தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

முதல்வரின் தேவை இல்லாத ஆதங்கம் .

முதல்வர் கருணாநிதியின் தேவை இல்லாத ஆதங்கம்தான் இந்த அவரது அறிக்கையில் வெளிபடுகிறது.

அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று நீதிமன்றம் சொல்லியதை கேலி செய்வது போல் உள்ளது இவரது இந்த அறிக்கை.

இதை வைத்து பா ஜ க தமிழகத்தில் வந்து எங்கே கர்நாடகா போல அதிகாரத்திற்கு வந்து விடுவார்களோ என்ற எச்சரிக்கை அல்லது அதற்கான முன் தடுப்பு அவரது இந்த அறிக்கையின் வாயிலாக தெரிகிறது.

ஹிந்துக்களை அல்லது அவர்களின் நம்பிக்கைகளை  சிறுபான்மையினரின் வாக்குகளை பெரும் பொருட்டு கேலி செய்வது முதல்வருக்கு வாடிக்கைதானே ?

அந்த அறிக்கையை பதிகிறேன்:

நாகர்கோவிலில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழாவில் நான் பேசும்போது, திராவிட பாரம்பரியத்தின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிட்டு காட்டினேன். அதைப் போலவே, தமிழரின் கலை, பண்பாடு, கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் பேசும்போது, ராஜராஜ சோழன் காலத்திய நிர்வாக முறை பற்றி தெரிவித்தேன்.இவை அனைத்திற்கும் ஆதாரமாக ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சை பெரிய கோவிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுகளும் நீடித்து நிலைக்கும் சான்றுகளாக காட்சியளிக்கின்றன. அயோத்தி சம்பந்தமான வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரித்து, இரண்டு இந்து அமைப்புகளுக்கும், ஒன்று முஸ்லிம் அமைப்பிற்கும் சமமாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பு சொல்லப்பட்டது.நீதிபதி சர்மா தனது தீர்ப்பில், "சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. எந்த ஆண்டு என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

சர்ச்சைக்குரிய இடத்தில் 1949ம் ஆண்டில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவில், சிலைகள் வைக்கப்பட்டன.சர்ச்சைக்குரிய இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி, இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை புனிதத் தலமாகக் கருதி, ஆன்மிகப் பயணம் சென்று வருகின்றனர்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது.

 


ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தை கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ் மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல், மொழியியல் வல்லுனர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

 


இந்த அடிப்படையில், நம்முடைய திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை தெளிவாக உலகம் அறிந்து கொள்ள முடியும்.ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டால் போதும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.