.
'நான் கடவுள் இல்லை. என்னிடம் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வினை எதிர்பார்க்காதீர்கள்' எனவும்
'நாம் செய்பவையெல்லாம் சரியாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. நமது செயல்கள் சரிகளோடும் தவறுகளுடனும்தான் இருக்கின்றன. இவை 50-60 % சரியாக அமைந்தாலே போதுமானது' எனவும்
தலைவர் பிரபாகரன் தனது நெருக்கமானவர்களுடனான மனந்திறந்த உரையாடல்களில் தெரிவித்திருக்கிறார்.
இக் கட்டுரைத்தொடர், தனது முதல் அங்கத்தில் குறிப்பிட்டவாறு தலைவர் பிரபாகரனுக்குரிய மரியாதையினை வழங்கிய வண்ணம்தான் தனது கருத்துக்களைக் குறித்து வருகிறது.
இக் கட்டுரைத் தொடருக்கு தலைவர் பிரபாகரன் தொடர்பாக வஞ்சகப்புகழ்ச்சி செய்ய வேண்டிய தேவை எதுவும் இல்லை. வஞ்சகப்புகழ்ச்சி செய்யும் பழக்கமும் தாமரையிடம் கிடையாது.
தலைவர் பிரபாகரன் மீது வஞ்சகப்புகழ்ச்சி இக் கட்டுரையில் செய்யப்பட்டுள்ளது எனக் கோபி கருதினால் அது எந்த இடத்தில் செய்யப்பட்டிருக்கிறது என்பதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்போது அது வஞ்சகப்புகழ்ச்சிதானா என்பதனைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அதை விடுத்து, கட்டுரை கூற வந்த விடயத்தைக்கூட உரியமுறையில் கவனத்திற்கெடுக்காது வஞ்சகப்புகழ்ச்சி செய்யப்படுகிறது எனக் குற்றஞ்சாட்டுவது கட்டுரை கூறவரும் விடயத்தை திசைதிருப்ப திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிற வஞ்சகச்செயலோ என சந்தேகம் எழுகிறது.
அறிஞர் சத்தியேந்திராவினைத் துணைக்கழைத்திருப்பதாகவும் தனது வாதத்துக்கான காரணத்தை முன் வைப்பதற்கு குறைந்தபட்ச முயற்சியினைத் தாமரை எடுக்கவில்லை எனவும் குறைப்பட்டிருக்கிறார் கோபி.
தலைவர் பிரபாகரனுக்கு சத்தியேந்திரா எழுதிய மரியாதை வணக்கக் குறிப்பொன்றில் சுவிஸில் இருந்து எழுதிய கிருஸ்ணா அம்பலவாணர் எழுதிய கருத்தொன்றில் தான் உடன்படுவதாகக்கூறி அவரைத் 'துணைக்கழைத்திருந்தார்'.
இதுதான் அந்தக் கருத்து.
' …மேதகு வே. பிரபாகரன் அவர்களின் மரணம் தொடர்பாக இருக்கின்ற முரண்பாடான கருத்துகள், அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. அந்த மரணம் ஈழத் தமிழனத்தால் மட்டுமன்றி உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பினும் யதார்த்த நிலையில் இருந்துதான் அதை நாம் நோக்க வேண்டும்… இந்த விடயத்தில் ஈழத் தமிழினம் பிளவுபட்டு நிற்பது வேதனைக்கு உரியது. வெட்கத்துக்கு உரியது. தனது வாழ்வின் 37 வருடங்களை முழுமையாகவே ஈழத் தமிழருக்காகவே அர்ப்பணித்த ஒரு ஒப்பற்ற தலைவனுக்கு இறுதி மரியாதை கூடச் செய்ய முடியாதளவுக்கு நாம் முட்டாள்களாக நிற்கிறோம்…'
ஒருவரது கருத்துக்களை இன்னொருவர் பயன்படுத்துவதும் அதனை உரியமுறையில் வெளிப்படுத்துவதும் அறிவியல் வளர்ச்சிக்குத் தேவையான நடைமுறையாக உலகளவில் பின்பற்றப்படுகிறது. இந்த வகையில் இக் கட்டுரைத் தொடரும் சத்தியேந்திராவின் கருத்தொன்றைப் பயன்படுத்தியிருந்தது.
சத்தியேந்திராவை மதிப்புக்குரியராகக் கருதும் கோபி தலைவர் வீரச்சாவு விடயத்தில் அவரது கருத்தினை மதிப்புக்குரியதாகக் கருதவில்லைப் போலும்.
மேலும், தலைவர் பிரபாகரனின் வீரச்சாவு குறித்த முடிவுக்கு விசாரணைகளின் அடிப்படைகளிலேயே சென்றதாக கட்டுரைத்தொடர் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
'இந்த விசாரணைகள், முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்கள் வரை தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்தமைக்கான ஆதாரபூர்வமான தகவல்கள், சிறிலங்கா அரசபடைகள் முள்ளிவாய்க்கால் பகுதியினை முற்றுகை செய்து வைத்திருந்த விதம், தலைவர் பிரபாகரனின் உடலம் குறித்த விவாதங்கள், இவ் விடயம் தொடர்பாக எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினரிடையே இருந்த கருத்துக்கள், அவர்களது செயற்பாடுகள், உலக நாடுகளின் அரச இயந்திரங்கள் மற்றும் போராட்டங்கள் குறித்த ஆய்வாளர்கள் இவ்விடயம் குறித்து வகுத்துக் கொண்ட முடிவுகள், சிறிலங்கா அரசும் இராணுவ இயந்திரமும் ஆசுவாசமாக தற்பொழுது இயங்கிக் கொள்ளும் முறைமை உட்பட்ட பல விடயங்களை ஆய்வு செய்தே தலைவர் பிரபாகரன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்கு இக் கட்டுரைத் தொடர் வருகிறது.'
இக் கட்டுரைத் தொடர் பல்வேறு தகவல் மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்படுகிறது என்பதனை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
தலைவர் பிரபாகரன் வீரச்சாவு விடயம் தொடர்பாக நாம் திரட்டியிருந்த தகவல்களை ஆராய்ந்து பார்த்தபோது இவர் உயிருடன் இருப்பதாக நம்புவதற்கு எவ்வித அடிப்படைகளும் இருக்கவில்லை.
நாம் திரட்டியிருந்த தகவல்களில், அவரது வீரச்சாவு எப்போது, எவ்வாறு நடந்தது என்பது தொடர்பான மாறுபாடான தகவல்கள் இருந்தனவேயன்றி, இவர் வீரச்சாவடைந்து விட்டார் என்பதில் முரண்பாடான தகவல்கள் ஏதும் இருக்கவில்லை.
இதேவேளை, அவர் உயிருடன் இருப்பதாக வாதிடுபவர்கள், அவர் உயிருடன் இருப்பதாக நம்புவதற்கான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவும் இல்லை.
தனது விசாரணைகளின் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு வந்த இக் கட்டுரைத்தொடர், தலைவர் வீரச்சவடைந்த ஓராண்டு நினைவுக் காலகட்டத்தில் அவருக்குரிய மரியாதை வணக்கத்தைச் செலுத்தியது.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச விரும்பாத எவரும் இதனைத்தான் செய்வார்கள். இவ்வாறு செய்வதற்கு, தனக்குத் தானே உண்மையாக நடப்பதற்கு எவரது அனுமதியும் சம்மதமும் தேவை இல்லை.
சரியெனப்பட்டதைப் பேசுவதற்கு நேர்மைதான் தேவையேயன்றி, எவரையும் திருப்திப்படுத்தும், நிற்கும் இடத்தை மறைக்கும் சாமர்த்தியம் எதுவும் தேவையில்லை.
தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்த செய்தி சிறிலங்கா அரசின் ஊடாகவே முதலில் வெளிவந்தது. அதுவும் குழப்பமான முறையிலேயே வெளிவந்தது. இக் குழப்பம், தலைவர் பிரபாகரனுக்கு மிக எழுச்சியான வீர வணக்க நிகழ்வுகள் தமிழகத்திலும் புலத்திலும் இடம் பெறக்கூடாதென்பதற்காக இந்தியதரப்பின் ஆலோசனையுடன் சிறிலங்கா அரசால் திட்டமிட்டே செய்யப்பட்டது என்ற உதாசீனம் செய்ய முடியாத ஒரு தகவலும் உண்டு.
வன்னிப்படுகொலை நடைபெற்றக் கொண்டிருந்தபோது முத்துக்குமார் உட்பட்ட பலர் தீக்குளித்து, அவர்களின் ஈகம் தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்வினை கொதிப்படைய வைத்திருந்த ஒரு சூழலில் தலைவர் பிரபாகரனின் வீரச்சாவுச் செய்தி தமிழகத்தில் ஏற்படுத்தக்கூடிய அதிர்வுகள் குறித்த அச்சம் இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்த ஒரு பின்னணியில் இருந்தே இந்தத் தகவலையும் நாம் நோக்க வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதிவரை தலைவர் இருந்தமைக்கான ஆதாரபூர்வமான தகவல் உண்டு. சிறிலங்கா படைகளின் முற்றுகையினை உடைத்துப் புறப்பட்ட தலைவரும் அவரது அணியும் மீண்டு வரவில்லை. அவரது வீரச்சாவு முற்றுகை உடைப்பு முயற்சியின்போதுதான் நடந்திருக்கிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதைக்கூற தலைவருடன் இறுதிக்கணம் வரை இருந்த போராளிகளில் ஒருவர்கூட மீண்டு வரவில்லை.
இச் சூழலில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவு எப்போது, எவ்வாறு நிகழ்ந்தது தொடர்பாக குழப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டுதான்.
ஆனால் அறிவின் துணையுடன் உண்மையினைத் தேடும் எவருக்கும் தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்பதனை உணர்ந்து கொள்வதில் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதற்கான அடிப்படைகள் ஏதும் இல்லை.
வாழ்க்கையில் நாம் கனவிலும் விரும்பாத செய்தி ஒன்றினை நமது மனம் இலகுவில் ஏற்றுக் கொள்வதில்லை. இத்தகைய விடயங்களில் நமது அறிவுக்கும் மனதுக்குமிடையே பெரும் போராட்டமே நடைபெறுவதுண்டு. தலைவர் வீரச்சாவு விடயத்திலும் மக்கள் பலரது நிலை இவ்வாறுதான் இருந்தது.
தமது மனதுக்கும் அறிவுக்குமிடையே போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு உண்மையினை உணர்த்தியிருக்க வேண்டியதே பொறுப்பானவர்களின் செய்கையாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், மிகவும் வேதனையான விடயம் என்னவென்றால், வேலியே பயிரை மேய்வது போல இங்கு பொறுப்பானவர்களே பொய்யுரைத்து நிற்கிறார்கள். தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்குத் தாமே வந்து விட்டு மக்கள் மத்தியில் அதனை மறுதலித்து நிற்கிறார்கள்.
தலைவர் பிரபாகரன் வீரச்சாவு குறித்த நிலைப்பாடு தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நான்கு வகையான பகுதியினரை இனங்காண முடிந்தது.
தலைவர் பிரபாகரனின் வீரச்சாவினை ஏற்றுக்கொண்ட, இதேவேளை அவருக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு பகுதியினர்.
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர்.
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதில் தெளிவான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர்.
தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்கு தாமே வந்து விட்டு, நேரடியாகவும் மறைமுகமாகவும் தலைவர் உயிருடன் இருப்பதாகப் பொய்யுரைத்துக் கொண்டிருக்கும் ஒரு பகுதியினர்.
இந் நான்கு பகுதியினரில், தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று உண்மையாக நம்பும் மக்களை, தலைவர் வீரச்சாவு விடயத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியாது தவிப்பவர்களை கட்டுரை ஆதரவுடன்தான் அணுகியிருந்தது.
இறுதியாகக் குறிப்பிடப்பட்ட, தலைவர் வீரச்சாவு விடயத்தில் பொய்யுரைத்து இயங்கிக் கொண்டிருப்பவர்கள் மீதுதான் கட்டுரை தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது. இவர்கள் இவ்வாறு இயங்குவதற்கான காரணங்களையும் குறிப்பிட்டிருந்தது.
இவர்கள் உண்மையில் தலைவர் உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டு, அதனை மக்களுக்குக் கூறியிருந்தால் இவர்கள் மீது நமக்கு கோபம் ஏற்பட்டிருக்காது. ஆனால் தாம் உண்மையென கருதுவதை மக்களிடம் கூறாது திட்டமிட்ட முறையில் மறைத்து பொய்யுரைத்தவாறு இவர்கள் இயங்குவதுதான் இவர்கள் மீதான கோபத்தை ஏற்படுத்துகிறது.
இக் கோபமும் இவர்கள் மீதான தனிப்பட்ட கோபம் அல்ல. தலைவர் வீரச்சாவு விடயத்தில் இவர்கள் எடுத்திருக்கும் அரசியல் முடிவின் மீதான கோபம்தான் இது. எவர் மீதும் பழி தீர்க்கும் நோக்கம் எதுவும் இக் கட்டுரைக்கு கிடையாது.
இவர்கள் மீது மட்டுமல்ல, இவ் விடயத்தில், தமக்குள் தாமே தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்ற முடிவுக்கு வந்து விட்டு, தலைவர் உயிருடன் இருப்பதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பொய்மைகளை விதைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மீதும் நமக்கு கோபம் உண்டு. இவர்களும் நமது சமூகத்தின் சாபக்கேடுதான்.
இப் பகுதியினரில் கோபி எப் பிரிவினுள் அடங்குகிறார்?
நேரடியாக தனது எதிர்வினையில் அவர் இது பற்றிப் பேசாதுவிடினும், இவரது எழுத்தை ஆழ்ந்து நோக்கும்போது தலைவர் வீரச் சாவடைந்து விட்டார் என்ற முடிவுக்குத்தானே வந்து விட்டு, உயிருடன் இருப்பதான பொய்மையினை விதைக்கும் கூட்டத்தில் ஒருவராகத்தான் இவரும் இருப்பதாகத் தோன்றுகிறது.
தலைவர் உயிருடன் இருப்பதாகப் பொய்யுரைத்து இயங்கிக் கொண்டிருப்போரைத் திருப்திப்படுத்த முயலும் நோக்கத்தைக் கொண்டவராகக்கூட இவர் இருக்கலாம்.
மிகவும் திட்டமிட்ட முறையில் தலைவர் வீரச்சாவு விடயத்தில் பொய்மைகளை விதைப்பது, அது என்ன நோக்கத்துக்காக இருந்தாலும் மிகவும் அயோக்கியத்தனமானது.
தலைவர் வீரச்சாவடையவில்லை என்ற கருத்தை விதைத்து விட்டு, இப்போது அதனைப் பற்றி எதுவும் பேசாது கடந்து செல்லுதலோ அல்லது தலைவருக்கு மரியாதை வணக்கம் செலுத்த முனைவோரை நோக்கி கண்டனங்கள் எழுப்புவதோ இவ் விடயத்தில் பொய்மையினை நிறுவும் ஒரு முயற்சிதான்.
தமக்குத் தெரிந்தே பொய்மைகளை விதைப்பது மட்டுமன்றி உண்மைகள் பேசமுனைவோரை வஞ்சகப்புகழ்ச்சி செய்வோர் என்று சாடுவது நேர்மையீனத்தின் உச்சத்தையே தொட்டு விடுகிறது.
நாம் வீழ்ந்து போனமைக்கு பொய்மைகளை விதைத்த எழுத்துக்களும் ஒரு காரணம் கோபி.
தலைவருக்கு மரியாதை வணக்கம் செலுத்த வேண்டும் என்று கூறுவோர் அவர் இடத்துக்கு வேறு ஒருவரை அரியாசனம் ஏற்ற முயல்கின்றனர் என்றரீதியில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஒரு குருரமான சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும்.
தலைவருக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதன் ஊடாக அவரது இடத்தை மறுக்கவோ அல்லது தம்வசப்படுத்தவோ எவராலும் முடியாது. இது மிகவும் அபத்தமான வாதம்.
சாவு வாழ்வின் முடிவல்ல. இது தலைவர் பிரபாகரன் நமக்கெல்லாம் சொல்லித் தந்த ஒரு பாடம். மாவீரர்களை மரியாதை செய்தல் தலைவர் நமக்குக் காட்டித் தந்த ஒரு மரபு.
இன்று மாவீரர்கள் நம் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தலைவர் பிரபாகரனுக்கு மரியாதை வணக்கம் செலுத்துவதன் ஊடாக அவர் நம்மை விட்டு மறைந்து போகப்போதில்லை. அவர் எம்முடன் வாழத்தான் போகிறார். வரலாற்றில் அவரது இடத்தை எவரும் அவரிடம் இருந்து பறித்துவிட முடியாது.
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரோ இல்லையா என்பதனை அப்படியே விட்டு வரலாற்றைக் கடந்து செல்வதற்கு தலைவர் சாதாரண மனிதர் அல்ல. ஈழத் தமிழர் தேசத்தை கடந்த மூன்று தசாப்தங்களாகத் தலைமை தாங்கி நின்றவர் அவர்.
எமது அடுத்த காலடி குறித்த திசை, அதற்கான வழிகாட்டுதல் அவரிடம் இருந்து வருகிறதா, அல்லது வருமா இல்லையா என்பது நமக்கு மிகத் தெளிவாகத் தெரிந்தாக வேண்டும்.
தலைவரது வீரச்சாவு விடயத்தில் குழப்பத்தைப் பேணிக்கொண்டு ஈழத் தமிழர் தேசம் தனது விடுதலைப் பயணத்தில் நெடுந்தூரம் பயணிக்க முடியாது. அப்படிப் பயணிக்க முடியும் என்று கருதுபவர்களுடன் இக் கட்டுரை முரண்படுகிறது.
அவரது வாழ்வு கூறும் அரசியல் மட்டுமல்ல, சாவு கூறும் அரசியலும் எமது அடுத்த கட்டப் போராட்டத்துக்கு அவசியமானது.
தலைவர் பிரபாகரனுக்கு விளக்கு வைத்து வணங்குவதனை விட இவரது இலட்சியத்துகாக இயங்குவதே முக்கியமானது என்பது கோபியின் வாதங்களில் ஒன்று.
தலைவரின் இலட்சியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து இயங்குவதற்கு தலைவரின் வீரச்சாவினை ஏற்றுக் கொண்டு, அவருக்கு மரியாதை வணக்கம் செலுத்தி, அவரைத் தமிழ்த் தேசிய எழுச்சியின் குறியீடாக் கொண்டு முன்னேறிச் செல்வதே ஆரோக்கியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
இது தவிர்ந்து பொய்மையின் அடித்தளத்தில் கட்டப்படும் எந்த ஒரு முன்னெடுப்பும் சேற்று நிலத்தில் கட்டப்படும் கட்டிடம் போல் எந்நேரமும் நிலைகுலையும் ஆபத்தைக் கொண்டது.
நாம் இங்கு ஒரு உதாரணத்தை வாதத்துக்காக எடுத்துக் கொள்வோம்.
தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதனை மக்கள் நம்பும் சூழலை வைத்துக் கொண்டு போராட்டத்துக்கான அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை மேற்கொள்கிறோம் என வைத்துக் கொள்வோம்.
ஒரு கட்டத்தில் போராட்டத்தின் எதிரிகள், தலைவர் பேசுவது போன்று, தலைவரின் குரலை மிமிக்ரி செய்து செய்தியொன்றை மக்கள் மத்தியில் பரப்புகிறார்கள் என்றும் எடுத்துக் கொள்வோம்.
'நாம் எம்மைத் தாயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். நமது படையணிகள் தயாராகின்றன. அரசியல், இராஜதந்திர வழிமுறைகள் எதுவும் பயனளிக்கப் போதில்லை. புலத்தில் உருவாக்கப்படுகிற நாடு கடந்த அரசாங்கம், மக்கள் அவைகள், உலகத் தமிழ் பேரவை, எவையும் எனது சம்மதத்துடன் உருவாகியவை அல்ல. அவற்றால் எதுவித பயனும் கிடைக்கப் போதில்லை. சிறிலங்கா அரசுக்கு அதன் மொழியில்தான் நாம் பேச வேண்டும். உரிய நேரத்தில் அதனை நான் ஆரம்பிப்பேன். அது வரை எனது செய்திக்காக காத்திருங்கள் மக்களே!'
இவ்வாறான செய்தியொன்று பரப்பப்படும் பட்சத்தில் இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த மாட்டாதா?
நாம் கட்டிய பொய்மை எனும் அத்திவாரத்தில் எதிரி எழுப்பக்கூடிய ஒரு சுவர்தானே இது!
நாங்கள் பரப்பும் பொய்மைகளைத்தான் மக்கள் நம்புவார்கள். எதிரிகள் பரப்பும் பொய்மைகளை நம்ப மாட்டார்கள் என்ற முடிவுக்கு நாம் போகமுடியுமா?
இப்படியான சூழ்நிலை ஏற்பட்டு மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுமானால் தற்போது புலத்தில் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகளின் எதிர்காலம்தான் என்ன?
இது ஒரு வாதத்துக்காக இங்கு குறிப்பிடப்பட்டாலும் இதில் உள்ள தர்க்கத்தை நாம் உதாசீனம் செய்துவிட முடியாது.
தலைவரின் வீரச்சாவினை ஏற்றுக் கொண்டுதான் நாம் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் எனும் நமது குரலும் இங்கு போராட்டத்தின் குரலாகத்தான் ஒலிக்கிறது.
போராட்டத்தின் நன்மை என்று நீங்கள் கருதுவது மட்டும்தான் போராட்டம் சார்ந்த குரலாகக் கொள்ளும் குத்தகை மனப்பான்மையில் இருந்து விடுபடுங்கள்.
நீங்கள் சிந்திப்பதனைப்போல்தான் எல்லோரும் சிந்திக்க வேண்டும். அல்லது இச் சிந்தனைகளுக்கு பின்னால் வேறு நோக்கங்கள் இருப்பதாகக் கற்பனை பண்ணுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.
தேசியத்தலைவராக உருவெடுப்பது இலகுவானதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். தலைவர் பிரபாகரன் தேசியத் தலைவராகுவதற்கும் 20 வருடப் போராட்ட வாழ்க்கை தேவைப்பட்டது.
ஓன்றோடு ஒன்று தொடர்புபடாத விடயங்களில் தேவையற்ற மனப்பிரமைகளுக்குள் அமிழ்ந்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளவும் வேண்டாம்.
மார்க் அன்ரனி உதாரணம் உண்மையான அர்த்தத்தில் இங்கு எவ்வித பொருத்தமும் அற்றது. இங்கு எவரும் வஞ்சகப்புகழ்ச்சி செய்யவும் இல்லை. சேக்ஸ்பியர் தனது நாடகப் பாத்திரத்தில் மார்க் அன்ரனியை தனது எதிரிகள் மீது வஞ்சப்புகழ்ச்சி செய்பவனாகப் படைத்திருக்கிறார். அது அவனது வரலாற்றுப் பாத்திரம் அல்ல. சீசரைக் கொன்றவர்கள் மீது நீண்ட காலத்தின் பின்பும் படையெடுத்தழித்துப் பழிதீர்த்துக்கொண்ட வரலாற்றுப் பாத்திரம் அது. ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை அதனது வரலாற்று முக்கியத்துவத்திலிருந்து பிரித்தெடுத்து, நாடகப் பாத்திரத்தில் காணப்பட்ட எதிரிகள் நோக்கிய குணாம்சத்தைப் பொதுமைப்படுத்தி தவறான இடத்தில் பிரயோகிப்பது எழுத்தாளரின் முதிர்ச்சியின்மையையே வெளிப்படுத்துகிறது.
நிறைவாக, சுட்டெரிக்கும் நெருப்பைக் காட்டி அச்சுறுத்த வேண்டாம் கோபி.
நாமும் தலைவர் பிரபாகரன் மூட்டிய நெருப்பில் முகிழ்த்த தீக் கொள்ளிகள்தான். சுட்டெரிந்து போக மாட்டோம். கவலை வேண்டாம்.
இது தொடர்பான விவாதங்களை பொங்குதமிழ் இத்துடன் நிறைவுசெய்து கொள்கிறது:- ஆசிரியர்