இன்றைய தலையங்க கட்டுரையாக இதை பதிகிறோம் .
மணல் கொள்ளை அனைத்து கட்சி "சின்டிகட்" உறுப்பினர்களின் கூட்டு கொள்ளையில் நடைபெறுகிறது.
ஆளும் கட்சி , திமுக ,சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி, அதிமுக, சட்டமன்ற மன்ற உறுப்பினர்கள் மற்றும் யார் எதிர்ப்பார்கள் என்று தெரிகிறதோ அந்த அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் இதற்க்கு இந்த கொள்ளையில் பங்கு கொண்டவர்கள். அவர்களே அவர்களின் வாகனம் மூலம் நேரடியாக மணலை எடுத்து கொள்ளலாம் அல்லது நேரடியாக கொள்ளை அடிக்க விருப்பம் இல்லையென்றால் அதற்கான "கமிசன்" தொகையை பெற்று கொள்ளலாம் இதுதான் இந்த கூட்டு கூலியின் ஒப்பந்தம்.
ஆட்சி அதிகாரத்திற்கு வரக்கூடிய சாத்தியகூருள்ள இரண்டு பிரதான கட்சிகள் திமுக மற்றும் அதிமுக இந்த கூட்டு கொள்ளையில் மாநிலம் முழுதும் கைகோர்த்துள்ளது.
எப்படி காப்பாற்றப்படும் தாமிரபரணி ?
கீழே உள்ள கட்டுரை அல்லது செய்தி தின மலரின் இன்றைய ஆதங்கம்.
வற்றாத ஜீவ நதி தாமிரபரணிதான் தமிழக நதிகளில் மாநில எல்லை பிரச்னைகளில் சிக்காத நதியாகும். தாமிரபரணியினால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏறக்குறைய 90 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இருபோக நெல் சாகுபடி நடந்தது. இப்போதும் சாத்தூர், விருதுநகர் வரையிலும் ஏறக்குறைய 450 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்குகிறது. ஆனால் தாமிரபரணி முன் எப்போதும் இல்லாதபடி நடக்கும் மணல் கொள்ளையால் அழிவை நோக்கி செல்கிறது. அ.தி.மு.க., தி.மு.க.,என இரு ஆட்சிகளிலும் தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு மட்டும் நிற்காமல் இரவும் பகலும் நடக்கிறது.
நெல்லையில் அரியநாயகிபுரம், ரெங்கசமுத்திரம், பழவூர், சீவலப்பேரி, தோணித்துறை, திருமலைக்கொழுந்துபுரம் எனவும் தூத்துக்குடி மாவட்டத்தில் தோழப்பன்பண்ணை, மங்களாகுறிச்சி,முக்காணி என குறைந்தது 10 கி.மீ.,இடைவெளி விட்டு மணல்கொள்ளை நடந்திருக்கிறது. 2006ல் தி.மு.க.,ஆட்சிக்கு வந்த புதிதில் வீரவநல்லூரில் இந்திய கம்யூ.,கட்சியை சேர்ந்த சுடலைமுத்து என்ற தலித் இளைஞர் மணல் குவாரியை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார் என்பதற்காக கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்திய கம்யூ., தலைவர்கள் தா.பாண்டியன், நல்லக்கண்ணு வெகுண்டெழுந்தார்கள். "தேவைப்பட்டால் நாங்களும் ஆயுதம் ஏந்துவோம்' என்றார் தா.பாண்டியன். பாவம் எதுவும் நடக்கவில்லை. மணல் கொள்ளை மட்டும் தொடர்கிறது. அதே பகுதியில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளியதால் ஏற்பட்ட ஆழம் தெரியாமல் எப்போதும் போல குளிக்க வந்தவர்கள், ஆற்றை கடந்தவர்கள் என சிறுவர்,சிறுமியர் முதல் பெரியவர் வரை 10க்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி இறந்தார்கள்..!
பொக்லைன் இயந்திரங்களின் பக்கெட்கள் எனப்படும் கோர கைகள் ஆற்றில் இறங்கினால் குறைந்தது10 அடி ஆழத்தில் இருந்து மணலை அள்ளிவரும். பொதுப்பணித்துறை விதிகளின்படி ஆற்றில் 3 அடிக்கு மேல் தோண்டக்கூடாது. இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது. ஆற்றின் குறுக்கே பாதை அமைக்க கூடாது, இரவில் குவாரி நடத்தக்கூடாது, ஒரு லாரியில் குறிப்பிட்ட யூனிட்களுக்கு மேல் ஏற்றக்கூடாது என விதிமுறைகள். ஆனால் கலெக்டர் முன்பாகவே விதிமுறைகள் மீறப்படுகின்றன. பாதிக்கப்பட்ட தோணித்துறை மக்கள் புகார் கூறியதால் ஆற்றில் பொக்லைன்மணல் அள்ளுவதை படம் எடுக்கச்சென்ற பத்திரிகையாளர்கள் தி.மு.க.,பிரமுகரின் மகன்களால் தாக்கப்பட்டனர்.
பொதுப்பணித்துறையினர் நடத்தும் அரசு குவாரியில் ஆளுங்கட்சி பிரமுகரின் மகன்களுக்கு என்னவேலை? அ.தி.மு.க.,ஆட்சியில் இயற்கை செல்வம் கொள்ளை போகிறதே நம்பியாற்றில் மணல் அள்ளுவதை தடை செய்யவேண்டும் என கூறி பத்திரிகையாளர்களை ஊர் ஊராக அழைத்துச்சென்று போராட்டம் நடத்திய ராதாபுரம் அப்பாவு எம்.எல்.ஏ., திருச்செந்தூர் ராதிகாசெல்வி எம்.பி.,போன்றவர்கள் தி.மு.க.,ஆட்சியிலும் மணல் அள்ளப்படுவதை பார்த்து எதுவும் செய்யமுடியவில்லை. அ.தி.மு.க.,ஆட்சியிலாவது மணல் கொள்ளையை கண்டித்து தி.மு.க.,வினர் மணல் குவாரிகளுக்கே சென்று போராட்டங்கள் நடத்தினர். ஆனால் தி.மு.க.,ஆட்சியிலோ அ.தி.மு.க.,வினர் "போராட்டம் என்றால் என்ன விலை' என கேட்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் தாமிர பரணி, வைப்பாறு என மணல் அள்ளப்படும் இடங்களில் அந்தந்த குறுநில மன்னர்களைப்போல ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு வருமானம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. தாமிரபரணிஆற்றில் பொதுப்பணித்துறையினர் ஒரு யூனிட் மணலை 650 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்துள்ளனர். ஒரு லாரி அதிகபட்சம் 3 யூனிட் கொள்ளும் என்றால் ஒரு லாரி மணல் விலை 2 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டால் ஒரு யூனிட் மணல் 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது ஒரு லாரி மணல் 7 ஆயிரம் ரூபாய். இதே மணல் கேரளாவுக்கு செல்லும்போது அங்கு லாரிக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தாமிரபரணியில் அள்ளப்படும் மணல் உள்ளூர் மக்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ கேரளாவுக்கு அதிக அளவில் செல்கிறது. கேரளாவில் இருந்து மணல் இன்னமும் சுத்தப்படுத்தப்பட்டு அரபு நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பலரை பலி வாங்கும் மணல்: தமிழக பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருந்து ஓய்வுபெற்றவர் சி.எஸ்.குப்புராஜ். மணல் கொள்ளைக்கு எதிராக வரிந்துகட்டிக்கொண்டு கட்டுரை எழுதியவர். தள்ளாத வயதிலும் தற்போது ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தலைவராக உள்ளார்.
*மணல் அள்ளினால் நடவடிக்கை என முதல்வர் உத்தரவு போட்டாலோ, கோர்ட் பரிந்துரைத்தாலோ போலீஸ் கைக்கு அகப்படுவது மாட்டுவண்டியில் மணல் அள்ளும் கூலித்தொழிலாளர்கள். அண்மையில் ஒரே நாளில் 70க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் சிக்கி போலீஸ் ஸ்டேஷன்களில் தவம் கிடந்தன.
பொக்லைன் இயந்திரங்களில் ஒன்றே ஒன்று மட்டும் சிக்கியது.
*மணல் அள்ளியதால் ஆழம் தெரியாமல் ஆற்றில் மூழ்கி 10க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். கீழப்பாட்டத்தில் மணல் குவாரியால் கிடைக்கும் வருமானம் யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலில் மூவர் கொலை செய்யப்பட்டனர். தாமிரபரணி நதிக்கரை நகரங்களில் பல வெட்டுக்குத்துகளும் இருதரப்பு மோதல்களும் அரங்கேறியுள்ளன.
*நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மணல் லாரிகள் ஏற்படுத்திய விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்.