ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் கூட சீனா, ரஸ்யாவுடன் இணைந்து சிறீலங்காவுக்கு எதிரன நடவடிக்கைகளை முறியடித்திருந்தது. மேலும் சிறீலங்காவுக்கான நிதி உதவிகளை வழங்குவதிலும் இந்தியாவும், சீனாவும் இணைந்தே பணியாற்றி வருகின்றன.
போரின் பின்னர் இந்தியா 800 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது. 50,000 வீடுகளையும் கட்டிக்கொடுக்க அது முன்வந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் படி 160,000 வீடுகள் தேவை. அதில் மூன்றில் ஒரு பகுதியை கட்டிக்கொடுக்க இந்தியா முன்வந்துள்ளது.
சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய நிறுவனங்கள் போட்டியிட்டுவருவதாக இந்தியாவின் ஆடம்பர விடுதிகளில் ஒன்றான தாஜ் விடுதியின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் றெய்மன்ட் பிக்சன் தெரிவித்துள்ளார்.
கொழும்புக்கு வெளியே 100 அறைகளை உடைய விடுதி ஒன்றை கட்டுவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவுக்கான உதவிகளை வழங்குவதில் சீனாவும் குறைந்தது அல்ல, அது அபிவிருத்தி திட்டங்களுக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
எனினும் மேற்குலகம் தனது அழுத்தங்களை தொடர்ந்து வருகின்றது, கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தியுள்ளது. ஆனால் அதே தினத்தில் 350 மில்லியன் டொலர் செலவில் சீனா நிர்மானித்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஒரு பகுதியை மகிந்தா திறந்து வைத்திருந்தார்.
மேற்குலகத்தின் அழுத்தங்கள் அதிகரித்த போது அதனை ஆசியாவின் இரு பெரும் சக்திகளின் துணையுடன் சிறீலங்கா முறியடித்திருந்தது. அனைத்துலகத்தின் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வல்லமையை அவை கொண்டுள்ளன.
ஆனால் இந்தியாவையும், சீனாவையும் சிறீலங்கா எவ்வாறு கையாளப்போகின்றது என்ற கேள்விக்கு, இந்தியாவை மகிழ்ச்சியாக வைத்திருந்தவாறு, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்த சிறீலங்கா முயன்று வருவதாக முன்னாள் சிறீலங்கா இராஜதந்திரி கொடகே தெரிவித்தள்ளார்.
எனினும் சீனாவின் ஆளுமையை முறியடிக்க அமெரிக்கா முயன்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.