இந்திய ஜனநாயக கட்சி எனும் புது கட்சியை முதலில் உடையார்கள் எனும் சாதி கட்சியாக துவக்கிய தமிழ் நாடறிந்த பெரும் தொழில் அதிபர் பச்சமுத்து நேற்று அந்த கட்சியின் கொள்கைகளை அறிவித்து பேசியதாக வந்த செய்தியினை தொடர்ந்து இந்த தலையங்கம் எழுத நேரிட்டது. முதலில் கீழே உள்ள செய்தியை படித்து விட்டு பின்னர் மேல் உள்ள தலையங்கத்தை படியுங்கள் தோழர்களே !
தலையங்கம் :
பச்ச முத்து அவர்களே, நீங்கள் படித்தவர், நல்லவர், உழைப்பால் உயர்ந்தவர், ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு அனுசரணை அரசியல் செய்ய திட்டமிடும் உங்களின் காங்கிரஸ் கட்சியின் சார்பு நிலை உங்கள் அரசியல் நாளாந்த நடவடிக்கைகளில் நன்றாக தெரிகிறது.
பொதுவாகவே பெரும் தொழில் அதிபர்கள் காங்கிரஸ் கட்சியைத்தான் "காப்பு" இடமாக விரும்புவார்கள். காரணம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
எத்தனையோ கல்லூரி முதல்வர்கள் , கட்சி ஆரம்பித்து உள்ளார்கள், காணாமல் போயும் உள்ளார்கள். நீங்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அரசியல் செய்யவேண்டும் என்றால் அதற்க்கு எதற்கு தனி கட்சி? அந்த காங்கிரஸ் கட்சியோடு இணைந்து அரசியல் பணி ஆற்றலாமே? அல்லது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால், நீங்கள் சார்ந்த சாதி இன மக்களை ஒன்று திரட்ட முடியாது என்று நினைத்து , அவர்களையும் உங்கள் வழிக்கு ஏமாற்றி கொண்டு வர நினைத்து இப்படி ஒரு கட்சி ஆரம்பித்துள்ளீர்களா ?
உங்களது நடவடிக்கைகளை ஆரம்பம் முதல் பார்க்கும் பொழுது, நீங்கள் ராகுல் காந்தியின் செயல் திட்டத்தில் ஏற்கனவே உள்ள பா ம க மற்றும் தேமுதிக வோடு இப்போது IJK வை இணைத்து கொண்டு பணியாற்றுகிறீர்கள் என்று தெரிகிறது.
அப்படி காங்கிரஸ் கட்சியோடு கள்ள காதல் உங்களிற்கு இல்லையென்றால் , குடும்ப அரசியலை எதிர்க்கும் நீங்கள் முதலில் எதிர்க்க வேண்டியது காங்கிரசின், இந்த சோனியா குடும்ப கூட்டத்தைதான். அதை விட்டு விட்டு , தமிழனை கொன்ற கூட்டத்தை சேர்ந்த ஒருவனை , ராகுல் காந்தியை பெருமையாக பேசுகிறீர்கள்.
இவை எல்லாவற்றையும் விட இன்னும் ஒன்றையும் தெரிந்து கொள்ளுங்கள், காங்கிரஸ் கட்சிதான் ஒரு லக்ஷம் தமிழ் பேசும் சமூகத்தை ஈவு இறக்கம் இல்லாமல் கொல்லுவதற்கு முதல் காரணமான கட்சி.
நீங்களும் தமிழகத்தில்தான் அரசியல் களம் காண விரும்புகிறீர்கள். கர்நாடகத்தில் அல்ல அல்லது கேரளாவில் அல்ல. உங்களின் காங்கிரஸ் சார்பு மன நிலைக்கு , சாத்திய ஒற்றுமை என்ற ஆயுதத்தை தூக்கி அவர்களை பலி கடா ஆக்காதீர்கள் .
தலையங்கதிர்க்கான செய்திகள் இங்கே :
IJK எனும் இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கைகளை வெளியிட்டு நேற்று அதன் நிறுவனர் மற்றும் தலைவர் பேசியுள்ளவற்றின் சாராம்சம் இங்கே :
நான் 40 ஆண்டுகாலமாக கல்விப் பணியில் இருக்கிறேன். என்னிடம் 20 கல்லூரிகளும், தமிழகம் முதல் டில்லி வரைக்கும் பெயர் பெற்ற ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது. அதில், 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உள்ளனர். அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவே நான் அரசியல் கட்சி துவங்கியுள்ளேன். எனக்கு, ஆளுங்கட்சி மற்றும் ஆண்ட கட்சியில் பல அமைச்சர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். "இவர் நல்லவராயிற்றே, இவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்' என அவர்கள் கேட்கின்றனர். இதில் இருந்தே, அரசியலில் நல்லவர்கள் இருக்க முடியாது என தெரிகிறது. இதே போன்ற எண்ணம், தமிழகத்தில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள், ஓய்வு பெற்றவர்கள், முதியோர் என, பலதரப்பட்டவர்களின் மனதிலும் ஏற்பட்டுள்ளது.
அரசியல் ஒரு சாக்கடை, அது அசுத்தம் நிறைந்தது என்றும் அவர்கள் கருதுகின்றனர். படித்தவர்கள் அரசியலில் இருந்தால் தான், நம் நாடு முன்னேறும். தகுதியும், திறமையும் மிக்கவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அதற்காவே, இந்திய ஜனநாயக கட்சி துவங்கப்பட்டுள்ளது. இரண்டு நாட் களுக்கு முன், முன்னாள் துணைவேந்தர் ஒருவர் எங்கள் கட்சியில் இணைந்தார். விரைவில் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரும் இணைய இருக்கின்றனர்.
இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லை. அது இருப்பதாக நினைத்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என விரும்பும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், இதை ஒப்புக்கொள்கிறார். அவர், வெளிநாடுகளில் படித்தவர் என்பதால், அங்குள்ள அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து, நமது நாட்டிலும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என கூறுகிறார். அவர் கூறிய உண்மையை நான் எடுத்து சொல்வதில் எந்த தவறும் இல்லை.
அன்று வெள்ளைக்காரர்களிடம் போராடி சுதந்திரம் வாங்கினோம். இன்று 100 குடும்பங்கள் மூலம் நாட்டில் ஆட்சி நடக்கிறது. காஷ்மீரை எடுத்துக் கொண்டால் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா போன்றவர்கள் ஆட்சி செய்கின்றனர். தமிழகத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. அரசியலில் தூய்மை, அனைவருக்கும் வாய்ப்பு, குடும்ப ஆட்சிமுறை ஒழிப்பு, இதுதான் இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கை.
இதோடு இலவசங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் கட்சியின் முக்கிய கொள்கை. இதை சொல்வதால், நான் ஏழைகளுக்கு எதிரானவன் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. நாட்டில் என்னை விட யாரும் ஏழையாக வாழ்ந்திருக்க முடியாது. ஒருவன் 10 ரூபாய்க்கு உழைத்து சாப்பிட நினைக்கும்போது, அவனுக்கு ஒரு ரூபாய்க்கு இலவச கஞ்சி வழங்குகின்றனர். இதனால், அவனது ஒன்பது ரூபாய் வருமானம் பறிக்கப்பட்டு, அவனும் சோம்பேறியாகிவிடுகிறான். எனவே, உழைப்பது மரியாதை குறைவு என நினைக்காமல், அனைவரும் இலவசங்களை தவிர்த்து உழைத்து சம்பாதிக்க வேண்டும்.
அரசும் மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் முறையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் மகளிர் அணி, இளைஞர் அணி, விவசாய அணி, ஆசிரியர் அணி என பல பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒரு கட்சிக்கு அடிப்படையானதாக உள்ள வக்கீல்கள் அணி, மற்ற அணிகளுக்கு கேடயமாக உள்ளது. நாட்டில் எந்த ரூபத்திலும் பிரச்னைகள் வரும். கட்சியில் உள்ளவர்களுக்கும் சங்கடங்கள், பிரச்னைகள் வருகின்றன. அவற்றை தீர்க்கும் பணியை வக்கீல்கள் அணி சிறப்பாக செய்யும். இவ்வாறு பச்சமுத்து பேசினார்.
இதே விழாவில் பேசிய பச்சமுத்து ,
நாட்டை, 100 குடும்பங்கள் ஆட்சி நடத்துகின்றன. காஷ்மீரை எடுத்துக் கொண்டால் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா போன்றவர்கள் ஆட்சி செய்கின்றனர். தமிழகத்தை பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை. அரசியலில் தூய்மை, அனைவருக்கும் வாய்ப்பு, குடும்ப ஆட்சிமுறை ஒழிப்பு, இதுதான் இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கை, என்றும் சொல்லி விட்டு, பின்னர் பேசும் பொழுது ராகுல் காந்தியை புகழ்ந்துள்ளார்.
அந்த புகழ் வரிகளை மீண்டும் ஒரு முறை இங்கே கொடுக்கிறேன்
"
இந்தியாவில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என விரும்பும் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், இதை ஒப்புக்கொள்கிறார். அவர், வெளிநாடுகளில் படித்தவர் என்பதால், அங்குள்ள அரசியல் நிலவரங்களை ஆராய்ந்து, நமது நாட்டிலும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என கூறுகிறார். அவர் கூறிய உண்மையை நான் எடுத்து சொல்வதில் எந்த தவறும் இல்லை.
"