தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யப்படுகிறது : ஒரு க்ரைம் ரிப்போர்ட்

உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்யலாம் என மதுரையில் சிலர் 'ரூம் போட்டு யோசிப்பார்கள்' போல் இருக்கிறது. விலைவாசி உயர்வால், செலவைக் குறைப்பதற்காக விதம் வித மாய் கலப்பட உத்திகளை மதுரையில் கண்டுபிடித்துள்ளனர். முன்பெல்லாம் அரிசியில் கல்லை கலப்பது, பாலில் தண்ணீரை கலப்பது, ஆட்டிறைச்சியில் மாட்டிறைச்சியை கலப்பது தான் அதிகபட்ச கலப்படமாக இருந்தது. இப்போது நினைத்து பார்க்க முடியாத வகையில் கலப்படங்கள் நடக்கின்றன.

எப்படி கலப்படங்கள் நடக்கின்றன அவற்றின் பட்டியல் உங்கள் பார்வைக்கு:

* பாலில் ஜவ்வரிசியை துணியில் கட்டி போட்டு விடுவர். இப்போது கெட்டியான பால் ரெடி.
* டீத்தூளில் முந்திரி தோல், புளியங்கொட்டை தோல், மஞ்சணத்தி இலைகளை கலக்கின்றனர். திடமான டீ தயார்.
* பழைய சோற்றை துணியில் கட்டி, வடித்துவிட்டு, மிக்சியில் போட்டு அடித்து, அதை வெண்ணெயுடன் கலக்கின்றனர். பார்க்க வித்தியாசம் தெரியாது. உருக்கினால் நெய் வராத வெண்ணெய் இது. பட்டர் பன் தயாரிக்க இது பயன்படுகிறது.
*நெய்யில் வனஸ்பதியை கலந்து, 'சுத்தமான பசு நெய்' என்று கூறி, விற்றுவிடுவர்.
* புதிதாக தயாரித்த புரோட்டாவுடன் பழைய புரோட்டாவை கலந்து விடுவர். 'கொத்து புரோட்டா' கேட்டால், பழைய புரோட்டாவில் குருமா, முட்டையை ஊற்றி, வெங்காயம், தக்காளியை வதக்கி, 'மணக்க, மணக்க' தந்துவிடுவர். நாக்கை சப்புக்கொட்டியபடி, நாம் சாப்பிட வேண்டியது தான்.
* மீன் மார்க்கெட்டுகளில் ஓரமாக சேரும் கழிவு மீன்களை, குறைந்த விலைக்கு வாங்கி வந்து, மாலையில் கடை போட்டு, 'செக்கச் செவேல்' என மசாலா தடவி, 'சுடச்சுட பொறித்த மீன்' என்று கூறி, வாசம் மூக்கைத் துளைக்க, ஊரைக் கூட்டி விற்று விடுவர். பெரும்பாலும் 'டாஸ்மாக்' கடைகளுக்கு அருகில் இவர்கள் கடை விரிக்கின்றனர்.
* ரோட்டோரத்தில் மலிவு விலையில், அண்டாக்களில் ஆவி பறக்க, 'கம, கம' மணத்தையும் பரப்பியபடி, பார்ப்பவர்களின் பசியை தூண்டும் பிரியாணியில், நெய் அல்லது ரீபைண்ட் ஆயிலுக்குப் பதில் மாட்டு கொழுப்பு எண் ணெய்யை கலக்கின்றனர். இதைத் தொடர்ந்து சாப்பிட் டால், இதய நோயை நாமே வலிய இழுத்து வருவதற்குச் சமம்.
* கோடை காலத்தில், கலர் கலராய், ஜூஸ் என்ற பெயரில் குளிர்ச்சியாக விற்கப்படும் திரவங்களில் சர்க்கரைக்குப் பதில், 'சாக்கரின்' கலக்கின்றனர். இதனால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உறுதி. பெரும்பாலும் வைகை கரையோரங்களில் இக்கடைகளை காணலாம்.
* கறிக்கோழியின் கழிவு, நோயால் இறந்த கோழி... இவற்றை'ஓசி'யில் வாங்கி வந்து, கவர்ச்சியான கலரில் மசால் தடவி, 'சிக்கன் 65' என்ற பெயரில், 100 கிராம் 12 ரூபாய்க்கு விற்கின்றனர். இதில் நோயை பரப்பும் அனைத்து கிருமிகளும் 'ஆஜர்' ஆகியிருக்கும்.
* இட்லி மாவில் பழைய சோற்றை ஆட்டி கலந்து, விற்கின்றனர். மல்லிகைப்பூ இட்லிக்கு சூப்பர் மாவு ரோட்டோரம் ரெடி.
* சில ஓட்டல்களில் அரிசி உலை வைக்கும்போதே சுண்ணாம்பை துணியில் கட்டி, அரிசியுடன் சேர்த்து கொதிக்க வைப்பர். இதில் வெந்த சோறு, 'விரைப்பாக' இருக்கும். அதிகம் சாப்பிட முடியாது. ஓட்டல்காரர்களுக்கு அரிசி செலவு குறையும்.இப்படி நம்மூரில் புதுப்புது உருவில் புதுப்புது கலப்படம் நடக்கிறது.பொதுமக்களே உஷார்: நமக்கு தெரிந்தவை இவை. தெரியாமல் இன்னமும் நிறைய கலப்படங்கள் நடக்கின்றன. இனியும் புதிய உத்திகள் கண்டுபிடிக்கப்படலாம். எனவே, 'அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று குறை கூறிக்கொண்டு இருக்காமல், பொதுமக்களும் கவனமாக இருக்க வேண்டும். எங்கும் சாப்பிடும் முன், அந்த கடையின் சுகாதாரம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

கலப்படத்தை எப்படி கண்டறியலாம் : மதுரை கீழமாசி வீதியில் உள்ள தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தில், 1978 முதல் உணவுப் பொருட்கள் தர பரிசோதனை மையம் செயல்படுகிறது. இங்கு அனைத்து வகை உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்கின்றனர். மத்திய சிறை மற்றும் ரயில்வே கேட்டரிங்கிற்கு கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களை இங்கு ஆய்வு செய்கின்றனர். யார் வேண்டுமானாலும் உணவுப் பொருட்களை ஆய்வுக்கு கொடுக்கலாம். ஆய்வு முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். குறைந்த அளவாக 50 முதல் 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என இதன் சங்க கவுரவச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார். விபரங்களுக்கு 0452-232 2188ல் தொடர்பு கொள்ளலாம்.