மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில்,
பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப்பற்றி அடுத்து பேச சீமான் இருக்கிறார். நான் பேச நினைப்பது,
இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள்: மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் - காங்கிரஸ் முழக்கம்; ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு - மார்க்சிஸ்டு முழக்கம்; சகோதர யுத்தம், சர்வாதிகாரி - திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
எதைக் காரணமாக வைத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்? ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலையை நாங்கள் மறக்க மாட்டோம் அதற்காக ஈழத்தமிழர்களை, புலிகளை மன்னிக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். அது குறித்து சில செய்திகளைப் பேசவிரும்புகிறேன். நம் உடலில் ஏற்பட்ட புண்போல தமிழர் வரலாற்றில் ஒரு புண் தோன்றியது. ஈழத்தில், ஈழ விடுதலை ஆதரவில், தமிழர்களுடைய உரிமை முழக்கத்தில் ராஜீவ் காந்தி பெயரால் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட அந்தக் கீறல் ஊறுபுண்ணாகப் போய்விட்டது. அது உள்ளே சீழ் பிடித்துக்கொண்டிருக்கிறது. காலை அசைத்தால் வலிக்கிறது, நடந்தால் வலிக்கிறது, அசைந்தால் வலிக்கிறது. கீறிவிட்டு அதை ஆற்றவேண்டும். யாரும் நாம் முயற்சிக்கவில்லை. நாம் அந்தப்புண்ணைக் கீறிப்பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
கொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி யார்? எப்பொழுதும் சொல்வதுண்டு. ராஜீவ் காந்தி கொலையல்ல, மரண தண்டனை, அது கொலை என்ற சொல்லால் சொல்லக்கூடாது என்று ------- யார் அந்த ராஜீவ் காந்தி? அவன் எந்தக் கட்சியைச் சார்ந்தவன்? காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்கின்ற இயக்கங்களில் ஒன்றாக இருக்கின்ற நான், அதை விளக்கவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. யார் அந்தக் காங்கிரசுக்காரர்கள்? இந்தத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? எப்பொழுதாவது நன்மை செய்து இருக்கிறார்களா? நம்முடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு இருக்கிறார்களா? அந்த இடத்தில் நமக்காக யாராவது உட்கார்ந்து இருக்கிறார்களா, காங்கிரஸ் தலைமையில்? ஒருமுறை காமராஜர் அமர்ந்திருந்தார். அதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர் கூட சொன்னார், தலைமை அமைச்சர் தேர்வுக்காக ஆட்களைத் தேடித்திரிந்த காமராஜரிடம், ஏன் நீங்களே நிற்கக் கூடாது என்று கேட்டார்கள்? காமராஜர் சொன்னார், ‘நான் சொன்னா போடுவான் நின்னா போட மாட்டான்’னு.
தமிழனை ஏற்றுக்கொள்ள மாட்டான் வடவன். அவன் வரலாற்றுப் பகைவன், நம்மை வரலாற்றுப் பகையாகக் கருதுகிறான். இனத்தால் ஆரியன், திராவிடரான நம்மை ஏற்றுக்கொள்வதில்லை, மொழியால் சமஸ்கிருதக் குடும்பத்துக்காரன், திராவிடமொழிக்குடும்பமான தமிழை ஏற்றுக்கொள்வதில்லை. அதுதான் இலங்கையிலும் நடக்கிறது. ஆரிய இனத்தைச் சார்ந்தவன், சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவன், திராவிட இனத்தைச் சார்ந்த தமிழ் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவனை நசுக்கப்பார்க்கிறான், இங்கு இருக்கின்ற வரலாற்றுப் பகைவன் அங்கு இருக்கிற வரலாற்றுப் பகைவனுக்கு உதவுகிறான். நாம் உதவ நினைக்கிறோம். ஆனால் தடையாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் காங்கிரசுக்காரர்கள். காந்தி, நேரு காலத்திலிருந்து, எப்போதாவது இந்தக் காங்கிரசு நமக்கு, தமிழர்களுக்கு, உழைக்கும் மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறதா என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது. ஏதும் தடையமே காணோம். எந்தச் செய்தியையும் காணோம்.
ஆரம்பத்தில் இந்தியை ஆட்சிமொழி ஆக்குவதற்கு, தமிழர்களுடைய மொழி உரிமையை நசுக்குவதற்கு இந்தக் காங்கிரசு காரணமாக இருந்தது. காங்கிரசு கட்சியில் ஆட்சிமொழி தீர்மானம் வந்தபோது சரிபகுதி வாக்குகள், இந்திக்கு ஆதரவாக, இந்திக்கு எதிராக சரிபகுதி வாக்குகள், காங்கிரசு தலைவர் பட்டாபி சீதாராமையா தன் வாக்கை அளித்துத்தான் காங்கிரசு கட்சியில் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அரசியல் நிர்ணய சபையில் வாக்கெடுப்பு வந்தது. அங்கும் சரிசமமான வாக்குகள் இரண்டு பக்கமும், நிர்ணயசபைத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் வாக்களித்துத்தான் இந்தி ஆட்சிமொழியானது. இது கள்ள ஓட்டு போல, தலைவர் ஓட்டு. யாரும் வாக்களிக்கவில்லை, கள்ள ஓட்டை காங்கிரசு தலைவர்கள் போட்டுத்தான் நம் மீது இந்தியைத் திணித்தார்கள். இட ஒதுக்கீடு வந்தது. 1951-யில் பெரிய யோக்கியன் போல் பேசினார், நான் பொருளாதார அளவுகோலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பேசினார் நேரு. பெரியார் சொல்லுவார், முற்போக்கு வேடம் தரித்த பிற்போக்குவாதியவர். ஆனால் அவர் சொன்னார், நான் பொருளாதாரம் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டு, 1951-யில் சொன்னவர், 1961-யில் மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதினார், சாதி அடிப்படையில் கொடுப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று. பொருளாதார அடிப்படையில் வேண்டுமானால் கொடுங்கள் என்று கடிதம் எழுதியவர்.
இலங்கை வரலாற்றில் அப்படி ஒன்று இருக்கின்றது. 1956-யில் சிங்கள ஆட்சி மொழி சட்டம் வந்த பொழுது, ஒரு மொழி என்று சொன்னால் இது இரு நாடாகிவிடும், இரு மொழி என்று சொன்னால் ஒரே நாடாக இருக்கும் என்று சொன்னவர் டாக்டர் கால்வின் டி சில்வா. 1972-யில் அவர் தலைமையில் அரசியல் சட்டம் எழுதப்பட்டது, அவர் தான் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று எழுதியவர். வரலாற்றில் மனிதர்கள் மாறுகிறார்கள். நம் வரலாற்றில் நமக்கு எதிராக மாறியவன் நேரு. இந்திரா காந்தி, நமது உரிமை நிலமான கட்சத்தீவை வாரிக்கொடுத்துவிட்டு, இன்று வரை தமிழக மீனவர்கள் சாவிற்குக் காரணமாக இருந்தவர், நிறைய குற்றங்களைச் சொல்லலாம்.
நம்ம ராஜீவ் காந்தியைப் பற்றிப் பேசுவதானால் சொல்லுவோம். ராஜீவ் காந்தி யார்? ஒரு வேளாண்மை செய்பவனுக்கு, விவசாயிக்கு விதை முக்கியம். அதில் எவனாவது கேடு செய்தால் அவன் வேளாண்மையே, மகசூலே பாழ். அவன் வாழ்க்கையே முடிந்தது. ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு தான் முக்கியம். பாதுகாப்புக்கு நல்ல வீரன் வேண்டும், நல்ல படைக் கருவி வேண்டும். பாதுகாப்புக்கு வாங்கிய படைக் கருவியில் குறைந்த தரம் உள்ளதை வாங்கி பணம் சம்பாரித்து போஃபோர்ஸ் ஊழல் செய்த அயோக்கியன் ராஜீவ் காந்தி. அவன் நம் நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனக்கு காசு சேர்த்துக் கொண்டவன். அவன் தான் மரண தண்டனை வழங்கப்பட்டவன். அதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து மண்டல் குழு, இந்த நாட்டில் 52 சதமாக இருக்கிற பிர்படுத்தப்பட்ட மக்களினுடைய உரிமைக்காக பரிந்துரை செய்யப்பட்ட மண்டல் குழு பார்ப்பனர்களால் எதிர்க்கப்பட்டதாக நாம் பேசிக்கொள்வோம், ராஜீவ் காந்தியும் எதிர்த்தவன். மண்டல் நிறைவேற விடமாட்டேன் என்று சொன்னவன் ராஜீவ் காந்தி. பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருந்தவன்.
அல்லது அடிப்படை அறநெறியிலாவது நேர்மையானவனா? ஜானி என்பவன், இங்கிருந்து இந்திய அரசால், ஒரு விடுதலைப் புலி வீரன் அங்கு அனுப்பப்பட்டான். சில செய்திகளைப் பற்றி விளக்கம் கேட்டு வர, கருத்து கேட்டு வர அனுப்பப் பட்டார். அனுப்பப்பட்ட அதே தூதுவனை, அதே அரசு அதே அரசப் படைகள் சுட்டுக் கொன்றன. ராஜீவ் காந்திப் படைதான் சுட்டுக்கொன்றது. சினிமாவிலெல்லாம் பார்ப்போம், கட்டபொம்மன், சொல்லுவான் தூதுவனாக வந்ததால் உன்னை உயிரோடு விடுகிறேன் எட்டப்பா என்று சொல்லுவான். இராமாயணத்தில் இராவணன் சொல்லுவான், அனுமா நீ தூதுவனாக வந்ததால் உயிரோடு விடுகிறேன் என்று. ஆனால் தூதுவனைக் கொன்ற துரோகி இராஜீவ் காந்தி. அது மட்டுமல்ல, அறநெறிக்குப் புறம்பாக என்பது சாதாரணமாக அல்ல. அறநெறிக்கு புறம்பானவன் என்பது ஹர்சரத் சிங் என்கிற இந்திய நாட்டின் படைத் தளபதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஹர்சரத் சிங் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ‘இண்டர்வென்சன் ஆஃப் இந்தியா(அல்லது இன் சிறீலங்கா)’ என்ற புத்தகம். அதில் பல செய்திகள் இருக்கின்றன,
நாங்கள் கூட புத்தகம் போட்டு விற்றுக்கொண்டு இருக்கின்றோம், ‘ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்?’ என்ற நூலை பெரியார் திராவிடர் கழகம் தோழர்.விடுதலை இராஜேந்திரன் எழுதிய நூல், அதை விற்றுக் கொண்டிருக்கிறோம், அதைப் படித்துப்பாருங்கள். அதில் பல செய்தி, அதில் ஒன்று ஹர்சரத் சிங் அங்கு தலைமைத் தளபதியாக இருந்தபோது 1987-யில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கூறுகள் கூட நிறைவேற்றப்படவில்லை. அதற்காக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், போராட்டம் தொடங்கவிருக்கிறார்கள். திலீபன் நாளை போராட்டம் தொடங்கப் போகிறார். செப்டம்பர் 16-ஆம் நாள் அது குறித்து பிரபாகரனிடம் பேசுவதற்கு விரும்புகிறார். பிரபாகரன் சந்திக்க இருக்கிறார். 14-க்கும் 15-க்கும் இரவில் சந்திக்க வருகிறார், சந்திக்கப் போகிறார். அப்போது இலங்கையிலிருந்த இந்தியத் தூதர் தீட்சித், ஹர்சரத் சிங்கிற்குச் சொல்கிறான், அந்தச் செய்தியை தொலைபேசியில் சொல்கிறான். இன்று பேசவருகிற போது பிரபாகரனை சுட்டுவிடு என்று சொல்கிறான். அவர் மறுக்கிறார். நான் அறநெறி பிறழாத இராணுவ வீரன், வெள்ளைக் கொடியின் மேல் பேசுகிற போது சுடமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் சொல்கிறார், தன்னுடைய தலைமை தளபதி திபீந்தர் சிங்கைக் கேட்கிறார், மறுத்துவிடு என்று சொல்லிவிடு, முடியாது, அப்படியெல்லாம் அறநெறி பிறழ்ந்து செய்யமுடியாது என்று சொல்கிறார். மீண்டும் தீட்சித்துக்கு முடியாது என்று சொல்கிறார்,
இது நான் சொல்லவில்லை, தலைமை அமைச்சர் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னது என்று அவன் சொல்கிறான். எழுதி இருக்கிறார் ஹர்சரத் சிங். இந்த நாட்டின் படைத் தளபதி அப்போது நடந்த செய்தியைப் பதிவு செய்திருக்கிறார். நூல் வந்திருக்கிறது. இரண்டாண்டுகளாக இந்தியாவில் உலவுகிறது. எனில் அறநெறி பிறழ்ந்து உங்களை நம்பிப் பேச வந்தவனைச் சுடத் துணிந்த அயோக்கியன் அப்போது சொல்லைக் கேட்டிருந்தால் பிரபாகரன் நமக்கு இல்லை. ஈழத்தமிழர்களுக்கு இல்லை. அப்படிப்பட்ட துரோகி அவன். ஒவ்வொன்றாக, தோழர் இராஜேந்திரன் சொன்னார். தன்னுடைய தாய், தனக்குப் பதவி வரக் காரணமாக இருந்தவள், விமானம் ஓட்டிக்கொண்டிருந்தவன் நேரடியாக பதவிக்கு வந்து உட்காருகிறான், அவரை கொல்லப்பட்டதற்கு அமைக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்கிறது, இவன் தான் காரனமாக இருக்கக் கூடும் விசாரிங்கள்.
ராஜீவ் கொலைக்கும் அப்படி பரிந்துரை செய்கிறது ஜெயின் ஆணையம். ஜெயின் ஆணையம் சொன்ன பரிந்துரையின் இடைக்கால அறிக்கை வந்தவுடன், முன்பு இருந்த தி.மு.க அரசையும் குற்றம் சொல்கிறது இவன் தான் ராஜீவ் காந்தி கொலைக்கு என்று, தி.மு.க. அமைச்சரவையில் இருந்தால் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்று காங்கிரசு சொன்னது. தலைமை அமைச்சர் அவர்களை நீக்க முடியாது என்று சொன்னார், அந்த இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின் அமைக்கப்பட்ட ஆணையம் குற்றம் சொன்ன ஒருவரை தனது கட்சிக்கு பொது செயலாளராக நியமிக்கிறார். அதுமட்டும் இல்லை. இப்படிப்பட்ட ஆணையங்களின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கவேண்டியதில்லை என்ற புதிய சட்டம் ஒன்றை அதற்காகக் கொண்டுவருகிறார். அறிக்கையையே வைக்கவில்லை நாடாளுமன்றத்தில். தன் தாய்க்கே துரோகம் செய்த துரோகி. ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு போனால், ஏராளமான குற்றச்சாட்டுகளைச் சொல்லலாம். அதுமட்டுமில்லை இங்கிருந்து அமைதிப் படையை அனுப்புகிறேன் என்று சொல்லி, எதிரிக்கும் எதிரிக்கும் உடன்பாடு பேசப்போனவன், இவன் ஒரு உடன்பாடு போடுகிறான். இரண்டு பேரையும் உட்கார வைத்தா போட்டார்கள் உடன்பாட்டை? 1987 ஒப்பந்தத்தில் யார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும்? இந்தப் பக்கம் இலங்கை குடியரசுத் தலைவர் என்றால் அந்தப் பக்கம் பிரபாகரன் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். அப்படித்தானே நார்வே செய்தது. ஆனால் இவர் ஒரு பக்கம் கையெழுத்தாம் அவர் ஒரு பக்கம் கையெழுத்து போட்டு நிறைவேற்றி விட்டு அதில் சொன்னதைக் கூட நிறைவேற்றாமல், அமைதிப்படை என்ற பெயரால் அனுப்பப்பட்டது நம்முடைய தமிழர்களை தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களைக் கொல்லத்தான் பயன்பட்டது. அந்த அமைதிப்படை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு 1987-யில் போட்ட ஒப்பந்தத்தை சிவசங்கர மேனன் இலங்கைக்குப் போய்விட்டு இப்போது தான் பேசுகிறார். 1987 ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டிருக்கிறோம் 22 ஆண்களுக்கு பின்னடி இப்ப கேட்டிருக்கிறார். கலைஞருக்கு 1985-யில் கொடுத்த பேட்டி இப்பொழுது நினைவிற்கு வந்ததைப் போல, 1987 ஒப்பந்தம் இப்பொழுது தான் நினைவிற்கு வந்திருக்கிறது. அவர் சொல்லுகிறார். சரி அந்த ஒப்பந்ததைப் போட்டு அனுப்பினாயே என்ன அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சியெடுத்துக் கொண்டாய்?
ஒப்பதத்தின் கூறு இதுவரை ஏதாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரே நிலப்பகுதியாக ஆக்கப்படவேண்டும் என்று ஒப்பந்தம். இந்த காங்கிரசு, இந்த இந்திய அரசு, அதற்காக உயிர்தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் நினைவாக என்ன செய்திருக்கிறார்கள்? இது வரை! இந்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், இந்திய ------ கால் வைக்க விடமாட்டோம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரைக்கும் கேட்டிருக்கிறீர்களா? சீன நாடு அங்கே கால்வைத்து விட்டது. நீ கொடுத்த கட்சத்தீவில் வரலாம். ஏன் என்றால் இப்படித்தான் பர்மா/மியான்மருக்கு ஒரு தீவைக் கொடுத்தார்கள். கோகோ தீவு என்று ஒரு தீவு. அங்கே இப்போது அந்தமானுக்குப் பக்கத்தில் சீன நாட்டு கப்பற்படை வந்து அமர்ந்திருக்கிறது. அதுபோல் கட்சத்தீவிற்கு வராது என்று என்ன நிச்சயம்?
இப்படிப்பட்ட துரோகங்களைப் புரிந்த அந்த ராஜீவ் காந்திக்கு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் யாராவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். என்னாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்தாய், இந்த நாட்டு பிற்படுத்தப்பட்டவர்களால் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய நலனுக்கெதிராக நீ இருந்தாய். தாய், அறநெறி என்று பேசுபவன் எவனாவது மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நீ சதிகாரனாக, கொலைகாரனாக, கொலை செய்ய முயற்சித்திருக்கிறாய், நாம் செய்யத் தவறிய செயலை, ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கிறான் என்று வைத்துக்கொண்டால் அதற்காக மகிழ்ச்சியடைய வேண்டும், காரணம், ஒரு ராஜீவ் காந்திக்கு வருகிற ஏக்கம், ஆறாயிரம் ஈழத்தமிழர்களுக்கு, அவர்களைக் கொன்றது யார், அமைதிப்படைதானே, ஆயிரம் பெண்களுக்கு கற்பழித்தவன் கொடுமைப்படுத்தியவன் கெடுத்தவன் யார், அமைதிப்படை தானே, வீதியில் படுக்க வைத்து மேலே டேங்கை ஓட்டினார்களே, துடிக்காதா நெஞ்சம்? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் நியாயம், விடுதலைப் புலிகள் செய்யாமல் இருந்தால் குற்றம். செய்திருந்தால் பாராட்டுகிறோம், செய்யாமலிருந்திருந்தால் கண்டிக்கிறோம் என்று நாம் பேசியிருக்க வேண்டும். அதுதான் தமிழ்நாட்டில் முழங்கியிருக்கவேண்டிய கூற்று. நாம் துன்பியல் நாடகம், வருத்தப்படுகிறோம் என்று பேசி தவறு செய்துவிட்டோம். இந்தக் குற்றத்தைச் சொல்லி சொல்லித்தான் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் என்று சொல்கிறான்.
கலைஞருக்கு எவ்வளவு பெருந்தன்மை. இவ்வளவு கூட்டு இருந்து, இவ்வளவு நாள் கட்சி நடத்துகிறாயே இவர் மறப்போம் மன்னிப்போம், அவன் மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம். அவர் மறப்போம் மன்னிப்போம், தன்னுடைய மகனைக் காப்பாற்ற நெருக்கடி நிலையில் நிறையில் உயிர் கொடுத்த சிட்டிபாபு, பாலகிருஷ்ணன் செத்து இரண்டரை ஆண்டில் கூட்டு சேர்ந்தாரேப்பா, அந்தப் பெருந்தன்மை ஏன் காங்கிரசுக்காரனுக்கு வரவில்லை என்று கேட்கிறேன்.
இப்படிப்பட்ட அவர்களுடைய பொய்முகத்தை நாம் புரிந்தாக வேண்டும். ஆம், கொலை செய்திருந்தால் நியாயம், ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று புதுமலையில் ஏற்று பிரபாகரன் சொன்னார், ஆயுதங்களை ஒப்படைக்கிறோம், ஆயுதங்களை உங்கள் கையளித்த நிமிடத்திலிருந்து, ஈழத்தமிழர் பாதுகாப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம், இந்திய அரசின் நேர்மையை நான் நம்புகிறேன் என்று சொன்னார். நம்பிக்கை துரோகம் செய்தீர்களா இல்லையா? இப்படிச் சொல்லித்தானே ஆயுதங்களை கொடுத்தார், தனது உயிருக்கு உயிரான மக்களைக் காப்பாற்ற ஆயுதம் எடுத்தார், ஆயுதம் எவன் எடுப்பான்? இரக்கம் மிகுந்தவன் தான் ஆயுதம் எடுப்பான். இரக்கம் இருக்கிறவன், சாதாரண மனிதர்கள், ஒருவன் தாக்கப்பட்டால், அநியாயமாக உதைக்கப்பட்டால், அக்கிரமம் என்று சொல்லிவிட்டு போய்விடுவான். மீறிப்போனால் கண்ணீர் விடுவான். இவன் சாதாரண இரக்கம் உள்ளவன். இரக்கம் மிகுந்தவன் தான் தட்டிக்கேட்கப் போவான், தடுக்கப் போவான், மீறிப்போனால் ஆயுதம் எடுத்தாவது போராடுவான். அது தான் முத்துக்குமார் சொன்னார், அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார், மறத்திற்கும் அஃதே துணை என்று சொன்னார், முத்துக்குமார் தனது கடிதத்தில் எழுதி வைத்திருந்தார். அறத்திற்கே அன்பு சார்ப என்ப என்று திருக்குறளை நினைவூட்டுகிறார், வள்ளுவரே சொல்லியிருக்காரப்பா, அறத்திற்கே அன்பு சார்ப என்ப அறியார், மறத்திற்கும்-விடுதலைப்புலிகள் போராட்டத்திற்கும் அன்பு தான் காரணம். அவர்கள் இரக்கம் மிகுந்த காரணத்தால் ஆயுதம் எடுத்துப் போராடுகிறார்கள்,
எனவே அந்தப் போராளிகளினுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிற தங்கள் மக்களை காப்பதற்கு கையில் வைத்திருந்த ஆயுதத்தை உன் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து ஒப்படைக்கிறோம் என்று சொல்லிவிட்டு கொடுத்த அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்த துரோகியல்லவா! நீ சொல்லுகிறது எல்லாம் எவ்வளவு, இந்திய மண்ணில் வந்து கொலை செய்யலாமா? பேசுகிறான். இலங்கையில் அடித்தவன் ஒருவேளை ஓங்கி அடித்திருந்தால், கப்பற்படை வீரன் இந்நேரம் செத்துப் போயிருப்பான். அவன் கேட்டான் சொன்னான், நான் துடைப்பத்தில் அடிக்கவேண்டுமென்று கருதினேன், கெட்ட வாய்ப்பாக என் கையில் துப்பாக்கியிருந்தது என்று சொன்னான். கேட்டாங்க அவனை, சொன்னான், அதை குற்றமென்று சொல்லவில்லை. ஆனால் அங்கே செத்திருப்பான் அல்லவா, இவங்க சொல்கிறான் அல்லவா, நாங்கள் ஆயுதம் கொடுக்கவில்லை என்றால் ஈரான் கொடுத்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும், இவன் கொடுக்கிறானோ கொடுக்கவில்லையோ சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் சொல்கிறோம், அவன் கனமாக அடித்த்திருந்தால் கொன்று இருப்பான், இங்கே கொல்லாமல் விட்டிருந்தால் பாகிஸ்தான்காரன் கொன்றிருப்பான், பஞ்சாப்காரன் கொன்றிருப்பான் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? காங்கிரசுக்காரன் வாதத்தைச் சொல்கிறோம், நான் ஆயுதம் கொடுக்கவில்லையென்றால் அவன் ஆயுதம் கொடுப்பான் என்று சொல்கிறாயே, நாங்கள் கொல்லாட்டி பஞ்சாப்காரன் கொன்றிருப்பான், அப்ப நாங்கள் செஞ்சது தப்பில்லை என்று சொன்னால் ஒத்துக்கொள்வானா அவன்? இப்படிப்பட்ட சொத்தை வாதங்களை வைத்து அவன் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள், அந்தக் காங்கிரசுக்காரர்கள் இந்த மண்ணில் இருக்கக் கூடாது, இருக்கக் கூடாது என்றால் ஆட்சியில், பதவியில் எந்த இடத்திலும் இருக்கவிடக் கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்தாக நாங்கள் மூன்று இயக்கங்களும் இப்பொழுதைக்கு இணைந்து இருக்கிறோம்.
ஆனால் தொடர்ந்து ஈழத்தமிழர் ஆதரவு என்ற முழக்கம் போதாது. ஈழத்தமிழர்களை, இலங்கைத் தமிழர்களை எப்படி வேண்டுமானால் இருக்கட்டும், எப்படி அவர்களைப் பாதுகாக்க முடியும்? பாதுகாக்க வானத்திலிருந்து கடவுள் வருவாரா? தேவதூதன் வந்து காப்பாற்றுவானா? அவர்களிப் பாதுகாப்பதற்கு பலமான பாதுகாப்புக் கவசம் வேண்டும். அமைதியான ஒரு நாடாக இருந்திருந்தால் ஒரு கட்சி ஒரு இயக்கம், ஆட்சி போதும். ஆயுதம் கொண்டு தாக்கப்படும் போது, ஆயுதம் கொண்டு பாதுகாக்கின்ற ஒரு இயக்கம் தான் வேண்டும். அதற்குச் சரியான இயக்கமாக தொடர்ந்து போராடுகிற இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் தான். அவர்கள் ஈழத்தமிழர் ஆதரவு என்பதற்குச் சரியான பொருள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம் என்றுதான் பொருள். நாம் அஞ்சியஞ்சிச் சொல்லிப் இனி பயன் இல்லை. அவர்களையும் ஆதரிக்க வேண்டும். ஆதரிப்பது இருக்கட்டும், அவர்கள் மீது தேவையில்லாமல் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கப்படவேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது முழக்கமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு அநியாயமாக ஆயுதங்கள் கொடுக்கின்ற இந்திய அரசு எங்கள் அரசாக இருக்குமா என்ற அய்யம் வரவேண்டும், அய்யம் வந்தால் தான் முடிவுக்கு நாம் வரமுடியும்.
முதலில் சந்தேகிக்கனும், நம்ம நாடாக இருந்தால் கொடுப்பானா? நாம் சந்தேகிக்கிறோம், ஆயிரம் காரணம் இருக்கிறது. பக்கத்து நாடான வங்க நாட்டில் நடந்த விடுதலைப் போருக்கு பாகிஸ்தானிலிருந்து பிரித்து நாடு கொடுக்க இந்திரா காந்தி தொடுத்த யுத்தம். அந்த நாட்டிற்குப் போராட்டம் நடந்த போது அங்கிருந்த சில மக்கள் இங்கு வந்தார்கள், அகதிகள் வந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்த இந்திய அரசு நாம் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் அய்ந்து காசு வசூலித்தது. பலருக்கு நினைவிருக்கலாம், 15 காசு அஞ்சலட்டைக்கு கூடுதலாக 5 காசு அஞ்சல் வில்லை ஒட்டவேண்டும். Refugee Relief Fund என்று தனியாக ஒரு முத்திரை ஒட்டவேண்டும் என்று வைத்திருந்தார்கள். நமக்கு எழுதுகிற கடிதத்திற்கெல்லாம் 25 விழுக்காடு நாம் அவர்களுக்காக நாம் பணம் செலுத்தினோம். யாருக்கு? இன்னொரு நாடிலிருந்து இந்த நாட்டிற்கு போரின் போது வந்தவர்களுக்காக இந்திய அரசு நம்மிடம் வசூலித்தது. நமது தமிழக முதல்வராக அப்போது இருந்த கலைஞர், 6 கோடி ரூபாய் நிதியை வங்க அகதிகள் உதவிக்காக திரட்டிக் கொடுத்தார், தமிழ்நாட்டிலிருந்து. 6 கோடி அப்போது என்றால், எழுபதுகளில், ஒரு பவுன் 150 ரூபாய்; இன்றைக்கு 10,000 க்கும் மேலே. கணக்குப் போடுங்கள் 100 கோடி ரூபாயுக்கும் மேலாக தமிழர்கள் இன்னொரு நாட்டிலிருந்து பாதிக்கப்பட்ட வங்காளிகளுக்கு இங்கிருந்து பணம் திரட்டி அளிக்கிறோம். குஜராத்தில் பூகம்பம், தமிழ்நாட்டிலிருந்து நிதி போனது. நம்முடைய இரத்த உறவு ஈழத்தமிழனுக்காக நிதி திரட்டிய போது எத்தனை வெளிநாட்டுக்காரன், வேறு மாநிலத்துக்காரன் பணம் கொடுத்திருக்கிறான். எங்களுக்கு அய்யம் வராதா? நாங்கள் வேறு அவர்கள் வேறு. எங்களுக்கு சிந்தனை வராதா? இந்த இந்திய அரசு என்ன முயற்சியை செய்திருக்கிறது? அந்த வங்க அகதிகளுக்காக அத்தனை உதவி செய்தவன், திபெத்திய அகதிகளை, நான் கர்நாடக எல்லையில் இருக்கிறவன். ஒரு 50 கி.மீ அந்தப் பக்கம் போனால் திபெத்திய அகதிமுகாம் இருக்கிறது. அழகான வண்ணம் பூசப்பட்ட நிரந்தர கட்டிடங்கள், காண்கிரீட் கட்டிடத்தில், வங்கிகள் இருக்கிறது, விளையாட்டுத்திடல் இருக்கிறது, 5000 ஏக்கர் அவர்களுக்கு ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அந்த முகாமுக்குள் காவல்துறையை அவர்கள் அனுமதிப்பதில்லை. கோகிற நமக்கெல்லாம் ஒரு மதுவைக் கொடுக்கிறார்கள். அவர்கள் பாணியில் அவர்கள் செய்து காய்ச்சிய மதுவை கொடுக்கிறார்கள். மதுவை விருப்பமானவர்கள் குடிக்கிறார்கள். அதைத்தடுப்பதற்கு பார்ப்பதற்கு காவல்துறை அந்த முகாமுக்குள் நுழைந்துவிட முடியாது. அதே நாடு தானே, தமிழன் இங்கு இருக்கிறான், அவன் திபெத்தியன் அவன் கர்நாடகத்தில் இருக்கிறான். என் தமிழன் தமிழன் நாட்டில் தமிழ் நாட்டில் வந்து இருக்கிறான். அந்த அகதி முகாமுக்குள் நாம் உள்ளே நுழைய முடியுமா? நாம் பார்க்கப் போக முடியுமா? எத்தனைக் கொடுமை?
அவர்களுக்கு செங்கல்பட்டு முகம் என்ற சிறப்பு முகாம் இருக்கிறது. பலபேருக்குத் தெரிந்து இருக்காது. நமது மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் துவக்கி வைத்தது 1990-யில். குற்றமே செய்யாத ஈழத்தமிழன் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டது தான் அந்த முகாம். 180 பேர் கடந்த ஆட்சியின் போது இருந்தார்கள். இந்தக் கொடுமைக்கார ஜெயலலிதா 6 ஆகக் குறைத்தார் அந்த முகாமில் இருப்பவர்களை. இப்பொழுது திரும்ப 87 ஆகிவிட்டது. அவர்களைப்பார்க்க குடும்ப உறவுகள், மனைவி வந்தால் பார்க்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களிலும் 18 பேர் விடுதலைப் புலிகள் என்று வேறு இடத்தில போட்டாச்சு மீதியிருக்கிற 65 பேரைப் பார்க்கப் போகிற மனைவிகள், குழந்தைகள் மாதம் ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகலாம். உள்ளேயிருக்கிறவர்களை. வெளிக்காற்றைச் சுவாசித்து 5 ஆண்டுகள் 6 ஆண்டுகள் ஆனவர்கள் எல்லாம் அங்கேயிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் நம் சொந்தங்களுக்கு நடக்கிற போது, அதைச் செய்யச் சொல்லி நிர்பந்திக்கிற போது நம் அரசு செய்கிறதோ இல்லையோ நாம் யோசிக்கிறோம். இது நம் அரசாக இருக்க முடியுமா? சந்தேகம் வருகிறது நமக்கு அய்யம் வருகிறதல்லவா? இதை நாம் எப்படி வெளிக்காட்டப் போகிறோம்.
ஏற்கனவே சொன்னேன், வெளி நாட்டுக்காரன் நம்நாட்டில் வந்து கொலை பண்ணலாமா என்று கேட்டான்? இதற்கொரு எடுத்துக்காட்டைச் சொல்லவேண்டும். இந்த நாட்டில் ஒரு கொடுமை நடந்தது, ஜாலியன் வாலாபாக் படிகொலை, 1919-யில் 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றதாக அவர்கள் சொன்னான், நாம் ஆயிரம் பேர் என்று சொன்னோம், அதைச் செய்தவனைக் கொல்லவேண்டும் என்று இந்த நாட்டு இளைஞன் அப்போது நினைத்தான். அவனை விடக் கூடாது என் நாட்டில் கொடுமைச் செயல் புரிந்தவனைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று 1919-யில் செய்த குற்றத்திற்காக, 1940-யில் இங்கிலாந்தில் போய், அங்கே ஒரு விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் போய் ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றானே உத்தம் சிங். 21 ஆண்டுகள் கழித்து இங்கிலந்து மண்ணில் போய் இந்தியாவில் செய்த குற்றத்திற்காக கொலை செய்தான். அவனைப் பாராட்டுகிறது நம் இந்திய நாடு. 40-யில் கொல்லப்பட்ட அடக்கம் செய்யப்பட்ட உடலை 1974-யில் எடுத்துக்கொண்டு வந்தார்கள். மிச்சங்களை, எச்சங்களை மீதியிருந்த பகுதிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது. கொண்டு வந்த மிச்சங்களை வரவேற்கப் போனவர்கள் யார் தெரியுமா? அப்போது காங்கிரசு தலைவராக இருந்த பின்னாள் குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா வரவேற்கப் போனார் விமான நிலையத்தில், மீதி எச்சங்களை வரவேற்பதற்கு. அப்போது பஞ்சாப் முதல்வராக இருந்த பின்னால் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங் வரவேற்கப் போனார். அந்த எச்சங்கள் அடங்கிய பெட்டிக்கு மலர்வளையம் வைத்தவர் யார் தெரியுமா? இந்திய நாட்டின் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி போய் மலர்வளையம் வைத்தார். இந்த நாட்டில் நடந்த குற்றத்திற்காக அடுத்த நாட்டில் 21 ஆண்டுகள் கழித்து கொலை செய்தவனைத் தியாகி என்று நீங்கள் பாராட்டலாம், ஈழத்தில் 6000, 7000 பேரைக் கொன்றவனை ஆயிரம் பெண்களைக் கெடுத்தவன் காரணமானவனை. அங்கே போய் நம்ம ஆள்கள் சுட்டது துப்பாக்கியில் சுட்ட டயர் அல்ல, ஜெனரல் டயர் என்று சொல்லவில்லை நல்லா ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும், அவன் ரெஜினால்டு டயர், அவன் தளபதி, சுட ஆணையிட்டவனும் அதே பெயர் தான் மைக்கேல் டயர், நல்ல எலெக்ட்ரீசியனாக இருந்தால் ஷாக் அடிக்கற போது சுவிட்சை ஆஃப் பண்ண மாட்டான், மெயினைத் தான் போய் ஆஃப் பண்ணு என்பான். அதுபோல மெயினை ஆஃப் பண்ணினார்கள். உத்தரவு போட்டவனை போய்க்கொன்றான். சுட்டவன் என்ன பண்ணுவான் பாவம், எய்தவன் இருக்க அம்பை ஏன் நோகனும், அதனால எய்தவனைப் போய்க் கொன்றான். அதற்கு ஆணையிட்ட கவர்னரைப் போய்த்தான் கொன்றான், ஜெனரல் டயரை. அந்த டயரைத் தான் சுட்டான். அது போல் ஈழத்தமிழன் எவனாவது கண்ணெதிரே தனது சொந்தங்களை அநியாயமாகக் கொன்றவனை, அங்கே சுட்டுக் கொல்றான், அந்த நியாயத்தின் படி இது நியாயம் தானே. உனக்கு அவன் தியாகி தானே. எப்படி அவனைக் குற்றவாளி என்று சொல்கிறீர்கள்?
அதுதான் சொன்னேன் ஈழத்தமிழனென்றாலும் எவனாக இருந்தாலும் அதை செய்திருக்க வேண்டும், நல்லது தான். புலிகள் செய்யாமல் இருந்திருந்தால் குற்றம் என்று சொல்கிறோம். ஏனென்றால் அவர்களுக்கானவர்கள் நீங்கள் தான். அவர்களுக்குப் பாதுகாப்பானவர்கள் நீங்கள் தான். புலிகள் செய்யாமல் இருந்தால் கண்டிக்க வேண்டும். இந்த நிலைப்பாடு நாம் எடுக்க வேண்டும். இந்த நிலையில் தான் ஏற்கனவே சொன்னேன். அவர்கள் எல்லாம் நம்மை தமிழனென்று மதிக்கவில்லை. அவன் பாதிக்கப்பட்ட போது நாம் நிதி அனுப்பினோம், நமக்கு அவன் அனுப்ப மாட்டான். எப்படி நாம் கருதுவது என்றால், நாட்டில் எது நடந்தாலும் தமிழர்களாகிய நாம் இந்தியர்கள் என்று கருதிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்தியாவில் இருக்கும் வேறு எவனும் அகில இந்தியா பேசுகிறவன் கூட அவனை அவன் தேசிய இனத்தின் பெயரில் தான் இனம்காண்கிறான், நான் இந்திக்காரன், நான் பெங்காளி. அதனால் தான் காங்கிரசு கட்சியினுடைய முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே வங்க தேசத்தில், பாகிஸ்தானில் வங்காளிகள், தன் மொழி பேசுகிற மக்கள் பாதிக்கப்பட்ட போது அவன் சொன்னான், இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது, இந்திராவே நீ படை அனுப்புகிறாயா, நான் என் மாநிலத்தின் ரிசர்வ் போலீசை அனுப்பச் சொல்லவா என்று சட்டமன்றத்தில் பேசினார் டாக்டர் சித்தார்த்த சங்கர் ரே, அகில இந்திய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர், அவனும் நம்மை மாதிரி மாநிலக் கட்சியைச் சார்ந்தவன் அல்ல, அகில இந்திய கட்சி சார்பில் இருக்கிற தேசிய உணர்வு ஏன் நமக்கு இல்லை.
செல்வா அவர்கள் பெரியாரிடம் தனது திட்டங்களைப் பற்றிச் சொல்லி ஆதரவு கேட்கிறார். 1972-யில் வருகிறார். பெரியார் சொன்னார். ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும். அந்த நாட்டு மக்கள் தலைவர் செல்வநாயகத்துக்கு நமது தலைவர் சொன்ன பதில் ஓர் அடிமைக்கு எப்படி இன்னோர் அடிமை உதவ முடியும் நாம் அடிமைகளாக இருக்காமல் இருந்தால் தான் அவர்களுக்கு உதவ முடியும். நாம் அடிமைகளாக இல்லாமல் இருப்பதற்கு என்ன முயற்சி செய்திருக்கிறோம், இது வரை, இனிமேலாவது செய்வோம் என்று சொல்லி கேட்டுக்கொள்வது தான் நமது கோரிக்கை.
நான் கூட தோழர் கிட்டே பேசினேன், ஐ.நா மன்றம் சொல்லியிருக்கிறது ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், இபோழுதில்லை 1966-யில் சொல்லியிருக்கிறது, 1970-யில் சொல்லியிருக்கிறது. ஐ.நா மன்றத்தின் பிரகடனம் சொல்கிறது, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும், தன்னுடைய சுயநிர்ணய உரிமையை தன்னுடைய அரசை நிர்ணயித்துக்கொள்ள உரிமை உண்டு என்பது தான் ஐ.நா வில் பிரகடனம். முதலாவது கூறு அதுதான். எனவே இங்கிருக்கிற வழக்கறிஞர்கள் வழக்காடலாம், ஐ.நாவின் பிரகடனத்தை நிறைவேற்று, தமிழ்நாட்டுத் தமிழனிடம் வாக்கெடுப்பு நடத்து. நீ இந்தியாவில் தொடர்ந்து இருக்க விரும்புகிறாயா, இல்லையா? ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். வழக்கு போடுவோம். அல்லது லயோலா கல்லூரியைச் சேர்ந்த பேரா.ராஜநாயகத்தைக் கேட்டுக் கொள்வோம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்துங்கள். இப்படிப்பட்ட இந்திய அரசோடு இணைந்து இருக்க தமிழர்கள் விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தெரிந்தாவது வெளியிடுங்கள். தெரியட்டும் அப்பொழுதாவது தெரியட்டும். ஐ.நா மன்றம் இந்தியாவிடம் சொன்னது, 1947-யில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் வந்த போது, காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துகிறேன், அவர்கள் இந்தியாவோடு இருக்க விரும்புகிறார்களா, பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா, தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா? வாக்கெடுப்பு நடத்துங்கள் என்று ஐ.நா மன்றம் சொன்னது. 1949, ஜனவரி-1-யில் நடத்தவேண்டிய வாக்கெடுப்பை 60 ஆண்டுகாலமாக நடத்தவே இல்லை இந்திய அரசு. இதற்கு மேலே நடத்திடவா போகிறது? நாம் நடத்தியாவது அறிவிப்போம். நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். அதற்காகத்தான் முதல் கட்டமாக 20-ஆம் தேதி நாங்கள் நடத்துகிற போராட்டம் இந்தத் தமிழ் மண்ணில் தமிழ் மக்களின் உணர்வை மதிக்காத அவர்களிடம், பலவகைகளில் போராட்டம் நடக்கலாம், மாணவர்கள் ஒரு பக்கம், வழக்கரிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் எத்தனையோ போராட்டங்கள் நடக்கின்றன, பலவகையில். நான் தோழர்களிடம் எல்லாம் கேட்டேன், என்ன செய்யலாம் என்று அப்போது தான் சொன்னேன், இந்த வாரத்தில் பெரியார் முழக்கத்தில் கூட எழுதியிருக்கிறோம்.
நமது குத்தூசி குருசாமி --------- சத்திய மூர்த்தி பவன் என்பதால் சத்தியமூர்த்தி நமது நினைவிற்கு வரவேண்டும். சத்திய மூர்த்தியை குறித்து குத்தூசி குருசாமி ஒரு கட்டுரையை எழுதினார். அழுகிய முட்டை அரையணாவிற்கு ஆறு என்ற தலைப்பு. கட்டுரையில் எழுதினார், தோழர்களே முட்டையால் அடிப்பதால் மனிதன் சாகமாட்டான். அதற்காக முட்டையை வீணாக்காதீர்கள். அது சத்துள்ள உணவு, அப்பா, அழுகிய முட்டையைப் பயன்படுத்தலாம் அரையணாவிற்கு ஆறு என்று நினைத்துவிடாதே, வேண்டாம். யார் மீது வீசினாலும் சத்தியமூர்த்தி மீது வீசாதீர்கள் என்று எழுதினார்கள். அடுத்த வாரமே அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நான் சொன்னேன். எத்தனையோ போராட்ட முறைகள் இருக்கின்றன. காங்கிரசுகாரன் போகிறபோது, அதோ காங்கிரசுகாரன் போறாங்கிறது ஒரு போராட்டம். அவனை அவமானப்படுத்த வேண்டும், வீதியில் நடக்கும்போது. வெட்கப்படவேண்டும் வீதியில் நடப்பதற்கு. எத்தனையோ போராட்ட முறை எதிர்ப்புகளைப் பண்ணுவோம், எதிர்ப்புகளைக் காட்டுகிற புதுவழியாக நாங்கள் 20-ஆம் தேதி எடுக்க இருக்கிற மத்திய அரசின் அலுவலகங்களை இழுத்துப் பூட்டுவது என்ற போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்.
தொடர்ச்சியாக அடிமைத்தனமாக இருந்த நாங்கள், அடிமை எப்படி ஈழத்தமிழனுக்கு எப்படி உதவ முடியும் என்பதை நெஞ்சில் நிறுத்துங்கள், அதற்கான முயற்சிகளும் பரப்புரைகளும் நடக்கட்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.
15.02.2009 அன்று சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாவீரன் தோழர் முத்துக்குமாரின் வீரவணக்கக் கூட்டத்தில் கொளத்துார் மணி அவர்கள் ஆற்றிய உரை